Today Bible Verse

St. Ebba History in Tamil

     ஆங்கில நாட்டில் நார்தம்பிரியா என்ற பகுதியில் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடையவும், கிறிஸ்துவின் இராஜ்யம் நாட்டில் பரவவும் மிக ஆர்வத்துடன் உழைத்த அரசியல் மக்களுள் பரி. எப்பா ஒருவராவர். இவர் ஏதல்பிரெட் அரசனின் மகள், இளமை முதற்கொண்டே ஆண்டவரிடம் மட்டில்லா அன்புகொண்டவர்.

     அக்காலத்தில் ஆங்கில நாட்டில் கிறிஸ்துவை அறியாத மக்கள் அநேகரிருந்தனர். நார்தம்பிரியாவில் அரச குலத்தவரில் அனேக ஆண்களும், பெண்களும், மிஷனரி வாஞ்சையுள்ள வீரர்களாயிருந்தனர். பரி. எட்ரியன் என்னப்பட்ட மிஷனெரி வாஞ்சையுள்ள ஒரு பக்தனை பரி. எப்பாவின் தந்தையான எதல் பிரெட், சுவிசேஷம் தம் எல்லையில் அறிவிக்கும்படி முயற்சித்தார். எனவே, இளமையில் இப்பக்தனின் அரவணைப்பில் இருக்கும்படியான வாய்ப்பு பரி. எப்பாவிற்குக் கிடைத்தது. சிறு வயதிலேயே தன்னை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தார். அரச குலத்தவருடைய ஆடம்பர வாழ்க்கையில் பிரியப்படாமல் எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். தியாகத்தினாலும், அயராத உழப்பினாலும் மக்களைக் கிறிஸ்துவினிடம் நடத்தும் கருவியாக விளங்கினார். இவருடைய சகோதரிகளிருவரும் இவரைப் போல் பக்தர்களாகத் திகழ்ந்தார்.

     ஸ்காட்லாந்து நாடு அந்நாட்களில் நாகரிகத்திலும் கல்வியிலும் இங்கிலாந்தைக் காட்டிலும் முன்னேற்றமடைந்திருந்தது. அரச குலங்களில் பிறந்த மக்களின் திருமணங்கள் மூலம் இரு நாடுகளின் இடையே ஒற்றுமையேற்றப்பட்டது. எடான் என்ற ஸ்காட்லாந்து நாட்டு அரசன், பரி. எப்பாவை மணந்துக்கொள்ள விரும்பினான். ஆனால் பரி. எப்பா அம்மையார் தம் சிறு பிராயத்திலேயே கன்னிகா ஸ்திரீயாக ஆண்டவருக்கென்று ஊழியம் செய்வதாக தம்மை ஒப்புக்கொடுத்திருந்தார்கள். எனவே இவர் இவ்விவாகத்திற்கு உடன்படவில்லை. லிண்டன் பார்ன் மாநில பிஷப் பரி. பின்னானின் உதவியால் அங்குள்ள கன்னிகா ஸ்திரீ மடத்தில் சேர்ந்துக் கொண்டார்கள்.

     இவருக்கு ஆஸ்வின், ஆஸ்வால்டு என்று இரு சகோதரரிருந்தார்கள். இவ்விருவரும் சிறந்த கிறிஸ்தவ பக்தர்கள் ஆஸ்வினின் முயற்சியால் மத்திய ஆஞ்சிலியாவின் மக்கள் கிறிஸ்தவர்களானார்கள். பீடா என்ற அரசன் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவி, ஞானஸ்நானம் பெற்றான். சிக்பர்ட் என்ற அரசனும் குணப்பட்டான். ஆஸ்வினின் வேண்டுகோளுக்கிணங்கி பிரசித்தி பெற்ற பரி. சீட் எசெக்ஸ் மாகாணத்திற்கு சுவிசேஷத்தைக்கொண்டு வந்தான். தம் சகோதரி பரி. எப்பாவிற்கென்று டார்வென்ட் நதிக் கரையில் டர்ஹமில் கன்னிகா ஸ்திரீ மடமொன்று கட்டினான்.

     டர்ஹாம் கன்னிகா ஸ்திரீ மடத்தில் எவ்வளவு காலம் பரி. எப்பா செலவிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சொற்பகாலத்தில் அதைவிட்டு கோல்டிங்ஹம் என்ற இடத்தில் தாமாக ஒரு பெரிய மடம் கட்டி, அதற்குக் குடிவந்தார்களென்று தெரிகிறது. அக்காலத்தில் பரி. ஹில்டா நடத்தி வந்த மடம் பிரசித்தபெற்றது. அதே போல் வெகு சீக்கிரத்தில் பரி. எப்பா கட்டிய மடமும் முன்னேற்றமடைந்து, புகழுடன் திகழ்ந்தது. தம் மேற்பார்வையில் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் தனித்தனியே மடங்கள் கட்டினார். எதல்ரேட் அம்மையார் ஆத்தும பயிற்சிக்காக அடிக்கடி இம்மடத்தில் தங்கினார். பரி. கத்பர்ட்டும் அங்கு சென்று ஆத்மீக காரியங்களைக் குறித்து பரி. எப்பாவோடு அளவளாவி பயன்பெற்றார்.

     சில ஆண்டுகளுக்குப் பின், ஆண்களுக்கென்று ஏற்படுத்திய மடத்தில், அடமன் என்ற ஒரு பக்தன், வெளியிலுலாவி ஒரு நாள் தம் மடத்திற்குத் திரும்பி வருகையில், மடத்தின் கட்டடங்களைப் பார்த்து, கண்ணீர் விட்டு, அழுதார். மடத்திலுள்ள அவருடைய நண்பர்களில் சிலர் இதைக் கண்டு, அவரையணுகி, ஏன் அவ்வாறு அவர் அழுதாரென்று வினவினார்கள். அம்மடம் நெருப்பிற்கிறையாகி அழிந்து போவதாக தாம் தரிசனம் கண்டதாகச் சொன்னார் அப்பக்தன்.

      இதைக் கேள்வியுற்ற பரி. எப்பா அப்பக்தனைக் கண்டு, அவர் கண்ட தரிசனத்தை விவரமாகச் சொல்லும்படி வேண்டினார். அவர் மடத்தில் சோம்பலும், ஒழுங்கீனமுமான காரியங்கள் நடப்பதாயும், அதனால் அதைத் தாம் அழிக்கப் போவதைத் தரிசனத்தின் மூலமாய் ஆண்டவர் தமக்குத் தெரிவித்ததாகவும் கூறினார். எனினும், அழிவு பரி. எப்பாவின் நாட்களில் வராதென்றும் தெரிவித்தார். உடனடியாக ஊழல்களை அறவே ஒழித்து, மடத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவரும்படியான முயற்சிகளில் பரி. எப்பா முனைந்தார். அவைகளின் பயனாக மடத்தில் வாழ்க்கை நடத்தின மக்கள் குணசீலராகவும், தூய்மையானவர்களாகவும் விளங்கினார்கள். பரி. எப்பாவின் மனம் சாந்தியும் மகிழ்ச்சியும் அடைந்தது. சில காலத்திற்குப் பிறகு, பரி. எப்பா உலக வாழ்க்கையை நீத்து நமதாண்டவரண்டை சேர்ந்தார்.

     இவர் காலத்தில் பெண் மக்களுள் சிறந்த ஊழியம் செய்து மரித்த பரி. ஹில்டாவின் ஞாபகார்த்தமாக லாகூர் பேராய கவுன்சில் ஒரு ஸ்தாபனம் நிறுவிற்று. அதைப்போல் சென்னை பேராய கவுன்சிலும் பரி. எப்பாவின் நினைவாக பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடம் அமைக்க வேண்டுமென்று முடிவு செய்து, சென்னையில் மைலாப்பூரில் பெண்களுக்கென்று ஒரு உயர்தரப் பாடசாலை கட்டினார்கள். அப்பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் இப்பொழுதும் இந்தப் பரிசுத்தவாட்டியின் ஞாபகார்த்த விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Posted in Missionary Biography on October 14 at 07:50 AM

Comments (0)

No login
gif