Today Bible Verse

St. Irenaeus History in Tamil

      இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபையின் நல்வாழ்விற்காக உழைத்து, இரத்த சாட்சியாக மரித்த பக்தருள் பரி. ஐரேனியு ஒருவர். பரிசுத்தாவியின் எல்லா வரங்களும் பெற்று, அத்துடன் கல்வி அறிவும் சொற்திறனுமுள்ள பக்தன் என்று இவரைக்குறித்து இசூபியஸ் தியோடரட் என்ற சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளார்கள். இவர் தோன்றிய சமயம் பரி. போலிகார்ப் உயிருடனிருந்தார்.

     பரி. ஐரேனியு கி.பி. 130 இல் சின்ன ஆசியாவில் பிறந்தார். இளமையிலிருந்தே இவருடைய பெற்றோர் கிறிஸ்துவைப் பற்றிய அறிவை இவருக்குப் புகட்டுவதிலும், அவருடைய அடியார்களின் வாழ்க்கையைப்பற்றிப் போதிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார்கள். அப்பொழுது பரி. போலிகார்ப் சிமிர்னாவில் அத்தியட்சகராகப் பணியாற்றி வந்தார். அவருடன் பழகுவதால் தங்களுடைய மகன் பயனடைவான் என்று கருதி, அவருடைய பெற்றோர் பரி. ஐரேனியுவை, பரி. போலிகார்ப்பிடம் அனுப்பினார்கள். பரி. போலிகார்ப்பின் புலமை பரி. ஐரேனியுவுக்குப் பேரின்பம் அளித்தது. அந்தப் பரிசுத்தவானின் வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் அவர் உள்ளத்தில் பதிந்தது. அவருடைய முன் மாதிரியால் பரி. ஐரேனியு மிகவும் பயனடைந்தார்.

     பரி. போலிகார்ப், நம் பக்தனை, கால் என்று சொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பினார். அவருக்குத் துணையாக ஒரு குருவானவரும் சென்றார். பரி. ஐரேனியு, லையன்ஸ் ஆலயத்தில் அத்தியட்சகர் போத்தினியுவால் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார். அப்பொழுது, கீழ்நாட்டு சபைகளில் ஈஸ்டர் பண்டிகை அனுசரிப்பைக் குறித்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு சபைகளில் அமைதி குறைந்திருந்தது. திருமறை சம்பந்தமான பல நூல்களைக் கற்றறிந்த பரி. ஐரேனியு, அப்பிரச்சனைகளைத் தீர்க்கும்படிக்கு அனுப்பப்பட்டார். குருவாக அப்பொழுது தான் பணியாற்றத் துவங்கிய பரி. ஐரேனியுவுக்கு இது சிறந்த பயிற்சி காலமாக விளங்கிற்று.

     லையன்ஸ் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களை இம்சை செய்யும் காலம் ஆரம்பித்தது. கிறிஸ்தவ மக்கள் சித்தரவதை செய்துக் கொல்லப்பட்டார்கள். அவர்கள் துன்புறுத்தல் செய்யப்பட்ட காலத்தில் பரி. ஐரேனியு லையன்ஸில் இல்லை. ஆனால் அவர் திரும்ப வந்த பின்பும் கிறிஸ்தவர்களின் இன்னல்கள் முடியவில்லை. பரி. போத்தினியு மரித்து இறைவன் திருப்பாதம் சேர்ந்தார். அவருக்குப் பதிலாக பரி. ஐரேனியு லையன்ஸ் அத்தியட்சகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய முயற்சியால் சொற்பக் காலத்தில் கால் நாட்டு மக்களனைவரும் கிறிஸ்தவர்களானார்கள். அவர்கள் வாழ்க்கையில் மாறுதல் காணப்பட்டது. அவர்கள் கிறிஸ்துவின் மெய்யடியார்களாக விளங்கினார்கள். கிறிஸ்தவ சபையும் பெருகி வந்தது.

     இவ்வாறு சபை பெருகி, கிறிஸ்தவ மக்கள் தூய வாழ்க்கை நடத்தி வந்த காலத்தில், வேத புரட்சியினர் தங்களுடைய தவறான உபதேசங்களைக் கொண்டு அவர்களுடைய விசுவாசத்தைக் கலைக்க முற்பட்டார்கள். அவர்களுள் முக்கியமானவர் வாலன்டைன் என்பவராவர். அவர் முதல் முதலாக எகிப்து நாட்டில் தம் பிரசாரத்தை ஆரம்பித்து, ரோமாபுரிக்கு வந்தார். அங்கிருந்து சைப்ரஸ், இத்தாலியா, கால் நாடுகளிலும் தம்முடைய தவறான கொள்கைகளைப் பரப்ப ஆரம்பித்தார். இதைக் கண்ட பரி. ஐரேனியு மனம் வருந்தி, அவைகளுக்கு எதிராக ஐந்து நூல்களை எழுதினார். பிரசங்கித்து வந்ததுபோல், பாவம் உண்டாவதற்கு கடவுள் காரணர் அல்ல என்று பரி. ஐரேனியு தெளிவான முறையில் எழுதினார்.

     நமதாண்டவர் உயிர்த்தெழுந்த பண்டிகையின் நாள் பூரண சந்திரன் நாளுக்கு பதினான்கு தினங்களுக்குப் பின் ஆசரிக்க ரோமாபுரியில் பணியாற்றி வந்த சபைகுரு பிளாஸ்தஷ் என்பவர் கிளர்ச்சி செய்தார். இதனால் சபைகள் பிளவு ஏற்படும்போல் காணப்பட்டது. அச்சமயத்திலும் பரி. ஐரேனியு தன்னுடைய உரை விளக்கங்களாலும், சொற்பொழிவுகளாலும் சரியான விளக்கம் கூறி சபைகளை ஒருமைப்படுத்தினார். ஆழ்ந்த புலமையால் மக்கள் கவர்ந்து, சபைகளுக்குத் தீங்கு நேரிடாதபடி தடுத்தார்.

     அக்காலத்தில், ரோம அரசியலில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்பட்டு வந்தன. சக்கரவர்த்திகள் ஒருவரும் நீடித்து ஆட்சி செய்யவில்லை. சூழ்ச்சியால் சக்கரவர்த்திகள் கொல்லப்பட்டார்கள். சக்கரவர்த்தியின் பதவி அதிக பணம் கொடுப்பவர்களுக்குச் சென்று வந்தது. கிறிஸ்தவ மக்கள் அரசியல் சூழ்ச்சிகளில் யாதொறு பங்கும் எடுக்காமல், தீய உலகில் தூயராய் வாழ்ந்து வந்தார்கள். சக்கரவர்த்தி வெரஸ் அதற்கு முன் கால் நாட்டில் கவர்னராகப் பணியாற்றியிருந்தமையால், அங்கு கிறிஸ்தவர்களின் தொகை அதிகமென்றும், அங்குள்ள கிறிஸ்தவர்களை இம்சை செய்தால் கிறிஸ்தவ சமயம் ஒழியுமென்றும் எண்ணினான்.

       எனவே, முதன் முதலாக அங்குள்ள கிறிஸ்தவ மக்களை துன்புறுத்தி, கணக்கற்ற கிறிஸ்தவர்களைக் கொலை செய்தான். லையன்ஸ் நகரத்தின் தெருக்களில் இரத்தம் ஆறாக ஓடிற்று என்று சொல்லப்பட்டிருக்கிறது. கொல்லப்பட்ட மக்களுள் பரி. ஐரேனியுவும் ஒருவர். இவ்வாறு சிறந்த பேரறிஞராயும், பரிசுத்தவானுமாக விளங்கிய பரி. ஐரேனியு இரத்த சாட்சியாக மரித்து, ஆண்டவரின் திருவடி சேர்ந்தார்.

பிறப்பு: கி.பி. 130, (சிமிர்னா, ஆசியா)

இறப்பு: கி.பி. 202, கால் (பிரான்ஸ்)

Posted in Missionary Biography on October 14 at 07:57 AM

Comments (0)

No login
gif