St. Clement History in Tamil

        சுவிசேஷங்களிலும் நிருபங்களிலும் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சரித்திரங்களே விவரமாகக் கூறப்பட்டிருக்கின்றன. நமதாண்டவர் பாலஸ்தீனாவிலிருந்த நாட்களிலும் அவருடன் சுற்றித் திரிந்து பின் சுவிசேஷத்தைப் பரவச் செய்த அப்போஸ்தலரின் காலத்திலும் கிறிஸ்துநாதரின் அடியார்களாகச் சுவிசேஷ வேலைசெய்த பலரைக் குறித்து நம் வேதாகமத்தில் அதிகமாகச் சொல்லப்படவில்லை.

     பரி. கிலெமெந்தைப் பற்றியும் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு வசனத்தில் மாத்திரம் காண்கிறோம். அவரைக் குறித்து அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல், பிலிப்பியருக்கு நிருபம் எழுதும்போது கீழ்கண்டவாறு கூறியுள்ளார். “அன்றியும் என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு அவர்கள் கிலெமெந்தோடும் மற்ற என் உடன் வேலையாட்களோடுங் கூட சுவிசேஷ விஷயத்தில் என்னோடே கூட மிகவும் பிரயாசப்பட்டார்கள். அவர்களுடைய நாமங்கள் ஜீவ புத்தகத்தில் இருக்கின்றன”. (பிலிப்பியர் 4:3).

     பரி. கிலெமெந்து யூதகுலத்தவர். அவர் தன்னைக் குறித்து, தான் யாக்கோபின் சந்ததியான் என்று கூறியுள்ளார். பரி. பேதுரு அல்லது பரி. பவுலால் அவர் குணப்பட்டவர் என்று கருதப்படுகிறது. அவர் பரி. லூக்கா, பரி. தீமோத்தேயு என்பவர்களுடன் பல சுவிசேஷ யாத்திரைகளில் பங்கெடுத்து பல துன்ப தொல்லைகளை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டவர். ஆகையால் பரி. பவுல் அவரைக் குறித்து அவர் சுவிசேஷ ஊழியத்தில் பெரு முயற்சியுடன் உழைத்தவர் என்றும் அவர் நாமம் ஜீவ புத்தகத்தில் இருக்கிறது என்றும் சொல்வது ஆச்சரியமன்று.

     இவர் பரி. பவுலுடன் சேர்ந்து உரோமாபுரிக்குச் சென்றார் என்றும் அங்கு பரி. பேதுரு நடத்திவந்த வேதாகமக் கல்லூரியில் பயிற்சி பெற்றார் என்றும் அறிகிறோம். கிறிஸ்துவின் நற்செய்தியை உலகமெங்கும் பரவ செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டு இரவு பகலாக உழைத்த உத்தம சீடர் இவர். இவர் சபையின் தலைவராக அதை நிர்வாகம் செய்யும்படி நியமிக்கப்பட்டு பரி. பேதுரு சபைகளைச் சந்திக்க வெளி நாடுகளுக்குச் செல்லும்போது உரோமாபுரி சபையைக் கண்காணித்து வந்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள். பரி. பேதுருவும், பரி. பவுலும் இரத்த சாட்சிகளாக உயிர்நீத்த பின்னர், பரி. லின்னஸ் என்பவரும், பரி. கிலேட்டஸ் என்பவரும் முறையே உரோமாபுரியில் அத்தியட்சர்களாகப் பணியாற்றிய பின்னர், பரி. கிலெமெந்து சுமார் பத்து வருடம் அத்தியட்சராகத் தொண்டுபுரிந்தார்.

     கொரிந்து சபையிலுள்ள பிரிவினைகளைக் குறித்து பரி. பவுல் தன்னுடைய நிருபங்களில் எழுதியது போல பரி. கிலெமெந்தும் சில காலத்துக்குப் பின் கொரிந்து சபைக்கு ஒரு நிருபம் எழுதியதாகத் தெரிகிறது. ஒரு குழுவினர் அச்சபையின் போதகருக்கு விரோதமாக எழும்பினதை பரி. கிலெமெந்து கேள்விப்பட்டார். இக் கிறிஸ்தவப் பக்தன் இதைக் கேட்டவுடனே துயரத்துடன் அச்சபைக்கு ஒரு நிருபம் எழுதினார். அதில் சபையோர் எல்லாவித பகைமையும் கோபத்தையும் விட்டு கிறிஸ்துவின் அடியாராகத் தாழ்மையையும் நாம் அணிய வேண்டுமென்று எழுதினார்.

     “உங்கள் பிள்ளைகள் கிறிஸ்துநாதரின் போதனைகளால் போஷிக்கப்பட்டு, அவர் காட்டிய மிகுந்த தாழ்மையின் வல்லமையை அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள். பரிசுத்தமான வாழ்க்கையும் பிறரிடத்தில் அன்பும் எவ்வளவு மகிமையாக கிரியை செய்யுமென்றும் கடவுளிடத்தில் பயமும் பற்றுதலும் எத்தகைய மேன்மையுள்ளது என்றும் அவர்கள் கண்டுகொள்ளட்டும்” என்று அவர் எழுதியிருக்கிறார். இச்சிறப்பான நிருபம் வேதாகமப் புத்தகங்களுக்கு அடுத்தபடியாக வைக்கப்பட்டுள்ளது.

     கொரிந்து சபையில் சரீர உயிர்தெழுதலைப் பற்றிச் சில தவறான கருத்துக்கள் இருந்து வந்ததாகவும் அதைக்குறித்து பரி. கிலெமெந்து விவரமாகவும் எழுப்புதலாகவும் அச்சபைக்கும் எழுதினாரென்று அறிகிறோம். “இவ்வுலகை உருவாக்கின சிருஷ்டிகர் தாம் சிருஷ்டித்தலை நல்லதென்று கண்டு மகிழ்ந்தது போல, நாம் செய்யும் வேலைகளை செவ்வனவே உற்சாக மனதோடு செய்து நாம் மகிழ வேண்டும்” என்று தம் நிருபத்தில் எழுதியிருக்கிறார்.

     கொரிந்து சபையிலிருந்து பார்ச்சுடேனஸ் என்பவர் ரோமாபுரிக்கு வந்து அங்குள்ள சபைப் பிரிவினையைக் குறித்து பரி. கிலெமெந்துக்கு அறிவித்தபோது அவருடன் நான்கு ஊழியரைப் போதித்து அனுப்பி, “இவர்கள் மன சந்தோஷத்துடன் திரும்பிவரவும், அச்சபையின் சமாதானமும் அந்நியோன்யமும் பரவிய செய்தியை அவர்கள் வெகு சீக்கிரம் கொண்டுவரவும் வேண்டும்” என்று சொல்லியதாகத் தெரிகிறது. சபையின் நல்வாழ்வுக்காக இந்த பக்தனைப் போல் பாடுபட்டவர்கள் சிலரே.

     பரி. கிலெமெந்து கொரிந்து சபைக்கு எழுதிய இரண்டாம் நிருபத்தின் பெரும் பாகம் மற்ற வேதாகம எழுத்து சான்றுகளுடன் கிடைத்தனவென்றும், அவைகள் சபைகள்முன் வாசிக்கப்பட்டு வந்தனவென்றும் தெரிகிறது. பரிசுத்தமான வாழ்க்கையும், நம் சிற்றின்பங்களை அடக்குவதும், கிறிஸ்தவ வாழ்க்கைக்கு அடிப்படை என்று அவர் தம் நிருபங்களில் எழுதியிருக்கிறார்.

     டாமிஷியன் கிறிஸ்தவ மக்களை அழிக்கச் செய்த முயற்சிகளில் பரி. கிலெமெந்து அகப்படவில்லை. மூன்றாம் முயற்சி என்று சொல்லப்படும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக 100 ஆண்டுகள் நடந்த கிளர்ச்சியில் பரி. கிலெமெந்து இரத்த சாட்சியாக மரித்தார் என்று கருதப்படுகிறது.

     திருச்சபைப் பணியில் ஈடுபட்டு, அதிலுள்ள ஊழல்களைத் திருத்தியும், பிரிவினைகளை நீக்கியும் கிறிஸ்தவ வாழ்க்கையின் குறிக்கோள் என்னவென்பதைத் தம் நிருபங்கள் மூலமாய் எடுத்துக் காட்டியும் தொண்டாற்றிய இந்த பக்தன் திருச்சபையின் ஒளி குன்றா மணிமகுடமாக விளங்கினார்.

பிறப்பு: கி.பி. முதலாம் நூற்றாண்டு (உரோம்)

இறப்பு: கி.பி. 99 அல்லது 100 (கெர்சொனேசுஸ் டாவுரிக்கா)

Posted in Missionary Biography on October 14 at 08:14 AM

Comments (0)

No login
gif