Today Bible Verse

St. John Chrysostom History in Tamil

     ஆங்கில திருச்சபை ஜெப ஒழுங்கிலும், தென் இந்திய திருச்சபை ஜெப ஒழுங்கிலும் காலை, மாலை ஜெபங்களின் இறுதியில் “இத்தருணத்தில் ஒருமனப்பட்டு உம்மை நோக்கி எங்கள் பொதுவான விண்ணப்பங்களை செய்ய எங்களுக்கு கிருபை அளித்த சர்வ வல்லமையுள்ள தேவனே” என்று ஆரம்பிக்கும் ஜெபத்தைக் காணலாம். இது பரி. கிறிசொஸ்தம் எழுதிய ஜெபம்.

     பரி. கிறிசொஸ்தம் கி.பி. 344ல் அந்தியோகியாவில் ஒரு சிறந்த குடும்பத்தில் பிறந்தார். இளமையிலேயே தன் தந்தையை இழந்தார். இவருடைய தாய் அந்துசாவிற்கு வயது இருபது. அவர்கள் தன் மகனை கடவுள் பக்தியிலும் ஒழுங்கு முறையிலும் வளர்க்கும் தொண்டிலும் சிறந்தது வேறொன்றில்லை என்றுணர்ந்து அவரை வளர்ப்பதில் பெருங்கவலை செலுத்தினார். சொற்பொழிவாற்றுவதில் தேர்ச்சியடைந்தவர்கள், அக்காலத்தில் மதிப்பிற்குரியவர்களாக கருதப்பட்டனர். அக்கலையின் நிபுணரான லைபேனியஸ் என்பவரிடமும், தத்துவ சாத்திரத்தில் சிறந்த அந்திராகேஷியஸ் என்னும் கல்விமானிடமும் இவர் கல்வி பயின்று வந்தார். இயல்பாகவே நுட்பமான புத்தியும், சொற்பொழிவன்மையுமுள்ள நம் பக்தர், ஏற்ற காலத்தில் சிறந்த பிரசங்கியாக விளங்கினார். இவருடைய பெயர் யோவான் என்ற போதிலும் அவருடைய சொற்பொழிவாற்றும் திறமையால் இவர் காலமான பின்னர், ‘பொன்மொழி வாயுடையவர்’ என்று அர்த்தங்கொள்ளும் கிறிசொஸ்தம் என்னும் பெயரை இவருக்குச் சூட்டினார்கள்.

      தம் கல்வியை முடித்தப்பின்  திருச்சபை பணியில் ஈடுபடுவதாக நோக்கங் கொண்டிருந்த நம் பக்தன் தம் இருபதாம் வயது முடியாததால் தம் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் சட்ட நிபுணராக தொழில் செய்ய முற்பட்டார். இத்தொழிலில் பெயர் பெற்ற வழக்கறிஞராக விளங்க வாய்ப்புக் கிடைத்தது. அத்துறையிலுள்ள அநியாயங்களையும் தங்கள் ஆதாயத்திற்காகப் பொய்யை மெய்யாகவும் மெய்யைப் பொய்யாகவும் காட்டும்படி அத்தொழிலில் ஈடுபட்டவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளையும் மற்றும் ஊழல்களையும் கண்டு, நம் பக்தன் அத்தொழிலை நிரந்தரமான தொழிலாக்க மறுத்துவிட்டார்.

       அத்தொழிலை தாம் ஆரம்பித்ததிற்காக வருத்தமுற்று அதிலிருந்து வெளியேறும்படி அத்தொழிலின் ஆபாசங்களை சீக்கிரத்தில் கண்டுகொள்ள செய்த கடவுளைப் போற்றினார். அத்தொழிலின் மேல் பற்றுதல் வேரோடு போகவும் அதனால் தான் பின்னால் இழுக்கப்படாதிருக்கவும் அவர் தம் உடைகளை மாற்றி சாம்பல் நிறமான ரெட்டுத் துணிகளை அணிந்து உபவாசம் செய்து வேத ஆராய்ச்சியிலும் ஜெபத்திலும் செலவிட ஆரம்பித்தார். சிலுவையிலறையப் பட்ட கிறிஸ்துவைப் பற்றி முழு அறிவு அடைவதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாக்கிக் கொண்டார். அப்பொழுது நம் பக்தன் வயது இருபத்து மூன்று.

     அந்தியோகியாவின் அத்தியட்சகரான மெலிடியஸ் இத்துறவியைக் குறித்துக் கேள்விப்பட்டு தம்மிடம் வரவழைத்து சிறிதுகாலம் மார்க்கப் போதனைகளைப் புகட்டி தன்னிடமே சரித்திர விஞ்ஞானியாக வைத்துக்கொண்டார். அச்சமயம் பரி. பேசில் என்ற பக்தனின் நட்பு இவருக்குக் கிடைத்தது. வயதிலும் வாழ்க்கை நோக்கங்களிலும் இருவரும் ஒன்றுபட்டதால் வேத அறிவை விருத்தி செய்வதிலும் ஜெபத்திலும் உபவாசத்திலும் இருவரும் ஒன்றாக நாட்களை செலவிட்டனர். பின்னர் தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்கி சுமார் இரண்டு வருடங்களாக தன் வீட்டிலே துறவியாகயிருந்தார். பின்னர் தன் நண்பன் பரி. பேசில் ரபேனாவிற்கு அத்தியட்சகராக நியமனம் செய்யப்பட்டு போனபொழுது தம் இருபத்தாராம் வயதில் “குருத்துவம்” என்ற பொருளின் பேரில் ஒப்பற்ற ஆறு புத்தகங்களை எழுதினார்.

     கி.பி. 374 ஆம் ஆண்டு முதல் ஆறு வருடங்களில் நான்கு வருடங்கள் ஒரு சிரியா தேசத்து துறவியிடமும் இரண்டு வருடங்கள் குகையிலும் துறவியாக வாழ்க்கை நடத்தினார். தினசரி அதிகாலையிலெழுந்து முதலாவதாக வேதவாசிப்பிலும் ஜெபத்திலும் கழித்து பகல் முழுவதும் உணவின்றி சரீரத்தை ஒடுக்கி சூரியன் அஸ்தமனமான பின்னர் ரொட்டியை உணவாகவும், தண்ணீரை பானமாகவும் அருந்தி, ஒட்டகத்தோல் அல்லது ஆட்டுத்தோலால் செய்த உடையை உடுத்தி குகைகளில் வாசம் செய்து வந்தார்.

      இப்படி சரீரத்தை ஒடுக்கி வாழ்க்கை நடத்தியதில் அவர் உடல் நலம் கெட்டு வியாதியால் பிடிக்கப்பட்ட காரணத்தால் துறவி வாழ்க்கையை விட்டு பட்டணத்திற்கு வர நேர்ந்தது. கணக்கில்லாத கிறிஸ்தவ மக்களின் ஆத்துமாவிற்கு இச்சம்பவம் மிகவும் பிரயோஜனமாயிருந்ததென்று சொல்லப்பட்டிருக்கிறது. கி.பி. 386 ஆம் ஆண்டில் பரி. கிறிசொஸ்தம் டீக்கனாக நியமனம் செய்யப்பட்டார். 12 வருடங்கள் அத்தியட்சகரின் கண்ணாகவும், கைகளாகவும் விளங்கி, அந்த அத்தியட்சாதீனத்திலுள்ள அழுக்காறுகளையும் சபையாரிலுள்ள தீய குணங்களையும் தனது தூய வாழ்க்கையாலும், வைராக்கியத்தாலும், சொற்பொழிவு வன்மையாலும் அறவே ஒழித்தார்.

     சக்கரவர்த்தி ஆர்க்கேடியஸ் நம் பக்தனைக் குறித்து கேள்விப்பட்டு அவரைக் கான்ஸ்டான்டிநோபிளுக்கு அத்தியட்சகராக நியமிக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பல இடையூறுகளிருந்தும் அவைகளை மேற்கொண்டு, கி.பி. 398 ஆம் ஆண்டில் அப்பதவிக்கு அவரை அபிஷேகம் செய்வித்தார். அந்தப் பதவியிலிருந்து ஆடம்பரங்களில் செலவிடப்பட்ட தொகையைக் குறைத்து ஏழைகள் கஷ்டத்தை நிவிர்த்தி செய்யவும், வியாதியஸ்தரைக் குணப்படுத்துவதற்காக வசதிகள் ஏற்படுத்துவதிலும் செலவிட்டார்.

        இதன்பின் குருமார்கள் ஒழுங்கான முறையில் பணியாற்றுவதற்காக சட்ட திட்டங்களை வகுத்தார். சபையார் ஆத்தும வளர்ச்சிக்கான காரியங்களிலும் ஈடுபட்டார். பெண்கள் மெல்லிய உடை தரித்தும் போதிய அளவு சரீரத்தை மூடாமலிமிருந்து அவர்கள் செய்யும் பெரும்பாவமென்று கண்டித்தார். விளையாட்டுகளிலும் விநோதக் காட்சிகளிலும் ஆத்துமாவைக் கெடுக்கக்கூடிய யாதொருவிதமான செய்கையும் நாம் மேற்கொள்ளக் கூடாதென்று வற்புறுத்தினார். புலன்கள் தீய வழியில் உழலாதவாறு அவற்றைக் காத்தல் வேண்டுமென்று, கேட்டவர்கள் மனதைத் தொடும்படி பிரசங்கம் செய்தார். விதவைகள் பராமரிப்பில் மிகவும் ஊக்கம் காட்டினார். தன் பூர்விக சொத்தனைத்தையும் வறியவர்க்கென்று செலவிட்டார். அவர் கொடுத்த கணக்கற்ற நன்கொடைகளையும் தானங்களையும் போற்றி ‘ஈகை செயலாளர் யோவான்’ என்னும் பட்டத்தை அவருக்குச் சூட்டினார்கள்.

     பரி. கிறிசொஸ்தம் கி.பி. 600 ஆம் வருடம் அத்தியட்சகர்களின் கூட்டம் ஒன்றை கான்ஸ்டான்டி நோபிளில் கூட்டினார். அதன்பின் சுற்றுப் புறங்களிலும் அத்தியட்சகர்களை சந்தித்து சபை சீர்த்திருத்த வேலையில் மும்முரமாய் ஈடுபட்டார். திருச்சபைக்காக அவர் எடுத்துக்கொண்ட பிரயாசத்தின் பயனாக பரிசேயரால் நமதாண்டவருக்கு வந்த எதிர்ப்பு போல் நம் பக்தனுக்கும் எதிர்ப்பு ஏற்பட்டது. சபை சீர்த்திருத்துதலை எதிர்த்த முப்பத்தாறு அத்தியட்சகரும், சக்கரவர்த்தி தியோப்பேலுவும் நம் பக்தர் பேரில் அபாண்டமான குற்றங்கள் சுமத்தி, அவரை அத்தியட்சகர் பதவியிலிருந்து நீக்கி, டீக்கனாக நியமித்ததாக உத்தரவு அனுப்பினார்கள். சக்கரவர்த்தி அத்துடன் அவரை நாடு கடத்த உத்தரவும் அனுப்பினார்.

      இதையறிந்த பாமரமக்கள் அவ்வுத்தரவு அமலுக்கு வரக்கூடாதென்று எதிர்வாதம் செய்தார்கள். அவர்களுக்கு பரி. கிறிசொஸ்தம் ஓர் அருமையான பிரசங்கம் செய்து கிறிஸ்துவிற்காகத் தாம் உயிரையும் இழக்க தயாராக இருப்பதாகக் கூறினார். நம் பக்தனுக்குக் கொடுத்த தீர்ப்பு சரியல்லவென்று மேலதிகாரிகள் உணர்ந்து அவரை கான்ஸ்டான்டிநோபிள் நகரத்தில் இரண்டு மாதம் இருக்கவும் பின்னர் அவர் நீஸ் பட்டணம் செல்லவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

       கி.பி. 404 ஆம் வருடம் ஜூலை மாதம் நம் பக்தன் நீஸ் நகருக்குப் புறப்பட்டார். செப்டம்பர் மாதம் காக்கஸஸ் மலைப்பகுதியிலுள்ள ஒரு சிற்றூர் சேர்ந்தார். அங்குள்ள குருவும் சபையோரும் அவர் வருகையால் அடைந்த சந்தோஷத்திற்களவேயில்லை. மக்கள் அவர்மீது கொண்ட பக்தியைக் காண சகியாமல் நம் பக்தனின் எதிரிகள் சக்கரவர்த்தியை அணுகி அவரை அந்நாட்டின் எல்லைக்கப்பால் அனுப்பிவிட வேண்டுமென்று வற்புறுத்தினர். பரி. கிறிசொஸ்தம் அவ்விடமிருந்து கொண்டு போகப்படுகையில் வழியில் ஒரு சிறு கோயிலில் தங்க நேரிட்டது. அன்றிரவு பரி. பாசிலிஸ்கஸ் கனவில் காணப்பட்டு “சகோதரனே தைரியமாயிரு, நாளைய தினம் நாம் இருவரும் ஒன்றாயிருப்போம்” என்று சொல்லக்கேட்டு அளவில்லா ஆனந்தம் கொண்டு மறுநாள் இராப்போஜனம் பெற்று வெண்வஸ்திரங்களை உடுத்தி தோத்திரப்பாட்டை பாடி சிரித்த முகத்துடன் தன் ஆவியை இறைவனிடம் ஒப்புக்கொடுத்தார்.

        பரி. கிறிசொஸ்தம் சிறந்த வேத அறிவும் சொற்பொழிவுவன்மையும் உள்ள பக்தன். சபையின் ஊழல்களைப் போக்க ஓயாது உழைத்த உத்தமன். சபையின் குருக்களும் அதற்கு மேற்பட்ட பதவி வகித்த பிரமுகர்களும் பொறாமையால் செய்த சூழ்ச்சிகளும் அரசாங்கம் சபை விஷயங்களில் தலையிட்டு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளுமே ஒரு சிறந்த பக்தனின் மரணத்திற்குக் காரணமாயிருந்தன. அவர் உடலை நீத்து பதினைந்து நூற்றாண்டுகளுக்கு மேலாகிலும் அவருடைய புகழும் பணியும் மறையவில்லை.

பிறப்பு: கி.பி. 344 (அந்தியோகியா)

இறப்பு: கி.பி. 407, செப்டம்பர் 14

Posted in Missionary Biography on October 14 at 08:21 AM

Comments (0)

No login
gif