Today Bible Verse

St. Qwintin History in Tamil

     

    கிறிஸ்துவின் நற்செய்தி பரவுவதற்காக யாவற்றையும் துறந்து இரத்த சாட்சியாக மரிக்கவும் ஆயத்தமாயிருந்த ஆதிசபையிலுள்ள பக்தர்களுள் ஒருவர் பரி. குவின்டின். இவர் ரோமாபுரியைச் சேர்ந்தவர். செனெட்டர் குடும்பமொன்றில் தோன்றியவர். தனது செல்வத்தையும், தனக்கு வரக் கூடிய பதவியையும் துறந்து நமதாண்டவரை அறியாத மக்களுக்கு, பரி. லூசியன் என்பவரைத் துணையாகக் கொண்டு தற்காலத்தில் பிரான்சு என்று சொல்லப்படும் கால் நாட்டிற்குச் சென்றார்.

    இவ்விருவரும் அந்நாட்டில் பல பாகங்களில் ஊழியம் செய்து ஏமியன்ஸ் பட்டணத்தைச் சேர்ந்தனர். அவ்வூரிலிருந்து பரி. லூசியன், போவியஸ் நகரை அடைந்து சுவிசேஷ விதையைப் பலர் மனதில் ஊன்றி அவ்வூரில் இரத்தச் சாட்சியாக மரித்தார்.  பரி. குவின்டின் ஏமியன்ஸ் நகரில் தங்கி தனது பரிசுத்த ஜீவியத்திலும் சாட்சி பகருதலினாலும் அற்புதங்கள் மூலமாயும் பலரை நமதாண்டவரிடம் வழி நடத்தினார்.

     அந்நாட்களில் ரிக்டியஸ்வாரஸ் பிரிபெக்டராக நியமிக்கப்பட்டான். அவன் அநேக கிறிஸ்தவப் பக்தரை வாளுக்கு இரையாக்கி இரத்தச் சாட்சிகள் தொகை அதிகரிக்கக் காரணமாயிருந்தான். கால் நாட்டின் இரண்டாம் பகுதிக்குத் தலைவனாக இருந்த வாரஸ் தனது சுற்றுப் பிரயாணத்தில் ஏமியன்ஸ் நகரில் கிறிஸ்தவர்களின் தொகை அதிகரித்திருப்பதைக் கேள்விப்பட்டு மூர்க்கம் கொண்டு பரி. குவின்டினை சங்கிலிகளால் கட்டுவித்து காவலில் போடுவித்தான். மறுநாள் அவரைத் தன் முன்னிலையில் கொண்டுவரச் செய்து கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கிக்கவும் மக்களை கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் கொடுக்கவும் கூடாதென்றும், மீறி அப்படிச் செய்தால் தண்டனை அளிப்பதாகவும் பயமுறுத்தினான்.

     பரி. குவின்டின் அந்த உத்தரவுக்குக் கீழ்படிய மறுத்தபோது அவரை இரக்கமின்றி வாரினால் அடித்தான். பின்னர் அவரைச் சிறிய சிறையில்போட்டு சிநேகிதரும் கிறிஸ்துவின் அடியார்களும் அவரை அணுக அனுமதி கொடுக்காதபடி அவரைக் கொடுமைப்படுத்தினான். இந்தக் கிறிஸ்துவின் பக்தனோ வரவர கிறிஸ்துவில் பலப்பட்டு சமாதானத்தின் கர்த்தரால் மனசமாதானமடைந்து சிறையில் கிறிஸ்துவைப் பாடி துதித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரைச் சிறைக்கூடத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஜனத்திரள் முன் பலவிதமான சரீர இம்சைக்குட்படுத்தினான். இவை ஒன்றும் பரி. குவின்டினின் விசுவாசத்தைக் குன்றச் செய்யவில்லை.

      ரிக்டியஸ்வாரஸ், ஏமியன்ஸ் பட்டணத்தைவிட்டு போகும் காலம் வந்தபொழுது, பரி. குவின்டினை அவ்விடம் விட்டு வெர்மாண்டி நாட்டின் தலைநகரான அகஸ்டா வெரோமான்சோரம் என்னும் பட்டணத்திற்குக் கொண்டுபோனார்கள். அங்கு கிறிஸ்துவைவிட்டுப் பிரிக்க முயன்றான். அதின் பயன் ஒன்றுமில்லை என்று கண்டு எரிச்சலடைந்து, மறுபடியும் சகிக்கவொண்ணா சரீர வேதனைகளுக்குக், கொடூரமான சித்திரவதைகளுக்கும் அவரை உட்படுத்தினான்.

     கழுத்திலுருந்து முழங்கால் வரை இரண்டு இரும்பு கம்பிகளை பிரயோகித்தும் விரல் நகங்களுள் மெல்லிய இரும்பு ஆணிகளை புகுத்தியும், தலையில் தசையுள்ள பாகங்களில் கம்பிகளைக் குத்தியும் கொடுமைப்படுத்தி நம் பக்தன் எந்த உபத்திரவத்தையும் சகித்து கிறிஸ்துவை மட்டும் மறுதலிக்க தயாராயிராததைக் கண்டு வாரஸ் பரி. குவின்டினுடைய தலையை வெட்டிப் போட்டான். இது கி.பி. 287 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடந்தது. அவர் சரீரத்தையும் அடக்கம் பண்ன விடாமல் சோம் நதியில் எறிந்தான். சில நாட்கள் கழித்து சில கிறிஸ்தவ பக்தர்கள் அச்சடலத்தை எடுத்து பட்டணத்து அருகிலுள்ள குன்றின் அடிவாரத்தில் அடக்கம் செய்தனர். சுமார் 55 வருடங்களுக்குப் பின்னர் எசிபியா என்ற கிறிஸ்தவ பக்த மாது அந்த இடத்தில் ஒரு அழகிய ஞாபகார்த்த கட்டடம் கட்டுவித்தார்கள். தற்பொழுது அங்கு பரி. குவின்டின் பேரால் பிரமாண்டமான அழகிய ஆலயம் ஒன்று எழும்பியிருக்கிறது.

      இரத்த சாட்சிகள் தாங்கள் கிறிஸ்துவுக்காக சரீரப்பாடு அனுபவிப்பதைப் பாக்கியமாகக் கருதினார்கள். அவர்கள் பட்ட சரீரப்பாடுகளை நம்மில் அநேகர் கண்ணால் பார்க்க சகியோம். அவைகளை மனமகிழ்வோடு ஏற்றுக்கொண்டு அச்சமயத்திலும் கிறிஸ்துவைப் போற்றி அவருக்கு ஸ்தோத்திரம் செய்த பக்தர்களின் விசுவாசத்தைக் குறித்து நாம் என்ன சொல்லுவோம்? அந்த சிறந்த இரத்தச் சாட்சிகளின் மரணமே கிறிஸ்தவ சபையின் வித்தும் ஐரோப்பிய சபைகளின் வளர்ச்சிக்குக் காரணமாயிருந்தது.

இறப்பு: கி.பி. 287 அக்டோபர் 31

Posted in Missionary Biography on October 14 at 08:52 AM

Comments (0)

No login
gif