Today Bible Verse

St. Gregory of Nazianzen History in Tamil

   

    ஐரோப்பாவில் கிழக்கு கிறிஸ்தவச் சபை நான்காம் நூற்றாண்டில் பொலிவும், சிறப்பும் பெறக் காரணமாயிருந்த பெரியார் நால்வரில் பரி. கெரகரி ஒருவர். மற்ற மூவர் பரி. பேசில், பரி. கிறிசொஸ்தம், பரி. அதநேஷியஸ் என்பவர்களாவார். திருமறை நூலில் புலமை பெற்று, பேரறிஞராக விளங்கின காரணத்தால் இவர் ‘திருமறை புலவர்’ என்று அழைக்கப்பட்டார்.

     கி.பி. 329 ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் கீழ் பாகத்திலுள்ள கப்பதோக்கியா நாட்டைச் சேர்ந்த நாசியன்சன் என்ற இடத்தில் பரி. கெரகரி பிறந்தார். இவருடைய தாயின் பெயர் நொன்னா. இவர்கள் ஜெபத்தில் பூரண விசுவாசம் வைத்து தூய வாழ்க்கை நடத்தின ஒரு பரிசுத்த பெண்மணி. இவருடைய கணவன் கெரகரி என்பவர். கிறிஸ்துவின் அன்பை அறியாதவராய், பல தெய்வங்களை வணங்கி தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். கண்ணீரோடும், உபவாசத்தோடும் அவருக்காக நொன்னா இடைவிடாமல் ஜெபித்து வந்தார்கள். அவளுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அவளுடைய கணவன் மனம் மாறி நமது ஆண்டவரின் தொண்டனாக மாறினார். பிற்காலத்தில் சிறந்த அத்தியட்சகராகவும் திகழ்ந்தார். இவர்களுக்கு ஜார்ஜியானா, கெரகரி, சிசேரியஸ் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுள், கெரகரியை அவருடைய தாய் கடவுளின் ஊழியத்திற்கென்று இளமையிலிருந்து பக்தி நெறியில் வளர்ந்தார்கள்.

     அக்காலத்தில் பாலஸ்தீனா நாட்டைச் சேர்ந்த சிசேரியா, கல்வி கற்ற பேரறிஞர் கூடுமிடமாகவும், சிறந்த கலாசாலையுள்ள இடமாகவும் விளங்கிற்று. அங்கு சிறிது காலம் பயின்ற பின்னர் அலெக்சாண்டிரியா சென்று கல்வியில் தேர்ச்சியடைந்து, ஏதென்ஸ் செல்லும்படியாக கப்பலில் ஏறினார். அம்மரக்கலம் வழியில் இருபது நாட்களாக புயல் காற்றில் அடிபட்டது. அதிலுள்ள பிரயாணிகள் கரை சேருவோம் என்ற நம்பிக்கையை இழந்தனர். கப்பல் சேதமடையாதபடி கரை சேரும்படி பரி. கெரகரி ஆண்டவரிடம் மன்றாடி, ஆண்டவரிடம் மறுபடியும் தம்மை தத்தம் செய்தார். புயல் அமர்ந்தது, கப்பல் ரோட்ஸ் துறைமுகம் சேர்ந்தது.

     அங்கிருந்து பரி. கெரகரி கப்பதோக்கியாவிலுள்ள சிசரோவுக்குச் சென்றார். பல அறிஞர்களோடு தாம் கற்று திருமறை நூல்களை ஆராய்ந்தார். பரி. பேசிலைகண்டு அவருடன் அளவளாவும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இவ்விரு பக்தரின் நட்பும் வளர்ந்து, அவர்களுடைய தூய்மையான உள்ளங்கள் ஒன்றையொன்று உணர்ந்து நின்றன. பரி. கெரகரியின் சொற்திறனைக் கண்ட மக்கள், தங்களுக்கு வழக்கறிஞராக உதவி செய்ய வேண்டுமென்று அவரை அழைத்தார்கள். அத்துடன் மாணவர்களுக்குச் சொற்பொழிவுகள் கற்பிக்கும் ஆசிரியராகவும் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு அவர் இணங்காமல் நமதாண்டவரின் தொண்டனாகப் பணி செய்வதே தம் விருப்பம் என்று தெரிவித்து, நாசியின் சென்னுக்கு திரும்பினார்.

    பரி. கெரகரியின் தந்தை அப்போது நாசியின்சென்னில் அத்தியட்சகராக பணியாற்றினார். அவர் நம் பக்தனுக்கு ஞானஸ்நானம் கொடுத்து தன்னுடன் அவ்வூரில் சிலகாலம் தங்கும்படி விரும்பினார். அதற்கு அவர் இணங்காமல், “என் சொத்து, என் மகிமை, என் நாவு, என் உடல்நலம், என் தாலந்துகள் அனைத்தையும் ஆண்டவருக்குச் சமர்ப்பிக்கிறேன்” என்று சொல்லி துறவியாக வாழ ஆரம்பித்தார். ரொட்டியை உணவாகவும், தண்ணீரை பானமாகவும் கொண்டார். முரட்டுத் துணியை அணிந்து தரையில் உறங்கினார். தன் தீய குணங்களும் பாவசுபாவமும் உபவாசத்தால் ஒழியும் என்று உணர்ந்து உபவாசம் செய்து தூய்மையான இருதயத்திற்கென்று ஆண்டவரிடம் மன்றாடினார்.

       கி.பி. 358 ஆம் ஆண்டில் பாண்டஸ் என்னும் நாட்டிலுள்ள ஐரிஸ் நதிக்கரையில் பரி. பேசிலிடம் இரண்டு வருடங்கள் வேத வாசிப்பிலும், உபவாசத்திலும், ஜெபத்திலும் செலவிட்டார். அப்போது அவருடைய தந்தை அவரை அங்கிருந்து வரவழைத்து குருவாக நியமித்தார். சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படாமல் நமது ஆண்டவரை முழு நேரமும் போற்றி சேவிக்க வேண்டுமென்று விரும்பிய பக்தனுக்கு குருவாகப் பணியாற்றுவது முதலில் கஷ்டமாகத் தோன்றிற்று. எனினும் அப்பதவியை ஏற்றுக்கொண்டபின் சபையிலுள்ள ஊழல்களை ஒழிப்பதிலும் மக்களைச் சேவிப்பதிலும் ஈடுபட்டு சிறந்த சேவை செய்தார்.

     கப்பதோக்கியா நாட்டிற்குப் பிரதம அத்தியட்சகராக இருந்த பரி, பேசில், சசிமா என்ற இடத்திற்கு பரி. கெரகரியை அத்தியட்சகராக நியமித்தார். அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன் பரி. கெரகரி தம் ஊரான நாசியன்சன் சென்றார். அங்கு நோய்வாய்பட்டுக் கிடந்த அவருடைய தந்தை சில நாட்களில் மரித்தார். சில மாதங்களில் அவருடைய தாயாரும் இறந்தார்கள். அவருடைய உடல்நலம் கெட்டுப் போயிற்று. எனவே, எல்லாவற்றையும் துறந்து செலூஷியாவுக்குச் சென்று அங்கு ஐந்து வருடங்கள் துறவியாக வாழ்ந்தார். கி.பி. 379 இல் பரி. பேசில் மரித்தார். இச்செய்தி நம் பக்தனுக்கு மிகுந்த மனவருத்தத்தைக் கொடுத்தது.

    ஆரியன்  என்ற வேத புரட்சி கட்சியாரால் கான்ஸ்டான்டிநோபிள் சபையில் பிரிவினைகள் ஏற்பட்டன. பரி. கெரகரியின் தூய வாழ்க்கையையும், அவருடைய புலமையையும், சொற்பொழிவாற்றும் திறமையையும் கேள்விப்பட்ட மக்கள் கான்ஸ்டான்டிநோபிள் வந்து, அச்சபையைச் சீர்த்திருத்தி முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். செலுஷியாவில் துறவிபோல் வாழ்ந்த பக்தனுக்கு அவ்விடம் விட்டு வர விருப்பமில்லை. எனினும் சபையின் நல்வாழ்வை விரும்பி கான்ஸ்டான்டிநோபிள் சபையை சீர்திருத்தம் செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் உடனே புறப்பட்டார்.

      சரீர பெலன் குன்றிப்போய், முதுகு கூனிப்போயிருந்த பரி. கெரகரியைக் கண்டதும், ஆரியன் கட்சியினரும் அதைச் சேர்ந்தவர்களும் ஏளனம் செய்தார்கள். அங்குள்ள ஒரு சிறு ஆலயத்தில் அவர் முதன் முதலாக பிரசங்கம் செய்த பொழுது சில மக்களே வந்திருந்தார்கள். பின்னர், அவருடைய புலமையையறிந்து, அனேக மக்கள் வர ஆரம்பித்தார்கள். அது ஆரியன் கட்சியினருக்குப் பொறாமையை உண்டு பண்ணிற்று. அவருக்கு இடையூறு விளைவிக்க முயன்றார்கள்.

    எகிப்து மக்கதோனியா நாடுகளிலிருந்து அப்பொழுது கான்ஸ்டான்டிநோபிளுக்கு அத்தியட்சகர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அங்கிருந்த கட்சியினரோடு சேர்ந்து அத்தியட்சகராக அங்கு பரி. கெரகரி பணியாற்றுவது சட்டத்திற்கு விரோதம் என்று கிளர்ச்சி செய்தார்கள். சபை அங்கத்தினருக்குள் பிரிவினை உண்டாகி கலகம் ஏற்பட்டது. “நான் அத்தியட்சகராக இருப்பதனால் கலகம் ஏற்படுகின்றது. ஆதலால், யோனாவைப்போல நான் கடலில் போடப்பட்டு, அதனால் அமைதி உண்டாகட்டும்” நான் அந்த பதவியைவிட்டு விலக ஆயத்தமாயிருக்கிறேன். இதை நான் எப்பொழுதும் விரும்பியதில்லை, விசுவாசத்திற்காகப் போராடும் ஒரு அத்தியட்சகராக இருந்தால் அதுவே போதும், என்று கூடியிருந்தவர்களிடம் பரி. கெரகரி கூறினார். பின்னர் அரண்மனைக்குச் சென்று, சக்கரவர்த்தியிடம் விண்ணப்பம் செய்து அத்தியட்சகர் பதவியை விட்டு விலக அனுமதி கேட்டார். அவருடைய தூய்மையான உள்ளத்தைக் கண்டு சக்கரவர்த்தி வியந்து, பரி. கெரகரி தம் நகரை விட்டுப்போவது மனவருத்தத்தைக் கொடுத்தபோதிலும் அவர் விருப்பத்திற்கிணங்கினார். பக்தனான பரி. கெரகரி நகர மக்களிடம் விடைபெற்று நாசியன்சன் திரும்பினார்.

     நாசியன்சன் திரும்பியதும் அரியன்சம் என்னுமிடத்தில் தனிமையாக தியானத்திலும், ஜெபத்திலும் நாட்களைச் செலவிட்டார். லெந்து நாட்கள் நாற்பதையும் மௌனத்தில் கழித்தார். முதுமையில் அநேக பக்திப் பாடல்கள் இயற்றினார். சிறந்த நூல்களை எழுதியும், அறிவுரைகள் நிகழ்த்தியும் வந்து கி.பி. 389 ஆம் ஆண்டில் பரம இளைப்பாறுதலுக்குச் சென்றார்.

    பரி. கெரகரி அறிவு நிறைந்தவர். கிறிஸ்தவத் திருமறையைக் கசடறக் கற்றறிந்த பெரியார். தூய்மையான வாழ்க்கை நடத்திய பக்தன். பண்டிதருக்கெல்லாம் பண்டிதராய் விளங்கினாலும், பாமரமக்களோடு பேசும்பொழுது, பாமரனாகவே எண்ணி ஏற்றபடி அவர்களுடன் உரையாடுவார். தாழ்மையை அணிந்து, பிறர் புகழை விரும்பாமல், விசுவாசத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் ஓயாமல் உழைத்தார். இப்பக்தனுக்கு சபை சரித்திரத்தில் முக்கியமான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிறப்பு: கி.பி. 329, (நாசியன்சன், கப்பதோக்கியா)

இறப்பு: கி.பி. 390, ஜனவரி 25, (கப்பதோக்கியா)

Posted in Missionary Biography on October 14 at 09:03 AM

Comments (0)

No login
gif