Today Bible Verse

St. Columba History in Tamil

 

        பரி. கொலம்பா கி.பி. 521 ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் கார்ட்டன் என்னுமிடத்தில் பிறந்தார். இந்தப் பெயருடைய பக்தர்கள் அநேகர் அந்நாட்டில் இருந்தமையால் இவரைக் கொலம்கில்லி என்று அழைத்தார்கள். ‘கில்லி’ என்பது அந்நாட்டின் மொழியில் ‘சிறு அறைகள்’ என்று பொருள்படும். அயர்லாந்தில் அநேக மடங்கள் சிறு அறைகளுடன் அவரால் கட்டப்பட்ட காரணத்தால் ‘கொலம் கில்லி’ என்று அவர் பெயர் பெற்றார்.

     ஆத்மவளர்ச்சியில் முன்னேற அனுதினமும் பிரயாசப்படுவதே இவ்வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கவேண்டுமென்று தம் இளமையிலிருந்தே பரி. கொலம்பா உணர்ந்தார். அதற்காக ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு எளிய வாழ்க்கையை நடத்தினார். வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் நாட்களைச் செலவிட்டார். உலகப் பற்றுக்களை ஒழித்தார். பின்பு அத்தியட்சகர் பரி. பின்னியன் நிறுவிய பள்ளிக்கூடத்தில் வேத நூல்களைக் கற்று கி.பி. 546 இல் குருப்பட்டம் பெற்றார்.

     அக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் அநேக கிறிஸ்தவப் பக்தர்கள் துறவறம் பூண்டு மடங்களில் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். அயர்லாந்திலும் அவ்வாறு துறவறம் பூண்ட மக்களுக்கென்று சில மடங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆனால் அவை செவ்வனே நடத்தப்படவில்லை. அவைகளைச் சீர்திருத்தி, நல்ல முறையில் நடத்தும் தொண்டில் பரி. கொலம்பா ஈடுபட்டார். கி.பி. 550 இல் டார்மாக் என்னுமிடத்தில் ஒரு பெரிய கிறிஸ்தவ மடம் நிறுவினார். இதைத் தவிர ஆங்காங்கு சிறு மடங்களையும் கட்டினார். இவருடைய தூய வாழ்க்கையையும், புலமையையும் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண வந்தனர். அவருக்காகக் காத்திருந்தது, அவருடைய சொற்பொழிவைக் கேட்டுப் போவது அவர்களுக்கு வழக்கமாயிற்று.

     டெர்மாண்ட் அல்லது டெர்மிடியஸ் என்ற சிற்றரசன் பரி. கொலம்பா பணியாற்றிய நிலப் பகுதியை ஆண்டு வந்தான். அவன் ஆட்சிமுறையில் கண்ட ஊழல்களை பரி. கொலம்பா எடுத்துக் காட்டினார். அவ்வரசன் அவ்வூழல்களை ஒழிக்க முற்படவில்லை. நாட்டின் நன்மை தீமைகளை உள்ளது உள்ளவாறு கண்ட உத்தமனான பரி. பெர்னார்டு இந்நாட்டில் வசிக்க விரும்பவில்லை. கி.பி. 565 ஆம் ஆண்டு தன்னுடைய சீடர்களில் பன்னிருவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு அயர்லாந்து நாட்டைவிட்டு இப்பொழுது ஸ்காட்லாந்து என்று சொல்லப்படும் வட இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு பிக்ட்ஸ் என்ற விக்கிரகாராதனைக்காரரை நல்வழிப்படுத்தி நமதாண்டவரிடம் கொண்டு வந்தார். அவ்வகுப்பினர் ஸ்காட்லாந்திலிருந்து 12 மைல் தூரத்திலிருந்த ஐயோனா என்ற தீவை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

     பரி. கொலம்பா ஐயோனாவில் ஒரு பெரிய கிறிஸ்தவ மடத்தைக் கட்டினார். ஸ்காட்லாந்தில் பற்பல இடங்களில் அநேக மடங்களைக் கட்டினார். கிறிஸ்துவை அறியாத மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதைத் தம்முடைய பணியாகக்கொண்டார். அவர் கட்டிய மடங்களின் மூலமாய் பிற்காலத்தில் புகழ்வாய்ந்த ஐடன், பினியன், கோல்மன் என்ற அத்தியட்சகப் பெரியார்கள் நார்தம்பிரியா நாட்டில் அநேகமக்களை கிறிஸ்துவினிடம் வழி நடத்தினார்கள்.

     பரி. கொலம்பா மிகவும் எளிய வாழ்க்கை நடத்தினார். ஆடம்பரமற்ற உடையை அணிந்து, சொற்ப உணவைக் கொண்டு வாழ்ந்தார். பஞ்சணையை அவர் நாடவேயில்லை. தரையில் உறங்கி ஒரு கல்லைத் தனக்கு தலையணையாகக் கொண்டார். வேதம் வாசித்து, ஜெபம் செய்து தியானத்தில் மூழ்கி மகிழ்ந்திருப்பார். வாழ்நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு அருமையாக காணப்பட்டது. அவை கடவுளின் ஊழியத்திற்கென்றும், அவருடைய மகிமைக்கென்றும் பயன்படுத்த வேண்டுமென்று விரும்பினார். வேதம் வாசித்து ஜெபித்து வந்த நேரம் தவிர மற்ற நேரத்தை நமது ஆண்டவரின் அன்பையும், அவருடைய தியாகத்தையும் குறித்துப் பிரசங்கிப்பதில் செலவிட்டார். அவருடைய தூய்மையான வாழ்க்கையும் மலர்ந்த முகமும் மக்களின் மனதைக் கவர்ந்தன. ஏழைக் குடியானவன் முதல் அரசன் வரைக்கும் அவரை நேசித்து, அவருடைய ஆலோசனையின்றி யாதொரு காரியத்திலும் ஈடுபடாமல் வாழ்ந்து வந்தார்கள்.

     இவ்வுலக வாழ்க்கையை நீத்து, மறுவுலகம் செல்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரி. கொலம்பா தூதர்களின் காட்சியைக்கண்டு மகிழ்ந்து கண்ணீர்விட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்து சபையாரின் ஜெபத்தைக் கேட்டு பரி. கொலம்பாவின் உலக வாழ்க்கையை நான்கு வருடகாலம் கடவுள் நீடித்திருப்பதாக அத்தூதர்கள் சொல்லக் கேட்டார். அவ்வாறே அந்நாளுக்குப் பின் பரி. கொலம்பா நான்கு ஆண்டுகள் கிறிஸ்தவ சபைகளின் நடுவில் உத்தமமாய் உழைத்தார்.

      கி.பி. 591 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி இவ்வுலகத்தை விட்டு நமதாண்டவரிடம் சென்றார். அன்று ஆண்டவரிடம் தாம் செல்லப் போவதாக டியர்மிட் என்ற சீடனுக்கு தெரிவித்து, ‘இன்று ஓய்வு நாள், நான் இவ்வுலக அலுவல்களில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளப்படும் நாள்’ என்று சொல்லி ஆலத்திற்குச் சென்றார். ஆலயத் திருப்பீடத்தின் முன் நற்கருணை பந்தியில் சேர்ந்து சபையோரை ஆசீர்வதித்தார். இவ்வாறு பக்தனாக விளங்கின இவர் மரிக்கும்போது வயது 77. இவருடைய தூய, எளிய ஆவிக்குரிய வாழ்க்கை நமக்கு முன்மாதிரியாக விளங்குகிறது.

பிறப்பு: கி.பி. 521, கார்ட்டன், அயர்லாந்து

இறப்பு: கி.பி. 591, ஜூன் 9

Posted in Missionary Biography on October 14 at 09:12 AM

Comments (0)

No login
gif