St. Sebastian History in Tamil

     கிறிஸ்துவின் அடியார்கள் மிகவும் துன்பம் அனுபவித்து வந்த காலத்தில் தோன்றிய பக்தர் பரி. சபாஸ்டியன். கிறிஸ்தவ மக்கள் நமதாண்டவர் பேரிலுள்ள விசுவாசத்தில் குன்றிப் போகாதபடி அவர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதில் அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அதிகம். கிறிஸ்துவிற்காக கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கவும் அவர் தயங்கவில்லை. அவருக்காக மரிக்கவும் ஆயத்தமாயிருந்து, இறுதியாகத் தடிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.

     பரி. சபாஸ்டியன் கால் என்று சொல்லப்பட்ட நாட்டில் நார்போன் ஊரில் பிறந்தார். அவருடைய பெற்றோர் இத்தாலிய நாட்டிலுள்ள மிலான் என்னும் நகரத்தைச் சேர்ந்தவர்கள். பரி. சபாஸ்டியன் ராணுவத்தில் வேலை செய்பவர்களின் மீது பரிதாபம் கொள்வார். அந்தப் பணியில் அவருக்கு வெறுப்பு உண்டாயிற்று. ஆயினும், தாமே அந்த பணியில் சேர்ந்தால் அதிகாரிகளிடம் கிறிஸ்தவ மக்கள் படும் துன்பத்தைத் தாம் குறைக்கக் கூடும் என்று எண்ணி, ரோமாபுரிக்குச் சென்று ரோம சக்கரவர்த்தி, காரினாஸ் என்பவரின் படையில் சேர்ந்தார். (கி.பி. 283) அச்சமயம் மார்க்கஸ், மார்சிலேனியஸ் என்று இரண்டு கிறிஸ்தவர்கள், மார்க்க வைராக்கியத்திற்காக மரண தண்டனை அடைந்திருந்தனர். அவர்களின் சிநேகிதர்கள் தங்களுக்காகக் கண்ணீர் வடிப்பதைச் சகியாமல் தங்கள் விசுவாசத்தை இழக்கக் கூடிய நிலைமையில் பரி. சபாஸ்டியனுடைய மொழிகளால் உறுதியடைந்து பக்தர்களாக விளங்கினார் என்றும் சொல்லப்படுகிற்து.

     பரி. சபாஸ்டியன் அற்புதம் செய்யும் வரத்தையும் பெற்றிருந்தார். நிக்காஸ்டொஸ் என்பவரின் மனைவி ஜோ என்னும் அம்மையார் பக்கவாதத்தால் ஆறு வருடம் பேசும் சக்தியை இழந்திருந்தாள். பரி. சபாஸ்டியன் அவளின் வாயில் சிலுவையை வரைந்து ஜெபிக்க உடனே குணமடந்து பேசினாள். மார்க்கஸ், மார்சிலேனியஸ் என்பவர்களின் தகப்பனார், திமிர்வாதத்தில் கஷ்டப்பட்டபோது ஆச்சரியவிதத்தில், பரி. சபாஸ்டியன் அவரைக் குணப்படுத்தி அநேகருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

     அவர் செய்யும் அற்புதங்களையும் அவருடைய பரிசுத்த வாழ்க்கையையும் குரோமட்டியஸ் என்னும் ரோம கவர்னர் கேள்விப்பட்டு, அவரைத் தன்னிடம் வரவழைத்து, கிறிஸ்து மார்க்கத்திற்குரிய சத்தியங்களைக் குறித்து வினவினான். பின்னர் தானும் தன் மகன் திபிரூட்டியஸ் என்பவனும் அவரிடம் ஞானஸ்நானம் பெற்றனர்.

        இந்த ரோம கவர்னர் ஞானஸ்நானத்தின் பயனாக அநேக சிறைப்பட்ட மக்கள் விடுதலையடைந்தனர். பின்பு குரோமட்டியஸ் ரோமாபுரியை விட்டு கிராமங்களுக்குச் சென்று துன்பப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ அடியார்களுக்கு ஆறுதலளித்தும், அவர்களுக்கு பல உதவிகள் செய்தும் தன் வாழ்நாட்களைக் கழித்தார்.

       பரி. சபாஸ்டியன் ரோமாபுரியில் ஆற்றிய பணியைத் திருச்சபை அங்கத்தினர் போற்றி கிறிஸ்தவப் பக்தர்களுக்கு உதவி செய்வதற்காக அந்நகரிலேயே தங்கியிருக்கும்படி வேண்டிக்கொண்டனர். அப்பொழுது கிறிஸ்தவர்களுக்கு விரோதமான கிளர்ச்சி ஏற்பட்டு அநேக பக்தர்கள் கொல்லப்பட்டனர்.

     டயோகிலிடயன் என்னும் ரோம சக்கரவர்த்தி, பரி. சபாஸ்டியனைப் பிடித்து அம்பெய்யும் கொலையாளிகளிடம் ஒப்புவித்தான். அவர்கள் அவரைத் தங்கள் முன்னிலையில் சற்று தூரத்தில் நிறுத்தி, அவர் மீது அம்புகளை எய்தார்கள். உடல் முழுவதும் அம்புகளால் தைக்கப்பட்டு விழுந்த அவரை மரித்துப் போனதாக விட்டுப்போயினர். அவரை ஒரு விதவை தூக்கி எடுத்து அவர் காயங்களை கழுவி அந்தப் பக்தன் உயிரடையக் கண்டாள்.

      நம் பக்தன் உயிருடன் தன் அலுவல்களைச் செய்து கொண்டிருப்பதைக் கண்ட சக்கரவர்த்தி, போர்ச் சேவகனையனுப்பி மறுபடியும் அவரைப் பிடித்து, தடிகளால் அடித்துக் கொன்று ஒரு பெரிய, நீர் நிறைந்த குளத்தில் போட்டான். லூசின்னா என்ற ஒரு கிறிஸ்தவ அம்மையார் அவர் உடலை அங்கிருந்து எடுத்து நல்லடக்கம் செய்தார்கள்.

     ஆதி காலத்து இரத்த சாட்சிகளில் பரி. சபாஸ்டியன் முதன்மையான இடத்திற்குரியவர். கிறிஸ்துவின் மீதுள்ள அவருடைய அன்பும், பற்றும், உறுதியும் மிகமிகச் சிறந்ததாகும். கிறிஸ்தவ மக்கள் துன்பத்தின் நடுவில் வழுவிப் போகாதபடி தம் நடத்தையாலும் போதனையாலும் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கினார். ஆத்ம நன்மைகளுடன் சரீர நன்மைகளையும் பிறருக்கு வழங்கினார். நோயுற்றோரைக் குணமாக்கினார். சிறைவாசம் செய்தவனை விடுதலை செய்ய முயற்சித்தார். அடிமைகளை விடுவித்து அவர்களை நல்ல பராமரிப்புக்கு ஒப்புக் கொடுத்தார்.

      தம் வாழ்நாள் இறுதியில் ரோம சக்கரவர்த்தி தன்னைக்கொல்ல முயற்சிப்பதை அறிந்தும் வாழ்க்கைக் குறிக்கோளை அவர் மாற்றவில்லை. ஒருமுறை தாக்கப்பட்டு மரணத் தருவாயிலிருந்தும், மறுபடியும் தன் பணியில் மும்முரமாய் ஈடுபட்டு சக்கரவர்த்தியின் வெறிக்கு உள்ளாகி, அவர் இரத்தச் சாட்சியாக மரித்தார்.

பிறப்பு: 256

இறப்பு: 288

Posted in Missionary Biography on October 14 at 09:19 AM

Comments (0)

No login
gif