Today Bible Verse

St. Bernard History in Tamil

 

     பரி. பெர்னார்டு கி.பி. 1091 இல் பிரான்ஸ் நாட்டில் டிஜான் என்னும் இடத்திற்கருகிலுள்ள பாண்ட்டெய்ன்ஸ் அரண்மனையில் பிறந்தார். இவர் பிரபுக்கள் குலத்தவர் இவருடைய தந்தையின் பெயர் டெசலின். தாயின் பெயர் ஆலிஸ் அன்னாள் சாமுவேலை கடவுளுக்கென்று தத்தம் செய்ததுபோல் பெர்னார்டையும் அவருடைய தாய் கடவுளுக்கென்று ஒப்புக் கொடுத்தார். பரி. பெர்னார்டு இவர்களுடைய மூன்றாவது பிள்ளை. இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் ஒரு பெண் உள்பட ஏழு பேராவர்.

     இளமையிலேயே பரி. பெர்னார்டு குணசீலராக விளங்கினார். வாலிபப் பிராயத்தை அடைந்ததும், திருமறையைப்பற்றி விளக்கங்களைப் படித்து, கடவுளின் ஊழியத்திற்கென்று தம்மை ஆயத்தம் செய்தார். பரி. அம்புரோஸ் பிறந்த தினத்தன்று அவருடைய தாயார் சுற்றுப்புறங்களிலுள்ள குருமாரை அரண்மனைக்கு வரவழைத்து கடவுள் பக்தியுடன் அந்த நாளை  அவ்வாறு கொண்டாடும்பொழுது அவர்கள் அமைதியாக கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள்.

     அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டில் சிட்டே என்ற இடத்தில் பிரசித்திப்பெற்ற கிறிஸ்தவ மடம் ஒன்று இருந்தது. உன்னத ஆத்மீக நிலையை அடைய விரும்பும் கிறிஸ்தவ மக்கள் அங்கு சென்று தங்கள் புலன்களை அடக்கி துறவிகளாக வாழ்ந்து வந்தார்கள். பரி. ஸ்தேவான் என்ற பக்தன் அம்மடத்தை நடத்தி வந்தார். பரி. பெர்னார்டு அங்கு சென்று வசிக்க திட்டமிட்டார். அவர் அங்கு செல்வது அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் விருப்பமில்லாதிருந்தது. எனவே, அவ்வாறு செய்ய வேண்டாமென்று தடுத்தார்கள். அவருடைய குடும்பக்காரியங்களை ஒழுங்குப்படுத்துவதில் சுமார் ஆறுமாதங்கள் செலவிட்டு, தன்னை தடுத்த சகோதரர்களையும், நண்பர்களையும் சமாதானப்படுத்தி சிட்டே மடத்திற்குச் சென்றார். அங்கு கடுமையான உபவாசத்திலும், வேத வாசிப்பிலும், ஜெபத்திலும் நாட்களை செலவிட ஆரம்பித்தார்.

     சிட்டே மடத்தில் இருந்த காலத்தில் பரி. ஸ்தேவானுடைய தூய வாழ்க்கை இவருக்குச் சிறந்த முன் மாதிரியாயிருந்தது. மடத்தில் பல நிகழ்ச்சிகளிலிருந்தது. அவர் கடவுளால் நடத்தப்பட்ட மெய்யடியாரென்று பரி. பெர்னார்டு உணர்ந்தார். பரி. பெர்னார்டு ஒவ்வொறு நாளும் ஏழு சங்கீதங்களைப் மனப்பாடம் செய்து வந்தார். இப்படி அவர் செய்தது வேறொருவருக்கும் தெரியாது. ஒரு நாள் பரி. பெர்னார்டு அவ்வாறு மனப்பாடம் செய்வதை மறுத்துவிட்டார். இதைத் தம் பக்தி உணர்ச்சியால் அறிந்த பரி. ஸ்தேவான், பரி. பெர்னார்டைப் பார்த்து, “நீர் ஏழு சங்கீதங்களைத் தினமும் மனப்பாடம் செய்வீரே. நேற்றைய தினம் யார் உமக்காக அதை மேற்கொண்டு செய்யும்படி விட்டு விட்டீர்” என்றார். இதைக் கேட்ட பரி. பெர்னார்டு மனதில் குத்தப்பட்டு, கடவுளிடம் மன்னிப்புக் கோரி அன்றுமுதல் தாம் செய்யும்படி நிர்ணயித்திருந்த ஒவ்வொறு காரியத்தையும் தவறாமல் செய்தார்.

     பரி. பெர்னார்டு மிக எளிய முறையில் தம் வாழ்க்கையை நடத்தி வந்தார். பாவத்தின்மேல் வெற்றி சிறந்து தூய வாழ்க்கை நடத்தவேண்டுமானால் தம் உடலை அடக்கி வாழ்தல் அவசியமென்று கருதினார். ரொட்டியைச் சாப்பிட்டு, தண்ணீரைப் பானமாகக் கொண்டு வாழ்ந்தார். அதன் பயனாக அவருடைய உடல்நலம் கெட்டபொழுது, கீரைகூழில் கொஞ்சம் தேனும் சேர்த்து அருந்தினார். இவைகளை அவர் சாதாரண நாட்களில் சாப்பிடுவது அவசியமில்லையென்றும், நொருங்குண்ட இருதயத்தினால் வரும் கண்ணீரினால் நனைந்த ரொட்டியே ஒரு பக்தனுக்குப் போதும் என்றும் சொல்லி வந்தார். இவர் புத்திக்கூர்மையும், வேத அறிவும் நிறைந்தவர். தூய வாழ்க்கையைக் கடைபிடித்தவர். எனவே, இவருடைய புகழ் எங்கும் பரவலாயிற்று. அநேகக் கிறிஸ்தவ மக்கள் துறவறம் பூண்டு அவர் மடத்திற்கு வர முற்பட்டனர்.

     சிட்டே மடத்தில் போதுமான இடம் இல்லாமற் போயிற்று. ஆகவே லாபர்டே என்னுமிடத்தில் கி.பி. 1113 இல் ஒரு மடம் நிறுவப்பட்டது. வெகு சீக்கிரத்தில் மூன்றாவது மடம் தேவைப்பட்டது. கி.பி. 1116 இல் ஒரு பிரபு இனமாக வழங்கின கிளர்வா என்னுமிடத்தில் அதைக் கட்டினார்கள். அதை நிர்வகிக்கும் பொறுப்பு பரி. பெர்னார்டுக்கு சில சகோதர்கள் உட்பட அங்குச் சென்று தங்களுக்கென்று சிறு அறைகளைக் கட்டிகொண்டு, வேத வாசிப்பிலும், தியானத்திலும், ஜெபத்திலும் நாட்களை செலவிட்டார்கள். அவ்வப்பொழுது ஏற்பட்ட இன்னல்களைக் கடவுளின் கிருபையால் மேற்கொண்டு அவரைத் துதித்து வந்தார்கள்.

     பரி. பெர்னாடின் தூய வாழ்க்கையைக் குறித்து மற்றவர்கள் கேள்விப்பட்டு, நாட்டிலும் சபைகளிலும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும்படியாக அவரை அழைத்தார்கள். மடத்திலுள்ள அலுவல்களைமட்டும் கவனித்து உலகத்தால் கறைபடாமல் வாழ்க்கை நடத்த விரும்பிய நம் பக்தனுக்கு மடத்தைவிட்டு வெளியே செல்ல மனமில்லை. எனினும் கடவுள் தம்மை எந்த பணிசெய்ய சித்தம்கொண்டு எங்குச் செல்ல தம்மை அழைத்தாரோ, அங்கு தாம் செல்வது தம்முடைய கடமையென்று கருதினார். பாரிஸ் நகரத்து மக்கள் இவருடைய திருமறை புலமையைப் பயன்படுத்தி கிறிஸ்தவச் சமய போதகர்களுக்கும், மாணவர்களுக்கும் போதிக்கும்படி இவரை அழைத்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, கி.பி. 1112 இல் பாரிஸ் நகரத்திற்கு குரு பட்டத்திற்கென்று படித்துகொண்டிருந்த மாணவர்களுக்கு திருமறை விளக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

     குருக்களுக்கும், மக்களுக்கும் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவும் இவர் உதவியை நாடினார்கள். ரேயம்ஸ் நகர மக்களுக்கும், பிரதம அத்தியட்சகருக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, சபையின் நல்வாழ்வை அது கெடுத்தபொழுது, பரி. பெர்னார்டு அங்கு சென்று அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்தார். ஜெர்மனியின் சக்கரவர்த்தி லோத்தாருக்கும், சக்கரவர்த்தி ஹென்றியினுடைய இரு மருமகன்களுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் நாட்டின் அமைதி கெட்டது. அவர்களை சமாதானப்படுத்தும்படி, பரி. பெர்னார்டு அனுப்பப்பட்டார். அவர் எங்குச் சென்றாலும் மேல் உலகத்திலிருந்து வந்த ஒரு கடவுளின் அடியானைப்போல அவரை வரவேற்றார்கள். அவருடைய மலர்ந்த முகமும், தூய்மையான பேச்சும், நடத்தையும் மக்களின் மனதைக் கவர்ந்தன. அரசக் குடும்பத்தில் சமாதானம் உண்டாயிற்று. இத்தாலிய நாட்டில் பைசா என்னும் இடத்தில் நடந்த மகாநாட்டில் கலந்துகொண்டார். மிலான் சபையில் அப்பொழுது ஏற்பட்ட பிளவை சரிபடுத்தி சபை ஒன்றுபடச் செய்தார். அவருடைய வருகையால் கிறிஸ்தவ மக்களின் வாழ்க்கையில் மாறுதல் காணப்பட்டது. மிலானிலிருந்து கிளர்வா என்ற தம் மடத்திற்கு திரும்பினார்.

     பரி. பெர்னார்டு கிளர்வாவில் நீடித்து பணியாற்ற முடியவில்லை. பிரிட்டனில் அக்விட்டன். பிரபு என்று சொல்லப்பட்ட வில்லியம் தன்னுடைய கெட்ட நடத்தையாலும், அத்தியட்சகருக்கு இழைத்த துன்பங்களிலும் சபைக்குக் கெடுதல் உண்டாக்கி வந்தான். அங்குச் சென்று அந்த பிரபுவைச் சந்தித்து, அவருடைய குற்றங்களை உணர்த்தினார். அவர் மனம்மாறி சிறந்த ஒரு ஊழியனாக மாறினார். அங்குள்ள சபைகள் முன்னேற்றமடையத் தொடங்கின. அபிலார்டு என்பவன் கிறிஸ்தவத்தைக் குறித்து தவறான கொள்கைகளைப் பரவச் செய்தான். பரி. பெர்னார்டு அவரைக் கண்டித்து குற்றத்தை உணர்த்தினார். கில்பர்ட்டு என்பவனும், அவ்வாறு வேத புரட்சி செய்து வந்தான். அவனும் பரி. பெர்னார்டின் போதனையினால் குணப்பட்டான்.

     கி.பி. 1153 இல் பெர்னார்டு நோய்வாய்ப்பட்டார். அந்நிலைமையிலும் மக்களை ஒன்றுபடுத்தி மக்களைச் சீர்திருத்தும் பணியை அவர் விட்டுவிடவில்லை. டிரையர்ஸ் என்னுமிடத்திலுள்ள குடிகள்மீது அதன் அருகாமையிலுள்ள அரசகுமாரன் படையெடுத்து அநேகரை வாளுக்கு இரையாக்கினான். அவனைப் பழிவாங்கும் எண்ணத்துடன் கிராம மக்கள் ஒன்று கூடினார்கள். இதைக் கேள்வியுற்ற டிரையர்ஸ் அத்தியட்சகர், கலகத்தைத் தடுக்கக்கூடியவர் பரி. பெர்னார்டை தவிர வேறொருவரும் இல்லையென்று உணர்ந்து, அவரை அணுகி இரு தரத்தினரையும் சமாதானப்படுத்தும்படி வேண்டிக் கொண்டார்கள். அவர் கேட்டுக்கொண்டபடி அவர் அவ்விடம் சென்று அவர்களைச் சமாதானப்படுத்தி திரும்பினார். இப்பிரயாணத்தில் அவருடைய நோய் அதிகரித்தது. மரணத்தருவாயில் அவரைச் சுற்றி நின்று ஜெபம் செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, “என் ஆண்டவரிடம் செல்ல என்னைத் தடை செய்யாதீர்கள்” என்று சொல்லி நமதாண்டவரிடம் தம் ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

     பரி. பெர்னார்டு மரித்தபொழுது அவர் நிறுவிய கிளவாட்ஸ் மடத்தில் எழுநூறு துறவிகள் இருந்தார்கள். இதைத் தவிர, அவர் நூற்றிருபது மடங்களைக் கட்டினார். அரச குலத்தவர்களில் அநேகர் அவருடைய தூய வாழ்க்கையால் கவர்ச்சிக்கப்பட்டு, துறவிகளானார்கள். ஐரோப்பாவில் பல இடங்களிலுள்ள அத்தியானங்களிலிருந்து, அவர் அங்கு அத்தியட்சகராகப் பணியாற்றும்படி அழைப்பு வந்தபோது அப்பதவியை வகிக்க அவர் அறவே மறுத்தார். திருச்சபைக்கு பல்வேறு வகைகளில் நன்மைகள் செய்தார். அவர் ஒரு திருமறைப் புலவர். அநேக பக்தி நூல்களை எழுதியுள்ளார். அவைகளில், ‘கடவுளின் பேரில் அன்பு கூருதல்’ என்ற நூல் மிகச் சிறந்ததாகும். ‘இயேசுவே நீர் என் இன்பம்’ என்ற ஞானப் பாடலும் மற்ற சில ஞானப் பாடல்களும் இவரால் எழுதப்பட்டன என்றும் கருதப்படுகிறது.

பிறப்பு: கி.பி. 1091, பிரான்ஸ்

இறப்பு: கி.பி. 1153

Posted in Missionary Biography on October 14 at 10:57 AM

Comments (0)

No login
gif