Today Bible Verse

St. Basil History in Tamil

 

       பரி. பேசில் ஒரு கப்பதோகியா பிரபுவின் மகன். சிசேரியா என்னப்பட்ட கப்பதோகியாவின் தலைநகரில் கி.பி. 329 ஆம் ஆண்டின் இறுதியில் பிறந்தார். இவருடைய பாட்டியார் மக்கிரினா தூய வாழ்க்கை நடத்தி குடும்பத்திலுள்ள மக்களுக்கு சிறந்த முன் மாதிரியாக விளங்கிய ஒரு மாது. இவருடைய தந்தை ஒரு பக்திமான். இவரும், இவர் மனைவி எமிலியாவும் இல்லற வாழ்க்கையைச் செவ்வனே நடத்தி, உடன் பிறந்தவர், நண்பர் ஆகிய யாவரிடமும் அன்பும் ஆதரவும் பூண்டொழுகியவர்கள்.

      இவர்களுக்குப் பிறந்த நான்கு ஆண் மக்களுள் நம் பக்தன் முதல் மகன். இவருக்கு, ஐந்து சகோதரிகளும் இருந்தார். இவர் தமது இளம்பருவத்தை தனது பாட்டியார் மாக்கிரினாவுடன் நியோ சிரோமணியிடமிருந்து சிறந்த நற்குணங்களைக் கற்றார். அவர்களிடம் தம் இளம் பிராயத்தை செலவிட்டது, பிற்காலத்தில் அதிகப் பயனுள்ளதாயிருந்ததென்று அடிக்கடி கூறுவார்.

     பரி. பேசிலின் தந்தை மொழிவன்மையும் இலக்கிய ஆர்வமும் உள்ளவர். இலக்கிய ஆரம்பப் பாடங்களை நம் பக்தனுக்குக் கற்பித்தவர் அவரேயாவார். இச் சிலாக்கியம் நெடுநாள் இவருக்கு நீடித்திருக்கவில்லை. இவரின் பன்னிரண்டாம் வயதில் இவரின் தந்தை காலமானார். ஆகவே கல்வியைத் தொடர்ந்து கற்கும்படி ஏதென்ஸ் பட்டணத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு உயர்வும் மதிப்பும் பெற்ற எல்லா மொழிகளையும் கற்றார். அவருக்கிருந்த ஆர்வம், அறிவுவன்மை, நினைவாற்றல் யாவரையும் பிரமிக்கச் செய்தது. பேச்சுவன்மையில் வல்லுநரான லைபேனியஸ், மிகச் சிறந்த ஆசியர்களே இவருக்குப் போதிக்கக் கூடுமெனக் கருதி கான்ஸ்டான்டி நோபிலுக்கும் மற்ற நகரங்களுக்கும் அனுப்பி, இவரை உற்சாகமூட்டினார். நிபுணர்கள் அவருடைய சுயமான அறிவுத்திறனுக்காக அவரைப் பாராட்டினார்கள்.

     ஏதென்ஸ் நகரில் இவர் வாழ்ந்த காலத்தில், முன்பு சிசெரியாவில் தனக்கு அறிமுகமான பரி. கிரெகரியின் நட்பு கிடைத்தது. இவருடைய கருத்துக்களும் குறிக்கோளும் ஒன்றாக இருந்தன. எனவே இவர்கள் நட்பு விருத்தியாயிற்று. ஒரே விடுதியில் தங்கியும், ஒரே மேசையில் உணவருந்தியும் வாழ்க்கை நடத்தி வந்தனர். தாவீது யோனத்தானிடையே இருந்த ஆழமான அன்பு இவர்களிடமும் இருந்தது. இவர்கள் எதைச் செய்தாலும் கடவுளின் மகிமைக்கென்றே செய்து வந்தார்கள்.

     நாளடைவில் பரி. பேசில் சொற்பொழிவாற்றுவதில் புகழ்பெற்றார். மாணவர்கள், புலவர் பெருமக்கள், கலைஞர் முதலியோர் அவரிடம் ஆதரவு பெற்றனர். அவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி இளவயதில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழிலாற்றினார். இத் தொழிலிலும், உண்மையும் ஒழுக்கமும் உள்ள உத்தமராக விளங்கினார். எனினும் நாடனைத்தும் தன்னைப் புகழ்வது அவரது மனதை உறுத்தியது. பெருமை என்னும் சோதனைக்கு தான் உள்ளாவதாக நம்  பக்தனுக்கு புலப்பட்டது. தான் முன்னேற்றமடைவது தன் குறிக்கோளல்லவன்றும் தரித்திரர், நோய்வாய்ப்பட்டோர் இவர்களைப் பராமரிப்பதும், ஆண்டவரின் அன்பு, தியாகம் முதலியவைகளைப் பற்றி பிறருக்கு எடுத்துரைப்பது தன் பணியென்றெண்ணினார். இவ்வெண்ணத்தை நிறைவேற்றுவதிலும், அவர் செய்த முடிவு சரியென்று மக்ரீனா மிகப் பிரயாசை எடுத்துக் கொண்டார்கள்.

     வழக்கறிஞர் தொழிலைவிட்டு உலகப் பற்றில்லாமல் ஆண்டவருக்குத் தொண்டு செய்ய வேண்டுமானால் முதலாவது பொருட்செல்வத்தைக் துறக்க வேண்டுமென்று முடிவு செய்தார். தன் சொத்துக்களனைத்தையும் விற்று ஏழைகளுக்கு வழங்கினார். உலக சொத்துக்களிடம் விடை பெற்றுக்கொண்டு, தனக்குள்ள சொற்பொழிவு வன்மையை மட்டும் ஆண்டவருக்குத் தொண்டு செய்வதற்காக வைத்துக் கொண்டாரென்று இவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இனிமேல் என் வேலை சுவிசேஷ ஊழியனாக என் இரட்சகரைக் குறித்துப் பிரசங்கிப்பதேயாகும். இப் பணியை என் வாழ்நாள் இறுதிவரை ஒரே நோக்கமாகச் செய்வேன் என்று தீர்மானம் செய்தார்.

     அக்காலத்தில் ஆரிய கட்சியினர் கிறிஸ்தவ விசுவாசங்களைக் குறித்துத் தவறான கொள்கைகளைப் போதித்து வந்தார்கள். பரி. பேசில், சீரியா, மெசப்பெத்தோமியா, எகிப்து முதலான நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து, ஆரிய கட்சியினரின் தவறுகளை எதிர்த்து பிரசங்கம் செய்தார். பின்னர் கப்பதோகியாவில் சில காலமும், தன் பாட்டியின் நாடாகிய பாடைசில் சில காலமும், தங்கி, துறவியாக வாழ்க்கை நடத்தினார்.  அங்கிருந்து பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள குடியானவர்களுக்குக் கிறிஸ்துவைக் குறித்துப் போதித்து வந்தார். பரி. கிரெகரியும் நம் பக்தனும் சேர்ந்து வேதாகமத்தை வாசிப்பதில் அதிக நேரம் செலவிட்டார்கள். சிறிது காலம் சென்ற பின், கி.பி. 362 இல் இருவரும் சிசெரியா வந்து சேர்ந்தார்கள்.

     கி.பி. 361 இல் ஜூலியன் சக்கரவர்த்தியானான். மறு வருடம், பரி. பேசில் சிசெரியாவிற்கு வந்திருப்பதைக் குறித்து கேள்வியுற்று, அவரைத் தன் அரண்மனைக்கு வரும்படி அழைப்பித்தான். தன் வாழ்க்கை நிலையின் காரணத்தால் சக்கரவர்த்தியின் அழைப்புக்கு இணங்க இயலவில்லையென்று பரி. பேசில் பதிலுரைத்தார். இதைக் கேட்ட ஜூலியன் சினங்கொண்டு, கீழ்ப்படியாமை என்ற குற்றத்திற்காக இவர் உடனே அபராதமாக ஆயிரம் பொன் கட்ட வேண்டுமெனவும், அப்படிச் செய்யாத பட்சத்தில் அவர் குடியிருக்கும் நகரத்தைத் தரைமட்டும் தான் இடித்துப் போடுவதாகவும் பயமுறுத்தினார்.

    பரி. பேசில் இவ்வுத்திரவைக் கண்டு சற்றுங் கலங்காமல், தன்னிடம் அந்தந்த நாளுக்குத் தனக்கு வேண்டிய உணவை வாங்கக்கூட போதுமான பணம் கிடையாதென்றும் உண்மையையும், நீதியையும் கடைப்பிடித்தாலன்றி கடவுள் அவர் வாழ்வில் விலகியே இருப்பார் என்றும் பதிலுரைத்தார். பாரசீகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சக்கரவர்த்தி தான் திரும்பி வந்ததும், பரி. கிரெகரியையும், நம் பக்தனையும் சித்திரவதை செய்வதென்று திட்டமிட்டான். ஆனால், தெய்வாதீனமாக அச்சக்கரவர்த்தி தன் நாட்டிற்குத் திரும்பாமல் வழியின் மரித்தான்.

     மறு வருடம் பரி. பேசில் சபையின் போதகராக நியமிக்கப்பட்டார். இப்பணியை ஏற்க இவர் மறுத்தும் சபையில் தலைமை தாங்கியவர்கள் இவரை விடுவதாக இல்லை. ஆனால், எந்த அத்தியட்சகர் ஈசுபியஸ் இவரைப் போதகராக தெரிந்தெடுக்கக் காரணமாயிருந்தாரோ, அவரே பொறாமையின் காரணத்தாலோ, சதியின் விளைவாகவோ, பரி. பேசிலை போதகர் வேலையிலிருந்து நீக்கி விட்டார். நம் பக்தன் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்று, தம் நண்பன் பரி. கிரெகரியோடு சேர்ந்து பான்டங் நாட்டிற்குச் சென்று அங்கு தான் பூர்த்தி செய்யாமல் விட்டுவந்த பணியை  உற்சாகத்துடன் ஆற்றி வந்தார். அப்பொழுது கடுமையான பனிக்கட்டி மழையால் பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டு, மக்கள் பட்டினியினால் பாதிக்கப்பட்டார்கள்.

      அச்சமயம் பரி. பேசில் ஏழை மக்களுக்குத் தன் கையால் ரொட்டியும் பலவித உணவுகளும் கொடுத்து, அல்லும் பகலும் அயராது உழைத்தார். பரி. பேசிலின் தூய வாழ்க்கையையும், அவர் ஆற்றிய பணியையும் கண்ட அத்தியட்சகர், தான் அவருக்கிழைத்த தீங்குக்காக மனஸ்தாபப்பட்டார். சபையின் ஆலோசனைக் சங்கங்களில் அவர் வரவழைத்து அவருடைய உதவியை அடிக்கடி நாடினார். பின்னர் கி.பி. 370 இல் அவ்வத்தியட்சகர் பரி. பேசில் மடியில் உயிர் துறந்தார். எனவே, பரி. பேசில் அவர் ஸ்தானத்தில் அத்தியட்சகராக தெரிந்தெடுக்கப்பட்டார்.

     தான் ஆற்றிய எல்லாப் பணிகளிலும் காட்டிய உண்மையையும் ஊக்கத்தையும் பரி. பேசில் தான் ஏற்றுக்கொண்ட அத்தியட்சகர் பதவியிலும் காண்பித்து, ஓர் ஒப்பற்ற சபைத் தந்தையாக விளங்கினார். வார நாட்களிலும், காலையிலும், மாலையிலும் ஆலயங்களில் பிரசங்கம் செய்வார். தனது ஆழ்ந்த கிறிஸ்தவ வாழ்க்கை அனுபவத்திலிருந்து எடுத்துரைக்கும் சத்தியங்களும், அன்புச்சுவை ததும்பும் சொற்பொழிவுகளும் பயன் தருவனவாயிருந்தன. ஆதரவற்றோர் பிணியாளர், பசியால் வாடுவோர் முதலியோருக்கு உதவி செய்வதில் பரி. பேசில் கண்ணும் கருத்துமாயிருந்தார். ஒரு பெரிய மருத்துவ நிலையத்தைக் கட்டி, அதை நிர்வாகம் செய்வதற்கு ஆவன செய்தார். சபையோர் ஆத்மீக நலனுக்கென்று அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அதிகம். சக்கரவர்த்தி வாலன்ஸ் மறுபிறப்படைந்ததற்கு பரி. பேசில் காரணமாயிருந்தார். இவர் உயிரோடிருந்த காலம் முழுவதும் இச் சக்கரவர்த்தி இவரின் நண்பராக விளங்கினார்.

     கி.பி. 378 இன் இறுதியில் பரி. பேசில் நோய்வாய்பட்டு மறுமைக்குள் பிரவேசிக்க ஆயத்தமானார். இச் செய்தி நகரத்தில் பரவியதும் மக்கள் துக்கத்தில் ஆழ்ந்தனர். ஆனால், தன் பரிசுத்தவானுக்கு வாடாக்  கிரீடம் கொடுக்க நமதாண்டவர் காத்துக் கொண்டிருந்தார். “ஆண்டவரே என் ஆவியை உமது கைகளில் ஒப்புவிக்கிறேன்” என்று சொல்லி, கி.பி. 379 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி தமது ஐம்பத்தொன்றும் வயதில் பரி. பேசில் மறுமைக்குள் பிரவேசித்தார்.

பிறப்பு: கி.பி. 329, டிசம்பர்.

இறப்பு: கி.பி. 379, ஜனவரி 1.

Posted in Missionary Biography on October 14 at 11:19 AM

Comments (0)

No login
gif