Today Bible Verse

St. Polycarp History in Tamil

 

      நமதாண்டவருடன் நெருங்கிப் பழகி, தினசரி வாழ்க்கையில் அவரை நன்கு அறிந்த சீஷர்களைக் குறித்து நாம் பரிசுத்த வேதாகமம் மூலமாய் அறிகிறோம். அந்த சீஷர்களிடமிருந்து நேரடியாக கிறிஸ்துநாதரை அறிந்த பக்தர்கள் அநேகருண்டு. அவர்களுள் பரி.போலிகார்ப் முக்கியமானவர். பரி. போலிகார்ப் சுமர்னாவிற்கு அத்தியட்சகராக நியமனம் பெற்றதாகப் பாரம்பரிய சரித்திரம் கூறுகிறது.

     பரி. போலிகார்ப்பின் தூய வாழ்க்கை கிறிஸ்தவ மக்களைக் கவர்ந்தது. அவருக்குச் சீஷராக விளங்கின சிலர், அவர் மார்க்க போதனைகளை எடுத்துக்காட்டிய விதத்தையும் அவருடைய வாழ்க்கை இலட்சியங்களையும் பாராட்டி சரித்திர வடிவமாக எழுதியுள்ளனர். அவர்களுள் முக்கியமானவர்கள் பரி. இரேனியஸ், பரி. பபியஸ், பரி. போலிகார்ப் பிலிப்பிய சபைக்கு ஒரு நிருபம் எழுதினார். அதன் எளிதான நடையினாலும் மேன்மையான உபதேசத்தினாலும் பரி. ஜெரோம் முதலான பெரியோர்களால் அது மிகவும் போற்றப்பட்டிருக்கிறது.

    கி.பி. 157 ஆம் ஆண்டு அவர் ரோமாபுரிக்குச் சென்று, பொதுவாகச் சபைகளில் நல்வாழ்வைக் குறித்தும், கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த நாளைக் கொண்டாட வேண்டுமென்பதைக் குறித்துச் சம்பாஷணையில் கலந்துகொண்டார். அவர் எங்கு சென்றாலும் அவருடைய தூய வாழ்க்கையும் கம்பீரத் தோற்றமும், பிறரிடம் அவருக்குள்ள அனுதாபமும் எல்லாரையும் கவர்ந்தது.

     மார்க்கஸ் அரிலியஸ் என்பவனுடைய ஆட்சியின் ஆறாவது வருடம் கிறிஸ்தவர்களுக்கு விநோதமான துன்புறுத்தல் ஆரம்பமாயிற்று. கிறிஸ்தவ மக்கள் எத்தகைய துன்பத்தையும் சகிக்கவும் கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்ததைப் பார்த்து புறமதத்தினர் ஆச்சரியப்பட்டனர். எவ்வித கொடூரமான தண்டனையும் அவர்களைக் கிறிஸ்துவை மறுதலிக்கச் செய்யவில்லை. பரி. போலிகார்ப் கிராமங்களில் தங்கி ஜெபத்தில் நாட்களைக் கழித்துவந்தார். அவர் இரத்தச் சாட்சியாக மரிப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு தன் தலையணை நெருப்புப் பற்றிக்கொண்டதாகத் தரிசனம் கண்டு தன்னுடன் உள்ள அன்பர்களிடம், தான் நெருப்பினால் மரணாக்கினை அடைவதாக முன்குறித்துக் கூறினார்.

     பரி. போலிகார்ப்பைத் தேடி குதிரைகள் மீது காவலாளர்கள் சென்றனர். அவர் இருக்குமிடத்திற்கு அவர்கள் வந்தபோது அவர் மேல்மாடியில் ஜெபம் செய்துகொண்டிருந்தார். காவலாளர் சந்தடி கேட்டுக் கொண்டார். அவர்கள் அதற்கு இணங்க, சுமார் 2 மணி நேரம் ஜெபம் செய்தார். தன் சபையின் நல்வாழ்விற்காகவும், உலகிலுள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவருக்காகவும் ஆண்டவரின் ராஜ்யம் பரவுவதற்காகவும் கிறிஸ்தவர்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் உருக்கமாய் ஜெபித்தார். அவரைக் கட்டிக் கொண்டுபோக வந்த காவலாளர்களின் கல்மனதும் அச் ஜெபத்தால் இளகியது. அவர்கள் அவரை ஒரு கழுதையின்மேல் ஏற்றி ரோமாபுரிக்குக் கொண்டு போனார்கள்.

     நீதிமன்றத்திலுள்ள ஸ்தானாதிபதி, “சீசரைக்கொண்டு சத்தியம்செய்து கிறிஸ்துவை மறுதலித்தால் உன்னை விட்டுவிடுவோம்” என்றான். அதற்கு பரி. போலிகார்ப், “நான் பிறந்தது முதல், எண்பத்தாறு வருடங்கள் என்னைப் பராமரித்து எனக்கு ஒரு தீங்கும் செய்யாத என் இரட்சகரை நான் எப்படி மறுதலிப்பேன்? நான் கிறிஸ்தவன். அவரைக் குறித்து நீர் அறிய விரும்பினால் நான் கூறுகிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டபொழுது அவனுக்குக் கோபம் மூண்டது. கூடி வந்த ஜனங்களும் அவரைக் கொலை செய்ய வேண்டும் என்று ஆரவாரம் செய்தார்கள்.

     பரி. போலிகார்ப்பை பயமுறுத்தும் எண்ணத்துடன் ஸ்தானாபதி, “உன் மீது காட்டு மிருகங்களை விடுவேன்” என்றான். பரி. போலிகார்ப்பு “நல் வழியை விட்டு தீங்கைப் பின்பற்று என்று என்னிடம் சொன்னால் நான் அதை எப்படிச் செய்வேன் மிருகங்களை நீர் திறந்துவிடும்” என்றார். அதற்கு ஸ்தானாபதி “மிருகங்களைப் பற்றி அலட்சியமாயிருந்தால் நான் உம்மை நெருப்பினால் எரித்து சாம்பலாக்குவேன்” என்றார்.

    அதற்கு பரி. போலிகார்ப்பு நீர் சிறிது நேரம் எரிந்து அணையும் நெருப்பைக் கொண்டு பயமுறுத்துகிறீர். அக்கிரமக்காரருக்கு அவியாத நெருப்பு உண்டு. எதற்காகத் தாமதம் செய்கிறீர்? உம் விருப்பப்படியே என்னை எதைக் கொண்டு கொன்றாலும் சரி என்றார். உடனே அவரை நெருப்பினால் எரித்துக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அவரைச் சுற்றிலும் விறகுகளைப் போடுமுன் கம்பத்தில் அவரை ஆணிகளால் அறைய காவலாளர் வந்தனர். அதற்கு அவர், அவ்வித முன் ஜாக்கிரதை என் விஷயத்தில் வேண்டாம் என்று சொல்லி;

     எனக்கு இந்த வேளையை தந்ததற்காக உம்மைத் துதிக்கிறேன். மற்ற இரத்த சாட்சிகளைப்போல் உமக்கு பிரியமான பலியாகக் காணப்பட கிருபை தந்ததற்காக உம்மைத் துதிக்கிறேன். உமக்கு எல்லா மேன்மையும் மகிமையும் உண்டாவதாக “ஆமென்” என்று ஜெபித்து முடிக்கும்போது அவரைச் சுற்றி நெருப்பு வளைந்து எரிந்தது. நெருப்பின் நடுவே அவர் முகம் பிரகாசமாகக் காணப்பட்டது. அவருடைய எழும்புகளை பக்தர்கள் எடுத்து அடக்கம் செய்தார்கள். இப்பொழுதும் சுமர்னாவில் ஒரு சிறு ஆலயத்தில் அவருடைய கல்லறை இருக்கிறது.

பிறப்பு: 69

இறப்பு: 156

Posted in Missionary Biography on October 14 at 11:25 AM

Comments (0)

No login
gif