Today Bible Verse

St. Monica History in Tamil


     

    சிறந்த பரிசுத்தவானாகிய அகஸ்டினுடைய அன்னையே பரி. மானிக்கா என்பவர். பரி.அகஸ்டினுடைய வாழ்வில் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்கெல்லாம் காரணமாக அமைந்தவர் அவரது அன்புத் தாயேயாகும். பரி. மானிக்கா கி.பி. 332 ஆம் ஆண்டில் ஒரு பக்தியுள்ள குடும்பத்தில் பிறந்து, தெய்வ பக்தியிலே வளர்க்கப்பட்டார். திருமணப் பருவத்தை அடைந்தவுடன், தனவந்தரான பற்றீஷீயஸ் என்பவருக்கு வாழ்க்கைப்பட்டார். அவர் விக்கிரக ஆராதனைக்காரராக இருந்தார். அவர் மூர்க்க குணமுள்ளவர். பரி. மானிக்கா அவரைக் கனப்படுத்தி கீழ்ப்படிந்து நடந்து, அவரைத் தமது ஆண்டவரிடம் கொண்டுவர பெரிதும் முயன்றார்.

     இவர்களுக்கு அகஸ்டின், நவகியஸ் என்னும் இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தார்கள். தன் கணவனை கோபமுள்ளவராகக் காணும்போதும், தன்னைக் காரணமின்றிக் கோபிக்கும்போதும், பரி. மானிக்கா அவருக்கு மாறுத்தரம் ஒன்றும் சொல்லாமலும், மிகப் பணிவாகவும் நடந்து கொள்ளுவார்கள். அவருடைய கோபம் அடங்கிய பின்னர், அவருடன் சாந்தமாக தன் செயல்களை விளக்கி தான் எக்காரணங்களைக் கொண்டு அவைகளைச் செய்தாரென்று விளக்குவார்.

     இப்பரிசுத்த அம்மையாரின் சாந்தகுணமும் நடத்தையும் அவர் கணவரின் மனதைக் கவர்ந்தது, அவர் குணத்தை மாற்றி, அவரைக் கிறிஸ்துவின் அடியானாக்கியது. அவர் ஞானஸ்நானம் பெற்று ஒரு வருடம் கழித்து கிறிஸ்துவின் அடியானாக மரித்தார். பரி. மானிக்கா தூய வாழ்க்கையும், சாந்தகுணமும் அவருடைய மாமியாரை கிறிஸ்துவினண்டை வழி நடத்தியது.

     பரி. மானிக்கா, தேவாலய ஆராதனைகளில் உதவி செய்வதில் அதிக ஊக்கம் காண்பித்தார். காலை, மாலை ஆராதனைகளுக்குப் போகத் தவறமாட்டார். பரிசுத்தவான்களின் வாழ்க்கை சரித்திரங்களை வாசிப்பது அவருக்கு மிகப்பிரியம். அவர்களிடம் காணப்பட்ட சிறந்த குணங்களைப் பின்பற்றும்படி மிகவும் பிரயாசப்படுவார். தன் பிள்ளைகளின் சன்மார்க்க வளர்ச்சியைக் குறித்து அதிக கவனம் செலுத்தினார்.

    அவர் கணவன் இறக்கும்போது அகஸ்டியனுக்கு வயது பதினேழு. கல்வி அறிவில் அவர் சிறந்து விளங்கினாலும் அதனால் திருப்தி அடையாமல், கிறிஸ்துவுக்குள் அவர் வழி நடத்தப்பட வேண்டுமென்பதையே நம் அம்மையார் தம் குறியாக கொண்டிருந்தார். தன் மகன் வழி தவறி நடந்து வேதப் புரட்டனாக மாறினான் என்பதை பரி. மானிக்கா அறிந்த போது தம் குழந்தைகள் மரித்து கல்லறைக்குக் கொண்டு போகப்படும் பொழுது அங்கலாய்க்கும் தாய்மாரைவிட அதிகமாக வருத்தப்பட்டார். தன்னுடன் தன் மகன், மேசையில் அமர்ந்து உணவு அருந்த அவர் விடவில்லை.

     பரி. அகஸ்டியனுக்காக பரி.மானிக்கா செய்த ஊக்கமான வேண்டுதலுக்கு மாறுத்தரம் போல் ஒருநாள் அவர்களுக்கு ஒரு கனவில் வாக்குறுதி கிடைத்தது. தான் ஒரு காட்டில் தனித்து அதிக விசனத்துடன் நின்றுகொண்டிருக்கும் பொழுது பிரகாசம் பொருந்திய ஒரு வாலிபன் அவரிடம் கண்ணீரைத் துடைத்துக் கொள்ளும்படி சொல்லி, “அதோ உன் மகன் உன்னோடிருக்கிறான்” என்று கூறக் கேட்டார். இந்தக் கனவை பார்த்து மத சம்பந்தமான விஷயங்களில் தன்னுடன் சேர வேண்டுமென்பதே அக்கனவின் பொருள் என்றார். அதற்கு அவ்வம்மையார், “இல்லை நான் உன்னிடமிருப்பதாக அக்கனவில் எனக்குச் சொல்லப்படவில்லை, நீயே என்னோடிருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது” என்றார். இந்த பதில் பரி. அகஸ்டின் உள்ளத்தைத் தொட்டதாகச் சொல்லப்படுகிறது. அதுமுதல் தன் மகன் தன்னுடன் உடனுறைந்து வாழவும் தன்னுடன் உணவு அருந்தவும் அனுமதித்தார். ஆனால் இச்சம்பவத்துக்குப் பின் ஒன்பது வருடம் கழித்துதான் அவர் குணப்பட்டதாகவும் சரித்திரம் கூறுகிறது.

     பரி. மானிக்கா, சிறந்த கல்வி கற்று தூய்மையான வாழ்க்கை நடத்திய பெரியாரைக் கொண்டு தன் மகனை கிறிஸ்துவண்டை கொண்டுவர முயற்சித்தார். அக்காலங்களிலெல்லாம் கண்ணீரோடு அவருடைய மன மாற்றத்திற்காக ஜெபித்தார். ஒரு பெரியார், “இந்த இளைஞனுடைய இருதயம் அசைக்கக் கூடாத நிலைமையிலிருக்கிறது. ஆனால் கடவுளை அறியும் நல் வேளை நிச்சயம் வரும்” என்றார். பின்பு சில காலம் ஜெபத்தில் போராடி அப்பெரியாரிடம் நம் அம்மையார் போனபொழுது அவர், நீ உன் போராட்டத்தை விடாதே. இவ்வளவு கண்ணீரோடு அவனுக்காக வேண்டிக்கொள்ளும் தாய் இருக்கும்போது கடவுள் அந்த பிள்ளையைக் கெட்டழிந்து போக விடமாட்டார் என்றார்.

     பரி.அகஸ்டின் தமது இருபத்தொன்பதாவது வயதில் ரோமாபுரிக்குப் போகத் திட்டமிட்டார். இதனால் அவரது மனமாற்றம் தாமதமாகும் என ஐயுற்ற பரி. மானிக்கா அவருடன் துறைமுகம் வரைசென்று அவரைத் தடுக்கவும், அவர் மீறி ரோமாபுரிக்குப் போனால் தாமும் அவருடன் போகவேண்டுமென்றும் தீர்மானித்தார். இதைப் பரி.அகஸ்டின் அறிந்து, தான் ரோமாபுரி பயணத்தை கைவிட்டது போன்று பாவனைசெய்து, தன் தாய், பரி. சிப்ரியன் ஆலயத்தில் இரவைக் கழித்தபோது யாருக்கும் தெரியாமல் ரோமாபுரிக்குச் சென்றார். இதை அறிந்த பரி. மானிக்கா சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்தார். ஆனால் கடவுள் பரி. அகஸ்டினை ரோமாபுரியில் அதிக உபத்திரவத்திற்கு உள்ளாக்கி குணப்படுத்த சித்தம் கொண்டிருந்தார் என்று அறிகிறோம்.

     ரோமாபுரிக்குச் சென்ற பரி. அகஸ்டின் மிக கடுமையான வியாதியால் பிடிக்கப்பட்டார். தன் தாயின் ஜெபமே அவருக்கு சரீர சுகத்தை அளித்ததென்று அவர் கூறியிருக்கிறார். அந்த அம்மையார் அவரைப் பின் தொடர்ந்து மிலான் நகருக்குச் சென்றார். அங்கு தன் மகன் பரி. அம்புரோசின் போதனையால் வேதப்புரட்சி செய்வதை விட்டு, சீரான நிலைமைக்கு வருவதைக் கண்டு அளவில்லா ஆனந்தம் கொண்டார். தானும் இரத்த சாட்சிகளின் கல்லறைகளில் படைத்து வந்த சில தவறான ஒழுக்கங்களை தவிர்த்து, பரி. அம்புரோசை தனது ஆன்ம வைத்தியராகக் கருதினார். அதே வருடம் அதாவது கி.பி. 386 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தான் பல வருடங்களாக உபவாசித்து கண்ணீர் சிந்திய ஜெபத்தின் பலனை நம் அம்மையார் கண்டார். பரி. அகஸ்டின் குணப்பட்டார். தம் மகனுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியைக் கண்டுபிடித்து தன் மகன் நெறி தவறாமல், நடக்கச் செய்ய வேண்டுமென்றும் அவர் எண்ணினார். ஆனால் பரி.அகஸ்டின் அதற்கு இணங்காமல் தாம் துறவியாகவே ஆண்டவருக்கு ஊழியனாயிருக்கத் தீர்மானித்தார்.

     கி.பி. 397 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று பரி. அகஸ்டினும் அவருடைய சில நண்பர்களும் ஞானஸ்நானம் பெற்றனர். பரி. மானிக்கா அவர்கள் அனைவரையும் தன் மக்கள் போல் பாவித்து அவர்களைப் போஷித்து அவர்களுக்குத் தொண்டு செய்தார். பின்னர் தங்கள் தாய்நாடாகிய ஆப்பிரிக்காவிற்குப் புறப்பட்டார்கள். ஆஸ்டியா துறைமுகத்தில் கப்பல் ஏறுவதற்கு முன்பு பரி. மானிக்கா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தபொழுது பரி. அகஸ்டினைப்பார்த்து, “மகனே, உன்னை உண்மையுள்ள கிறிஸ்தவனாகவும் மோட்சத்தின் பிள்ளையுமாக்கவுமே வாழ்ந்தேன். இப்பொழுது நீ இவ்வுலக வாழ்க்கையை அற்பமென்றெண்ணி கடவுளுக்கு உன்னைத் தத்தம் செய்துவிட்டாய். நான் இவ்வுலகில் செய்ய வேண்டிய பணி வேறென்ன இருக்கிறது?”. என்று சொன்னார்.

     தங்கள் தாய்நாட்டில் மரிக்காமல் அந்திய நாட்டில் அடக்கம் செய்ய வேண்டியிருக்கிறதே என்று கவலைக்கொண்டிருந்த பரி. அகஸ்டினையும் அவருடைய சகோதரனையும் பார்த்து “கடவுள் என் உடலை எங்கிருந்தாலும் எழுப்பித் தன்னிடம் சேர்ப்பார் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை” நீங்கள் மாத்திரம் கடவுளின் பீடத்தின் முன் ஜெபிக்கும்போதெல்லாம் என்னை நினையுங்கள் என்று சொல்லி தம் உலக வாழ்க்கையை நீத்தார்.

     தன் மகனை கடவுளிடம் வழி நடத்தக் கண்ணீரோடும், உபவாசத்தோடும் வேண்டுதல் செய்து விடாப்பிடியாய் போராடி ஜெப ஜீவியம் செய்த பரி. மானிக்கா தாய்மாரனைவருக்கும் ஒரு சிறந்த மாதிரியாய் விளங்கினார்.

பிறப்பு: 332 (தகாஸ்தே, நுமிடியா)

இறப்பு: 387 (ஓஸ்தியா, இத்தாலியா)

Posted in Missionary Biography on October 14 at 11:44 AM

Comments (0)

No login
gif