Today Bible Verse

St. Damien History in Tamil

     இயேசுவை நெருக்கமாகப் பின்செல்ல விரும்பி, துறவற வாழ்க்கையைத் தழுவ எண்ணிய தமியான் "இயேசு மற்றும் மரியா ஆகியோரின் திரு இருதயங்களின் சபை" என்னும் துறவறக் குழுவில் உறுப்பினராகச் சேர முன்வந்து, அச்சபைக்கான புகுமுகப் பயிற்சி பெற்றார்.

     அப்போது அவர் தேர்ந்துகொண்ட துறவறப் பெயர் "தமியானுஸ்" (இலத்தீன்: Damianus) ஆகும். அது டச்சு மொழியில் Damiaan எனவும், பிரஞ்சு மொழியில் Damien எனவும் வரும். அவர் தேர்ந்துகொண்ட பெயரை உடைய புனிதர் ஒருவர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைச்சாட்சியாக உயிர்துறந்தார்.

     தந்தை டாமியனின் மூத்த சகோதரிகள் இருவர் (யூஜெனீ, பவுலீன்) துறவறம் புகுந்தனர். அதுபோலவே அவரது அண்ணன் ஆகுஸ்த் என்பவரும் துறவியாகி குருத்துவத்தைத் தழுவினார். அவர்களது அடிச்சுவட்டைப் பின்பற்றி தமியானும் தாம் புகுந்த துறவறக்குழுவில் 1860, அக்டோபர் 7ஆம் நாள் தம் "சகோதரர்" நிலையில் அர்ப்பண வாழ்வைத் தொடங்கினார். அவருக்குப் போதிய கல்வியறிவு இல்லை என்று காரணம் காட்டி, அவர் குருவாகத் தகுதியற்றவர் என்று அவருடைய மேலதிகாரிகள் எண்ணினர். என்றாலும், அவர் அறிவுத் திறன் குன்றியவராகக் கருதப்படவில்லை. அவர் தம் சகோதரரிடம் இலத்தீன் நன்றாகப் பயின்றார். அதைத் தொடர்ந்து அவருடைய மேலதிகாரிகள் அவரைக் குருத்துவப் படிப்புக்கு அனுமதித்தார்கள்.

      அவருடைய குருத்துவப் படிப்புக் காலத்தின் போது அவர் ஒவ்வொரு நாளும் மறைபரப்பாளர்களின் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் சவேரியாரின் படத்தின் முன் அமர்ந்து, தாமும் ஒருநாள் நாடுகடந்து சென்று கிறித்தவ மறைப்பணி புரிய இறைவன் அருளவேண்டும் என்று வேண்டுதல் செய்வது வழக்கம். மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது. தமியானின் சகோதரர் ஆகுஸ்து நோய்வாய்ப்பட்டதால் ஹவாயி இராஜ்ஜியத்துக்கு மறைப்பணியாளராகச் செல்ல இயலாமல் போயிற்று. அவருக்குப் பதிலாக, அவருடைய தம்பி டாமியனை ஹவாயிக்கு மறைப்பணியாளராக அனுப்புவது என்று சபை முடிவுசெய்தது. அண்ணனுக்குக் கிடைக்காத பேறு தம்பிக்குக் கிடைத்தது. 

     ஹவாய் இராஜ்ஜியத்தின் ஓவாகு (Oahu) பகுதியில் பல பங்குகளில் மறைப்பணி செய்தார் தந்தை டாமியன். அவ்வாறு அவர் பணியாற்றிக்கொண்டிருக்கையில் ஹவாயியின் மருத்துவ சேவை ஒரு பெரிய நெருக்கடியைச் சந்திக்கலாயிற்று. வெளிநாடுகளிலிருந்து வந்த வணிகர்களும் கடற்பயணிகளும் சுமந்துவந்த சில நோய்கள் அவர்கள் ஹவாயியின் ஆதி குடிமக்களோடு கொண்ட தொடர்பின் பயனாக அம்மக்கள் சிலரிடையே பரவின.

     இதனால் ஆயிரக்கணக்கான ஹவாயி மக்கள் ஃபுளூ சளிக்காய்ச்சல், பால்வினை நோயாகிய மேகப்புண் போன்ற நோய்களுக்கு ஆளாகி இறந்தனர். இந்த நோய்கள் அப்பகுதிகளில் முன்னால் கண்டதில்லை. இவ்வாறு வந்து பரவிய நோய்களுள் ஒன்று "ஹான்சன் நோய்" என்று அழைக்கப்படுகின்ற தொழுநோய்.

    அச்சமயத்தில் தொழுநோய் மிகவும் பயங்கரமான தொற்றுநோயாகக் கருதப்பட்டது. ஆனால் 95% மனிதர்கள் அந்நோய்க் கிருமியைத் தடுக்கும் எதிர்ப்புச் சக்தி கொண்டுள்ளனர் என்று அறியப்பட்டது. தொழுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்றும் அக்காலத்தில் கருதப்பட்டது.

     தொழுநோய் பரவத் தொடங்கினால் ஹவாயி முழுதும் பெரும் துயரத்துக்கு ஆளாக நேரிடும் என்று அந்த இராஜ்ஜியத்தின் அரசர் ஐந்தாம் காமேகாமேகா (Kamehameha V) என்பவர் அஞ்சினார். அவசரமாகக் கூடிய நாடாளுமன்றம் 1865இல் இயற்றிய "தொழுநோய் பரவலைத் தடுக்கும் சட்டம்" என்னும் சட்டத்திற்கு அரசர் கையெழுத்திட்டார்.

     இச்சட்டத்தின்படி, ஹவாயியின் தொழுநோயாளர் பிற மக்களிடமிருந்து பிரித்து ஓர் ஒதுக்கிடத்தில் அடைக்கப்பட்டனர். ஹவாயியின் மொலக்காய் தீவிலுள்ள கலாவுபப்பா தீபகற்பத்தில் அமைந்த "கலாவுபப்பா தொழுநோயாளர் குடியிருப்பு" மற்றும் "கலாவாவு தொழுநோயாளர் குடியிருப்பு" என்னும் பாசறைகளுக்குக் கொண்டுபோகப்பட்டனர். கலாவாவு மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தொழுநோயாளர் குடியிருப்புகள் மோலக்காயின் பிற பகுதிகளிலிருந்து செங்குத்தானதொரு மலைத் தொடரால் பிரிக்கப்பட்டுள்ளன. இன்றுகூட அப்பகுதிக்குப் போகவேண்டும் என்றால் கோவேறு கழுதைகளில் ஏறித்தான் செல்ல முடியும்.

      தொழுநோயாளர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்ட 1866இலிருந்து 1969 வரை சுமார் 8000 ஹவாயி மக்கள் தொழுநோயாளராக அங்கு அனுப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்டனர்.

பசிபிக் மகா சமுத்திரத்தில் ஹவாய் தீவுகள் கூட்டம், அதில் மொலக்காய் என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் தொழுநோய் பரவியபோது, தொழுநோயாளிகள் இத்தீவில்தான் தனிமையில் போடப்பட்டனர்.

     தொழுநோயாளிகளாய் இருந்தவர்கள் கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் கைவிடப்பட்டவர்கள் தாங்கள் கடவுளாலும் கைவிடப்பட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், அந்த தொழுநோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் எவரும் முன்வரவில்லை. ஏனெனில் அத்தீவிற்குச் சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வரக்கூடாது என்பது அரசாங்கக் கட்டளை.

    1873-ஆம் ஆண்டு துன்பத்தில் உழலும் மக்களுக்குத் துணைவனாக, துயர் துடைக்கும் நண்பனாக அம்மக்களை தேடிப் புறப்பட்டார் ஓர் இளைஞர். அவர்தான் ஜோசப் டி வெஸ்டர் என்ற இயற்பெயர் கொண்ட டாமியன். பலர் டாமியனைத் தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியானார்.

    மொலக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ கொடூரங்கள்! வாழ்வில் நம்பிக்கையில்லாமல் நடைப் பிணங்களாக, வியாதியின் கொடுமையினால் தாக்குண்டு, உடலெல்லாம் புண்களாக, சீழ் வடிந்த நிலையில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வின் நம்பிக்கையைக் கொடுத்தார். வீதியில் அலைந்த மக்களுக்கு வீடுகள், மருத்துவமனைகள் கட்டினார். துன்பத்தில் அவர்களின் துணைவரானார்.

    ஓர் நாள் தன் உடலில் கொதிநீர் பட்டபோது உணர்ச்சியற்ற நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்தோ! தொழுநோயாளிகளின் நண்பனுக்கும் தொழுநோய் தொற்றிக்கொண்டது. அன்று ஞாயிறு ஆராதனையில் “தொழுநோயாளியாகிய நம்மேல் கடவுள் அன்பாயிருக்கிறார்” என்று ஆண்டவரைப் புகழ்ந்தார். நோயின் கொடூரம் அவரை முற்றிலும் தாக்கவே 12 ஆண்டுகளாகத் தான் அன்பு பாராட்டி வந்த மக்களை விட்டு அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்தார். அர்ப்பணிப்பில் ஆனந்தம் கண்ட நண்பரை மக்கள் இழந்தனர்.

பிறப்பு  : 03-01-1840

இறப்பு  :15-04-1889

நாடு    : திரமெலு, பெல்ஜியம்

Posted in Missionary Biography on October 14 at 11:56 AM

Comments (0)

No login
gif