Today Bible Verse

Angel's History in Tamil

 

     பரி. மிகாவேல் முதலான தூதர்களின் திருநாளை ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே திருச்சபை கொண்டாடி வருகிறது. இத்திருநாளைக் குறித்து சிந்திக்கும் பொழுது பரி. மிகாவேலைப் பற்றி மாத்திரமல்லாமல், சகல தூதர்களைப் பற்றியும் அவர்கள் செய்யும் பணிவிடைகளையும் நினைவு கூரும்படி திருச்சபை நமக்குக் கட்டளையிட்டிருக்கிறது.

தேவதூதர்கள்:

      ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் இவர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். கடவுளின் சிருஷ்டிகளைக் குறித்துப் பாடும்பொழுது “மனிதனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்” என்று சங்கீதக்காரன் கூறியிருக்கிறார் (சங். 8:5), எனவே தேவதூதர்கள் மனிதரைக் காட்டிலும் மேலான நிலைமையிலுள்ளவர்கள். நமது ஆண்டவரின் உபதேசப்படி உலக மக்களைப் போல் பற்றுக்கள் இல்லாமல் இருப்பவர்கள். இவர்கள் (மாற்கு: 12:25) பரலோகத்தில் பரம பிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிப்பவர்கள் (மத். 18:10) இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருப்பவர்கள் (1 பேதுரு 3:28).

இவர்களுடைய பணிவிடைகள்:

      பொதுவாக எல்லாக் காரியங்களிலும் தேவதூதர்கள் பணி செய்கிறவர்கள் என்று பரிசுத்த வேதாகமத்தின் மூலமாய் அறிகிறோம். சிறப்பாக விசேஷ நிகழ்ச்சிகளைத் தேவதூதர்கள் கடவுளின் பக்தர்களுக்கு முன்னறிவித்தார்கள். அத்துடன் இன்னல்களுக்குட்பட்டவர்களுக்கு உதவி செய்யும்படி கடவுளால் அனுப்பப்பட்டார்கள். பழைய ஏற்பாட்டில் ஈசாக்கின் பிறப்பைக் குறித்தும் (ஆதி. 18:2-16), மனோவாவுக்கு அவனுடைய (நியா 13:2) குமாரனின் பிறப்பைக் குறித்தும் முன்னறிவித்தார்கள். புதிய ஏற்பாட்டின் காலத்தில் பரி. யோவானுடைய பிறப்பைக்குறித்து காபிரியேல் என்னும் தூதன் சகரியாவுக்கு முன்னறிவித்தான் என்று வாசிக்கிறோம் (லூக். 1:11-20). நமது ஆண்டவரின் பிறப்பைப் பற்றி அதே தூதன் கன்னிமரியாளுக்கு அறிவித்தான் (லூக். 1:26-38). மந்தைவெளியிலிருந்து ஒரு தேவதூதன் அறிவித்தான் (லூக். 2:9-12). நற்செய்திகளை மானிடருக்குக் கொண்டுவருவது அவர்களுடைய பணிவிடைகளாக இருந்தது.

     இன்னல்களுக்குட்பட்ட மக்களுக்கு உதவி செய்யவும் கடவுள் அவர்களை அனுப்பினார். சாராயை விட்டு ஓடிப்போன அடிமைப்பெண்ணாகிய ஆகாரை கர்த்தருடைய தூதனானவர் நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய் அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார் ஆதி (16:7-12). சில காலத்திற்குப் பின் ஆபிரகாம் அவளையும், அவளுடைய மகனையும் தன் வீட்டை விட்டு அனுப்பி விட்டபின் தேவதூதன் அவளைக் கூப்பிட்டு, பிள்ளையை எடுத்துக் கொண்டு போகும்படிச் சொன்னான் (ஆதி. 19:15-22), சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை அக்கினிச் சூளையிலிருந்தும் (தானி. 6:22), பரி.பேதுருவைச் சிறையிலிருந்தும் (அப். 12;7-10), அப்போஸ்தலரைச் சிறைச்சாலையிலிருந்தும் (அப். 5:19,20) விடுவிக்க உதவி செய்தார்கள்.

      நமது ஆண்டவரை, உலகவாழ்க்கையில் பாலகனாக அவர் இருந்த சமயத்திலிருந்து இறுதிவரை தேவதூதர்கள் அவரைப் பாதுகாத்து சேவை செய்தார்களென்று சுவிசேஷங்களில் வாசிக்கிறோம். பாலகனான இயேசுவுக்கு ஏரோதினால் வரக்கூடிய ஆபத்திலிருந்து அவரைக் காப்பாற்றும்படி கர்த்தருடைய தூதன் மறுபடியும் யோசேப்புக்குக் காணப்பட்டான் (மத். 2:13). பின்பு ஏரோது இறந்த பின் கர்த்தருடைய தூதன் மறுபடியும் யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு, நீ எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரவேல் தேசத்திற்குப் போ. பிள்ளையின் பிராணனைத் தேடினவர்கள் இறந்து போனார்கள் என்றான் (மத். 2:19,20). நமது ஆண்டவர் தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்பொழுது நாற்பது நாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார். அவருக்குச் சோதனைகள் உண்டாயின. அவைகளில் அவர் வெற்றி பெற்ற பின்பு, தேவதூதர்கள் அவருக்கு வந்து பணிவிடை செய்தார்கள் (மத். 4:11). கெத்செமனே என்ற இடத்தில் கிறிஸ்துவானவர் வியாகுலப்பட்டு ஜெபம் பண்ணினபோது வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி அவரை பலப்படுத்தினான் (லூக். 22:40), ஆகவே கர்த்தருடைய தூதர்கள் அவருடைய பக்தருக்கு மட்டுமல்லாமல், நமது ஆண்டவருக்கும் சில சமயங்களில் ஒத்தாசையாக இருந்தார்கள்.

     தேவதூதர்களைக் குறித்து வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும், சொப்பனத்தையும் எடுத்து எழுதினால் அவை பெருகும். எனினும் நம் மனதைக் கவரும் இரண்டு காட்சிகளை மட்டும் நம் மனக் கண் முன் கொண்டு வர விரும்புகிறேன்.

     ஒன்று யாக்கோபின் சொப்பனம், மற்றொன்று ஏசாயா கண்ட காட்சி ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து அனுப்பின பின் பெயர்செபாவை விட்டு புறப்பட்டு ஆரானுக்கு சென்றான் வழியிலே இரவு தங்கி தன் தலையின் கீழ் கற்களில் ஒன்றை எடுத்துவைத்து நித்திரை செய்யும்படி படுத்துக் கொண்டான். அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான். ஒரு ஏணி பூமியின் மேல் வைக்கப்பட்டிருந்தது. அதன் நுனி வானத்தை எட்டியிருந்தது. அதில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாயிருந்தார்கள் (ஆதி. 28: 10-12).

     தேவதூதர்களுக்குள்ளே பல வகையினர் இருப்பதாக நாம் அறிகிறோம். தெரிந்து கொள்ளப்பட்ட தூதரென்றும் (1 தீமோ. 5:21). பிரதான தூதரென்றும், பாதுகாக்கும் தூதரென்றும் இவர்களைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரதான தூதரென்று சொல்லும்பொழுது பரி. மிகாவேலை மட்டும் குறிப்பிட்டு சொல்லப்படுகிறது. இந்த தூதன் யூதரை பாதுகாத்து வந்த தூதன். நற்செய்திகளை முன் அறிவிக்கும் தூதனாக கருதப்பட்டான். இவர்களைத் தவிர கேருபீன்களும் (ஆதி. 3:24), சேராபீன்களும் (ஏசா. 6:2) கணக்கற்ற மற்ற தூதர்களும் கடவுளைப் போற்றி புகழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து தேவதூதன் மேய்ப்பர்களுக்கு அறிவித்தவுடன் பரமசேனையின் திரள் தேவனை துதித்தார்கள் என்றும் வாசிக்கிறோம் (லூக். 2: 13,14). எனவே கணக்கற்ற தூதர்கள் மக்களுக்கு சேவை செய்வதும் கடவுளைப் போற்றியும் வருகிறார்களென்று நாம் பரிசுத்த வேதாகமத்திலிருந்து அறிகிறோம்.

     தேவதூதன் காபிரியேலைக் குறித்து பழைய ஏற்பாட்டில் தானியேலின் புத்தகத்தில் இரண்டு இடங்களில் (தானி. 8:16, 9:21), தானியேல் கண்ட தீர்க்கதரிசனங்களின் பொருளைத் தெரிவிப்பதாகக் காண்கிறோம். புதிய ஏற்பாட்டில் லூக்கா சுவிசேஷத்தில் சகரியாவுக்கு, பரி. யோவானுடைய பிறப்பைக் குறித்தும் (லூக். 1:19), யோசேப்புக்கு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்தும் முன்னறிவிப்பதற்காக காபிரியேல் தரிசனமானான் (லூக். 1: 26) பிரதான தூதனான மிகாவேலைக் குறித்து வேதாகமத்தில் அதிக விவரங்கள் காண்கின்றோம்.

     பிரதான தூதனான மிகாவேல் யூதர்களைக் காக்கும் தூதனாகக் கருதப்பட்டானென்று முன்னமே எழுதியுள்ளேன். தானியேலின் புத்தகத்தில் இத்தூதனைக் குறித்து எழுதப்பட்டிருக்கிற ஒவ்வொரு இடத்திலும் (தானி. 10:13, 21:12, 12:1) சத்துருக்களுக்கு எதிரே அவன் தானியேலுக்கு உதவியாக எழுந்து, தைரியப்படுத்தி பெலன் கொடுத்ததாக வாசிக்கிறோம். வெளிப்படுத்தின விசேஷத்தில் பிரதான தூதனான மிகாவேலும் அவனுடைய தூதர்களுடனும் யுத்தம் செய்ததாக வாசிக்கின்றோம் (வெளி 12:7).

     மிகாவேலைக் குறித்து ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை யூதா தம்முடைய நிருபத்தில் எழுதியிருக்கிறார் (யூதா-9). மிகாவேல் மோசேயினுடைய சரீரத்திற்காக பிசாசுடனே தர்க்கித்து போராடினதாக வாசிக்கிறோம். ஆத்துமா சென்று போன பின்பு பூமியில் விடப்பட்ட மனித சரீரம் தன்னுடையது என்று சாத்தான் வாதாடினான் என்றும், அதற்காக மிகாவேல் அவனைக் கடிந்துக்கொண்டான் என்றும் சில வேத வல்லுனர்கள் கருதுகிறார்கள். மற்றொரு சிலர் மோசே தன் உலக வாழ்க்கையில் ஒரு எகிப்தியனைக் கொன்றதினால் அவனுடைய சரீரத்தைக் கொண்டுபோக தனக்கு உரிமை உண்டென்று தர்க்கித்தான் என்று எழுதியிருக்கிறார்கள். எது எவ்வாறாக இருப்பினும், இச்சம்பவம் மிகாவேலின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. கடவுளின் கட்டளைப்படி மோசேயின் சரீரத்தை மிகாவேல் அடக்கம் செய்யும்பொழுது, அதைத் தடுத்த குற்றத்திற்காக, “கர்த்தர் உன்னைக் கடிந்துக் கொள்வாராக” என்று மட்டுமே சொன்னானேயொழிய அவனை சபிக்கவில்லை. தேவதூதர்கள் கடவுளின் அமைதியும், சாந்தமுமுள்ள சிருஷ்டிகள் என்பதைக் காண்பிக்கவே யூதா இதைக் குறித்து எழுதியிருக்கிறார்.

     தேவதூதர்கள் அவர்கள் செய்யும் பணிவிடைகளையும் குறித்து சிந்திக்கும் நாம், முதலாவது அவர்கள் நம் நடுவில் பணிவிடை செய்வதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இரண்டாவது இப்பேர்ப்பட்ட ஒரு கூட்டம் அல்லது சேனையை கடவுள் ஏற்படுத்தியிருப்பதற்காக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மூன்றாவது கடவுள் அவர்களுக்குக் கொடுக்கும் பணிவிடைகளை எவ்வளவு சுறுசுறுப்போடும் அமைதியோடும் செய்கிறார்களோ அவ்வாறே நாமும் செய்ய ஏவப்படுகிறோம். தேவதூதர்கள் கடவுளின் சந்நிதானத்தில் மாசற்றவர்களாக அவரைப் போற்றி அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு ஊழியம் செய்து, மறுமையில் தேவதூதர்களுடன் சேர்ந்து, அவருடைய சந்நிதானத்தில் அவரைப் போற்றி, அவருக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தை ஆண்டவர் நமக்குத் தரும்படியாக அவரை வேண்டிக்கொள்வோமாக.

Posted in Missionary Biography on October 14 at 12:15 PM

Comments (0)

No login
gif