Today Bible Verse

St. lawrence History in Tamil

     பரி. லாரன்ஸ் பிறந்து வளர்ந்த இடங்களைப் பற்றிய விவரங்கள் அதிகமாக இல்லை. இவர் ஸ்பானியா சேர்ந்தவரென்று சொல்லப்படுகிறது. இவருடைய தூய்மையான வாழ்க்கையும் அவருடைய நற்குணங்களும் அக்காலத்தில் ரோமாபுரியில் ஆர்ச் டீக்கனாக இருந்த, பரி. டைட்டஸ் கவனத்தை இழுத்தது. அவர் பரி. லாரன்சை தம்மிடம் வரவழைத்து வேதாகம ஆராய்ச்சியில் ஈடுபடச் செய்தார். பின்னர் கி.பி. 257 ஆம் வருஷம் டீக்கன் பதவிக்கு அவரை உயர்த்தினார். சிறு வயதிலேயே இப்பதவிக்கு வந்த பரி. லாரன்ஸ் ஏழைகளுக்குப் பொருளுதவி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இப்பணியை சுயநலமற்ற எண்ணத்துடனும், மிகவும் பக்திவினயமாகவும் அவர் செய்து விதவைகள், எளியவர்களால் மிகவும் போற்றப்பட்டார்.

     கி.பி. 257 ஆம் வருடம் சக்கரவர்த்தி வலேரியன் கிறிஸ்தவ சபையைத் துன்பப்படுத்தத் துவங்கி, கிறிஸ்தவ மார்க்கத்தைத் தான் அழித்துவிடுவதாக பறைசாற்றினான். அதற்கு ஆரம்பமாக கிறிஸ்துவின் மந்தை மேய்ப்பர்களான அத்தியட்சகர்களையும், போதகர்களையும் கொலை செய்யும்படி உத்தரவிட்டான். பரி. சைட்டஸ் பிடிபட்டு தூக்குமேடைக்குக் கொண்டு போகப்பட்டார். பரி. லாரன்ஸ் அவர்பின் அழுதுகொண்டு சென்று “தகப்பனே, உம் மகனை விட்டு எங்கே செல்கின்றீர். நான் எவ்விதத்தில் உமக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்ய தயங்கினேன். என்னையும் உம்முடன் அழைத்துச் செல்லும்” என்று கதறினார். தான் கிறிஸ்துவுக்காக இரத்தச்சாட்சியாக மரிக்கும் நற்பேறு தனக்குக் கிடைக்காமல் போகுமோ என்று அங்கலாய்த்தார். பரி. சைட்டஸ் இதைக் கண்டு “எனக்கு கிடைத்ததை விட பெரிய சோதனையும் சிறந்த வெற்றியும் உனக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

     வயோதிபனான எனக்கு அப்படிப்பட்ட நல்வாய்ப்பு கொடுத்து வைக்கவில்லை” என்றார். பின்னும் அவர் கிறிஸ்தவ சபையின் சொத்தும் பொருள்களும் எதிரியின் கையில் விழாதபடிக்கும் அவைகள் சரிவர விதவைகள் ஏழைகளுக்குப் பங்கீடு செய்வதைக் கவனிக்கவும் வேண்டுமென்று பரி. லாரன்சை வேண்டிக்கொண்டார். தனக்கும் சீக்கிரத்தில் இரத்தச் சாட்சியாக மரிக்கும் பாக்கியம் கிடைக்குமென்று பரி. லாரன்ஸ் அளவில்லா ஆனந்தங் கொண்டார்.

     ரோமாபுரியுலுள்ள கிறிஸ்தவ சபைக்கு அக்காலத்தில் திரண்ட ஆஸ்திகள் இருந்தன. கிறிஸ்தவ போதகர்கள் பராமரிப்புக்கு வேண்டிய தொகையைத் தவிர, விதவைகள், பாதுகாப்பில்லாத கன்னியாஸ்திரீகள் இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பும் சபைக்கு இருந்தது. தூர தேசத்திலுள்ள ஏழை கிறிஸ்தவ மக்களுக்கும் பண உதவி செய்துவந்தனர். முன் சொல்லியபடி இப்பணியை பரி. லாரன்ஸ் நல்ல முறையில் உற்சாகத்துடன் செய்து வந்தார்.

      ரோம அரசாட்சியில் உட்பட்ட பிரிபெக்ட், கிறிஸ்தவச் சபைக்கு அதிக சொத்து இருப்பதாகக் கேள்விப்பட்டு பரி. லாரன்சை தம்மிடம் வரவழைத்து “உம்மிடம் திரளான சொத்துக்கள் உண்டென்று கேள்விப்படுகிறேன். உம் மதக் கொள்கைப்படி ராயனுக்கு செலுத்த வேண்டியதைச் செலுத்த வேண்டும். உங்கள் கடவுள் இவ்வுலகத்தில் பணம் உங்களுக்குக் கொடுக்கவில்லை. வார்த்தைகளால் உங்களை போஷித்தார் ஆகையால் உங்கள் பணத்தை எங்களுக்குக் கொடுத்து, வார்த்தைகளைக் கொண்டு நீங்கள் வாழ்க்கை நடத்துங்கள்” என்றார். அதற்கு பரி. லாரன்ஸ் உண்மையாகவே எங்கள் சபைக்கு மிகுந்த சொத்து உள்ளது. அதற்குள்ள செல்வம் சக்கரவர்த்திக்கும் கிடையாது. எனக்கு சிறு அவகாசம் கொடுத்தால் அந்தச் சொத்தில் ஒரு சிறிய பாகத்தை உமக்குக் காட்டுகிறேன் என்றார்.

     ரோம பிரிபெக்ட் பரி. லாரன்ஸ் ‘சொத்து’ என்று சொல்லும்போது எதைக்குறித்து பேசினாரென்று புரிந்துக்கொள்ளவில்லை. ஆனால் தனக்கு அதிக சொத்துக் கிடைத்துவிட்டதாகவே எண்ணி மூன்று நாட்களில் அந்தச் சொத்தைத் தங்களிடம் காட்டும்படி கட்டளையிட்டார். அந்த மூன்று நாட்களில் சபை ஆதரித்து வந்த, தூய்மையான வாழ்க்கை நடத்திய கூன், குருடு, கால், கை இழந்தவர்கள், குஷ்டரோகிகள் விதவைகள் இவர்களைத் தம் ஆலயத்தின் முன் வரிசை வரிசையாக நிறுத்தி, அவ்விடத்திற்கு ரோம பிரிபெக்டை, அழைத்துச் சென்றார்.

     ரோம பிரிபெக்ட் அத்தகைய காட்சியைக் கண்டவரல்ல, அவர் முகத்தில் கோபக் குறியைக் கண்ட பரி. லாரன்ஸ், “எதைக் கண்டு கோபம்  கொள்ளுகிறீர். உம் முன் நிற்கும் இவர்களே சபையின் கிரீடத்தில் முத்துக்களும் விலையேறப்பெற்ற கற்களுமாவார்கள் உம்முடைய பாவத்துக்காக மனஸ்தாபப்பட்டு கிறிஸ்தவச் சபையைச் சேர்ந்து இந்தக் கிறிஸ்தவ மக்களை போஷிக்க நீர் முன்வர வேண்டும்” என்று கூறினார்.

     ரோம பிரிபெக்ட் அதிக கோபம் கொண்டு நீ உன் மதத்திற்காக மரிக்க ஆசைப்படுவாயென்று அறிவேன். ஆனால் நீ உடனே சாகமாட்டாய். நான் உன்னை வதைத்து அங்குல அங்குலமாக மரிக்க ஏற்பாடு செய்கிறேனென்று சொல்லி ஒரு பெரிய இரும்பு அடுப்பைத் தயாரித்து, அதன் கீழ் பாதி எரிந்த நிலக்கரியைப் போட்டு அவர் உடையை உரிந்து இரும்பு அடுப்பில் கட்டிவைத்தார்.

     பின்னர் நெருப்பை அதிகமாக்கி அவரைச் சித்திரவதை செய்தான். பரி. லாரன்ஸ் கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளும் ஆர்வத்தினால் வேதனையை பொறுமையாக ஏற்றுக்கொண்டார். அவர் முகம் தேவ தூதன் முகம்போல பிரகாசித்தது. வெகுநேரம் சென்ற பின்பு, மலர்ந்த முகத்துடன் என் உடலைத் திருப்பிப் போடுங்கள். ஒரு பக்கம் வேண்டிய அளவு வெந்துவிட்டது என்று சொன்னார். பின்னர் ரோமாபுரி மக்களின் குணப்படுதலுக்காக ஊக்கமாய் ஜெபித்து ஜீவனை விட்டார்.

     அவருடைய விசுவாசத்தையும் அவர் மரித்த விதத்தையும் கண்டு அநேகர் குணப்பட்டதாகச் சரித்திரம் கூறுகிறது. அங்குள்ள பக்தர்கள் அவருடைய சடலத்தைத் தைபருக்கு போகும் சாலைக்கு அருகில் ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி கி.பி. 258 ஆம் வருடம் நல்லடக்கம் செய்தனர். அவர் மரித்த வருடத்திலிருந்து ரோமாபுரியில் விக்கிரகாராதனைக்காரர் எண்ணிக்கை குறைந்ததாகச் சொல்லப்படுகிறது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் இரத்த சாட்சியாக மரித்த கிறிஸ்தவப் பக்தர்களுள் பரி. லாரன்ஸ் மிகச் சிறந்தவர்.

பிறப்பு: கி.பி. 225 (எசுப்பானியா)

இறப்பு: கி.பி. 258 (ரோம்)

Posted in Missionary Biography on October 14 at 12:21 PM

Comments (0)

No login
gif