Today Bible Verse

St. Jerome History in Tamil

      ஆதித் திருச்சபை வேத அறிஞரில் பரி. ஜெரோம் மிகச்சிறந்தவர். இவர் இத்தாலியா நாட்டில் ஸ்டிரிடோனியம் என்ற ஒரு பட்டணத்தில் பிறந்தார். இவர் தகப்பனார் ஈசுபியஸ் ஒரு செல்வந்தர். நம் பக்தர் இவருக்கு மூத்த புதல்வர். இரண்டாவது புதல்வரான பர்லியனுக்கும் இவருக்கும் வயதில் வித்தியாசம் அதிகம். நம் பக்தரின் புத்திக் கூர்மையைக் கண்ட இவர் தந்தையார், இவர் சிறந்த கல்வி அறிஞரிடம் கல்வி கற்க வேண்டுமென்று விரும்பி, இலக்கிய நிபுணரான டோனாடஸ் என்பவரிடம் அனுப்பினார்.

    இலத்தீன், கிரேக்கு மொழிகளில் நம் பக்தர் புலமை பெற்று சொற்பொழிவாற்றுவதிலும் புகழ் பெற்று வழக்கறிஞராகச் சிறிதுகாலம் பணியாற்றினார். இளமையில் கிறிஸ்துவை அறிந்து சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட போதிலும், தாம் நடத்தி வந்த தொழிலின் காரணமாக, இவர் உலகியலில் சிந்தனை செலுத்தினாரே யொழிய, கடவுளுக்கு அடுத்த காரியங்களைக் குறித்து கவலைப்படவில்லை.

     தம் அறிவை வளர்க்கும் பொருட்டு பரி. ஜெரோம் பல நாடுகளைப் பார்வையிடத் திட்டமிட்டு, முதலில் தற்காலத்தில் பிரான்சு என்று சொல்லப்படும் கால் நாட்டிற்குச் சென்றார். இவருடைய பிற்கால வாழ்வை நாம் பார்க்கும் பொழுது, இவரைக் காட்டிலும் அதிகமாகப் பல நாடுகளைப் பார்வையிட்ட கிறிஸ்தவப் பக்தர் அக்காலத்தில் இல்லை என்றும் அப்பிரயாணங்களே இவர் சிறந்த கிறிஸ்தவ அறிஞராவதற்கு ஒரு சாதகமாயிருந்ததென்றும் அறிகிறோம். கால் நாட்டில் முக்கிய நகரங்களிலுள்ள கல்வி நிலையங்களில் சில காலம் செலவிட்டப்பின்னர், ரோமாபுரிக்குச் சென்றார்.

     பிரபல ஆசிரியர்கள் எழுதிய நூல்களை வெகு ஆவலுடன் ஊண் உறக்கமின்றிக் கற்றார். அந்நகரில் ஒரு புத்தக நிலையமும் நிறுவினார். முக்கியமான நூல்களை விலைக்கு வாங்குவதிலும் நண்பர்களைக் கொண்டு சிலவற்றிற்கு நகல்கள் எடுப்பதிலும் இவர் முனைந்தார். அவ்வாரய்ச்சியில் ஈடுபட்டதின் பயனாக சுமார் கி.பி. 360 இல் தம் நண்பர் போனசஸ் என்பவருடன் டிரியர்ஸ் நகரம் வந்தபொழுது, இளமை பருவத்தில் இவரில் காணப்பட்ட கிறிஸ்தவ பக்தி அனல்விட்டெழுந்து வேத அறிவை பெருக்குவதில் ஈடுபட்டார்.

     இதன் பின்னர் உலகின் இன்ப துன்பங்களையும் பிற பற்றுக்களையும் முற்றிலும் துறந்தாலன்றித் தாம் கிறிஸ்துவின் தொண்டனாக முடியாதென்ற எண்ணம் இவர் மனதில் எழுந்தது. தம் எண்ணம் நிறைவேற ரோமாபுரி தகுதியான இடமில்லை என்று நினைத்துச் சில காலம் அந்தியோகியாவில் செலவிட்டுப் பின்னர் சிரியாவிற்கும் அரேபியாவிற்கும் மத்தியிலுள்ள பாலைவனத்தில் துறவியாக நான்கு வருடம் செலவிட்டார்.

உபவாசத்தால் உடலை ஒடுக்கி ஜெபத்தில் நிலைத்திருந்து தம் வாழ்க்கைக்குக் கடவுள் சித்தத்தை வெளிப்படுத்துமாறு ஊக்கமாய் வேண்டினார். உலகஞானக்கலைகளில் வல்லுனரான சிசேரோவின் நூல்களால் கவரப்பெற்று அவற்றில் ஈடுபட்டிருப்பதை இவர் விட்டு, வேத அறிவைப் பெருக்குவதில் ஊக்கம் காண்பிக்க வேண்டுமென்பதைக் கடவுள் இவருக்கு வெளிப்படுத்தினார்.

     கி.பி. 377 இல் நம் பக்தர் அந்தியாகுவில் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். மறுவருடமே இவர் பாலஸ்தீனத்திற்குச் சென்று நமதாண்டவர் இவ்வுலக வாழ்க்கை நடத்திய புனிதஸ்தலங்களைப் பார்வையிட்டார். பெத்லகேமை தம் தலைமையகமாகக்கொண்டு, அங்குள்ள யூதகுல கல்விமான்களுடன் அளவளாவி, எபிரெய மொழியறிவை வளர்த்துக் கொண்டார். லத்தீன் கிரேக்கு மொழிகளில் புலமை பெற்றார். கி.பி. 380 இல் பரி. ஜெரோம் கான்ஸ்டாண்டிநோபிள் சென்று அந்நகரின் அத்தியட்சகரான பரி. கிராகரி நாசியன்சனிடம் வேதாகமம் படிப்பதில் முனைந்தார். மறுவருடம் அவ்வத்தியட்சகர் அந்நகரை விட்டுச் செல்ல நேர்ந்தபொழுது நம் பக்தர் பாலஸ்தீனத்திற்கு திரும்பினார்.

     பரி. ஜெரோமின் வேத அறிவைப்பற்றியும் தூய வாழ்க்கையைப் பற்றியும் குருக்களும் சபையோரும் கேள்விப்பட்டு பலர் இவரிடம் போதனையைக் கேட்க விரும்பினார்கள். இவர் ரோமாபுரிக்கு வந்து அங்கு மூன்று வருடம் தங்கி அநேக கிறிஸ்தவ மக்கள் மனந்திருந்துவதற்கும், நன்நடைக்கைக்கும் காரணமாயிருந்தார். பெண்மணிகளில் மார்செல்லா, பைலாபிலெசில்லா, இஸ்டோசியம் என்பவர்கள் கிறிஸ்துவின் அடியாராக மாறினர்.

     மூன்று வருடம் சென்றபின் ரோமாபுரியை விட்டுப் புறப்பட்டு சீப்புரு சென்று, அங்கிருந்த அந்தியோகியா சபையைச் சந்தித்து கி.பி. 385 இன் இறுதியில் மறுபடியும் எருசலேம் வந்து சேர்ந்தார். பாலஸ்தீன நாட்டிலிருந்துக்கொண்டு பரிசுத்த வேதாகமத்தை ஆழ்ந்து கற்பது சிறந்தது என இவருக்குப் புலப்பட்டது. பெத்லகேமில் பிரயாணமாக வரும் பக்தர்களின் தேவைக்காக ஒரு மருத்துவமனையையும் கட்டுவித்தார். பின்னர் அங்கிருந்து எகிப்து தேசத்தின் பல பாகங்களிலும் அலெக்சாண்டிரியாவிலும் சில காலம் செலவிட்டார்.

     நம் பக்தர் கிறிஸ்தவ உலகத்திற்குச் செய்த சேவைகளில் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பே மிக முக்கியமானதாகும். கிரேக்கு, எபிரெய, இலத்தீன் மொழிகளில் புலமை பெற்றிருந்த நம் பக்தர் இவ்வேலையில் மிகவும் ஊக்கம் காண்பித்தார். பக்தியும் சிறந்த ஜெப ஜீவியமும் உள்ள அறிஞரே இவ்வேலையைச் செவ்வனே செய்யக்கூடும். நம் பக்தர் அத்தகைய அறிஞராவார். சிறந்த கல்வியாளருமாகிய பரி. ஜெரோம், கடவுளால் இவ்வேலைக்கென்று தெரிந்தெடுக்கப்பட்டவரென்று சொல்லலாம்.

     பழைய ஏற்பாட்டு நூல்களை மூலமொழியிலிருந்து எபிரெய மொழியில் வெகு அழகாக மொழிபெயர்த்தார். கிரேக்க மொழியிலிருந்து இலத்தீன் மொழியில் ஆக்கப்பட்டிருந்த சுவிசேஷங்களைச் சரிவரத் திருத்தும் வேலையிலும் இவர் ஈடுபட்டு, யாவருக்கும் திருப்திகரமாக அதைச் செய்து முடித்தார். அவ்வாறே புதிய ஏற்பாட்டின் மற்ற நூல்களையும் திருத்தம் செய்தார். இவ்வேலைகளைத்தவிர, அநேக வேத விளக்கவுரை நூல்களையும், நிருபங்களையும் எழுதினார். அங்கங்கே ஏற்படுத்தப்பட்ட கட்சிகளையும், வேதப் புரட்சிகளையும் கண்டித்துத் தம் வேத அறிவைக் கொண்டும் தம் தூய வாழ்க்கையினாலும் அவர்களை நல்வழிப்படுத்தினார்.

     நம் பக்தரின் இறுதிக் காலத்தில் ஒரு கொள்ளைக் கூட்டத்தார் எகிப்து நாட்டை கடந்து, பாலஸ்தீனத்துக்குள் புகுந்து அங்குள்ள மடங்களைச் சுட்டெரித்துப் பக்தர்களைக் கொலை செய்தார்கள். பரி. ஜெரோம் அவர்களிடம் அகப்படாமல் தப்பி, தாம் எடுத்துக் கொண்ட வேலைகளைத் தம் வாழ் நாள் கடைசி வரை பய பக்தியோடும் உண்மையோடும் செய்தார். நல்ல முதிர்ந்த வயதில் தம் உலக வாழ்க்கையை முடித்து, கி.பி. 420 இல் செப்டம்பர் 30 ஆம் நாள் உயிர் துறந்தார்.

பிறப்பு: கி.பி. 347 (சிரிதோன்)

இறப்பு: கி.பி. 420, செப்டம்பர் 30 (பெத்லகேம்)

Posted in Missionary Biography on October 14 at 12:25 PM

Comments (0)

No login
gif