St. Origen History in Tamil

   

    சாயங்கால உஷ்ணம் தணிந்து, சூரியன் கதிர்கள் ஜன்னல்கள் வழியாக இளைஞன் ஆரிஜன் இருந்த மேல் வீடு படுக்கை அறையில் பிரவேசித்தன. அந்த இளைஞனுக்கு அறையினுள்ளே இருப்பு கொள்ளவில்லை. வெளியே வீதியில் இராணுவப் படையினர் நடமாட்ட சப்தமும், ஆயுதங்கள் மோதும் ஓசையும் கேட்டன. அமைதி நிலவிய அத்தெருவில் அவர்களுக்கென்ன வேலை? தன் படுக்கையை விட்டெழுந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான் ஆரிஜன்.

     திடீரென்று அவன் உள்ளத்தில் பீதி ஏற்பட்டு, பயத்தினால் நெஞ்சம் படபடத்தது. போர்ச்சேவகர் தன் வீட்டிற்கு நேரே வருவதைக் கண்டு, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து ஜன்னல் அருகே சென்றான். போர்ச்சேவகரின் தலைவன், அவ்வீட்டின் கதவின் முன் நின்று கதவைத் தட்டினான். தாய் கதவை திறப்பதைக் கண்டு மாடியை விட்டிறங்கி ஆரிஜன் கதவண்டை வந்து நின்றான்.

     “உன் புருஷன் எங்கே” என்று போரச்சேவகத் தலைவன் ஆரிஜனுடைய தாயைக் கேட்டான். அவள் பதில் சொல்வதற்கு முன், வீட்டின் கதவைத் தள்ளிக்கொண்டு, தன்னுடன் வந்த சேவகர்களுக்குச் சைகை காட்டி, அவர்களுடன் வீட்டிற்குள் சென்றான். “வணக்கம் கேப்டன், நான் ஏதாவது உமக்கு உதவி செய்யக்கூடுமா?” என்று, ஆரிஜனுடைய தந்தை கேட்டார். தந்தையின் சாந்தமான பேச்சைக் கேட்டு ஆரிஜனுடைய பயம் ஒருவாறு நீங்கியது. அதற்குள் சேனைத் தலைவன் “உம்மைக் கைது செய்ய வாரண்ட் கொண்டு வந்திருக்கிறேன்” என்றான்.

     “என்ன குற்றத்திற்காக”?

“வேதப் புரட்சி செய்யும் கிறிஸ்தவக் குழுவைச் சேர்ந்தவரென்றும், முன்னோர்களின் கடவுளை வழிபட வேண்டாமென்றும் பிரச்சாரம் செய்வதாக உம்மேல் குற்றம்”.

“அப்படியானால் நீங்கள் தேடுபவன் நான்தான். நான் உம்முடையவன்” என்று ஆரிஜனின் தந்தை நிதானமாகச் சொன்னார்.

       இதைக் கேட்ட ஆரிஜன், தன் தந்தை ஏன் தப்பித்து ஓட முயற்சிக்கவில்லை? ஏன் தகுந்த சமாதானம் சொல்லி போர்ச்சேவகர்களை அவர் அனுப்பிவிடவில்லை? என்று ஆச்சரியப்பட்டான்.

போர்ச்சேவகர் அவன் தந்தையை வாரினால் கட்டி வீட்டை விட்டு வெளியே இழுத்துக்கொண்டு போனார்கள். ஆரிஜனின் தாய் கவலை மேலிட்டுத் தன்னை அடக்கக் கூடாமல் அழுதாள். இதைக் கண்ட இளைஞன் தன் தகப்பனுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்று போர்ச் சேவகத்தலைவனிடம் கேட்டான். “மரணதண்டனை” என்று மறுமொழி வந்தது. என்ன? ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கு மரண தண்டனையா?. அதன் அர்த்தம் அந்த பிஞ்சு மனதில் பதிய சில நிமிடங்களாயின. ஆனால் அதை அறிந்தவுடனே, தன் தந்தை தன் விசுவாசத்திற்காக மரிக்க கூடாதென்று எண்ணினான். “அப்பா, அப்பா நானும் உம்முடன் ஆண்டவருக்காக மரிக்கிறேன்” என்று கூப்பிட்டுக் கொண்டு, மாடியிலிருந்து இறங்கி ஓடி வந்தான். அதற்குள் போர்ச்சேவகர்கள் அவன் தந்தையை கொண்டுபோய் விட்டார்கள். தாய் கதவின் முன் நின்று இருளை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

     “அம்மா நானும் அப்பாவுடன் போகிறேன். இயேசுவிற்காக நானும் அப்பாவுடன் மரிக்கிறேன்” என்றான். அதற்கு அவன் தாய், “மகனே சும்மாயிரு உன்னை மரிக்கும்படி இயேசுநாதர் அழைக்கவில்லை. இப்பொழுது நீ என்னிடமிருப்பது அவசியம்” என்றாள். “இல்லையம்மா, என்னைப் போக விடுங்கள், என்னைப்போல ஒரு சிறுவன் ஆண்டவருக்காக மரிக்க முன்வரும்பொழுது, வெட்கமடைந்து, தங்கள் தப்பிதத்தையுணர்ந்து, என் தந்தையைப் போக விடுவார்கள். என்னை விடுங்கள் அம்மா” என்று கதறி, வீட்டை விட்டு வெளியே ஓடினான்.

    “ஆரிஜன், நீ படுக்கையில் உடுக்கும் உடையோடல்லவா இருக்கிறாய். உள்ளே வா” என்று அவனுடைய தாய் அவனை அழைத்தாள். இதன் உண்மையறிந்த ஆரிஜன் தன் வீட்டிற்குத் திரும்பினான். அதற்குள் அவனுடைய தாய் தன் வீட்டிற்குள் சென்றிருந்தாள். தன் உடையை மாற்றுவதற்காக ஆரிஜன் தன் உடைகளை எங்கு தேடினாலும் ஒன்றும் அவனுக்கு அகப்படவில்லை. உடைகளை வைக்கும்பெட்டி காலியாக இருந்தது. ஆத்திரத்தில் தன் தகப்பனுடன் மரிக்கத் தீர்மானித்தது. தவறென்று ஆரிஜன் உணர்ந்து அவ்வாறு மரிப்பதைக் காட்டிலும் கடவுளின் வழி நடத்துதலுக்காகக் காத்திருப்பதுதான் சரியென்று முடிவு செய்தான்.

     அக்காலத்தில் அலெக்சாண்டிரியாவில் ஒரு சிறந்த வேத சாஸ்திர கல்லூரி இருந்தது. இது சுவிசேஷகனான பரி. மாற்கு நிறுவின கல்லூரி என்று கருதப்பட்டு வந்தது. கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய காலம் முடிவடைந்தது, ஆரிஜன் பதினேழு வயது நிரம்பியவராய் இருக்கும்பொழுது அக் கல்லூரிக்குத் தலைமை ஆசிரியர் தேவையாயிருந்தது. பிஷப் டிமிட்டிரியஸ் ஆரிஜனை அப்பதவிக்கு நியமித்தார். வாலிபனாக இருந்தபோதிலும் தமது பொறுப்பை உணர்ந்து அக்கல்லூரியை திறம்பட நடத்தினார். தமது தூய்மையான வாழ்க்கையினாலும், அறிவினாலும் மாணவர்களின் மனதைக் கவர்ந்தார். இவ்வாறு பதினேழு ஆண்டுகள் கடந்தன.

     மற்றொரு துன்புறுத்தலின் காலம் அலைபோல் நாட்டில் பரவியது. பலஸ்தீனா நாட்டிலுள்ள நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, ஆரிஜன் அலெக்சாண்டிரியாவை விட்டு, பலஸ்தீனா நாட்டில் சில காலம் தங்கினார். பின்பு அலெக்சாண்டிரியாவிற்குத் திரும்பிவந்து, கிரேக்க தத்துவ சாஸ்திரங்களைக் கற்று வேதப் புரட்சியினருடைய கொள்கைகளையும் அறிந்து, சத்திய வேதத்தின் மூலமாய் அவர்களுக்கு அறிவைப் புகட்டினார். அவருடைய கல்வித் திறனைப் பற்றிய புகழ் நாடெங்கும் பரவிற்று. அறிஞர் பலர் ஆரிஜன் வாயிலிருந்து வரும் சொற்களைப் பொற் சொற்களாக ஒவ்வொரு வார்த்தைகளையும் தங்கள் குறிப்பு புத்தகங்களில் பதித்து வந்தார்கள்.

     அப்பொழுது டிசியஸ் என்ற சக்கரவர்த்தி நாட்டைக் கைப்பற்றினான். அவன் கிறிஸ்தவர்களை வெறுத்து அவர்களை கொடூரமாய் நடத்தினான். ஆரிஜனைச் சிறையிலடைத்து, அவரைக் கிறிஸ்துவை மறுதலிக்கச் செய்ய வேண்டுமென்று பலவிதமாய் இம்சித்தான். ஒரு மேசையின்மீது அவரைக்கிடத்தி, தலையின் பக்கமும் கால்களின் பக்கமும் உருளைகளைப் பொருத்தி, அவைகளில் அவருடைய கைகளையும், கால்களையும் மாட்டி, அவ்வுருளைகளை மேல் புறமாகத் திருப்பி, கால்களையும், கைகளையும் உடலிலிருந்து இழுத்து இம்சித்தான். அவர் அவ்வேதனையிலும் தம் ஆண்டவரை மறுதலியாததைக்கண்டு அவரை பின்னும் கொடூரமான வகைகளில் சித்திரவதை செய்தான். ஆண்டவருக்காகத் துன்பப்படுவதை பாக்கியமென்று ஆரிஜன் எண்ணி அவைகளைப் பொறுமையுடன் சகித்தார். சக்கரவர்த்தி டிசியஸ் அப்பொழுது மரணமடைந்தான்.

     டிசியஸிற்குப் பின் வந்த சக்கரவர்த்தி ஆரிஜனை விடுதலை செய்தான். சரீரத்தில் பட்ட பாடுகளால் ஆரிஜனுடைய வாழ்நாட்கள் இவ்வுலகத்தில் அதன்பின் அதிகமாக நீடிக்கவில்லை. தூய்மையான வாழ்க்கை நடத்தி, எப்பொழுதும் ஆவியில் அனலுள்ளவராய் இருந்து தமது 69 வது வயதில் (கி.பி.254) ஆரிஜன் ஆண்டவரிடம் தமதாவியை ஒப்புக் கொடுத்தார்.

பிறப்பு: கி.பி. 184, அலெக்சாண்டிரியா, எகிப்து

இறப்பு: கி.பி. 254

Posted in Missionary Biography on November 04 at 10:36 AM

Comments (0)

No login
gif