Today Bible Verse

C.T.E. Rhenius History in Tamil

     பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், கிறிஸ்தவச் சமயம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரவுவதற்காக அநேக மேனாட்டு மிஷனெரிகள் ஊக்கமாய் உழைத்தார்கள். அவர்களுள் சா.தி.ஈ ரேனியஸ் முக்கியமானவராவார். மேனாட்டு மக்கள் சென்றிராத குக்கிராமங்களுக்கும் இவர் சென்று, அம்மக்களுடன் நெருங்கி பழகி, சிறந்த சுவிசேஷ ஊழியம் செய்து அநேக கிறிஸ்தவச் சபைகளைத் தோற்றுவித்தார். இவர் இவ்வாறு அம் மாவட்டத்தில் உழைத்த காரணத்தால், “திருநெல்வேலி அப்போஸ்தலன்” என்று அழைக்கப்பட்டார்.

     சார்லஸ் தியாபிலஸ் ஈவால்ட் ரேனியஸ் என்பது இவருடைய முழுப் பெயராகும். இவருடைய மூன்றாவது பிள்ளையான சி.ஜே. ரேனியஸ் என்பவர் சுவிசேஷபுரம், டோனாவூர், குன்னூர், பெங்களூர், சென்னை முதலிய இடங்களில் பணியாற்றி சென்னையில் மரித்தார். C.T.E. ரேனியஸ் 1790 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெர்மானிய நாட்டில், கிரான்ஸ் கோட்டையில் பிறந்தார். இவருடைய தந்தை ஆதோ ரேனியஸ் என்பார். ராணுவத்தில் பணியாற்றினார். இவருக்கு ஒரு மூத்த சகோதனும், ஒரு தம்பியும், ஒரு தங்கையுமிருந்தார்கள். 1799 ஆம் ஆண்டில், இவர்கள் சிறுவர்களாயிருக்கும்போதே தங்கள் தந்தையை இழந்தார்கள். பின்னர், அவர்களுடைய தாயுடன், மேரியன் வெர்டொ என்ற ஊருக்குச் சென்று அங்கு வாழ்ந்தனர். அங்குள்ள கலாசாலையில் அவர்கள் கல்வி கற்றார்கள். பதினாறாம் வயது முதல் W.A. ரேனியஸ் என்ற பெயரையுடைய அவருடைய பெரிய தகப்பனாரின் இல்லத்தில் இவர் வாழ்ந்தார். இப்பெரியார் கடவுளிடம் மட்டில்லா அன்பு கொண்டவர். எனவே, அவர் இல்லத்தில் ரேனியஸ் சிறந்த பக்தி நெறியில் வளர்க்கப்பட்டார்.

     C.T.E. ரேனியஸ் தம் பெரிய தகப்பனாருடன் வாழ்ந்தபொழுது தம்மை பின்பற்றி வரவும், அவருடைய அருள் நெறியை மக்களுக்கு எடுத்துரைக்கவும், ஆண்டவர் தம்மை அழைப்பதை உணர்ந்தார். அப்பொழுது வெளிநாடுகளில் மிஷனெரிகளாக உழைத்து வந்த மொரோவிய திருச்சபையின் மக்கள் அனுப்பிய அறிக்கைகளும், தென்னிந்தியாவில் தரங்கம்பாடி மிஷனெரிகள் அனுப்பியிருந்த அறிக்கைகளும் அவர் கையில் கிடைத்தன. அவைகளை வாசித்தப்பின், தான் தென்னிந்தியாவில் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டுமென்று முடிவு செய்தார்.

     சுவிசேஷப்பணி செய்வதற்குத் திருமறை பயிற்சி அவசியமென்பதை உணர்ந்து பெர்லின் பட்டணத்தில் நிறுவப்பட்டிருந்த கலாசாலையில் சேர்ந்தார். இதன் பின்பே இவர் தாயாருக்கு தம் எண்ணத்தைத் தெரிவித்தார். இதை அறிந்த உடனே அவர்கள் மிகவும் கலக்கமுற்று, அயல் நாடுகளுக்கு எந்த பணியும் செய்வதற்குப் போக வேண்டாமென்று தடுத்தார்கள். தனது தாயின் மனச்சஞ்சலமும், அவ்வூழியம் செய்ய தாம் தகுதியுள்ளவனா என்ற சந்தேகமும் அவர் மனதை வாட்டின. இவைகளைக் குறித்து ஆண்டவரிடம் ஊக்கமாய் ஜெபித்தார்.

     ஒரு ஆண்டு பெர்லின் திருமறை பயிற்சிசாலையில் பயின்ற பின், 1812 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரஷியா தேச திருச்சபை குருவாக பெர்லின் நகரில் அபிஷேகம் பண்ணப்பட்டார். இங்கிலாந்திலுள்ள சர்ச் மிஷனெரி சங்கத்தார் (C.M.S) இவரையும், டென்மார்க்கைச் சேர்ந்த ஷனார் என்ற ஒரு வாலிப குருவையும், தங்கள் மிஷனெரிகளாகத் தென்னிந்தியாவில் ஊழியம் செய்வதற்குத் தெரிந்து கொண்டார்கள். மிக மகிழ்ச்சியுடன் தம் தாயிடம் விடை பெற்றுக்கொண்டு, ஷனார் குருவையும் அழைத்துக்கொண்டு, 1814 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னைக்குச் செல்லும் மரக்கலம் ஒன்றில் புறப்பட்டார்.

     சென்னையில் கிழக்கிந்திய குருவான தாம்சன் இவ்விருவரையும் அன்புடன் வரவேற்றார். ராட்லர், அரசன் என்ற மிஷனெரிகள் மூலம் சென்னையில் நடந்துவந்த சுவிசேஷ வேலையை இவ்விருவரும் பார்வையிட்டு, பின்பு ஜூலைமாதம் 20 ஆம் தேதி தரங்கம்பாடிக்குப் புறப்பட்டார்கள். அங்கு 6 மாதங்கள் சுவிசேஷ ஊழியத்தில் பங்கெடுத்து, தமிழ் மொழியையும் கற்று 1815 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைக்குத் திரும்பி வந்தார்கள்.

     சென்னைக்கு வந்தவுடன் கருப்புடவுனில் (ஜார்ஜ் டவுனில்) ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ஜெபக்கூட்டங்கள் நடத்தி தெருப்பிரசங்கங்கள் செய்து இவ்விருவரும் தங்கள் ஊழியத்தை ஆரம்பித்தார்கள். ராயபுரத்தில் ராட்லர் செய்து வந்த பணியிலும் பங்கெடுத்து, அவர் நடத்தி வந்த கூட்டங்களுக்கும் சென்று வந்தார்கள். சிறுவர்களுக்கு வேத அறிவு புகட்டினால் அதனால் பயனுண்டாகும் என்று கருதி ரேனியஸ் ஒரு சிறு பள்ளிக்கூடம் ஆரம்பித்தார். வேலையில்லாத ஏழை கிறிஸ்தவ மக்களுக்கு ஏதாவது வேலையைக் கொடுத்து அவர்கள் வறுமையைத் தீர்த்தார். ராட்லர் தமது வயது முதிர்ந்த காலத்தில் வேதாகம மொழி பெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு, வேதாகம மொழி பெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்து தாமும் சில பகுதிகளை மொழிபெயர்க்க ஆரம்பித்தார். ரேனியஸ் தம் வாழ்நாள் இறுதிவரை இப்பணியில் ஈடுபட்டிருந்தார்.

     1816 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி அனிவான் சோமான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தியோடர் ஷிமிட், பெர்னார்ட் ஷிமிட் என்ற இரு சகோதரர்களைச் சர்ச் மிஷனெரி சங்கத்தார் தென்னிந்தியாவில் ஊழியம் செய்யும்படி அனுப்பினார்கள். அவர்கள் வந்தவுடன் புதிதாக இரண்டு பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டன. சாந்தப்பன் என்ற ஒரு கிறிஸ்தவப் பெரியாரின் உதவியைக்கொண்டு, சென்னைக்கு அருகிலுள்ள அழகர்பேட்டை, பெருந்தூர், கள்ளிப்புத்தூர் என்ற கிராமங்களில் ரேனியஸ் பள்ளிக்கூடங்கள் நிறுவினார். பின்பு செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேங்குடமங்கம், திருவாமூர் என்னுமிடங்களிலும் பள்ளிக்கூடங்களைத் திறந்து வைத்தார். இத்துடன் சுவிசேஷ ஊழியத்தையும் ரேனியஸ் இடைவிடாமல் செய்து வந்தார். திருவிழா நாட்களில் காஞ்சிபுரத்திற்குச் சென்று, அங்கு கூடும் ஏராளமான மக்களுக்குச் சுவிசேஷத்தை அறிவித்தார். அவ்வூர் செல்லும் வழியிலுள்ள கிராமங்களிலும் கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கித்தார்.

     1771 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுவிசேஷ ஊழியம், முதல் இந்திய குருவானவராகிய சத்தியநாதனின் சிறந்த ஊழியத்தினாலும், ஜெனிக்கே, ராட்லர், கெரிக் முதலான மிஷனெரிகளின் உழைப்பினாலும் பலன் தந்து பல இடங்களில் கிறிஸ்தவ சபைகள் தோன்றியிருந்தன. 1805 ஆம் ஆண்டு முதல் 1809 வரை அம்மாவட்டத்திலும் நாஞ்சில் நாட்டிலும் ஊழியம் செய்துவந்த ரிங்கல்தெளபே, நிலையாக நாஞ்சில் நாட்டில் (நாகர்கோயில்) தங்கி பணிசெய்ய ஆரம்பித்தார். கனம் வேதநாயகம் 1811 முதல் 1813 வரை ஊழியம் செய்து மறுமைக் குட்பிரவேசித்தார். சிலகாலம் திருநெல்வேலி சபைகளைக் கண்காணித்துவர எவருமில்லை. பாளையங்கோட்டையில் ராணுவ குருவாக பணியாற்றின ஜேம்ஸ் ஹாப் கிறிஸ்தவர்களை சந்தித்து, ஊழியர்களை உற்சாகமூட்டி வந்தார்.

     மிஷனெரிகள் எவருமில்லாமல் கிறிஸ்தவ மக்கள் பல இன்னல்களுக்குட்பட்டு வந்தார்கள். இக்குறையை, ஜேம்ஸ் ஹாப் அவர்கள் சி.எம்.எஸ் நிர்வாகக் குழுவுக்கு எடுத்துரைத்து, உடனடியாக ஒரு மிஷனெரியை அனுப்பும்படி எழுதினார். எனவே, ரேனியஸ் 1820 ஆம் ஆண்டில் பாளையங்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் தொண்டாற்றுவதற்கு அனுப்பப்பட்டார்.

     முதலில் ரேனியஸ் பாளையங்கோட்டையில் கோட்டைக்குள் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அதில் தம் மனைவி மக்களுடன் தங்கினார். அவருடைய ஊழியத்தில் அவருக்கு உதவி செய்யும்படியாக மிஷனெரி ஷிமிட் என்பவரை அங்கு அனுப்பினார்கள். ஹாப் தான் கட்டியிருந்த வீட்டையும், அத்துடன் தன் வசமிருந்த கட்டிடங்களையும் சி.எம்.எஸ் குழுவுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்று தம் தாய்நாடு சென்றார். அதிலுள்ள ஒரு கட்டிடத்தில் உபதேசிமார் பயிற்சி செய்வதற்கென்று ஒரு பயிற்சிக் கூடம் நிறுவினார்.

     இந்திய கிறிஸ்தவ மக்கள், கல்வி அறிவு இல்லாதவர்ளாயிருந்தால், கிறிஸ்துவின் மெய்யடியார்களாக அவர்கள் விளங்கமுடியாதென்பது ரேனியஸின் கருத்து. எனவே பற்பல இடங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார். முதன் முதலாக, வண்ணாரப்பேட்டையில் ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்தார். அதன்பின், திருநெல்வேலிக்கு அருகிலுள்ள பேட்டை, மேலப்பாளையம், குறிச்சி, தச்சநல்லூர், முருகன்குறிச்சி கிராமங்களிலும், கான்சாபுரம், முறப்பாடு, மேல்பாட்டம், கிராமங்களிலும் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

     எஸ்.பி.சி.கே சங்கத்தார் தோற்றுவித்த சபைகளை மேற்பார்வையிட்டு வந்த பாதிரியார் விஸ்வநாதன் 1822 ஆம் ஆண்டில் மரித்தார். அச் சபைகளையும் ரேனியஸ் பார்வையிட்டு வரலானார். பெண்களும் முன்னேற்றமடைந்து, சுவிசேஷ ஊழியத்தில் பங்கு பெறுவது அவசியமென்று ரேனியஸ் கருதினார். எனவே, 1823 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாளையங்கோட்டையில் ஒரு பெண்கள் பாடசாலையை ஆரம்பித்தார். துண்டுத்தாள் பிரதிகள் மூலமாகவும் சுவிசேஷம் பரவ முயற்சி செய்தார். அக்காலத்தில் திருநெல்வேலியில் அச்சுக்கூடம் இல்லை. துண்டுத் தாள்கள் சென்னையிலிருந்து அச்சிடப்பட்டு வந்தன. இதனால் செலவு அதிகமானதோடு கூட தாமதமும் ஏற்பட்டது. இவைகளை நிவிர்த்தி செய்ய நாகர்கோயிலுள்ள அச்சுக்கூடத்தை உபயோகித்து, அங்குள்ள லண்டன் மிஷனெரி சங்கமும், திருநெல்வேலி சி.எம்.எஸ் மிஷனும் சேர்ந்து ஒரு துண்டுத் தாள் பிரதி குழு ஒன்றை நிறுவினார். இதன் மூலமாய் சிறிது காலத்தில் சிறந்த கிறிஸ்தவ சுவிசேஷ ஊழியம் நடைபெறலாயிற்று.

   திருநெல்வேலியில் (நகர்புறத்தில்) மிஷனுக்குச் சொந்தமான ஒரு கட்டிடத்தைப் பள்ளிக்கூடமாகவும், ஆலயமாகவும் ரேனியஸ் உபயோகித்து வந்தார். புதன்கிழமைதோறும் அதில் இந்துக்களுக்கு கூட்டம் நடத்தி பிரசங்கம் செய்து வந்தார். அக்கூட்டங்களுக்கு வந்த மக்களின் தொகை பெருகலாயிற்று. அவர்களுடன் அளவளாவி, அச்சடித்தக் காகிதத் துண்டுகளை அவர்களுக்குக் கொடுத்து, தம் வாழ்நாள் இறுதிவரை அப்பணியைச் செய்து வந்தார்.

     கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்குள் சுவிசேஷ வேலையைச் செய்ய ஆரம்பித்தார். புளியங்குடி என்னும் கிராமத்திலுள்ள சில இந்து மக்கள் அவரால் போதிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற்றார்கள். அவ்வாறு ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு அவர்களுடைய இனத்தார் பல்வேறு வகைகளில் இடையூறு செய்தார்கள். அவைகளைப் பொருட்படுத்தாமல், புதுக் கிறிஸ்தவ மக்கள் ஆச்சரியமான விதமாய் விசுவாசத்தில் வேரூன்றி கிறிஸ்துவின் மெய்யடியார்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் மாறுதல் காணப்பட்டது. அதைக் கண்ட அநேகர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவச் சபையில் சேர முன் வந்தார்கள்.

பிறப்பு: கி.பி. 1790, நவம்பர் 5, (ஜெர்மன்)

இறப்பு: கி.பி. 1838

Posted in Missionary Biography on November 04 at 10:58 AM

Comments (0)

No login
gif