Today Bible Verse

St. Dominic History in Tamil

     பரி. டாமினிக் ஸ்பானியா நாட்டிலுள்ள ஒரு பிரபு குலத்தைச் சேர்ந்தவர். தூய வாழ்க்கையை நடத்தி, கிறிஸ்துவுக்காக யாவற்றையும் குப்பையாகக் கருதிய பக்தன் இவர் யுத்தத்தினாலும் பஞ்சத்தினாலும் மக்கள் தவித்து வாடியபொழுது, இவர் மாணவனாக பள்ளியில் படித்து வந்தார். தன்னிடமிருந்த யாவற்றையும், தன்னுடைய புத்தகங்கள் உட்பட எல்லாவற்றையும் விற்று அவர்களுக்கு கொடுத்து ஆதரித்தார். பிற்காலத்தில் வேத புரட்சியினர் பெலன் கொண்டு வருவதைக் காண சகியாமல், சுத்த சுவிசேஷம் வளரும்படி பிரசங்கம் செய்யும் துறவிகளின் வகுப்பு என்று ஒரு வகுப்பை நிறுவினார். இது பிற்காலத்தில் டாமினிக்கன்ஸ் என்று விளங்கிற்று. நாம் நினைவுகூறும்படி தென் இந்தியத் திருச்சபை வகுத்த பக்தர்களின் அட்டவணையில் பரி. டாமினிக்கின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

     இவர் கி.பி. 1170 ஆம் ஆண்டில் ஸ்பானியா நாட்டிலுள்ள உஸ்மா பேராயத்தில் பழைய காஸ்டில் என்ற மாளிகையில் பிறந்தார். இவருடைய தந்தை கஸ்மானைச்சேர்ந்த பேலிக்ஸ் ஆவர். இவருடைய தாயின் பெயர் ஜேன். பரி. டாமினிக் இவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவருடைய மூத்த மகனான அந்தோனி என்பவர் குருவாகப் பணியாற்றி வந்தார். மேம்ஸ் என்ற இரண்டாவது குமாரன் பக்தி நெறியில் வளர்க்கப்பட்டு பிற்காலத்தில் டாமினிக்கன் வகுப்பைச் சேர்ந்தார். பரி. டாமினிக் பிறப்பதற்கு முன் அவருடைய தாய் ஒரு சொப்பனம் கண்டார். தனக்குப் பிறக்குப்போகும் பிள்ளை ஒரு நெருப்பு பந்தத்தைத் தன் வாயில் வைத்துக்கொண்டு உலகத்தை தீக்கொளுத்தக் கண்டாள். அக்குழந்தை பிற்காலத்தில் எவ்விதமாக விளங்குமோ என்று கவலைக்கொண்டாள். அது குழந்தைப் பிராயத்திலிருந்தே உலக வாழ்க்கையில் பற்றில்லாமலிருந்து, தனியாக சென்று ஜெபம் செய்வதையும் குருவாகப் பணியாற்றின தன் மாமனுக்கு ஆராதனையில் உதவிச் செய்வதையும் கண்டு, மக்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டு அவர்களை நல்வழிப்படுத்துவதைக் தவிர அவர் துன்மார்க்க வழியில் ஈடுபடமாட்டாரென்று மகிழ்வுற்றான்.

     பரி. டாமினிக் பதினான்கு வயதடைந்தபொழுது பெலன்டியாவிலுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டார். பின்னர் சாலமான்காவிலுள்ள கலாசாலைக்குச் சென்று கற்றுத் தேறினார். இவருக்கு திருமறையைக் குறித்த அறிவும், தத்துவ சாஸ்திர அறிவும் சொற்சாதுரியத்தில் பற்றும், திறனும் நிரம்ப இருந்தன. ஆதித் திருச்சபை பிதாக்களின் வேத விரிவுரைகளை நன்கு மதித்து, அவைகளை கருத்தூன்றி படித்து வந்தார். கடவுளின் பிரசன்னத்தை எப்பொழுதும் அறிந்தவராய், புலன்களை அடக்கி, உபவாசித்து தியானம் செய்து நாட்களைச் செலவிட்டு வந்தார்.

     அவருடைய தாய் அச்சமயம் இறந்ததைக் கேள்விப்பட்டார். அப்பொழுது இருபத்தொரு வயது நிரம்பியவராக இருந்த பரி. டாமினிக்குக்கு, உலகப்பற்றுகளை முற்றிலுமாக அழித்து, விண்ணுலகை நோக்கிச் செல்வதற்கு இச் செய்தி ஒரு தூண்டுகோலாக விளங்கிற்று. தனக்குள்ள யாவற்றையும் அவர் தானமாகக் கொடுத்தார். குருத்துவ பணி செய்து வந்தவர்களுக்கு இது ஒரு படிப்பினையாகயிருந்தது. ஒரு சமயம் ஒரு ஏழைப்பெண் மூர் கூட்டத்தினரால் தன் சகோதரன் அடிமையாக கொண்டு போகப்பட்டான் என்றும், அவரை பணங்கொடுத்து மீட்டுக்கொள்ள தன் வசம் யாதொன்றும் இல்லை என்றும், தனக்கு அவர் உதவி செய்ய வேண்டுமென்று பரி. டாமினிக்கை வேண்டிக்கொண்டாள்.

     அவளுக்கு உதவிசெய்ய தன்னிடம் பணமில்லை என்று அவர் அறிந்து “என்னிடம் பொன்னும் வெள்ளியுமில்லை, ஆனால் ஒன்று செய்கிறேன். நான் உன் சகோதரனுக்குப் பதிலாக அடிமையாய் சென்று, அவனை மீட்டு உன்னிடம் ஒப்படைக்கிறேன்” என்று சொல்லி புறப்பட்டார். அப்பெண் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து, அவர் செய்யவிருந்ததைத் தடுத்தாள். தம் கலாசாலை படிப்பை முடித்தவுடன் தாம் வளர்ந்த பலன்டினாவுக்கு வந்து அங்கு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அவருடைய தூய வாழ்க்கையையும், வேத அறிவையும், ஊக்கத்தையும் அறிந்த மக்கள் அவரை ஒரு கடவுளின் மனிதனாகப் பாராட்டினார்கள்.

     1192 ஆம் ஆண்டு பக்திமானாக விளங்கிய அஸ்பிடோ என்று பெயருள்ள ஒரு குரு ஒஸ்மா அத்தியட்சகராக அபிஷேகம் செய்யப்பட்டார். அவர் பரி. டாமினிக்கை கனோனாக நியமித்தார். அப்பொழுது அவருக்கு வயது இருபத்தி எட்டு, தம்முடைய தூய வாழ்க்கையாலும், வேத அறிவைக் கொண்டும் அவர் சபைக்கு ஒரு ஆபரணமாக விளங்கினார் என்று அவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

     ஐந்து வருடங்கள் கனோனாக பணியாற்றி சிறந்த சேவை செய்தார். புற சமயத்தவர்களையும், வேதப் புரட்சியினரையும் கிறிஸ்துவின் மெய்யடியாராகத் திருப்பவேண்டுமென்ற வாஞ்சை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. 1205 ஆம் ஆண்டு இறுதியில் சிஸ்ட்டர்சியன் மடாதிபதிகளைச் சந்தித்தார். பரி. டாமினிக்கின் உதவியைக் கொண்டு வேதப்புரட்சியினரை நல்வழிப்படுத்தும்படி அத்தியட்சகர் அவர்களை அவரிடம் அனுப்பியிருந்தார். கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி “வழிக்குத் தடியையாவது, பையையாவது, அப்பத்தையாவது, காசையாவது எடுத்துகொண்டு போக வேண்டாம்” என்று அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லி அனுப்பியது போல பரி. டாமினிக் அவர்களிடம் சொல்லி அனுப்பினார். தம்முடைய வேத அறிவைக் கொண்டும், சாந்தமும், தூய்மையுமான பேச்சினாலும் வேத புரட்சியினர் அநேகரை அவர்களுடைய தீய வழிகளிலிருந்து திருப்பினார். பரி. டாமினிக் அநேக அற்புதங்களைச் செய்தாரென்று சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், வேத புரட்சியினரை அவர் மன்ம் மாறச் செய்தது அவைகளிலெல்லாம் சிறந்த அற்புதம் என்று மக்கள் கருதினார்கள்.

     பரி. வேதாகமத்தைக் குறித்த அறிவீனத்தினால் தவறான கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கற்று, தீய வழிகளில் மக்கள் நடக்கிறார்கள் என்று அவர் கருதினார். எனவே அவர்களுடன் அளவளாவி, சுத்த சுவிசேஷத்தை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினார். அதற்காக மான்ட்பெல்லியா என்னுமிடத்தில் ஒரு மகாநாடு கூட்டினார். இது எட்டு நாட்கள் நடைபெற்றது. பொதுவான கிறிஸ்தவச் சபை நம்பிக்கைகளைக் குறித்து ஒரு புத்தகம் எழுதி, அதை அவர் அங்குள்ள அனைவருக்கும் வழங்கினார். இரண்டாவது முறையாக ரோமண்ட் ரோஜா மாளிகையில் மற்றொரு மகாநாடு கூட்டினார்.

     பரி. டாமினிக் இவ்வாறு உழைத்தது வேத புரட்சியினரில் ஒரு சாராரின் கோபத்தை மூட்டினது. அவருக்கு பகைவர்கள் ஏற்பட்டார்கள். ஒரு சமயம் அவர்களுள் ஒருவன், ஒரு கூட்டத்திற்கு, ஒரு கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றான். இவர் ஒரு நாளும் பாதரட்சை அணிபவர் அல்லர். அவர் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டன. அவைகளைப் பொருட்படுத்தாமல் வழிநெடுக அவர் அவனுடன் அளவளாவிச் சென்றார். அவருடைய பணிவும், சாந்தமுமான முகமும், பேச்சும் கால்களில் இரத்தம் வடிய அவர் தன்னுடன் நடந்து வந்த காட்சியும் அவனுடைய மனதைத் தொட்டன. அவருடைய மன்னிப்பை அவன் கோரி ஒரு நல்ல கிறிஸ்தவனாக மாறினான். மற்றொரு சமயம் இரண்டு முரட்டு மனிதர்களுக்கு அவருடைய எதிரிகள் பணம் கொடுத்து, அவர் கிராமங்களுக்குச் செல்லும்பொழுது, அவரைக் கொல்லும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த சதியாலோசனை நிறைவேறவில்லை. இந்த நிகழ்ச்சியைக் குறித்து மக்கள் அவருக்கு அறிவித்து வினவியபோது, அவர் “நான் கடவுளைத் துதித்து என் உறுப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக வெட்டி சித்ரவதை செய்வதை நீடிக்கச் செய்ய அவர்களை வேண்டியிருப்பேன். ஆண்டவருக்காக நான் சித்திரவதை செய்யப்பட்டு வாடாகிரீடத்தைப் பெற்றிருப்பேன்” என்று பதிலளித்தார்.

     பத்து வருடக்காலம் லாங்குடாக் என்னும் பாகத்தில் பிரசங்கம் செய்து உழைத்தப்பின் 1715 ஆம் ஆண்டில் பிரசங்கம் செய்யும் துறவிகளின் வகுப்பு என்ற வகுப்பை நிறுவினார். இவ்வாறான வகுப்பை நிறுவவேண்டும் என்ற எண்ணம் வெகு காலம் அவர் மனதில் உருவாகிக்கொண்டு இருந்தது. துறவிகளாகப் பாலைவனங்களில் இருப்பவர்களைப் போல, உபவாசத்திலும், ஜெபத்திலும், தியானத்திலும் வாழ்நாட்களை செலவிடுவதோடுகூட, சபையின் நல்வாழ்வுக்காகவும், கிறிஸ்தவ சமயம் பரப்புவதற்காகவும் ஒரு வகுப்பினர் பிரசங்கம் செய்து பணி செய்ய வேண்டுமென்று அவர் திட்டமிட்டார்.

     1216 இல் பரி. டாமினிக் ரோமாபுரிக்குச் சென்றார். அநேக மாதங்கள் அங்கேயுள்ள ஆலயங்களில் அவர் பிரசங்கம் செய்தார். அவருடைய பிரசங்கங்கள் சபை மக்களுக்குப் பயனுள்ளவைகளாகக் கருதப்பட்டன. ரோமாபுரியிலிருக்கும் பொழுது பரி. பவுலின் நிருபங்களுக்கு விளக்கவுரைகள் எழுதினார்.

     பரி. டாமினிக் நிறுவின துறவிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சிறந்த ஊழியம் செய்து வந்தார்களென்று மக்கள் அறிந்தார்கள். ஆகவே, ரோமாபுரியிலுள்ள ஒரு ஆலயத்தை அவ்வகுப்பினருக்கென்று கொடுத்தார்கள். அவருடைய வேத அறிவையும், சொற்திறமையையும் பாராட்டி, அரண்மனையிலும், மற்றும் பல இடங்களிலும் திருமறை விளக்கங்கள் அவர் கொடுக்கும்படி அழைக்கப்பட்டார். பரி. பேதுருவின் ஆலயத்தில் அவர் செய்த பிரசங்கங்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டன.

     1218 ஆம் ஆண்டில் ரோமாபுரியைவிட்டு தாம் வெகு காலம் பணியாற்றிய லாங்குடாக்கு அவர் திரும்பினார். அங்கிருந்து அவர் பாரிஸ் மாநகரம் சென்றார். அவர் நிறுவின பிரசங்கம் செய்யும் துறவிகள் வகுப்பின் சிறப்பான ஊழியத்தைப் பற்றிய புகழ் எங்கும் பரவலாயிற்று. அந்த வகுப்பின் வளர்ச்சிக்காக ஏராளமான பணம் கொடுப்பதற்கு மக்கள் முன் வந்தார்கள். அப்பணத்தை ஏற்றுக் கொள்ள பரி. டாமினிக் விரும்பவில்லை. பணத்தின் மீது அவர்கள் நாட்டம் கொள்ளக் கூடாதென்றும், அந்த துறவிகள் எப்பொழுதும் எளிமையான நிலைமையில் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.

     அவருடைய ஓயாத உழைப்பும், உபவாசமும் அவருடைய உடல் நலனை பாதித்தன. தாம் மரிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே மறு உலகத்திற்கு தாம் போகும் நாளை அவர் முன்னறிவித்தார். அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருக்கும்பொழுதும் மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். தம்முடன் பணியாற்றியவர்களை அழைத்து அவர்களுக்கு போதனை செய்தார். பின்பு கடைசி திருவிருந்து பெற்று அமைதியாக 1221 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

பிறப்பு: கி.பி. 1170, ஸ்பானியா.

இறப்பு: கி.பி. 1221, ஆகஸ்டு 6.

Posted in Missionary Biography on November 04 at 12:08 PM

Comments (0)

No login
gif