Benjamin Schultze History in Tamil

     சீகன் பால்கின் கடைசி நாட்களில் அவருடன் நெருங்கிப் பழகி அவருடைய கஷ்டங்களில் பங்கெடுத்து சுவிசேஷ பரப்புதலுக்காக மிகவும் உழைத்து வந்தவர் குருண்லராவர். சீகன்பால்க் இறந்த பின்னர் குருண்லரின் உடல்நலம் குன்றியது. தொடர்ந்து சுவிசேஷ ஊழியத்தை நடத்த ஊழியரை அனுப்பும்படி அவர் ஊக்கமாய் ஜெபித்து வந்தார். அவருடைய ஜெபத்திற்கு பதில்போல் மூன்று மிஷனெரிமார்கள் – பென்சமின் சுல்ட்ஸ், நிக்கோலஸ் டால், ஹென்ரிச் கிசென் மாச்சார், 1719 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தரங்கம்பாடி வந்திறங்கினார்கள். அவர்களில் முக்கியமானவர் பென்சமின் சுல்ட்ஸ்.

     புதிய மிஷனெரிமார்களைக் கண்டவுடன் குருண்லர் தன் சரீர பலவீனத்தை மறந்து, அதைப் பொருட்படுத்தாமல் சபையோருக்கும், கிறிஸ்தவரல்லாத மக்களுக்கும் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 1720 ஆம் வருட துவக்கத்தில் கடலூருக்கு ஒரு கப்பல் போவதாகக் கேள்விப்பட்டார். உடனே சில உபதேசிமார்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு கடலூர் சென்று சுவிசேஷ ஊழியம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்தார். ஆனால் உடல்நலம் கேடாகக் கண்டு தரங்கம்பாடிக்குத் திரும்பி வந்தார். மார்ச் மாதம் 19 ஆம் தேதி சுல்ட்ஸ்சுடன் சபை அலுவல்களை முடித்த பின்பு பிற்பகலில் குருண்லர் அமைதியாக உயிர் நீத்தார். கிறிஸ்தவச் சபைகளின் பொறுப்பு சுல்ட்ஸ்மீது விழுந்தபாரமாயிற்று.

     ஆரம்பத்திலிருந்தே சுல்ட்ஸ் தன் ஊழியத்தில் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் காண்பித்தார். குருண்லர் இறந்த மறுதினமே தன்னுடன் உழைக்கும் மிஷனெரிமார்களையும் சபை மூப்பர்களையும் வரவழைத்து, அவர்கள் தைரியத்தை இழந்து போகக்கூடாதென்றும் கடவுளை நம்பி அவர்மீது தங்கள் பாரத்தைப் போட்டு உழைக்க வேண்டுமென்றும் உற்சாக மூட்டினார். இவர் பல மொழிகளையும் சுலபமாகக் கற்கும் வரம் பெற்றவர். பொறுப்பை ஒப்புக்கொண்ட மறு மாதமே தமிழில் பிரசங்கம் செய்தார். ஒரு சில தமிழ் ஞானப்பாடல்களில் சிறந்தவைகளை எடுத்து அவைகளைத் தமிழில் மொழி பெயர்க்க ஆவல்கொண்டார். ஆனால் அப்பணியைச் செவ்வனே செய்வதற்கு தன்னுடைய தமிழறிவு போதாதென்று எண்ணினார். எனினும் ஒருநாள் சாயங்காலம் அவைகளைத் தமிழில் மொழி பெயர்க்க முற்பட்டார். பொழுது போனதை அறியாமல் காலை இரண்டு மணி வரை அவ்வேலையில் ஈடுபட்டிருந்தார்.

     பின்னர் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் ஜெர்மன் ஞானப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்து அவ்வேலையை சிறிது சிறிதாக ஊக்கத்துடன் செய்து வந்தார். அதன் பலனாக 1723இல் 112 ஞானப்பாடல்கள் தமிழில் அச்சடிக்கப்பட்டன. சிறு பிள்ளைகளைத் தன்னிடம் வரவழைத்து அப்பாடல்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். பின்பு அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று பாதைகளின் முற்சந்திகளில் நின்று அவர்களுடன் சேர்ந்து அப்பாடல்களைப் பாடுவார். அப்பாடல்களைக் கேட்க கூடிவரும் மக்களுடன் கிறிஸ்துவின் அன்பைக் குறித்து சிறந்த தமிழில் பேசுவார். இவ்வாறு பல கிராமங்களுக்குச் சென்று ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் இவர் பிரசங்கம் செய்ததுண்டு.

      சீகன்பால்க் புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழாக்கம் செய்திருந்தார். ஆனால் பழைய ஏற்பாடு ரூத்தின் சரித்திரம் வரையில்தான் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. எனவே மற்ற பழைய ஏற்பாடு புத்தகங்களை இவர் தமிழில் மொழி பெயர்த்தார். தாவீதின் சங்கீதங்கள் தனியாக 1724 இல் தமிழில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

     சுல்ட்ஸ் கிராமங்களில் பிரசங்கம் செய்து, இந்திய மக்களுடன் பழகி வந்ததின் பயனாகச் சில மக்கள் கிறிஸ்தவர்களானார்கள். ஆனந்தமங்கலம் என்ற கிராமத்தில் மாரியம்மனை வழிபட்டு வந்த குயவ குடும்பத்தைச் சேர்ந்த வேதப்பன், ஒரு நாள் சுல்ட்ஸ் பிரசங்கத்தைக் கேட்டு, அவரைத் தன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான். அவர் அவனுடன் சென்று தமிழ்மொழியில் அவன் அளவளாவி தான் கொண்டு வந்திருந்த புத்தகங்களை அவனிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினார். தன் வீட்டிற்கருகிலுள்ள  மாரியம்மன் கோவிலில் அனுதினமும் பூஜை செய்து ஒரு வைராக்கியமுள்ள இந்துவாயிருந்த அக்கிராமத்தான் கிறிஸ்துவினிடமாய் இழுக்கப்பட்டான். இந்து மதத்தைவிட்டு அவன் நழுவாதபடி பிராமணர்களும், உறவினர்களும் வெகுவாய் பிரயாசப் பட்டார்கள். அவர்களால் வேதப்பன் பலவாறு துன்புறுத்தப் பட்டாலும் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாயிருந்து ஞானஸ்நானம் பெற்றான்.

     சுமார் ஆறு வருடங்கள் தரங்கம்பாடியில் சுவிசேஷ ஊழியம் செய்த பின்பு, உள்நாட்டில் சென்று ஊழியம் செய்யவேண்டுமென்ற ஆசை இவருக்குண்டாயிற்று. 1726 இல் ஒரு படகிலேறி கடலூர் சேர்ந்தார். அங்கிருந்து கால்நடையாகப் பல கிராமங்களில் சுற்றித் திரிந்து சென்னைப் பட்டிணம் வந்தார். ஆங்கிலப் பாதிரியார் லீக் அவரைப் பட்சமாய் உபசரித்தார். சென்னையில் அதிக நாட்கள் தங்காமல் புலிகட்டிற்கும், அதன் சுற்றுப் புறங்களிலுள்ள கிராமங்களுக்கும் கால்நடையாய்ச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். நூறு கிராமங்களுக்கு அதிகமாகச் சுற்றித்திருந்து ஊழியம் செய்ததாக அவரைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வூழியம் அவர் உடல் நலனை பாதித்தது. வியாதிப்பட்டு பதினான்கு நாட்கள் படுக்கையிலிருந்தார். பின்னர் மிஷன் அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சென்னைக்கு வந்து அங்கு ஊழியம் செய்ய முடிவு செய்தார்.

     சென்னையில் ஆங்கில மிஷனெரி சொசைட்டி ஊழியத்தில் சேர்ந்தார். கருப்பு டவுன் என்று அக்காலத்தில் சொல்லப்பட்ட ஜார்ஜ் டவுனில் ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். பெரியவர்களும் அவரைக் காண விரும்பி அவரிடம் வர ஆரம்பிக்கவே, அவர்களுடன் அளவளாவுதற்கென்று காலை 9மணி முதல் 10மணி வரையிலும் நேரத்தை ஒதுக்கி வைத்தார். யாவரும் தன்னைக்காணும்படியாக வாசலருகே உட்கார்ந்து கொண்டு தம்மிடம் வருகிற அனைவருக்கும் கிறிஸ்துவைக் குறித்து பிரசங்கம் செய்வார். தன்னைக் காண வருபவர்களுடன் நெருங்கிப் பழகவேண்டுமானால் தெலுங்கு மொழி கற்பது அவசியமென்று அவருக்குத் தோன்றிற்று. ஒரு தெலுங்கு ஆசிரியரைக்கொண்டு அம்மொழியைக் கற்று முதலாவது ‘கிறிஸ்தவ ஞானோபதேசத்தை’ தெலுங்கில் மொழிபெயர்த்தார்.

     1727 இலிருந்து 1732 க்குள் புதிய ஏற்பாட்டைத் தெலுங்கில் மொழி பெயர்த்தார். இவர் செய்த இவ்வூழியம் ரோமன் கத்தோலிக்கக் குருக்களின் கோபத்தை மூட்டியது. மொழிபெயர்ப்பதைக் தவிர, வேறு ஊழியங்களை இவர் செய்யவில்லையென்றும், இவர் ஊழியத்தின் பயனாக சபை வளர்ச்சியடையவில்லை என்ற பழிக்கும் ஆளானார். பொறுமையை இழக்காமல் கடவுளின் வழி நடத்துதலுக்குக் காத்திருந்தால் தகுந்த பலன் கிடைக்குமென்று கூறித் தன் ஊழியத்தை எப்பொழுதும்போல செய்து வந்தார். வெகு சீக்கிரத்தில் சபை விருத்தியாயிற்று. 200 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்க்கப்பட்டார்கள்.

     தமிழும் தெலுங்கும் கற்றுக் கிறிஸ்தவச்சபை பெருகும்படி ஊழியம் செய்ததுடன் திருப்தியடையாமல், ஹிந்துஸ்தானி மொழியையும் கற்றார். புதிய ஏற்பாடு ஹிந்துஸ்தானியில் இருக்குமானால் அநேக முகமதியரை கிறிஸ்துவிடம் வழி நடத்த அனுகூலமாயிருக்குமெனக் கருதி, அப்பணியில் ஈடுபட்டு, முதலில் புதிய ஏற்பாட்டையும், பின்னர் சங்கீத புத்தகத்தையும் ஹிந்துஸ்தானியில் மொழிபெயர்த்து முடித்தார். பின்பு இவர் ஹல்லே திரும்பியபொழுது இவருடைய மேற்பார்வையில் அவை அச்சடிக்கப்பட்டன.

     ஓய்வின்றி உழைத்ததன் காரணத்தால் இவருடைய உடல் நலன் பாதிக்கப்பட்டது. 1743 ஆம் வருடம் ஐரோப்பாவிற்கு திரும்பும்படி முடிவுசெய்து அதற்கென அனுமதிபெற்று கோபன்ஹேகன் போய்ச் சேர்ந்தார். இவர் இந்தியாவை விட்டுப் புறப்படுமுன் இவரால் ஞானஸ்நானம் பெற்ற மக்களின் தொகை எழுநூற்றுக்கும் மேலாயிற்று. கோபன்ஹேகனிலிருந்து ஹல்லே சென்று, தான் கற்ற மொழிகளில் தேர்ச்சியடைய முனைந்தார். பிற்காலத்தில் தென் இந்தியாவில் புகழ் பெற்று விளங்கின ஸ்வார்ட்ஸ் பாதிரியார் முதன் முதலாக தமிழ் மொழியை சுல்ட்ஸிடமே கற்றார். தமிழ், தெலுங்கு அச்செழுத்துக்கள் உருவாக்குவதையும், ஞானோபதேசம், வேதாகமப் பிரதிகள் அச்சடிப்பதையும் கண்காணித்து வந்தார். தன் வாழ்நாள் இறுதிவரை அயறாது உழைத்து 1760 ஆம் வருடம் நவம்பர் மாதம் தனது 72 ஆம் வயதில் காலமானர்.

பிறப்பு: கி.பி. 1688, போலந்து

இறப்பு: கி.பி. 1760, நவம்பர், ஜெர்மனி

Posted in Missionary Biography on November 04 at 12:21 PM

Comments (0)

No login
gif