Today Bible Verse

Masahisa Uemura History in Tamil

    ஜப்பானிய நாட்டில் கிறிஸ்தவ சபைகளின் தந்தை என்று புகழ்பெற்ற குரு மாசாஹிசா யுமுரா என்பவர். இவர் சுவிசேஷச் செய்தி என்ற ஒரு வாரப் பத்திரிக்கையை வெளியிட்டு, டோக்கியோ வேதசாஸ்திர வாலிபரை நன்முறையில் வழிநடத்தி கிறிஸ்தவ சமயத்தொண்டராகப் பணியாற்றினார்.

     மாசாஹிசா யுமுரா 1858 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஷிம்மோபுகா என்ற சிற்றூரில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு ஏழைக் குடியான வகுப்பைச் சேர்ந்தவர். தமது ஆஸ்தியை இழந்து வறுமையால் பிடிக்கப்பட்டார். எனவே மாசாஹிசா தம் இளமைப் பிராயத்தில் பல இன்னல்கள் பட்டார். கல்வி கற்பதில் ஆர்வமிக்கவராதலின், ஆங்கில மொழியைக் கற்பதற்கென்று குபன்கன் என்ற பள்ளியிலும், பின்னர் கனம் பாலாக் என்ற கிறிஸ்தவப் போதகரின் பள்ளியிலும் சேர்ந்தார். பாலாக் பள்ளியிலிருக்கும்பொழுது கிறிஸ்துவின் மூலமாய் மானிடர் பெற்றுக்கொள்ளும் இரட்சிப்பைக் குறித்து அறிந்தார். அங்கிருந்து பிரெளன் என்பவருடைய பள்ளியில் சேர்ந்து கிரேக்கு லத்தீன் மொழிகளைக் கற்றார். 1872 ஆம் ஆண்டு ஆவிக்குரிய கூட்டங்களில் பங்கெடுத்து பயன் பெற்றார். சமயப் பணியே தமது வாழ்க்கைத் தொண்டாகக் கொள்ளவேண்டுமென்று கருதி குருவாகப் பணி செய்வதென்று முடிவு செய்தார்.

     1877 ஆம் ஆண்டு பிரெளன் பள்ளிக்கூடத்தை டிசுக்கு வேதசாஸ்திர கல்லூரியுடன் சேர்ந்த ஒரு பெரிய கல்லூரியாக நிறுவினார்கள். யுமுரா அக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். தகுந்த பயிற்சியின்றி ஒருவரும் சமயப்பணி செய்யத் தகுந்த பயிற்சியின்றி ஒருவரும் சமயப்பணி செய்யத் துணிதலாகாது என்பது அவரது கருத்து. முதன் முதலாக மிஷனெரியாகப் பணியாற்றி சிட்டிய இட்சி சபையை ஸ்தாபித்தார். மறுவருடம் சூயன்னோ யமேனாச்சி என்ற பெண்மணியை மணந்தார். யுமுராவின் சுவிசேஷ ஊழியத்தில் அவருடைய வாழ்க்கைத்துணைவி பல வகையிலும் உதவி செய்தார்.

     யுமுரா நன்றாக உரையாடும் திறமை வாய்ந்தவர். சிறந்த எழுத்தாளர் கிறிஸ்தவச்சமய நூல்களையும் பத்திரிகைகளையும் எழுதினார். உண்மை விளக்கம், ஜப்பானிய விமர்சனம், சுவிசேஷ வாரப்பதிப்பு, சுவிசேஷ செய்தி என்ற பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டார்.

     மக்கள் சமூக முன்னேற்றத்திற்குத் தேவையான ஒற்றுமையுணர்ச்சி, சமத்துவம், சகோதரத்துவம் முதலியவைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதினார். சொல்வன்மையுடையவராயிருந்தமையால், இவர் பல இடங்களுக்குச் சென்று சமூகம் முன்னேற வேண்டிய அவசியத்தைக் குறித்துப் பிரசங்கங்கள் செய்தார். 1888 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் சென்று திரும்பினார்.

     யுமுரா செய்த தொண்டுகளை மூன்றாகப் பிரிக்கலாம். முதலாவது, அவர் சபை குருவாக ஆற்றிய பணி, இரண்டாவது கிறிஸ்தவச் சமய வேத சாஸ்திரத்தை மக்களின் ஆத்தும வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியது. மூன்றாவது, பொது மக்களுக்கு அவர் செய்த தொண்டு.

     சபை குருவாகக் கிறிஸ்தவ மக்கள் புத்துயிர் பெற, கிறிஸ்து அவர்களுக்காகப் பாடுபட்டார் என்று பல அருமையான பிரசங்கங்கள் செய்தார். வியாதியஸ்தரையும் தாழ்ந்தோர் என்று கருதப்பட்டவர்களையும் ஏழை மக்களையும் அடிக்கடி சந்தித்து அவர்கள் நல்வாழ்விற்கென உழைத்தார். கிறிஸ்தவ மக்கள் ஒவ்வொருவரும் இரட்சிப்பின் நிச்சயம் பெற்று தூயவாழ்க்கை நடத்தவேண்டுமென்று விரும்பினார். எழுப்புதல் கூட்டங்கள் நடத்தி, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தும், வரப்போகிற நியாயத் தீர்ப்பைக் குறித்தும் பேசி வந்தார்.

     இரண்டாவதாக வேதாகம ஆராய்ச்சியில் கிறிஸ்தவ வாலிபர்கள் அதிக நேரம் செலவிடவேண்டுமென்றும், கிறிஸ்தவ ஊழியத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து அதற்கென்று பயிற்சி பெற அவர்கள் முன்வரவேண்டுமென்றும், கிறிஸ்தவ ஊழியத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுத்து அதற்கென்று பயிற்சி பெற அவர்கள் முன்வரவேண்டுமென்றும் வற்புறுத்தினார். நன்முறையில் வேத சாஸ்திரக் கல்லூரிகளை அமைத்தார். கிறிஸ்தவ வாலிபர் அவைகளில் சேரும்படி உற்சாகமூட்டினார்.

     மூன்றாவதாகப் பூமியதிர்ச்சியில் மக்கள் கஷ்டப்படும் பொழுதும் அவர்கள் வறுமையில் உழன்று, பல இன்னல்களுக்குட்படும் போதும் அவர்களிடம் சென்று, தன்னால் இயன்றதைச் செய்தார். மக்கள் அவரை ஒரு நல்ல சமாரியனாகக்கண்டு, அவரிடம் தங்கள் கஷ்டங்களைத் தெரிவித்து வந்தார்கள் மும்முறை வெளி நாடுகள் சென்று ஜப்பானிய கிறிஸ்தவ மக்களின் நிலைமையை எடுத்துரைத்தார். சுவிசேஷ நற்செய்தியை தம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ளும்படியாக மேனாட்டு முறைமைகளை மாற்றி, ஜப்பானிய மக்களின் பண்பாட்டின் மூலம் எளிய முறையில் அச்செய்தியை அவர்கள் அறியும்படி செய்தார்.

     1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி யுமுரா திடீரென்று இவ்வுலக வாழ்வை நீத்தார். இச் செய்தியைக் கேட்ட ஜப்பானிய கிறிஸ்தவ மக்கள் தங்கள் தலைவரை இழந்த காரணம்பற்றி புலம்பியழுதார்கள். அவர் செய்த சேவையை அவர்களும் ஒருநாளும் மறக்க முடியாது. யுமுரா ஒரு பேரறிஞர், சிறந்த நூலாசிரியர், மக்களுக்குத் தொண்டுசெய்த வீரர் ஜப்பானில் அவர் செய்த தொண்டின் மூலமும், அவருக்குப்பின் பணியாற்றிய கிறிஸ்தவ தலைவர்களின் முயற்சியாலும், அந்நாடு முழுவதும் நமதாண்டவரை அறியும்படி கடவுள் திருவருள் செய்வாராக.

பிறப்பு: கி.பி. 1858 ஜனவரி 15, (ஷிம்மோபுகா, ஜப்பான்)

இறப்பு: கி.பி. 1925, ஜனவரி 8.

Posted in Missionary Biography on November 04 at 12:24 PM

Comments (0)

No login
gif