J.E. Gruendler History in Tamil

 

     தென்னிந்தியாவில் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக முதல் சுவிசேஷகர்களாக சீகன்பால்கு, பிளீச்செள என்பவர்கள் 1706 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதியன்று தரங்கம்பாடியில் வந்திறங்கினார்கள். அங்குள்ள மக்களிடம் பணிசெய்ய விரும்புவோர் அவர்கள் மொழியை கற்பது அவசியமென்று உணர்ந்து அம்மொழியைப் பயின்றார்கள். சீகன்பால்கு, சிறுவர்களுடன் தரையில் உட்கார்ந்து, தம் விரலால் மணலில் தமிழ் எழுத்துக்களை எழுதி அம்மொழியைக் கற்றார். அத்துடன் போர்ச்சுக்கீசிய மொழியையும் கற்றார். ஆறு மாதங்களில் தமிழ் மக்களுடன் தமிழில் அளவளாவினார். அவர் தரங்கம்பாடிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் கிரிண்ட்லர், சீகன்பால்கிடம் சேர்ந்து, அவர் ஊழியத்தில் பங்குபெரும் பேறு பெற்றார். சீகன்பால்கைப் போலவே தம் தாய்நாடு செல்ல விரும்பாமல், தமிழ் நாட்டிலேயே தம் ஆயுள் இறுதிவரை உழைத்து, தரங்கம்பாடியிலேயே மரித்து அடக்கம் பண்ணப்பட்டார்.

     யோவான் ஏர்னஸ்ட் கிரிண்ட்லர் 1677 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலுள்ள உசன்சி என்னுமிடத்தில் பிறந்தார். அவ்விடத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் கற்று, பின்பு லிப்சிச் உட்டன்பர்க் என்னுமிடங்களிலுள்ள சர்வ கலாசாலைகளில் சேர்ந்து படித்தார். அங்கு தம் படிப்பை முடித்து, பட்டம் பெற்று, திருமறை பயிற்சிக்காக ஹல்லேக்குச் சென்றார். அங்குள்ள ஆலயத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அவர் கேட்ட பிரசங்கம் அவர் மனதை அசைத்தது. உடனே, அச்செய்தியைக் கொடுத்த குருவானவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

    “கடவுளின் பெரிதான இரக்கத்தால், நான் இன்று இவ்வாலயம் வந்து கடவுளின் செய்தியைக் கேட்டு மனமாறுதல் அடைந்தேன். தாழ்மையைக் குறித்து பிரசங்கம் செய்தீர்கள். தாழ்ந்த மனதுள்ளவர்களுடன் கடவுள் இருக்கிறார் என்ற சத்தியத்தை நான் இன்று உணர்ந்தேன். என்னில் குடிகொண்டிருந்த பெருமையை இன்று முதல் நீக்கிப் போட்டு, கிறிஸ்து என்னில் வாசம் செய்யும்படிக்கு என் இருதயத்தை அவருடைய ஆலயமாக்கிக் கொண்டேன்” என்று எழுதினார். இருபத்து நான்கு ஆண்டுகளைத் தாம் வீண் நாட்களாக கழித்ததாக எண்ணி, மனக்கசப்படைந்து அன்று முதல் ஆண்டவருக்காக உழைப்பதென்று முடிவு செய்தார்.

     கிரிண்ட்லர் ஹல்லேயில் இருந்த ஒரு பள்ளியில் ஆசிரியரானார். இவ்வேலை அவருடைய பிற்கால வாழ்க்கைக்குப் பயனுள்ளதாயிருந்தது. அங்கிருக்கும்பொழுது, கிறிஸ்தவ சமய பணியையே தமது வாழ்க்கைத் தொண்டாகக் கொள்ள வேண்டுமென்று தீர்மானம் செய்து, தம் எண்ணத்தை தம் உறவினர்களிடம் தெரிவித்தார்.

    அக்காலத்தில் தென்னிந்தியாவில் கிறிஸ்தவச் சமய பணி செய்வதற்கென்று இருவர் சென்றிருப்பதைக் குறித்து கேள்விப்பட்டு, தாமும் அங்கு செல்ல விரும்பினார். பின்பு தம் மேல் அதிகாரிகளிடம் தம் விருப்பத்தைத் தெரிவித்து, கிறிஸ்துவைக் குறித்துக் கேள்விப்படாத மக்களிடம் தாம் உழைக்க ஆயத்தமாயிருப்பதாயும், அங்கு தம்மை அனுப்புவதற்கு பணக்குறைவு தடையாயிருக்குமானால், தாமே பிரயாணச் செலவை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்.

     சில மாதங்களில் தென்னிந்தியாவுக்குப் போக ஒரு மிஷனெரி தேவை என்று டென்மார்க் நாட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைக் கண்டவுடன் தன் கனவு நனவாகும் நாள் வந்தது என்று அவர் கடவுளைப் போற்றி, தம் பயணத்திற்கு ஆவன செய்வதில் முனைந்தார். டாக்டர் போர்மன் என்பவரும், பட்டம் பெறாத மாணவன் போலிகார்பஸ் ஜார்டன் என்பவரும், கிரிண்ட்லரும் 1708 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி கோபன்ஹேகனை விட்டுப் புறப்பட்டார்கள். புறப்படுமுன் சீலண்ட் அத்தியட்சகர், கிரிண்ட்லரை குருவாக அபிஷேகம் செய்தார்.

    1709 இல் ஜூலை மாதம் 20 ஆம் தேதி கப்பல் தரங்கம்பாடிக்கரையைச் சேர்ந்தது. அங்குள்ள ஐரோப்பிய குருக்களும், போர்ச்சுகீஸ் தமிழ் சபையோரும் கிரிண்ட்லரையும் அவருடன் வந்த மிஷனெரிமார்களையும் மகிழ்வுடன் வரவேற்றார்கள். இந்திய மக்களின் உடையையும், உணவையும் அவர்களின் எளிய வாழ்க்கையையும் கண்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். தங்களுடைய வாழ்க்கையை அவர்களுடைய நலனுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று முடிவு செய்தார்கள்.

    நாட்டு மக்களுடன் பழகுவதற்காக தமிழ் மொழியைக் கற்பது அவசியமென்று உணர்ந்து, கிரிண்ட்லர் அம்மொழியைக் கருத்தூன்றிப் படித்தார். போர்ச்சுக்கீஸ் மொழியையும் கற்றார். தரங்கம்பாடிக்கு வந்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டார். ஆனால் வெகு சீக்கிரம் உடல் நலம் பெற்று ஊக்கத்துடன் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். தம் இல்லத்தை நடத்த வேண்டிய முறையை அங்கிருந்த மிஷனெரிமாரிடமிருந்து கற்றார். அவர்கள் வாடகைக்குக் குடியிருந்த வீடுகள் வசதிக் குறைவாக இருந்ததால் அவர்கள் குடியிருப்புக்கென்று வசதியான ஒரு வீடு கட்டினார்.

    அப்பொழுது சீகன்பால்கு கால்நடையாகவே கிராமம் கிராமமாகச் சென்று கிராம மக்களுக்கு சுவிசேஷ நற்செய்தியை அறிவித்து வந்தார். அப்பொழுது தரங்கம்பாடியில் அவர் செய்து வந்த பணியை கிரிண்ட்லரிடம் ஒப்படைத்துச் சென்றார். கிரிண்ட்லர் அங்குள்ள பாடசாலையை நன்முறையில் நடத்த வேண்டுமென்று விரும்பி, மனம் தளராது உழைத்தார். பாடசாலை மாணவர் எண்ணிக்கை பெருகிற்று. சிறுவர்கள்தான் பிற்கால சபையின் தூண்களாக விளங்குவார்களென்று உணர்ந்து அவர்களை நன்னெறியில் வளர்க்கப் பாடுபட்டார். “இப்பொழுது உயிரோடிருக்கும் நாம் இப்பணியின் பயனை ஒரு வேளைக் காணமாட்டோம். ஆனால் நமக்குப் பின் வரும் சந்ததியார் நிச்சயமாக அதனைக் காண்பார்கள்” என்று அவர் சொல்லுவது வழக்கம். சில மாதங்களில் தரங்கம்பாடியில் தமிழ்ச் சபை ஒன்றும், போர்ச்சுக்கீஸ் சபை ஒன்றும் தோன்றின.

     1712 ஆம் ஆண்டில் தமிழ் கிறிஸ்தவ மக்களின் தொகை இருநூறு என்று கிரிண்ட்லர் கணக்கிட்டார். சீகன்பால்கும், கிரிண்ட்லரும் கிராமங்களைத் தங்களுக்கென்று பிரித்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று சுவிசேஷ வேலைச் செய்தார்கள். சுவிசேஷ வேலைக்குப் போதுமான ஆட்கள் இல்லை என்று இருவரும் உணர்ந்தார்கள். அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சமாயிருப்பதாகவும், ஆண்டவருக்குத் தங்களை அனுப்பவேண்டுமென்று சீகன்பால்கு தாய் சபைக்கு கடிதம் எழுதினார். அவர் செய்த விண்ணப்பத்திற்குப் பதில் கோபன்ஹேகனுக்கு அவர் அனுப்பினார். அவர் செய்த பிரயாணம் விருதாவாய்ப் போயிற்று. எனவே சீகன்பால்கு தாம் நேரில் டென்மார்க்குக்குச் சென்று, சுவிசேஷ ஊழியத்திற்குப் பணமும், ஆட்கள் உதவியும் தேவை என்று எடுத்துக் காட்டவேண்டுமென்று புறப்பட்டார். தரங்கம்பாடிவிட்டு அவர் புறப்படுமுன், தாம் செய்து வந்த பணியை கவனித்து வர கிரிண்ட்லரை நியமித்தார். “ஆயிரக் கணக்கானவர்களிலிருந்து ஒருவரைத்தான் தெரிந்தெடுக்க வேண்டியதிருந்தாலும், அவர்களுள் கிரிண்ட்லரைத்தான் தெரிந்தெடுத்து, என் பொறுப்பை அவரிடம் கொடுப்பேன், அவரே என் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்” என்று எழுதினார்.

     1714 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தரங்கம்பாடியை விட்டுச் சென்ற சீகன்பால்கு, 1716 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திரும்பி வந்தார். அக் குறுகிய காலத்தில் கிரிண்ட்லர் ஆற்றிய தொண்டு பலருடைய உள்ளத்தைக் கவர்ந்தது. பள்ளிக்கூடம் முன்னேற்றமடைந்தது. ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ சபையில் சேர்வதற்கு அநேக மக்கள் ஆயத்தப்பட்டிருந்தனர்.

     தரங்கம்பாடியில் 1707 ஆம் ஆண்டு ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயம் கிறிஸ்தவ மக்கள் கூடி வழிபாடு செய்வதற்குப் போதாமற் போயிற்று. எனவே, 1717 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி ஒரு புதிய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டது. மறுவருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி எருசலேம் என்ற பெயரால் அது பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயம் கட்டப்பட்டு வந்த காலத்தில் சுவிசேஷ ஊழியம் தடையின்றி நடைபெற்று வந்தது. 1718 ஆம் வருடம் சீகன்பால்கு கடலூருக்குச் சென்றார். சபையின் பொறுப்பைக் கிரிண்ட்லர் வகித்து வந்தார்.

     கடலூரிலிருந்து திரும்பி வந்த பின்பு, 1719 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சீகன்பால்கு நோய்வாய்ப்பட்டு கிரிண்ட்லரை அழைத்து அவரிடம் சபையின் கண்காணிப்பை ஒப்புவித்து, 23 ஆம் தேதி மரித்தார். சீகன்பால்கு மரித்தது, அங்குள்ள ஐரோப்பியரையும், இந்திய மக்களையும் துயரத்தில் ஆழ்த்திற்று. அவர் இவ்வுலக வாழ்க்கையை விட்டுப் பிரிந்தது கிரிண்ட்லருக்கு மிக மன வருத்தத்தைக் கொடுத்தது. இந்திய மக்களுடன் நெருங்கி பழகுவதிலும், தமிழ் புலமையிலும், திருமறை மொழிபெயர்ப்பில் அவர் காட்டிய ஆற்றலிலும் அவருக்கு ஈடானவர்கள் ஒருவரும் இல்லையே என்று கிரிண்ட்லர் மனம் கலங்கினார். அவருடைய உடல் நலம் அப்பொழுது சரியாக இல்லை. சபையின் நடுவில் நின்று ஒருநாள் அவர் செய்த ஜெபத்தில், “ஆண்டவரே இந்தச் சிறு மந்தையைச் சோதனைக்குட்படுத்தாதேயும். அவர்களுள் உழைத்து வந்த மக்கள் இருவரையும் ஒரே சமயத்தில் எடுத்துக்கொள்ளாதேயும். அவர்களுடைய நிலைமையைப் பார்த்து அவர்களுக்கு இரங்கி அவர்கள் மத்தியில் சுவிசேஷ வேலையைச் செவ்வனே செய்துவர ஊழியரை அனுப்பும்” என்று உருக்கமாய் மன்றாடினார்.

     கிரிண்ட்லருடைய ஜெபத்திற்கு பதில்போல் பென்சமின் சுல்ட்ஸ், நிக்கோலஸ் டால், ஹென்றிச் கிசென் மாச்சார் என்ற மூன்று மிஷனெரிமார்கள் அவ்வருடம் செப்டம்பர் மாதம் தரங்கம்பாடியில் வந்திறங்கினார்கள். சீகன்பால்கு இறந்து போனதையும், கிரிண்ட்லர் வியாதியால் படுக்கையிலிருப்பதையும் கேட்டு மனம் வருந்தினார்கள். கிரிண்ட்லர் உடல் நலம்பெற்று படுக்கையை விட்டெழுந்தார். புதிதாக வந்த மிஷனெரிகளுக்கு அங்குள்ள சபை நிலைமையை எடுத்துரைத்து அவர்களுக்கு உற்சாகமூட்டினார். அவர்கள் தமிழ் மொழியைக் கற்று பொறுப்பு வாய்ந்த ஊழியராக வேண்டுமென்று அவர்களை மிகத் திறமையாகப் பயிற்றுவித்தார்.

     இதன்பின், கிரிண்ட்லர் தமிழ் நாட்டில் நீடித்து வாழவில்லை. 1720 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அவர் வயிற்றுநோயால் பாடுபட்டார். அதையும் பொருட்படுத்தாமல் ஆங்கிலேயருக்கு சொந்தமான கப்பல் ஒன்று கடலூருக்குச் செல்வதாக கேள்வியுற்று, ஐந்து உபதேசிமாருடன் கடலூரில் சுவிசேஷ ஊழியம் செய்வதற்கென்று புறப்பட்டார். கப்பலேறுமுன் சுல்ட்ஸ் என்பவருக்கு குரு பட்டம் கொடுத்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, வழியில் அவர் பலவீனம் அடையவே தரங்கம்பாடிக்குத் திரும்பினார். அந்நிலைமையில் மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஆலயம் சென்று பாடம் வாசித்து ஜெபம் செய்தார். 19  ஆம் தேதி சபையைக் குறித்த காரியங்களைச் சுல்ட்சுவுடன் அளவளாவி, அன்று மத்தியானம் அமைதியாக மறுமைக்குட்பிரவேசித்தார். தரங்கம்பாடி எருசலேம் ஆலயத்தின் பீடத்தில் சீகன்பால்கு ஒரு பக்கத்திலும், கிரிண்ட்லர் மறுபக்கத்திலுமாக அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    தரங்கம்பாடியில் முதல் தமிழ்க் கிறிஸ்தவர்களின் பயிற்சி காலத்தில் திறம்பட உழைத்த பக்தருள் முக்கியமானவர் கிரிண்ட்லர் ஆவார். ஆழ்ந்த அறிவும், நோக்கமும் உள்ளவர். திடகாத்திர நெஞ்சம் படைத்தவர். ஓயாமல் உழைப்பதே அவருக்கு மகிழ்ச்சி. எல்லாக் காரியத்தையும், திறனுடனும் நமது ஆண்டவர்பேரிலுள்ள நம்பிக்கையுடனும் செய்து கிறிஸ்தவச் சபையின் சிறந்த தொண்டராக விளங்கினார். இவர் புகழ் தமிழ் கிறிஸ்தவ மக்களிடம் எந்நாளும் நிலவும்.

பிறப்பு: கி.பி. 1677, (உசன்சி, ஜெர்மனி)

இறப்பு: கி.பி. 1720, மார்ச் 19 (தரங்கம்பாடி, தமிழ்நாடு)

Posted in Missionary Biography on November 04 at 12:32 PM

Comments (0)

No login
gif