Ringeltauboe History in Tamil

    ஜெர்மானிய நாட்டிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து, கிறிஸ்தவச் சமயத் தொண்டராக சிறந்த ஊழியம் செய்த மிஷனெரிகளில் ரிங்கல்தெளபே முக்கியமானவர். ‘தென்திருவாங்கூர் அப்போஸ்தலன்’ என்று கிறிஸ்தவ மக்கள் இவரைப் புகழ்ந்துள்ளார்கள். எனினும், அந்நாட்டில் மாத்திரமன்று, சென்னையிலும், தரங்கம்பாடியிலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இவர் ஊழியம் செய்துள்ளார். ரிங்கல்தெளபே என்னும் பெயர் ‘மணிப்புறா’ என்று பொருள்படும். இவர் தன்னலமற்ற தூய்மையான வாழ்க்கை நடத்தினார். எளிய உடை தரித்து, குடிசையில் வாழ்ந்து ஏழைகளின் உணவை அருந்தி வந்தார். தென்னிந்திய கிறிஸ்தவ சரித்திரத்தில் ரிங்கல்தெளபேயைப் போல, சொற்பக் காலத்தில் (1804 - 1816) தென்னிந்திய மக்கள் மனதைக் கவர்ந்து, தம் ஊழியத்தின் பலனைக் கண்ட கிறிஸ்தவத் தொண்டர்கள் வெகு சிலரே உண்டு.

     ரிங்கல்தெளபே 1770 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி, ஜெர்மனி நாட்டு சிலிசியாவிலுள்ள சீடல் உயிட்ஸ் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை அப்பொழுது அந்த ஊரில் குருவாகப் பணியாற்றி வந்தார். அவருடைய தாயும் தந்தையும் அவரை பக்திநெறியில் வளர்த்தனர். அவர் சிறுவராயிருந்தபோதே ஆண்டவருக்குத் தம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுத்தார். கல்லூரியில் மாணவனாக இருக்கும்போது, வெளிநாடுகளுக்கு மிஷனெரியாக போவதென்று முடிவு செய்து, ஹல்லே சர்வகலாசாலையில் சேர்ந்து வேத சாஸ்திரம் கற்றார். மொறேவியன் பிரிவில் சேர்வதாக முதலில் திட்டமிட்டு, தம் சகோதரி அன்னாளிடம் தம் எண்ணத்தை வெளியிட்டார். தம் வாழ்க்கையின் இறுதிவரை சகோதரியிடமே தம் குறிக்கோள்களையும், தாம் செய்து வரும் வேலையையும் குறித்து நேரிடையாகப் பேசியும் கடிதங்கள் மூலமாகத் தெரிவித்தும் வந்தார்.

     மொறேவியன் மிஷனெரியாக வேண்டுமென்று அவர் நினைத்தது கைகூடவில்லை. அது சமயம் டேனிஷ் மிஷனெரி சங்கத்தார் இந்தியாவில் ஊழியம் செய்யும்படி இவரை அழைக்கவே, இவர் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். கல்கத்தாவிலுள்ள ஆங்கில சபையில் இவர் ஊழியம் செய்ய வேண்டுமென்று இவரைத் தெரிந்தெடுத்தார்கள். ஆங்கிலம் கற்கவும், ஆங்கிலேயருடைய பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொள்ளவும் இங்கிலாந்துக்கு இவர் போகவேண்டுமென்று தெரிவித்தார்கள். கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்படாத மக்களுள் ஊழியம் செய்ய விரும்பின ரிங்கல்தெளபேக்கு, இங்கிலாந்திலுள்ள ஆங்கில மக்களிடம் பணி செய்யபோவது பிரியமில்லாதிருந்தது. எனினும், இது தாம் ஆண்டவருக்கென்று செய்ய விரும்பும் ஊழியத்திற்கு ஒரு பாதையாய் இருக்குமென்று நம்பி தடை சொல்லாமல் இங்கிலாந்திற்குச் சென்றார். அங்கு சிலகாலம் செலவிட்டு, 1797 ஆம் ஆண்டு அந்நாட்டை விட்டுப் புறப்பட்டு, நான்கு மாதங்களுக்குப் பின் கல்கத்தாவில் வந்து இறங்கினார்.

     அரசாங்க குரு தவிர, மற்ற ஐரோப்பிய மிஷனெரி ஒருவரும் தமக்குக் கொடுக்கப்பட்ட சம்பளத்தைக் கொண்டு கல்கத்தாவில் வாழ்க்கை நடத்துவது இயலாது என்று இவர் கண்டார். மலைப்பிரதேசத்திலுள்ள இந்திய மக்களிடம் வேலை செய்யும்படி சில நண்பர்கள் இவரை அழைத்தனர். அதற்கு உடன்பட்டு ஓர் ஆண்டு அங்கு வேலை அழைத்தனர். அதற்கு இடமின்றி, வியாதிப்பட்டு 1799 ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அங்கு மொறேவியன் சங்கத்தாரோடு தங்கி, கிராம சபைகளில் வேலை செய்தார். பின்பு தம் தாய்நாடு சென்று, தம் பெற்றோரை சந்தித்து, சில மாதங்கள் அவர்களுடன் செலவழித்தபின், லண்டனுக்குத் திரும்பினார். தென்னிந்தியாவிற்கு மிஷனெரியாக போக தம்மைத் தெரிந்தெடுத்திருப்பதாக அறிந்து அகமகிழ்ந்தார். 1804 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு, வழியில் பல இன்னல்கள்பட்டு, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்தார்.

     தரங்கம்பாடி தென்னிந்திய கிறிஸ்தவர்கள் சரித்திரத்தில் சிறப்பு வாய்ந்த கடற்கரை பட்டிணமாகும். அவ்விடத்தில் தமிழ்மொழியைக் கற்பதிலும், தென்னிந்திய மக்களின் பழக்கவழக்கங்களை அறிவதிலும் நாட்களைச் செலவிட்டார். 1805 ஆம் ஆண்டு மே மாதம் சென்னைக்குச் சென்றார். அங்கு தங்கி ஊழியம் செய்யும்படி சங்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்கள். கிராம மக்களிடம் ஊழியம் செய்ய தாம் விரும்புவதாயும், சென்னையில் வேலை செய்ய வற்புறுத்த வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டு, ஜூன் மாதம் தரங்கம்பாடிக்குத் திரும்பினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவர் அல்லாத மக்கள் கிறிஸ்தவர்களை ஒடுக்கி, துன்பப்படுத்துவதையும், அவர்கள் படும் இன்னல்களையும் கேள்விப்பட்டு மனம் வருந்தினார்.

     ரிங்கல்தெளபே தரங்கம்பாடியில் இருந்த காலத்தில் ஒரு தமிழ்க் கிறிஸ்தவன் திருவாங்கூரிலிருந்து அவரிடம் வந்து, தம்முடைய ஊரில் இருநூற்றுக்கதிகமான மக்கள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறார்களென்று தெரிவித்து, தன்னுடன் திருவாங்கூருக்கு அவரிடம் வந்து, தம்முடைய ஊரில் இருநூற்றுக்கதிகமான மக்கள் கிறிஸ்தவ சமயத்தை ஏற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறார்களென்று தெரிவித்து, தன்னுடன் திருவாங்கூர் சென்று உழைத்தால் பயன் கிடைக்குமென்று சென்னையிலுள்ள நண்பர்களும் கூறினார்கள். எனினும் திருநெல்வேலியிலுள்ள கிறிஸ்தவ மக்களின் கஷ்ட நிலையை அறிந்தபின், அவர்களுக்குச் செய்யக்கூடிய உதவிகளையெல்லாம் தாம் செய்த பின்பே, திருவாங்கூருக்குப் போவதாக முடிவு செய்தார்.

     1806 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தரங்கம்பாடியைவிட்டு ஒரு பாய்மரக் கப்பலிலேறி தூத்துக்குடி போய்ச் சேர்ந்தார். அங்குள்ள கிறிஸ்தவர்களைச் சந்தித்து ஆலயத்தில் பிரசங்கம் செய்து பாளையங்கோட்டைக்குச் சென்றார். கிறிஸ்தவ மக்கள் ஆண்டவரை மறுதலியாமல், அவரில் வேரூரின்றி நிலை நிற்கிறவர்களாகக் காணப்படவேண்டுமென்பதே அவருடைய கருத்து. எனவே, நாசரேத், எருசலேம், குலசேகரப்பட்டினம் மணப்பாடு, முதலூர், தச்சமொழி, குண்டல், உவரி முதலான கிராமங்களிலுள்ள கிறிஸ்தவ மக்களைச் சந்தித்து அங்குள்ள ஆலயங்களில் பிரசங்கம் செய்தார். இரண்டாம் முறையும் இவைகளில் சில கிராமங்களுக்குச் சென்றார். பின்பு, பாளையங்கோட்டைக்குத் திரும்பி வந்து, தாம் முன்பு செய்து வந்த காரியங்களை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டார். அப்பொழுது அவருடைய நண்பர் ஒருவர் திருவாங்கூரிலிருந்து வந்து இவர் தம் நாட்டிற்கு வந்து சுவிசேஷ ஊழியம் செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அதற்காவன யாவற்றையும் செய்வதாயும் எல்லாச் செலவையும் தாம் தருவதாயும் வாக்களித்தார்.

     1808 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி ரிங்கல்தெளபே திருவாங்கூருக்குப் புறப்பட்டார். வழியிலுள்ள கிராமங்களில் கிறிஸ்தவ மக்களைச் சந்தித்து, அவர்களுடன் அளவளாவி அவர்களுக்கு உற்சாகமூட்டினார். பின்பு தென்மேற்கு மலைகளைக் கடந்து சமாரியாபுரம் சேர்ந்தார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு நந்தன்குளம், வடக்கன்குளம் கிராமங்களைக் கடந்து மைலாடி வந்து சேர்ந்தார். ரிங்கல்தெளபே தரங்கம்பாடியிலிருக்கும்போது, அவரைச் சந்தித்து, தங்கள் நாட்டிற்கு அழைத்த மக்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களென்று அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.

கொல்லம், ஆலப்புழை வழியாக கொச்சிக்குச் சென்று ஆங்கில ஸ்தல அதிகாரியான கர்னல் மெக்காலேயைக் கண்டார். இவர் ரிங்கல்தெளபேயை நன்கு உபசரித்து ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டார். மைலாடியில் கோயில் கட்ட அனுமதித்ததுமன்றி, தமது செலவில் அதைக் கட்டுவதாகவும் வாக்களித்தார். ஆண்டவரின் திருவருள் தம்மை நடத்துவதை ரிங்கல்தெளபே உணர்ந்து அவரைப் பாராட்டினார்.

     மைலாடி கிராமத்திற்குத் திரும்பி வந்த ரிங்கல்தெளபே அங்கு சில நாட்கள் தங்கி, ஒரு வீட்டு முற்றத்தில் ஆராதனை நடத்தி, நாற்பது பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். சுவிசேஷ ஊழியத்திற்கென்று உயிட்லே, புளுரி என்ற இரண்டு வாலிபரைத் தெரிந்தெடுத்து, அவர்களைப் பயிற்சிக்கென்று அனுப்பினார். இரண்டாம் முறையாக கொச்சிக்குச் சென்று கர்னல் மெக்காலேயைக் கண்டு, திருவாங்கூரில் தங்கவும், ஆலயங்களையும் பள்ளிக்கூடங்களையும் கட்டவும் அனுமதி பெற்றார். அப்பொழுது டாக்டர் சார்லஸ் புக்கானன் என்பவர் கல்கத்தாவிலிருந்து திருவாங்கூர் வந்திருந்தார். அவர் அரசரிடம் பேசி ரிங்கல்தெளபேக்கு பல வசதிகள் ஏற்பாடு செய்தார். அக்காலத்தில் வேலுத்தம்பி தளவாய் என்பவனால் உண்டான கலகத்தால் கிறிஸ்தவ மக்கள் பல இன்னல்களுக்குள்ளானார்கள். எனினும் சிறிது காலத்தில் சமாதானம் நிலவியது. ரிங்கல்தெளபேயின் ஊழியம் மைலாடியில் பலப்பட்டது.

     ரிங்கல்தெளபே மிகவும் எளிய வாழ்க்கையை நடத்தினார். மைலாடியில் பத்து அடி நீளமும், ஆறு அடி அகலமுமுள்ள ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். ஒரு நாட்டுக் கட்டிலுமே அக்குடிசையிலிருந்தன. பணத்தை ஒரு நாளும் அவர் பொருட்படுத்தவில்லை. மூன்று மாதத்திற்கொரு முறை கிடைக்கும் சம்பளத்தை வேலைக்காரருக்குக் கொடுத்து மீதியை ஏழைகளுக்கு வழங்கினார். உடைக்காகவும் அவர் கவலைப்பட்டதில்லை. நண்பர்கள் கொடுக்கும் உடையை அணிந்துக்கொள்வார். தென் திருவாங்கூர் முழுவதும் நடந்து திரிந்து சுவிசேஷத்தை பிரசங்கித்தார். ‘ரிஷி’ என்றும் ‘மகாத்மா’ என்றும் பொது மக்கள் அவரை அழைத்தனர்.

     1812 ஆம் ஆண்டு ஒரு குதிரைமீது ஏறி தரங்கம்பாடி சென்றுத் திரும்பினார். பாளையங்கோட்டைக்கு அடிக்கடி சென்று அங்குள்ள நண்பர்களுடன் தங்குவதுண்டு. அங்குள்ள ஐரோப்பியருக்குப் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடத்தினார். தென் திருவாங்கூர் சுவிசேஷ ஊழியத்திற்கென்று அவர்கள் பண உதவி செய்தார்கள். ஒரு முறை நாகப்பட்டிணத்திற்கும் சென்று திரும்பினார். மைலாடியைத் தவிர தாமரைகுளம், ஈத்தான் மொழி என்ற கிராமங்களில் பள்ளிக்கூட ஆசிரியர்களைக்கொண்டு கிறிஸ்தவச் சபைகளைக் கவனித்து வந்தார். ‘ஒரு நண்பன் தந்த ஆயிரம் ரூபாயை கொண்டு திருவாங்கூரில் ஆறு கோயில்கள் கட்டி முடித்தேன். இதுவே மிஷனின் ஆரம்பம்’ என ஒரு கடிதத்தில் எழுதியுள்ளார்.

     கர்னல் மெக்காலெயுக்குப் பின் வந்த கர்னல் மன்றோ கிறிஸ்தவ மக்களின் பராமரிப்புக்கென்று நிலங்களை தானமாய் வழங்கும்படி அரசாங்கத்திற்கு மனு  செய்தார். அதற்கிணங்கி இராணி கெளரி கெடரி பார்வதிபாய் தாமரைகுளம், வாயிலாகுளம் என்ற கிராமங்களில்  புராட்டஸ்டென்ட் மிஷனுக்கென்று நிலங்களை இனாமாகக் கொடுத்தார்கள். இவைகளைத் தவிர கோட்டயம் கிறிஸ்தவர்களுக்கும் நிலங்கள் கொடுக்கப்பட்டன. ரிங்கல்தெளபே நிறுவிய பள்ளிக்கூடங்களுக்குப் பிற்காலத்தில் இந்நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத்திலிருந்து சம்பளம் கொடுக்கப்பட்டது. தாழ்ந்த வகுப்பினருக்கு மற்ற மக்களாலும் அரசாங்கத்தாலும் நேரிட்ட பல இன்னல்களைத் தீர்க்க இவர் முயற்சித்தார். அவருடைய விடா முயற்சியால் அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பல வரிகள் அரசாங்க விளம்பரத்தால் நீக்கப்பட்டன.

    பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்நாட்டிலேயே வாழ்ந்து, இடைவிடாமல் உழைத்து வந்தமையால் அவருடைய உடல் நலம் கெட்டுப் போயிற்று. எனவே தம் தாய் நாடு திரும்பவேண்டுமென்று முடிவு செய்தார். மைலாடி  ஆலயத்தில் கிறிஸ்தவ மக்களை கூடிவரச் செய்து, அவர்களுக்குப் புத்திமதிகளை சொன்னார். பின்பு அவர்களோடு ஜெபம் செய்து அவ்விடம்விட்டு சென்னைக்குப் புறப்பட்டார். சென்னையில் சில நாட்கள் தங்கி தம் நண்பரோடு அந்நாட்களைச் செலவிட்டு பின்பு கொழும்பு சென்றார். அவர் எழுதிய கடிதங்களிலிருந்து அவர் ஏறிஸ் சென்ற கப்பல் மலாக்கா போய்ச் சேர்ந்ததென்று தெரிகிறது.

    1816 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அவர் மலாக்காவிலிருந்து ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தாம் அன்று சாயங்காலம் கப்பல் ஏறி பட்டேவியாவுக்குச் செல்வதாக எழுதியுள்ளார். அதன் பின் ரிங்கல்தெளபேயைப் பற்றி யாதொன்றும் தெரியவில்லை. நன்நம்பிக்கை முனையைச் சேர்ந்து மத்திய ஆப்பிரிக்காவில் அவர் பிரயாணம் செய்யும்பொழுது மூர்க்கர்களால் கொல்லப்பட்டார் என்றும் வேறு சிலர் அவர் மலேயா தீபகற்பத்தில் கொலையுண்டார் என்றும், வேறு சிலர் அவர் வியாதியுற்று மலாக்காவை விட்டுப் பிரயாணம் செய்யும்பொழுது கப்பலில் மரித்திருப்பார் என்றும் கருதுகிறார்கள். எவ்வாறு, எந்த நாள் பக்தன் ரிங்கல்தெளபே இவ்வுலக வாழ்வை நீத்தார் என்று எவராலும் சொல்ல முடியாவிட்டாலும், அவர் நமது ஆண்டவரின் சந்நிதியில் இவ்வுலகைவிட்ட அன்றே காணப்பட்டார் என்பது நிச்சயம். அவர் கிறிஸ்துவின் திருவருள் பெற்ற மெய்யடியார். தனக்கென்று வாழாமல், பிறருக்கென்று வாழ்ந்த பக்தன். தென் திருவாங்கூரில் அவர் செய்த பணியை அங்குள்ள மக்கள் ஒரு நாளும் மறக்க முடியாது.

பிறப்பு: கி.பி. 1770, ஆகஸ்டு 8, (சிலிசியா, ஜெர்மனி)

இறப்பு: கி.பி. 1816

 

 

Posted in Missionary Biography on November 04 at 12:35 PM

Comments (0)

No login
gif