Today Bible Verse

The Rev. James Haph History in Tamil

 

    1820 ஆம் ஆண்டு இறுதியில் கனம் ஹாப் திருவாங்கூர் பகுதியில் சி.எம்.எஸ் செய்துவரும் வேலையைப் பார்க்க விரும்பி பாளையங்கோட்டையை விட்டுப் புறப்பட்டார். கனம் ஃபென், கனம் பெய்லி, கனம் பேக்கர் என்பவர்கள் திருவனந்தபுரத்தில் அவரைச் சந்தித்து வரவேற்றார்கள். கனம் ஹாப் அவர்களோடு தொடர்பினால் இன்புற்றிருந்தார். பின்பு சிரியன் சபையின் மெட்ரோப் பாலிட்டனைச் சந்தித்து அவருடன் பேசினார். கண்ணணூர், தலைச்சேரி முதலான இடங்களுக்குச் சென்று, அங்குள்ள கிறிஸ்தவ மக்களைச் சந்தித்து, ஆலயங்களில் பிரசங்கம் செய்தார். பிற்காலச் சரித்திரத்தைப் பார்க்கும்பொழுது, அவ்விடங்களைப் பார்வையிட்டு அவைகளின் நிலைமையை அவர் அறிந்துக்கொண்டது, அங்குள்ள சபை மக்களுக்குப் பயன் தருவதாயிருந்ததென்று கூறலாம்.

     சுற்றுப்பிரயாணத்தை முடித்துத் திரும்பிப் பாளையங்கோட்டைக்கு வந்த நாட்களில், தலைச்சேரி ஆலயத்தை இடித்துப் போடும்படி அரசாங்கத்தார் உத்தரவிட்டிருக்கிறார்களென்ற வதந்தி அவருடைய காதுகளில் எட்டிற்று. அந்த ஆலயத்தில் ஐரோப்பியரும், இந்தியரும் ஆராதனை நடத்தி வந்தார்கள். அவ்விடத்தில் இருந்த ஐரோப்பிய இராணுவம் வேறொரு இடத்திற்க்கொண்டு போகப்பட்டது. எனவே அங்குள்ள இராணுவ பாதிரியார் மாற்றப்பட்டார். அந்த ஆலயம் பழுதுபார்க்கப்படவேண்டிய நிலைமையில் இருந்தது. எனவே அங்கிருந்த கிறிஸ்தவ மக்கள் அதைக் குறித்து அரசாங்கத்திற்கு அறிக்கை அனுப்பினார்கள்.

    ஐரோப்பிய ராணுவமும் பாதிரியாரும் இல்லாத காரணத்தால் அதைப் பழுது பார்க்க அவசியமில்லையென்றும், அதை இடித்துப் போட வேண்டுமென்றும் உத்தரவிட்டார்கள். இது வெறும் வதந்தியல்ல, ஆனால் உண்மையாகவே அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அவ்வாறு உத்தரவிட்டிருக்கிறார்களென்று ஹாப் அறிந்து, அவர்களுக்கு எழுதி, தாம் அக்கோயிலைப் பார்த்து இருப்பதாகவும், அது அங்கு குடியிருந்த ஐரோப்பியருக்கும், புதிதாகத் கிறிஸ்தவ சமயத்தை தழுவியிருந்த இந்திய மக்களுக்கும் தேவையென்றும் எழுதினார். அதன் பேரில் அவ்வுத்தரவு ரத்து செய்யப்பட்டது. ஆலயமும் பாதுகாக்கப்பட்டது.

    பல்வேறு வகைகளில் திருநெல்வேலி மாவட்டத்திலும், திருவாங்கூரிலும் கிறிஸ்தவ மக்களுக்குச் சிறந்த சேவை செய்து வந்த கனம் ஹாப் 1821 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து பதினைந்து மைல் தூரத்திலிருக்கும் பூந்தமல்லிக்கு மாற்றப்பட்டார். இதையறிந்த திருநெல்வேலி மாவட்ட கிறிஸ்தவ மக்கள் வருத்தமடைந்தனர். அவர் தங்களை விட்டுப் பிரிந்து செல்வதை நினைத்துக் கண்ணீர் வடித்தனர். ஆயினும் ஆண்டவரின் சித்தத்தின்படி வேறொரு இடத்தில் அவருக்காகச் சேவை செய்யப் போகிறாரென்று தங்களுடைய மனதை திடப்படுத்திக்கொண்டு அவரை வாழ்த்தி, அவருக்கு நன்றி கூறி வழியனுப்பினார்கள்.

    பூந்தமல்லிக்குப் பிரயாணம் செய்துவரும் வழியில் மதுரை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் முதலான இடங்களில் தங்கி, அங்கு தன்னைக் காணவந்த கிறிஸ்தவர்களோடு அன்புடன் அளவளாவினார். அவ்விடங்கள் மிஷனெரி பக்தர்கள் கிறிஸ்தவப்பணிசெய்த புண்ணிய ஸ்தலங்களென்று தாம் கருதியதாக அவர் எழுதியுள்ளார்.

     பூந்தமல்லியில் ஆயிரம் போர்வீரர் தங்கக்கூடிய விடுதியும், ஒரு பெரிய மருத்துவநிலையமும், இரண்டு ஆங்கிலப் பள்ளிக் கூடங்களுமிருந்தன. சுற்றுப்புறங்களிலிருந்த கிராமங்களில் கிறிஸ்தவர்கள் குடியிருந்தார்கள். அவர்களுடைய ஆத்மநலனைக் கவனிக்க எவருமில்லாமலிருக்க ஹாப் கண்டு, உடனடியாக அவர்களுக்கென்று ஒரு உபதேசியாரை நியமித்தார். அவர் சிதறியிருந்த அம்மக்களை அவர்களுடைய வீடுகளில் சந்தித்தார். அவர்கள் ஒரு இடத்தில் கூடி கிறிஸ்து பெருமானை வழிபடுவதற்கென்று ஒரு ஆலயத்தையும் ஹாப் கட்டினார். ஆங்கில, வெளிநாடுகளின் வேதாகம இணைச் சங்கமொன்றையும் அவர் அங்கு நிறுவினார். கனம் பாரன் பர்க், கனம் ரிட்சேல் என்ற இரண்டு மிஷனெரிகளுடன் சென்னையைச் சுற்றிலுமுள்ள கிராமங்களையும் ஹாப் பார்வையிட்டார்.

    பாளையங்கோட்டையை விட்டுப் புறப்படுமுன் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்க்கும்படி வேதாகமச் சங்கம் அவரைக் கேட்டுக்கொண்டது. பூந்தமல்லி வந்து சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பித்து, ஒரு தமிழ் அகராதி எழுதவும் முற்பட்டார். இவைகளைச் செய்வதில் உதவிவேண்டுமென்று கருதி ஒரு ஆசிரியரை நியமித்து, உணவு அருந்துவதற்காகச் செலவழிக்கும் சொற்ப நேரத்தைத்தவிர காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை அவ்வேலையில் ஈடுபட்டார். அவ்வாறு உழைக்கத் தம்மால் இயலாமல் அவருக்கு உதவியாயிருந்த ஒரு ஆசிரியர் வேலையிலிருந்து விலகிக்கொண்டார்.

    எனவே, மற்றொரு ஆசியரை நியமித்து, அவருடைய உதவியைக் கொன்டு இப்பணியைச் செய்து வரலானார். அயரா உழைப்பினால் தம்முடைய உடல் நலம் கெட்டு வருவதை ஹாப் உணர்ந்தார். ஒன்பது மாதங்களே பூந்தமல்லியிலிருந்து அதன் பின்பு தம் தாய்நாடு செல்ல ஹாப் முடிவு செய்தார்.

     பூந்தமல்லியிலிருந்த ஒன்பது மாதங்களில் இராணுவப் போர்வீரர்களின் ஆத்ம நலனுக்காக உழைத்து, இரண்டு பள்ளிக்கூடங்களை மேற்பார்வையிட்டு, அங்குள்ள ஆலயத்தில் பிரசங்கம் செய்து, மருத்துவ நிலையத்திலுள்ளவர்களுக்குப் பணிசெய்து, இவைகளுடன் லூக்கா எழுதின சுவிசேஷம் முழுவதையும், அப்போஸ்தலர் நடபடிகளில் ஆறு அதிகாரங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருந்தார். ஒரு தமிழ் அகராதியும் முடிவடையும் நிலைமையிலிருந்தது. இவருடைய உழைப்பையும், ஆற்றலையும் என்னென்று கூறுவது!

     இங்கிலாந்திற்குச் சென்று இரண்டு வருடங்கள் அங்கு தங்கியிருந்து சென்னைக்குத் திரும்பினார். அங்கு பரி. ஜார்ஜ் ஆலயத்தில் குருவாகப் பணியாற்றினார். அப்பொழுது ஐரோப்பியர் நம் நாட்டில் தீயவழிகளில் தங்கள் வாழ்நாட்களைச் செலவிடுவதாகக்கூறி, “இந்தியாவில் கிறிஸ்தவச் சமயத்தின் கீழான நிலைமை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அதை வெளியிட்டனர். அதில் கண்டிருந்த குறிப்புகளை எதிர்த்து, உண்மையை விளக்கி ஹாப் ஒரு சிறந்த கடிதம் எழுதினார்.

     செய்யவேண்டுமென்று ஹாப் விரும்பின காரியங்கள் அநேகமிருந்தன. அவைகளும், அவருடைய அன்றாடக் கடமைகளும் அவரை நெருக்கின. சென்னையின் வெப்பமும் அவருடைய உடல் நலனைப் பாதித்தது. எனவே, சென்னையை விட்டுக் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், வளமுமுள்ள நீலகிரிக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்க்கையையும் பொருளாதார நிலைமையையும் குறித்து ஆராய்ச்சி செய்து, அதைக் கொண்டு சிறந்த கட்டுரையொன்று எழுதினார்.

      உதகமண்டலத்திலிருக்கும்பொழுதும் எஸ்.பி.ஜி. என்னப்படும் நற்செய்தி கழகத் தொண்டராகவும் சி.எம்.எஸ் தொண்டராகவும் அச்சபையின் தலைவர்களுடன் கடிதங்களின் மூலமாய்த் தொடர்பு கொண்டிருந்தார். நீலகிரியிலும் உடல் நலம்கெட்டு, அடிக்கடி நோய்வந்து தாக்கியது. எனவே தம் தாய்நாடு செல்ல முடிவு செய்தார். இங்கிலாந்திலிருந்த நண்பர்கள் அவருடைய வருகையைக் குறித்து மகிழ்வுற்றார்கள்.

     ஹாப் இங்கிலாந்து வந்து சேர்ந்தபொழுது டாக்டர் ஒய்ஸ்மென் என்ற வழக்கறிஞர் சீர்த்திருத்தப்பட்ட கிறிஸ்தவ மக்களைக் குறித்து இழிவாகக் கூறி, அவர்களைக் கண்டனம் செய்து சொற்பொழிவுகளாற்றி, அவைகளை அச்சடித்து வெளியிட்டு வந்தார். அவைகளுக்கு ஒரு மாறுத்தரம் எழுதும்படி சி.எம்.எஸ் சங்கத்தார், கனம் ஹாப்பைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கி வெகு திறமையுடன் அதைக் குறித்து சிறு புத்தகமொன்று அவர் எழுதினார். அதை அந்நாட்டிலிருந்த பேரறிஞர் போற்றி, அவருடைய அறிவையும் திறனையும் பாராட்டினார்கள்.

கனம் ஹாப்பின் பிற்காலப்பணி

      தம்முடைய வாழ்நாட்களில் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் பயன்படுத்தப் பழகியிருந்தவர் கனம் ஹாப், தம்முடைய முதுமைக் காலத்தில் “இந்தியாவில் கிறிஸ்தவச் சமயத்தின் சரித்திரம்” என்ற தலைப்பில் ஒவ்வொன்றும் 400 பக்கங்களுக்கு மேல் அடங்கிய நான்கு புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டார். இதற்கு முன் ஐந்தாவது புத்தகத்தையும் எழுதி முடித்தார். அது 651 பக்கங்கள் அடங்கிய புத்தகம் அவர் மரித்தபின் அவருடைய மகன் அதை அச்சிட்டு வெளியிட்டார். அப்புத்தகங்கள் விற்பனையானதால் கிடைக்கும் லாபத்தை உடல் நலம் குன்றிப் பணிசெய்ய இயலாமல் தவிக்கும் மிஷனெரிகளின் நலனுக்காக ஒதுக்கிவைத்தார். இப்புத்தகங்கள் ஒரு கலைக்களஞ்சியமாகவும், கிறிஸ்தவச் சபையின் பொக்கிஷமுமாகவும் கருதப்பட்டு வருகின்றன. அநேக எழுத்தாளர்கள் கிறிஸ்தவ சபைச் சரித்திரத்தை எழுதும்பொழுது, இப்புத்தகங்களையே அடிப்படையாகக் கொண்டு எழுதி வருகின்றனர்.

     இவர் 1832 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சர்ரே பகுதியிலுள்ள ஹாம் சபைக்கு குருவாக நியமிக்கப்பட்டார். அதில் பதினாறு ஆண்டுகள் சிறந்த ஊழியம் செய்து, அச்சபை மக்களின் அன்பிற்குப் பாத்திரமானவராக நடந்துக் கொண்டார். அவருடைய உடல் முதுமைத் துன்பத்தால் நலிந்து தளர்ந்து, குளிர்காலத்தைச் செலவிடும்படி ஹேஸ்டிங்ஸில் அவர் சென்றிருந்தபொழுது, 1847 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று அமைதலுடன் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். அவர் கடைசியாகக் கூறிய வார்த்தைகள், “விசுவாசத்தைக் கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறேன்” (1 பேதுரு 1:5) என்பவைகளே.

     திருநெல்வேலி மாவட்ட அரசு ஆணையில் கனம் ஜேம்ஸ் ஹாப்பைப் பற்றி கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது. 1816 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஹாப் பாளையங்கோட்டைக்கு பாதிரியாராக அனுப்பப்பட்டார். அப்பொழுது கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவின மக்களுள் பாதிப்பேர் அதைவிட்டு நழுவிப்போயினர். இந்நிலையில் ஹாப் அவர்களுக்கு உதவிசெய்ய முன் வந்து கிறிஸ்தவச் சமயத்திற்குப் புத்துயிர் கொடுத்ததினால் ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது.

     பள்ளிக்கூடங்களை நிறுவி, வேத புத்தகங்களையும், ஜெப புத்தகங்களையும் விநியோகம் செய்து சபைகளைச் சந்தித்து, உடனடியாக மிஷனெரிகளை அனுப்பும்படி சர்ச் மிஷனெரி சங்கத்தாருக்கு அவர் எழுதினார். ஆங்கில போர்வீரர்களுக்குக் கிறிஸ்தவப் பணியாற்றுவது ஒரு குருவானவரின் பணியாகும். சுவிசேஷ வாஞ்சையுள்ள ஹாப், தம்முடைய வேலையுடன் சுவிசேஷ ஊழியத்தில் அக்கறைகாட்டி, கிறிஸ்தவச் சமயம் நம் நாட்டில் பரவுவதற்காகத் தீவிரமாக உழைத்தார். தம்முடைய உழைப்பினால் சுவிசேஷ ஒளி திருநெல்வேலி மாவட்டத்தில் அணையாதபடி காத்தார். அவருடைய ஊழியத்தையும், அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நாம் ஒரு நாளும் மறக்க முடியாது.

     கனம் ஜேம்ஸ் ஹாப் 1789 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கம்பர்லாந்து நாட்டில் பிறந்தார். இவர் கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலையில் படித்து, எம்.ஏ. பட்டம் பெற்று பின்பு வேத சாஸ்திரம் கற்றார். 1874 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி கார்லையிலில் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டு, தாம் பிறந்து வளர்ந்த கம்பர்லாந்து பகுதியிலுள்ள குரின்ஸ்டேல் என்னுமிடத்தில் குருவாகப் பணியாற்றினார். சபைகுருவாக இருக்கும்பொழுது அவர் மிஷனெரி வாழ்வையே சிறந்ததாகக் கருதினார். மிஷனெரி ஊழியத்தைக் காட்டிலும் சிறந்ததோர் வேலை வேறில்லையென்று கருதியவர் கனம் ஹாப்.

     குருப்பட்டம் பெறுவதற்குமுன் ஒருநாள் சர்ச் மிஷனெரி சங்க வருடாந்திர கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தார். அதில் கலந்து கொண்டவர்களிலொருவர் வெளி நாடுகளிலுள்ள மக்களுக்குக் கிறிஸ்தவ நற்செய்தியை அறிவிக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து மிக ஊக்கமாகப் பிரசங்கம் செய்தார். அவர் கூறிய வார்த்தைகள் ஹாப்புடைய மனதைத்தொட்டு, சுவிசேஷ ஊழியத்தில் நாம் பங்குபெற வேண்டுமென்ற வாஞ்சையை அவருடைய உள்ளத்தில் உண்டாக்கிற்று. அதைக்குறித்துப் பேசும்போது அவர் கூறியதாவது “இந்தியாவில் கிறிஸ்துவை அறியாமல் வாழும் மக்களுக்கு அவரின் அன்பைக் குறித்து தெரிவிக்க என் உள்ளம் துடிக்கிறது.” அதற்கு தமக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று அனுதினமும் கடவுளை வேண்டிக்கொண்டு, அந்த நாளை எதிர்நோக்கியவராகவே அவர் தம் குருத்துவ பணியைச் செய்து வந்தார்.

    கேம்பிரிட்ஜ் கலாசாலையில் சார்லஸ் சிமியோன் என்ற பக்தரிருந்தார். அவர் கடவுளின் பேரில் பற்றுதலுள்ளவர். சுவிசேஷ வாஞ்சை படைத்தவர். அவர் கனம் ஹாப்புடைய வாழ்க்கைக் குறிக்கோளையும் அவருடைய சுவிசேஷ வாஞ்சையையும் நன்கறிந்தவர். கிழக்கு இந்திய வாணிகக் குழுவினர் மற்ற சில வாலிபருடன் கனம் ஹாப்பை பாதிரியாராக நம் நாட்டிற்கு அனுப்புவதற்கு அவர் காரணமாக இருந்தார். பாதிரியாராக அவர் மூலமாய் இந்தியாவிற்குச் செல்லும்படி உத்தரவு கிடைத்தவுடன், இறைவனின் அருளைபோற்றி, 1816 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கனம் ஹாப் தம்முடைய மனைவியுடன் கப்பலேறி, இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டு சென்னைப் பட்டிணம் வந்து சேர்ந்தார்.

     சென்னையில் பரி. ஜார்ஜ் கதீட்ரல் ஆலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்த கனம் எம். தாம்சன் என்பாரும், அக்காலத்தில் சுவிசேஷ வேலையில் ஊக்கம் காட்டிவந்த நண்பரில் சிலரும் அவர்களை அன்புடன் வரவேற்றார்கள். அவர்களுள் ஸ்டசான் தம்பதிகள் அவர்களை தங்களுடைய விருந்தினராக நடத்தி வந்தார்கள். அவ்வருடம் அக்டோபர் மாதம் பாளையங்கோட்டையிலுள்ள ராணுவத்தின் முதல் பாதிரியாராக கனம் ஹாப் நியமிக்கப்பட்டார். உடனடியாக அவரும் அவருடைய மனைவியும் சென்னையை விட்டுப் புறப்பட்டு 1816 ஆம் வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்தார்கள்.

     அப்பொழுது திருநெல்வேலி மாவட்டத்திலிருந்த கிறிஸ்தவ மக்கள் ஒரு இருள் சூழ்ந்த நிலைமையிலிருந்தார்கள். ‘திருநெல்வேலி மிஷனின் பிதா’ என்று அழைக்கப்பட்ட சுவார்ட்ஸ் பாதிரியார் 1798 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார். அவருக்கு அடுத்தபடியாக சிறந்த சுவிசேஷ ஊழியம் செய்துவந்த ஜெனிக்கே பாதிரியார் மலைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, பெலன்குன்றி 1800 ஆம் வருடம் மரித்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கட்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களைக் கிறிஸ்தவச் சபையில் சேர்த்து, 1802 ஆம் வருடம் இரண்டாம் முறையாக அம்மாவட்டம் முழுவதும் சுற்றித் திரிந்த மிஷனெரி கெரிக் 1803 ஆம் வருடம் மறுமைக்குட் பிரவேசித்தார்.

     J.B. கோலப் பாதிரியாரின் மகன் கனம் J.C. கோலப் திருநெல்வேலியிலுள்ள சபைமக்களைச் சந்திப்பதற்கென்று 1803 ஆம் ஆண்டின் இறுதியில் வந்தார். அப்பொழுது அங்கிருந்த கிறிஸ்தவர்களை இந்து சமயத்தவரால் துன்புறுத்தப்பட்டு பல இன்னல்கள் அனுபவித்து வந்தார்கள். அவைகளைக்குறித்து கோலப் பாதிரியார் மேல் அதிகாரிகளுக்குப் பலமுறை எழுதியும் பயனொன்றும் கிடைக்கவில்லை. நிரந்தரமாக திருநெல்வேலி மாவட்டத்தில் எந்தவொரு மிஷனெரியுமில்லை. கிறிஸ்தவப் பக்தருடைய குறைகளைக் கவனிக்கவும் அவர்களுடைய இன்னல்களைப் போக்கவும், கிறிஸ்தவ விசுவாசத்தில் அவர்களை வேரூன்றச் செய்யவும் அங்கு எவருமில்லை. இந்நிலையில் 1805 ஆம் ஆண்டு கோலப் அவர்களின் வேண்டுகோளின் பேரில் போதகர் சத்தியநாதன் திருநெல்வேலியிலிருந்து தஞ்சைக்கு மாற்றப்பட்டார். தங்களுடைய வீடுகளிலும் ஊர்களிலுமிருந்து துரத்தப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்கு நிலம்தானம் செய்து அவர்களைக் குடியேற்றியும் மற்றும் பல வகைகளில் அவர்களுக்கு உதவி செய்தும் வந்த சாயர் என்னும் பெருமகனார் 1826 ஆம் ஆண்டு இறந்தார். எனவே திருநெல்வேலியிலுள்ள கிறிஸ்தவ மக்கள் ஆதரவற்று, தங்களுடைய நம்பிக்கையையிழந்து பின்வாங்கிப்போகும் நிலைமையிலிருந்தார்கள்.

       இவ்வாறு இக்கட்டான நிலைமையில் கிறிஸ்தவ மக்கள் இருக்கும் பொழுது, கனம் ஹாப் திருநெல்வேலிக்கு வந்தார். கர்னல் டிராட்டர் அவரை அன்புடன் வரவேற்றார். இவர் ஒரு கொர்நெலியு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர் கிறிஸ்துவின் மெய்யடியான். அங்குள்ள கிறிஸ்தவர்களுக்குத் தம்மாலியன்றவரை உதவிசெய்து அவர்களுக்கு உற்சாகமூட்டி வந்தவர்களிலொருவர். இவர் 1819 ஆம் ஆண்டு குற்றாலத்தில் மரித்தார். இவருடைய கல்லறை பாளையங்கோட்டையில் குளோரிக்தா அம்மையின் ஆலயத்திற்கு வெளியில் இருக்கின்றது.

     பாதிரியாராக தம்முடைய பணியை ஏற்றுக்கொண்ட சில நாட்களில் தாம் செய்யவேண்டிய பணி அதிகமென்றும், அம்மாவட்டத்திலுள்ள இந்தியக் கிறிஸ்தவ மக்களுடைய நலனுக்காகவும் சுவிசேஷம் பரவுவதற்காகவும் உழைக்க அவகாசமில்லையென்பதை அவர் கண்டு உடனடியாக அப்பணியில் ஈடுபட்டார். துவக்கத்தில் கவலைக்கும் தொல்லைக்கும் உள்ளான கனம் ஹாப் சுவிசேஷப்பணி மூலம் ஆறுதலும் இன்பமும் பெற்றார்.

பிறப்பு: கி.பி. 1789

இறப்பு: கி.பி. 1847, நவம்பர் 2, (ஹேஸ்டிங்ஸ்)

Posted in Missionary Biography on November 04 at 12:54 PM

Comments (0)

No login
gif