Today Bible Verse

Misis Alexander History in Tamil

 

      அலெக்ஸாண்டர் 1823 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டில் பிறந்தார். இவருடைய தந்தை மேஜர் ஹம்பிரீஸ் கப்பற்படையில் சேவை செய்து வந்தார். அவருக்குப் பிறந்த பிள்ளைகளில், பிற்காலத்தில் சிறந்த கவியாகத் திகழ்ந்த மிஸிஸ். அலெக்ஸாண்டர் ஒருவராவார். பெற்றோரால் அவருக்கு இடப்பட்ட பெயர் சிசில் பிரான்ஸிஸ் என்பதாகும். சிறுமியாயிருந்தபோதே கவிகளை எழுத அவள் முயற்சித்து வந்தாள். அருஞ்சொற்களைச் சீராக அமைத்து கவிகளை இயற்றும் திறன் அவளுக்கு இருந்தது.

   கவிகளை இயற்ற அவள் முற்பட்டபொழுது அவளுக்கு வயது இளமைப் பருவத்திலிருந்தே நமதாண்டவர்பேரில் பற்றுள்ளவளாக வாழ்ந்து வந்தவள். பிரான்ஸிஸ் கவித்திறனுள்ளவளாக இருந்தபோதிலும், சிறுவயதின் காரணத்தால், தனது திறனின் பேரில் நம்பிக்கையற்றவளாயிருந்தாள். தான் எழுதிய கவிகள் பெரியவர்களுடைய கண்களில்பட்டால், அவர்கள் குறை கூறுவார்களென்று அஞ்சி, அவர்கள் அதைப் பார்க்காதவண்ணம் வீட்டிலிருந்த தரை விரிப்புக்கு அடியில் ஒளித்து வைத்து வந்தாள்.

     பிரான்சிஸின் தந்தை இதையறிந்து, ஒருநாள் அவைகளை எடுத்துப்பார்த்து, படித்து அவைகளின் பொருளையும், அமைப்பையும் கண்டு வியந்தார். தம்முடைய சிறு மகளின் திறனைக் குறித்து பெருமிதங்கொண்டு, அவைகளைத் தொடர்ந்து எழுதுவதற்கு அவளுக்கு உற்சாகம் கொடுக்க விரும்பி, அதற்கு ஆவன செய்ய முற்பட்டார். ஒரு சிறு பெட்டியை வீட்டின் முன் அறையில் வைத்து, எழுதிய கவிகளை அவள் அப்பெட்டியில் போட்டுவைக்க வேண்டுமென்றும், அவைகளை வாரத்திற்கொருமுறை படித்துக்காட்ட வேண்டுமென்றும் அன்புடன் பணித்தார்.

    ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் அப்பெட்டியில் சேர்ந்த கவிகளை எடுத்து, வீட்டிலுள்ளவர்கள் முன்னிலையில் பிரான்சிஸ் உரக்க படிப்பது வழக்கமாயிற்று. இவ்வாறு செய்ததின் பயனாக அவள் தேர்ச்சியடைந்து வந்தாள். அதனைக்கண்ட தந்தை எதிர்காலத்தில் ஒருவேளை தம் மகள் புலமையுள்ள கவியாக திகழ முடியுமோ என்று வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார்.

     அக்காலத்தில் லீட்ஸ் பட்டணத்தில் புகழ்வாய்ந்த டீன் ஹாக் என்பவர் சபைக்கு குருவாக பணியாற்றி வந்தார். அவரும், சிறந்த கிறிஸ்தவ ஞானப்பாட்டுகள் எழுதி, அவற்றை ‘கிறிஸ்தவ ஆண்டு’ என்ற வெளியீட்டில் அச்சிட்டு வந்த கனம் கிபிள் என்பவரும், சிறுமி பிரான்சிஸின் கவித்திறனைப் போற்றி, அவள் கவிதை எழுதுவதில் தீவிரமாய் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தினார்கள். இத்தகையவர்களுடன் கலந்து பழகுவது அவளுக்கு ஒருவகைக் கல்வியாகப் பயன்பட்டது.

பாடல்

     ‘நேர்த்தியானதனைத்தும்’ என்ற இப்பாடலையும் சிறுவர்களுக்கான இதர பாடல்களையும், மற்றும் ஆழமான கருத்துக்களடங்கிய பல கிறிஸ்தவ ஞானப்பாட்டுகளையும் கவிச்சிறப்புடன் உலகிற்களித்தவர் மிஸிஸ். அலெக்ஸாண்டர் என்ற பக்தியுள்ள பெண்மணியாவார்கள். சிறுவர்களுக்காக அவர்கள் எழுதிய பாக்களுள் ‘இராஜன் தாவீதூரிலுள்ள’ என்று ஆரம்பிக்கும் பாடலை தென்னிந்திய திருச்சபையின் பாமாலையில் காணலாம். ‘கிறிஸ்துவின் பிள்ளைகள் தீமை நீக்குமே’ என்று ஆரம்பிக்கும் பாடல்களும், அவர் சிறுவர்களுக்காக எழுதிய மற்ற பாடல்களாகும். ‘கூர் ஆணி தேகம் பாய’, ‘என் நெஞ்சம் நொந்து காயத்தால்’, ‘இளமை முதுமையிலும்’, ‘கொந்தளிக்கும் லோக வாழ்வின்’ என்று ஆரம்பிக்கும் பாடல்களையும் அவர்கள் எழுதியுள்ளார்கள். கிறிஸ்து நமக்காக சிலுவையில்பட்ட பாடுகளையும் குறித்து உள்ளத்து உணர்ச்சியுடன் நாம் பாடும்படி இவை அமைந்திருக்கின்றன.

கிறிஸ்தவப் பணி

     1850 ஆம் ஆண்டு பிற்காலத்தில் டெரியின் அத்தியட்சகராக பணியாற்றின வில்லியம் அலெக்ஸாண்டர் என்ற பக்தனை பிரான்சிஸ் மணந்தார்கள். அவர் அப்பொழுது அயர்லாந்து நாட்டில் டெரோன் என்னுமிடத்தில் சபைக் குருவாகப் பணியாற்றி வந்தார். ஐந்து வருடங்கள் தம்முடைய கணவருடன் சேர்ந்து சபை மக்களின் நல்வாழ்விற்காக உழைத்தார்கள். பரந்து கிடந்த சபையின் எல்லைக்குள் வாழ்ந்து வந்த எளிய மக்களின் இல்லங்களுக்குச் சென்று, நோய்வுற்றோர், வறுமையில் உழன்று கிடந்த மக்கள், முதலான யாவருக்கும் உதவிசெய்து வந்தார்கள். பனி காலத்தில் ஒருநாள் ஒரு சிறு வீட்டில் திமிர்வாத நோயினால் பிடிக்கப்பட்ட குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டு, அவளின்பேரில் பரிதாபங்கொண்டு அவளைத் தன்னுடைய கம்பள சால்வையினால் மூடி, அவள் வீட்டில் அனல்மூட்டி, பராமரித்தார்கள். மற்றொரு சமயம் சபையிலுள்ள ஏழைப் பெண்ணொருத்தி புண்களினால் அவதிப்பட்டதைக்கண்டு, அவளருகில் உட்கார்ந்து புண்களைக் கழுவி, மருந்திட்டு, அவளுடைய புண்கள் குணமாகும் வரைக்கும் ஆறுவாரங்கள் அவளுடைய இல்லத்திற்கு தினமும் சென்று சிகிச்சை செய்து வந்தார்கள்.

     ஒவ்வொரு குடும்பத்தின் பாரமும் தம்முடையதுபோல் கருதி, அக்குடும்பத்தினருடைய இன்னல்களைப் போக்குவத்ற்கான முயற்சிகளில் முனைந்து வந்தார்கள். அம்மக்களின் வீடுகளுக்கு அவர்கள் சென்று திரும்பி வரும்பொழுது, அவர்களுடைய கணவர் வேடிக்கையாக உரையாடி, “அந்த வீட்டிலுள்ள மாட்டிற்கு போதுமான தீவனம் போட்டிருக்கிறார்களா?” என்றும். “இந்த வீட்டிலுள்ள வேலி சரிவர செப்பனிடப்பட்டதா?” என்றும், “அந்த வீட்டிலுள்ள மாட்டிற்கு போதுமான தீவனம் போட்டிருக்கிறார்களா?” என்றும், “இந்த வீட்டிலுள்ள வேலி சரிவர செப்பனிடப்பட்டதா?” என்றும், “அந்த வீட்டிலுள்ள வேலி சரிவர செப்பனிடப்பட்டதா?” என்றும், “அந்த வீட்டிலுள்ள பெண்ணின் கால்வீக்கம் குறைந்துவிட்டதா?” என்றும் கேட்பதுண்டு. பிறர்படும் இன்னல்களில் உதவி செய்வது அவர்களுடைய இயல்பான பண்பாகிவிட்டது. அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்பமாக மற்றவர்களுக்குப் பயன்படும் முறையில் நடைபெற்று வந்தது. அங்கிருக்கும்பொழுது அவர்களுடைய முதல் குழந்தையும் பிறந்தது.

     1867 ஆம் ஆண்டு அவர்களுடைய கணவன் டெரியின் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டு, அப்பதவியை ஏற்றார். அதன் பின்பும் மிஸிஸ்.அலெக்சாண்டர் முன்போலவே எளிய மக்கள் நடுவில் அவர்கள் நலனுக்காக உழைக்கத் தயங்கவில்லை. அவர்கள் வாழ்ந்து வந்த சிறு சந்துகளிலும், வீடுகளிலும் சென்று தம்முடைய அன்பைச் செலுத்தி வந்தார்கள். தம்முடைய குழந்தைகளை நன்நெறியிலும், தெய்வ பயத்திலும், பக்தியிலும் வளர்ப்பதிலும் தமது கவனத்தைச் செலுத்தினார்கள். தினசரி காலையில் அத்தியட்சாதீன ஆலயத்தில் நடந்த வழிபாட்டிற்குச் சென்று வந்தார்கள். வாரந்தோறும் நற்கருணை ஆராதனையில் பங்குபெற அவர்கள் தவறியதில்லை. அவர்களுடைய வாழ்க்கை சபை மக்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது.

     மிஸிஸ். அலெக்ஸாண்டர் அநேக வருடங்கள் மக்களின் தேவைகளையுணர்ந்து, அவர்களுக்காக இரவு பகலாக உழைத்து, கடவுள் தமக்குக் கொடுத்த வரத்தைப் பயன்படுத்தி, அநேகச் சிறந்த ஞானப்பாட்டுகளை எழுதி, 1895 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி தமது எழுபத்திரண்டாம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்கள்.

பிறப்பு: கி.பி. 1823, (அயர்லாந்து)

இறப்பு: கி.பி. 1895, அக்டோபர் 12

Posted in Missionary Biography on November 29 at 02:16 PM

Comments (0)

No login
gif