Today Bible Verse

St. Augustine History in Tamil

 

      வாலிபப் பருவத்தில் தீய வாழ்க்கை நடத்தி அத்துடன் வேதப் புரட்சிக் கட்சியில் சேர்ந்து பின்பு தன் தவறை உணர்ந்து, அதற்காக உத்தம மனஸ்தாபப்பட்டு கிறிஸ்துவின் திருவடியை அண்டி திருச்சபைக்கு ஒரு தீபம் போல் விளங்கியவர் பரி. அகஸ்டின். இவர் கி.பி. 354 இல் நவம்பர் மாதம் மூன்றாம் நாள் ஆப்ரிக்கா கண்டத்திலுள்ள நுமிடியா நாட்டில் தாகஸ்தே என்ற சிற்றூரில் பிறந்தார். இவருடைய தகப்பனார் பெரும் செல்வர் அல்லர் என்றாலும் போதிய செல்வம் உடையவர். அவர் மூர்க்க குணமுள்ளவர். விக்கிரகாராதனை செய்தவர். ஆனால் அவருடைய மனைவி பரி. மானிக்கா தூய வாழ்க்கை நடத்தியவர்.

      அவருடைய முயற்சியால் அகஸ்டினின் தந்தையார் நமதாண்டவரண்டை வழி நடத்தப்பட்டு ஞானஸ்நானம் பெற்றதாக வரலாறு கூறுகிறது. நம் பக்தரின் உடன் பிறந்த சகோதரர் நாவிகியஸ் என்பவரைப் பற்றியும் கன்னிமடத் தலைவியாக இருந்த சகோதரியைப் பற்றியும் நாம் சரித்திர வாயிலாக அறிகிறோம்.

      பரி. அகஸ்டினின் அறிவு நுட்பத்தையும் சிறந்த நினைவாற்றலையும் கண்ட இவரது தந்தை இவர் கல்வியில் முன்னேற்றமடைய எல்லாவித உதவியும் செய்தார். இவர் முதலில் தாம் பிறந்த ஊரிலுள்ள பள்ளியில் சேர்ந்து பின்னர், இலக்கணத்திலும் செய்யுளிலும் உரைநடையிலும் தேர்ச்சிபெற, தோர் என்னும் நகருக்குச் சென்றார். இவருக்கு பதினாறு வயதிருக்கும்போது இவரை கார்த்தேஜிலுள்ள கல்லூரியில் சேர்க்க இவர் தந்தையார் விரும்பி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கையில் ஒரு வருடம் இவர் இல்லத்திலேயே வேலையின்றி வீண்பொழுது போக்க நேரிட்டது. அவ்வாறிருக்கும்பொழுது இவர் தம் தாயின் சொற்கேளாமல் தீய வழிகளில் சென்று தீயவர்களின் தொடர்பாலும் தீய எண்ணங்களை வளர்க்கும் நூல்களைப் படித்தும் நெறி தவறி நடந்தார்.

      இவருடைய தந்தை பட்ரீஷியஸ் ஞானஸ்நானம் பெற்று கி.பி. 371 இல் இறந்தார். அப்பொழுது பரி. அகஸ்டின் கார்தேஜில் படித்து வந்தார். இவர் சிறந்த அறிவாளியாகவும் தத்துவ ஞானியாகவும் சொற்பொழிவாற்றல் மிக்கவராகவும் விளங்கினார். ஆனால் நான், எனது அறிவு என்னும் செருக்குக்கு ஆளானார்.  அறிஞர்கள் அரிஸ்டாட்டில், சிசிரோ என்பவர்களின் நூல்களைப் படித்தார். ஆனால் தம் தாயினிடம் தாய்ப்பாலோடு கிறிஸ்துவைப் பற்றிய அறிவை உணவாக அருந்திய நம் பக்தருக்கு இந்நூல்கள் மன நிறைவைக் கொடுக்கவில்லை. அதே சமயத்தில் தாம் ஓர் அறிவாளி என்று செருக்குக் கொண்ட இவருக்கு, இயேசு பெருமானின் எளிமையான போதனை அற்பமாயும் காணப்பட்டது.

      இச்சமயத்தில் ‘மணிக்கிய தத்துவ இயக்கம்’ என்ற ஓர் இயக்கம் ஏற்பட்டு பலரைத் தன்பால் கவர்ந்தது. ஆதாமையும், ஏவாளையும் படைத்தது சாத்தான் என்றும், தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டு இவ்வுலகத்திற்கு வந்தது மேசியாவல்ல, அவர் சாத்தானோடு போராட வந்த ஒளியின் அவதாரமென்றும் அவ்வியக்கத்தினர் தங்கள் கொள்கைகளைப் பரவச் செய்தனர். நம் பக்தர் அக்கொள்கைகளினால் கவரப்பெற்று சுமார் 8 அல்லது 9 ஆண்டுகள் அவ்வியக்கத்தின் தத்துவங்களையும் பரவச் செய்தார். இவருடைய தாயாராகிய பரி. மானிக்காவுக்கு இது மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது.

      இவர் தம் இருபதாம் வயதில் தம் தாயாரை மகிழ்விக்க எண்ணங்கொண்டு கார்தேஜியை விட்டுத் தம் தாய் இருந்த தாகஸ்தே என்ற ஊருக்கு வந்து அங்கு இலக்கியமும் சொற்பொழிவும் கற்றுக்கொடுக்க ஒரு பள்ளியை நிறுவி அதை நடத்தி வந்தார். வேத போதனைகளை விட்டு ‘மணிக்கிய கொள்கைகளைப்’ பின்பற்றிய இவரை நல்வழிப்படுத்த இவர் தாயார் கடவுளிடம் உபவாசத்தோடும் கண்ணீரோடும் ஜெபம் செய்து வந்தார். இவரிடம் ஒருவித மாறுதலும் காணாமல் போகவே அந்த அம்மையார் அத்தியட்சகரை அணுகித் தம் மகனுடன் உரையாடி அவரைத் திருத்துமாறு மன்றாடினார். அதற்கு அவர் அறிவினால் செருக்கடைந்திருக்கும் அகஸ்டினுக்குத் தம் சொற்கள் பயனளிக்காதென்றும் கடவுளிடம் அவருக்காக ஜெபிப்பதைத் தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை என்றும் சொன்னார். பரி. மானிக்கா விடாப்பிடியாய் தம் மகனை எவ்வகையிலாவது நேர்வழியில் கொண்டுவர வேண்டுமென்று மன்றாடினார். அதற்கு அவர் “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக. இவ்வாறு கண்ணீர் விட்டுச் செய்யும் உன் தவமும், ஜெபமும் வீண் போகாது” என்று சொன்னார்.

      அகஸ்டின் தன் தாயாரோடு வாழ்ந்து வந்தக் காலத்தில் தம்முடன் படித்து உறவாடித் தன் மனதில் எழும்பும் எண்ணங்களைக் கொட்டி உயிருக்குயிராக நேசித்த நண்பன் நோய்வாய்ப்பட்டான். அவன் ‘மணிக்கிய கொள்கைகள்’ தவறுதலானவை என்று உணர்ந்து கிறிஸ்தவச் சபையில் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றான். அதைக்குறித்து நம் பக்தர் தம் நண்பரை இகழ்ந்து பேச அவன் “நீ இவ்வாறு நடந்தால் நான் உன்னை நண்பனாகக் கருத மாட்டேன் உன்னை எதிரியாக எண்ணி உன்னை விட்டு விலகுவேன்” என்றான். அதன்பின் நோய் மிகுந்து அவன் இறந்தான். இது நம் பக்தருக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்கிற்று.

      இச்சம்பவத்திற்குப் பின் இவர் அவ்வூரிலிருக்க விருப்பம் கொள்ளாமல் மறுபடியும் கார்த்தேஜ் சென்றார். மணிக்கிய வேத நூல் வல்லுநராக கருதப்பட்ட பாஸ்டஸ் என்ற அத்தியட்சகர் கார்த்தேஜ் வருவதையறிந்து அவர் வரவிற்காக நம் பக்தன் மிகுந்த ஆவலுடன் இருந்தார். ஆனால், அவரிடம் மணிக்கிய தத்துவத்தைக் குறித்து தமக்கு திருப்தி கொடுக்கக்கூடிய விளக்கம் நம் பக்தருக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கும் சமயம், தாம் நடத்தி வந்த பள்ளி மாணவர்கள் கலவரம் செய்ததால் ரோமாபுரி சென்று ஆசிரியனாக வேலை செய்ததுடன் அங்கு ‘மணிக்கிய கொள்கைகளையும்’ ஆழ்ந்து ஆராய வாய்ப்பு கிடைக்குமென்ற எண்ணத்துடன் ரோமாபுரிக்குப் புறப்பட்டார். இவருடைய தாய் இவரைத் தடுத்தும் கேளாமல் ரோமாபுரி போய்ச் சேர்ந்தார். தம் மகனின் செய்கை கண்டு பரி. மானிக்கா மனவருத்தம் கொண்டார். தம் மகனை எப்படியாவது கடவுள் ஆட்கொண்டு தொண்டனாக்க வேண்டுமென்று மிகவும் உருக்கமாக ஜெபித்தார்.

      ரோமாபுரிக்குச் சென்ற பின் இவர் நோய்வாய்ப்பட்டு மரணத்தருவாயிலிருந்தார். பின்னர் நோய் நீங்கி குணமடைந்த பின் தமக்கு நோய் நீங்கியதற்கு தம் தாயின் ஜெபமே காரணம் என்று தாம் சந்திக்கும் அனைவரிடமும் சொன்னார். அங்கிருந்து மிலான் நகருக்குச் சென்றார். அந்நகரத்தில் பரி. அம்புரோசின் சொற்பொழிவுகளைக் கேட்க வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் ஒருநாள் பாண்டிடியேனஸ் என்ற ஒரு பக்தன் பரி. அகஸ்டினையும் இவருடைய நண்பரான ஆல்பியஸ் என்பவரையும் சந்தித்து பரி. அந்தோணியின் வாழ்க்கை வரலாற்றை தாம் வாசித்ததாகவும் அவர் சுவிசேஷம் வாசித்து குணப்பட்ட ஒரு சிறந்த துறவி என்றும் அவர் வாழ்க்கை தம் மனதைக் கடவுள்பால் இழுத்ததாகவும் சொன்னார்.

      அவருடைய உரையாடல் நம் பக்தரை அசைத்தது. ஆனால் தம்மை முழுவதுமே கடவுளுக்குத் தத்தம் செய்ய அவர் தயாராகவில்லை நான் தூயவாழ்க்கை நடத்தவேண்டும். ஆனால் இன்னும் கொஞ்ச காலம் நான் சிற்றின்பம் அனுபவிப்பேன் என்று தம் மனதில் சொல்லிக்கொண்டார். தம் மனதில் எழும்போராட்டத்தைப் பற்றி தம் நண்பன் ஆல்பியஸ் என்பவரிடம் பெருமூச்சுடன் அடிக்கடி பேசி வந்தார். ஆனால் அதனால் சாந்தி கிடைக்கவில்லை. மன அமைதியின்றித் தவித்தார். தனிமையில் இருக்க விரும்பித் தம் நண்பரை விட்டுப்பிரிந்தார்.

      ஒரு நாள் தனிமையாகப் போய் ஒரு அத்திமரத்தினடியில் விழுந்து அழுதார். “ஆண்டவரே எப்பொழுதும் என்மேல் கோபமாயிருப்பீரோ, நான் செய்த குற்றங்களை மறக்க மாட்டீரோ” என்று அழுது புலம்பினார். பின்னர் தான் தம் பாவங்களால் பின்னும் இழுப்புண்டு, தன்னை முழுவதும் ஒப்புக் கொடுக்க் தாம் தயங்குவதாக எண்ணித் தம்மையே நொந்து “எவ்வளவு காலம் இவ்வாறு இருப்பேன் ஆண்டவரே, நாளை வரையிலா? ஏன் இன்றே கூடாது? என் இழி நிலையை இந்த நேரத்திலேயே ஏன் முடிவு செய்யக்கூடாது” என்று வருந்தி வருந்தி நொந்தார்.

      அப்பொழுது அண்டையிலுள்ள வீட்டில் ஒரு சிறு பிள்ளையின் குரல் லத்தீன் மொழியில் இசையாக “எடுத்து வாசி, எடுத்து வாசி” என்று கேட்டது. உடனே அகஸ்டினுக்கு அழுகை நின்றது. முகம் மலர்ந்தது. பரி. அந்தோணியர் வாழ்க்கையில் சுவிசேஷ வாசிப்பில் மாறுதல் காணப்பட்டது நினைவிற்கு வந்தது. ஆல்பியஸ் இருந்த இடத்தில் விட்டுப்போன பரி. பவுல் அப்போஸ்தலனின் நிருபத்தை திறந்து பார்க்க பரி. அகஸ்டின் கீழ்கண்ட வரிகளைக் கண்ணுற்றார்.

     “ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளைத் தள்ளிவிட்டு ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக் கொள்ளக்கடவோம். வெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல் பகலிலே நடக்கிறவர்கள் போலச் சீராய் நடக்கக்கடவோம். துர் இச்சைகளுக்கு இடமாகக் உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுங்கள்.” அதற்கு மேலும் வாசிக்க இவருக்கு தோன்றவில்லை; வாசிக்க அவசியமில்லை என்று எண்ணினார்.

      மனதில் அமைதியும் உடலில் புது வலிமையும் உள்ளத்தில் நம்பிக்கையும் உண்டாகக் கண்டு அகமகிழ்ந்தார். தம் நண்பருடன் உடனே தம் தாயாரைக் கண்டு தாம் குணமடைந்த நற்செய்தியை தெரிவித்தார். பின் நம் பக்தன் தம் உள்ளம் உருகி “பதவிக்காகவும் உலக செல்வத்துக்காகவும், சிற்றின்பங்களுக்காகவும் இனிமேல் எனக்கு மனக்கவலை ஏது? என் உதடுகள் உம்மைக் குறித்தும் உம் மேன்மையைக் குறித்தும் என் மீட்பைக் குறித்துமே பேசும்” என்று பாடினார்.

      தமது இருபத்திரண்டாவது வயதில் கி.பி. 386 இல் பரி. அகஸ்டின் மறுபிறப்படைந்து நமதாண்டவருக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தார். இதையறிந்து இவருடைய தாயார் பரி. மானிக்கா அளவு கடந்த சந்தோஷம் அடைந்தார். மிலான் நகர் சமீபத்திலுள்ள ஒரு கிராம இல்லத்திற்குத் தன் நண்பர்களுடன் சென்று ஜெபத்திலும் சிலகாலம் கழித்தார். இவருடைய தாயார் அவருக்கும் பணிவிடை செய்து அவருடைய தியானத்தில் பங்கெடுத்து வந்தார்கள். மறுவருடம் உயிர்த்தெழுந்த திருநாளுக்கு முந்தின நாள் மாலை பரி. அம்புரோஸ் மிலான் நகரில் ஞானஸ்நானம் பெற்றார். பின்னர் தம் வாழ்நாட்களைத் தன் சொந்த நாடாகிய ஆப்பிரிக்காவில் செலவிட விரும்பி தன் தாயாருடனும் சில நண்பர்களுடனும் மிலான் நகரிலிருந்து புறப்பட்டு தன் நாட்டிற்குச் செல்லும் கப்பலில் ஏறும் எண்ணத்துடன் துறைமுகப் பட்டிணமாகிய ஆஸ்ட்டியாவிற்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருடைய தாயார் பரி. மானிக்கா இவ்வுலக வாழ்க்கையை விட்டு மறுமைக்குள் பிரவேசித்தார்கள்.

      இச்சம்பவம் நம் பக்தன் தன் பிற்கால வாழ்வுக்கென்று வகுத்திருந்த திட்டத்தை மாற்றும்படி செய்தது. தம் நாடு செல்ல வேண்டுமென்ற விருப்பத்தை விட்டு தான் பிறந்து வளர்ந்த ஊராகிய தாகஸ்தேசுக்கு வந்து அங்கு சுமார் மூன்று வருடம் ஜெபத்திலும் தியானத்திலும் செலவிட்டார். கி.பி. 390 இல் ஹிப்போ நகரில் ஆலய குருவாக நியமிக்கப்பட்டார். குருத்துவ ஊழியத்திலுள்ள பொறுப்பையும் அவ்வூழியத்தில் தான் ஆற்ற வேண்டிய பணியின் விரிவையும் அறிந்து கண்ணீர்விட்டு முதலில் அவ்வூழியத்தை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். பின்னர் பொது மக்களின் வேண்டுகோளுக்கும் அத்தியட்சகர் வலேரியஸ் என்பவரின் வற்புறுத்தலுக்கும் இணங்கி அவ்வூழியத்தை ஏற்றுக்கொண்டார்.

      நம் பக்தரின் தூய்மையான வாழ்க்கையும் வேத சாத்திர அறிவும் சொற்பொழிவாற்றும் திறமையும் மக்கள் மனதைக் கவர்ந்தன. அக்காலத்தில் கிறிஸ்தவ மக்கள் மரித்தவர்களின் கல்லறைத் தோட்டங்களில் விழாக்கள் நடத்தி குடித்து வந்தார்கள். இதை அறவே நிறுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் அவர்களிடம் நேராகப் பேசி சொற்பொழிவு செய்தார். அதைக் குழுமியிருந்த மக்கள் கேட்டு கண்ணீர் வடித்து தங்கள் தவறுதல்களை உணர்ந்து அந்நாள் முதல் அத்தீய பழக்கத்தை விட்டு விட்டதாக வரலாறு கூறுகிறது.

      நம் பக்தனின் எல்லைக்குள் மற்றொரு துர்ப்பழக்கமும் இருந்தது. சிசெரியா என்னப்பட்ட இடத்தில் தகப்பன், மக்கள் சகோதரர் உறவினர் இரண்டுக் கட்சியினராகப் பிரிவுபட்டு வருடத்தில் ஒரு சமயம் பல நாட்கள் தொடர்ச்சியாக ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து கலகம் செய்வது வழக்கம் இக்கலகத்தைப் பார்க்க அநேக மக்கள் வந்து சந்தோஷமடைவார்கள். இதன் விளைவாக கிறிஸ்தவ மக்களின் குணம் கீழாகப்போய், சபையின் நிலைமை சீர்கெட்டு வந்தது. பரி. அகஸ்டின் நமதாண்டவரிடம் அம்மக்களுக்காக மன்றாடி அக்கூட்டத்தாருடன் கண்ணீரோடு பேசி வருடந்தோறும் நடக்கும் அக்கலகத்தைத் தவிர்க்க வேண்டுமென்று வேண்டினார். இதற்காக அவர் சொல்வன்மையையும் அவருடைய சுயநலமற்றத் தன்மையையும் புகழ்ந்து பேசினார்களேயொழிய, அவர்கள் தங்கள் பழக்கத்தை விடுவதாக இல்லை. ஆனால், இறுதியில் நம் பக்தன் வெற்றியடைந்தார். அப்பழக்கம் அவர்களை விட்டகன்று அங்கு சமாதானம் நிலவக்கண்டார்.

      அத்தியட்சகர் வலேரியஸ் தம் முதுமையாலும் அத்தியட்சாதீனத்தின் பொறுப்பு அதிகமானதாலும் நம் பக்தனை உதவி அத்தியட்சகராக்க வேண்டுமென்று பிரதம அத்தியட்சகரைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே கி.பி. 395 இல் பரி. அகஸ்டின் உதவி அத்தியட்சகராக நியமிக்கப்பட்டார். அத்தியட்சகர் வலேரியஸ் மறுவருடம் காலமானார். ஆகவே நம் பக்தன் அத்தியட்சகராக முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.

      பரி. அகஸ்டின் தன் உணவைக் குறைத்து, பிறருக்கு விருந்து அளிக்க சந்தர்ப்பம் ஏற்படும்போது, அதற்காக ஆடம்பரமாக செலவழிக்க அனுமதிக்கவில்லை. ஏழைகளுக்கு உதவி செய்வதிலும், விதவைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஒத்தாசை செய்வதிலும், அதிக ஊக்கம் காண்பித்தார். அத்தியட்சகராகும் முன்பே தன் பூர்வீக சொத்துக்களனைத்தையும் தகஸ்தே கோவிலின் பராமரிப்புக்காக கொடுத்து விட்டார். சிறந்த கல்வியறிவும் வேத ஞானமுள்ள நம் பக்தன் எழுதிய புத்தகங்களும் நிருபங்களும் அநேகம். அவற்றில் முக்கியமான புத்தகம் “பாவ அறிக்கை” சுமார் கி.பி. 377 இல் எழுதப்பட்டது. அவர் எழுதிய மற்றொரு சிறந்த நூல் “கடவுளின் பட்டணம்”.

      நம் பக்தன் குருத்துவ ஊழியத்தில் சேர்ந்த பொழுது பல வேத புரட்சிக் கட்சிகள் கிறிஸ்தவ உலகின் பல பாகங்களில் கிளம்பி, சபைகளுக்கு கிளர்ச்சி செய்தன. பரி. அகஸ்டின் தன் குணப்படுத்துதலுக்கு முன் ஆதரித்து வந்த மணிக்கிய தத்துவ இயக்கத்தினர் ஒருமுறை அவரிடம் வந்து, மூன்று நாள் கிறிஸ்தவ சத்தியங்களை குறித்துப் பேசிய பின்னர், அவர்களுள் முக்கியமானவர்கள் கிறிஸ்தவச் சத்தியங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சபையில் சேர்ந்தார்கள். நம் பக்தனின் வேத அறிவையும் தூய்மையான வாழ்க்கையையும் உலகத்தில் பற்பல பாகங்களிலுள்ள வேத வல்லுநர்கள் கேள்விப்பட்டு, அவருடைய நட்பை நாடினார்கள்.

     இருவேதப் புரட்சியினர் பிரிஸ்ஸில்லி யனிஸ்ட்ஸ் என்ற கட்சியினரும், ஆரிஜெனிஸ்ட்ஸ் என்ற கட்சியினரும் ஆத்துமா தெய்வீகத்தன்மையுள்ளது. அது பின்னர் சீர்கெட்டுப் போனதால் கறைதிரை போய் பூரணமாகும்படி கடவுளால் இவ்வுலகத்திற்கு அனுப்பப்படுகிறது என்ற கொள்கையை ஐரோப்பாவின் சில பாகங்களில் போதித்துக் கொண்டிருந்தனர். இக்கொள்கையைக் குறித்து நம் பக்தனின் கருத்தை அறியும்படி ஓர் அறிஞர் ஸ்பானியா தேசத்திலிருந்து புறப்பட்டு நம் பக்தனிடம் வந்து ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதை எதிர்த்தும் பரி. அகஸ்டின் ஒரு சிறந்த விளக்கவுரை விடுத்தார். டோனடிஸ்ட்ஸ் என்ற இன்னொரு கட்சி கி.பி. 305 இல் உண்டாகி ஆப்ரிக்கா கண்டத்தில் பலங்கொண்டு சபையில் பிரிவை உண்டாக்கி வந்தது. கூட்டங்களுக்கு அக்கட்சியின் மூத்தவர்களை வரவழைத்து தன் வேத அறிவினாலும் சொல்வன் மையினாலும் நம் பக்தன் அவர்கள் தவறை உணர்த்தினார். அக்கட்சி வரவர பலன் குன்றி அழிந்து போயிற்று.

      யூத மார்க்கத்தாருக்காகவும் கிறிஸ்துவை அறியாத மற்ற மக்களுக்காகவும் நம் பக்தன் ஊக்கமாய் ஜெபிப்பதோடு அவர்களோடு பழகி, ஒரே தேவனை வழிபடுவதும் அவர் இவ்வுலகத்திற்கு அனுப்பிய நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பது அவசியம் என்பதைக் குறித்து அவர்களுக்குச் சொற்பொழிவுகள் மூலம் விளக்கினார். அவர் பிரசங்கத்தினால் அநேக புறமதஸ்தர்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்.

      கி.பி. 428 இல் பானிபஸ் அழைப்புக்கிணங்கி ஜென்சிராக் என்பவரின் தலைமையில் வன்டல்ஸ் என்பவர்களின் பெரியசேனைகள் ஸ்பானியா நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு வந்தது. அச்சேனையிலுள்ளவர்கள் நகரங்களை சுட்டெரித்து, மக்களைக் கொடூரமாய் நடத்தினார்கள். சபைகளை நிர்வகித்த அந்த அத்தியட்சகர்களும் குருமாரும் அச்சேனை வருமுன் அந்நாட்டை விட்டு ஒடிவிடக் கூடாதென்று உறுதியாகக் கட்டளையிட்டார்.

      பரி. அகஸ்டின் இருந்த பட்டணமாகிய ஹிப்போ முற்றுகையிடப்பட்டது. சுமார் 14 மாதகாலமாக முற்றுகையிலிருக்கும்போது, பரி. அகஸ்டின் நோய்வாய்ப்பட்டார். வெளியில் யுத்த ஆரவாரம் நடக்கும்போது நம் பக்தன் அமைதியாக ஜெபம் செய்து தன்னை யாரும் தியானத்திலிருந்து கலைக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டார். தனக்கு உணவு கொண்டுவரப்படும் நேரம் மட்டுமே தன்னைப்பார்க்க விரும்பிய நண்பர்களைத் தன்னிடம் வர அனுமதித்தார். வியாதி அதிகரித்தபொழுது தன் கண்களுக்கு எதிரே தாவீதின் மனஸ்தாப சங்கீதங்களைப் பெரிய எழுத்துக்களில் எழுதி தொங்கவிடும்படிச் செய்து அவற்றைக் கண்ணீரோடு வாசித்து தியானம் செய்தார். உடல்நலம் அதிகமாகக் கெட்டு, அவர் மரணத்தருவாயிலிருக்கும்போதும் அவருடைய மன நிலையும் மலர்ந்த முகமும் பாதிக்கப்படவில்லை. இவர் தன் எழுபத்தாறாம் வயதில் ஆண்டவரோடு இளைப்பாறுகிற பரம பக்தரோடு சேர்ந்து கொண்டார்.

பிறப்பு: கி.பி. 354, நவம்பர் 3, (தாகஸ்தே, நுமிடியா)

இறப்பு: கி.பி. 430, ஆகஸ்டு 28

Posted in Missionary Biography on November 29 at 02:31 PM

Comments (0)

No login
gif