Today Bible Verse

Dr. Horatius Bhonar History in Tamil

     டாக்டர் ஹொரேஷியஸ் போனர் அவர்கள் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்து, சிறந்த ஞானப்பாட்டுகள் எழுதி, ஒரு கவிஞராகத் திகழ்ந்த பக்தன். பாடல்களின் பொருளை மக்கள் எளிதில் அறிந்து, தங்கள் இருதயத்தைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்க ஏவப்படும்படியான முறையில் அநேக சிறந்த பாடல்களை அவர் எழுதினார். இவர் சுமார் 600 ஞானப்பாட்டுகளை எழுதியுள்ளார், ‘வா, பாவி இளைப்பாற வா’ என்று ஆரம்பிக்கும் பாடலும், ‘மயங்கும் தாசனை, நாதா நீர் நடத்தும்’ என்று ஆரம்பிக்கும் பாடலும் அவரால் எழுதப்பட்டவை. ஞானப்பாட்டுகளைத் தவிர, ஏராளமான கிறிஸ்தவக் கைப்பிரதிகளையும், புத்தகங்களையும், பிரசங்கங்களையும் அவர் எழுதியுள்ளார். அவருடைய பேனா அவரால் பயன்படுத்தப்படாமலிருந்த நாளே கிடையாதென்று அவரைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கின்றது.

    இவர் 1808 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோவில் பிறந்தார். அந்நகரத்திலுள்ள பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்று அதே இடத்திலுள்ள கலாசாலையில் படித்துப் பட்டம் பெற்றார். அவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். ஆனால் அவருடைய பாட்டனாரும், முற்பிதாக்களும் பரம்பரையாகத் திருச்சபையின் ஆத்ம மேய்ப்பராகப் பணியாற்றி வந்தவர்களாவர். அவருடைய தாய் பக்தியும் தூய்மையுமான வாழ்க்கையைக் கடைபிடித்து வந்தார்கள். எனவே, அவர்களுடைய பிள்ளைகள் ஜான், ஹொரேஷியஸ், அந்திரேயா ஆகியோரும் கிறிஸ்தவ சன்மார்க்க நெறியில் வளர்க்கப்பட்டு வந்தார்கள்.

     கல்லூரியில் பயின்று வரும்பொழுது எடின்பரோ நகரத்தில் எளிய மக்கள் குடியிருக்கும் இடங்களுக்குச் சென்று அவர்களுடைய நலனுக்காக அவர் உழைத்து வருவதுண்டு. அப்பொழுதே கடவுளுடைய பணிகளுக்கென்று தம்மை ஒப்புக் கொடுத்து, பிற்காலத்தில் குருவாகப் பணிசெய்ய வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார். குருத்துவப்பணி ஆரம்பித்தபொழுது, லீத் என்னுமிடத்திலிருந்த பரி. யோவான் ஆலயத்தில் உதவிக்குருவாக நியமிக்கப்பட்டார். இவர் சிறு பிள்ளைகளின்மீது பற்றுதலுள்ளவர். எனவே, ஞாயிறு பள்ளியை நடத்துவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.

     சிறுவர்களுக்கேற்ற பாடல்கள் எழுதி, சங்கீத ஞானமுள்ள நண்பர்களைக்கொண்டு அதற்கு இசை அமைத்து, அப்பாடல்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். இவ்வூழியத்தில் அவர் இன்பம் கண்டார். சிறு பிள்ளைகளுக்கென்று முதலில் அவர் பாடல்கள் எழுத ஆரம்பித்து, பின்பு சபையிலுள்ள மக்களுக்கென்றும் பாடல்கள் எழுதுவதில் முனைந்தார்.

    நான்கு வருடங்களுக்குப்பின் 1837 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அவர் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டு, கெல்சோ என்னுமிடத்தில் சபை குருவாகப் பணியாற்ற ஆரம்பித்தார். அங்குள்ள ஆலயத்தில் அவர் முதல் ஞாயிற்றுக்கிழமையில் செய்த பிரசங்கத்தில் ஜெபத்தின் வல்லமையையும், அதின் அவசியத்தையும் வலியுறுத்திப் பேசினார். வெகு சீக்கிரத்தில் தம்முடைய பக்தியினாலும், உழைப்பினாலும் சபை மக்களுடைய நன்மதிப்பிற்குப் பாத்திரரானார். சபையிலுள்ள சிறுவர் சிறுமிகள் அவரின்பேரில் பற்றுதலுள்ளவர்களானார்கள்.

    ஆறு வருடங்களுக்குப்பின், 1848 ஆம் ஆண்டு ஒரு சபை குருவின் மகளான லண்டி என்ற பெண்ணை மணந்து அவருடன் நாற்பது வருடங்கள் இல்வாழ்க்கை நடத்தினார். ஓய்வின்றி உழைப்பதும் மணிக்கணக்காக ஜெபம் செய்வதும் அவருடைய வழக்கமாயிருந்தது. அவருடைய வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்காரி இதைக்கண்டு, “பக்தியுள்ள என் எஜமான் இவ்வளவு நேரம் ஜெபம் செய்தால் ஜெபம் செய்யாமலே காலத்தைப்போக்கும் என்னுடைய கதி என்னவாகிறது?” என்று அங்கலாய்த்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

   சுமார் 30 ஆண்டுகள் கெல்சோவில் பணியாற்றிய பின்பு தாம் பிறந்து வளர்ந்த நகரான எடின்பரோவிற்கு மாற்றப்பட்டார். தமது எண்பதாவது வயது வரைக்கும் அவர் அந்நகரத்தில் ஊழியம் செய்தார். அவருடைய முதுமைக் காலத்தில் அவருக்குப் பல துன்பங்கள் நேர்ந்தன. பிள்ளைகளில் ஐந்து பேர் இளவயதில் இறந்தார்கள். தான் மரிப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன் அருமை மனைவியும் மறுமைக்குள் பிரவேசித்தார்கள். அவரும் நோய்வாய்ப்பட்டார். தினசரி இரவில் குடும்ப ஜெபத்தில் பிள்ளைகளும் வீட்டிலுள்ள பணியாட்களும் அவருடைய படுக்கையைச் சுற்றி முழங்காலிலிருக்க, அவர் உருக்கமாய் உலக மக்களனைவருக்காகவும் ஜெபிப்பார்.

   கடவுளிடம் தம்முடைய உள்ளத்தை ஊற்றி, தம்முடைய குடும்பத்தாருக்கும், சபையிலுள்ள மக்களுக்காகவும், எளியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், துன்பங்களை அனுபவிப்பவர்கள், கிறிஸ்துவை அறியாத மக்கள் என்று அனைவருக்காகவும் கடவுளிடம் மன்றாடி அவர் ஜெபிப்பது முழங்கால்களை ஊன்றி அதைக் கேட்கும் மக்களைப் பரவசமடையச் செய்யும். இவ்வாறு மிக ஊக்கத்துடன் ஜெபித்த பின்பு, திருப்தி கொள்ளாமல், “மக்கள் எவ்வளவு துன்பங்களையும், சரீர வேதனைகளையும் இவ்வுலகத்தில் அனுபவிக்கிறார்கள். நான் குறைவுள்ளவனாக, போதுமான அளவில் அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடவில்லையே” என்று தம்முடைய கடைசி நாட்களில் வருத்தத்துடன் கூறி வந்தார். அவர் 1889 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 31 ஆம் தேதி தனது 81 வது வயதில் எடின்பரோ நகரில் மரணமடைந்தார்.

பிறப்பு: கி.பி. 1808, டிசம்பர் 19, (எடின்பர்க், ஸ்காட்லாந்து)

இறப்பு: கி.பி. 1889, ஜூலை 31, (எடின்பர்க், ஸ்காட்லாந்து)

Posted in Missionary Biography on November 30 at 05:48 AM

Comments (0)

No login
gif