Enoch Wang History in Tamil

ஈனோக் வாங் 

     உலகப்பிரசித்தி பெற்ற மிஷனெரி வாட்ச்மேன் நீ அவர்களின் போதனைகளுடைய அடிப்படையில் செயல்பட்டு வரும் ஒரு கிறிஸ்தவ இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் ஈனோக் வாங் ஆவார். இந்த நாட்களில், இந்த இயக்கத்தில் சீனா முழுவதும் பல லட்சம் மக்கள் உள்ளனர். சகோதரர் ஈனோக் கடந்த 20 ஆண்டுகளில் 16 ஆண்டுகளைச் சுவிசேஷத்திற்காகச் சிறைகளில் கழித்திருக்கிறார். சீன சபையின் முக்கிய தலைவராகிய இவர் எருசலேம் திரும்புவோம் இயக்கத்தைப் பற்றி விவரிக்கிறார். மேலும், அவருடைய வாழ்க்கையில் நடந்ததும், சீனா முழுவதும் பரவலாக அறியப்பட்டதும், நிரூபிக்கப்பட்டதுமான தம்முடைய அனுபவ சாட்சியையும் இந்த அத்தியாயத்தில் கூறுகிறார்.

     சீனக் கலாச்சாரப் புரட்சியின் நாட்களில் நான் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவனாக செயல்பட்டுக் கொண்டிருந்த பொழுது, 1969 ஆம் வருடத்தில் ஒரு கிறிஸ்தவனானேன். இருந்தாலும், நான் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியில் நீடித்து, 1972 ஆம் ஆண்டு, மக்கள் விடுதலை சேனையின் ஆயுதத்தொழிற் சாலையில் பணிபுரிந்தும் வந்தேன்.

     கம்யூனிஸ்ட் கட்சியின் மேலான பதவிகளை வகித்துக் கொண்டிருந்த நான் ஒரு பாஸ்டராக மாறி விட்டிருந்ததினிமித்தம், அவர்களால் பகைக்கப்பட்டு 1982 இல் முதல்முறையாகச் சிறைக்கு அனுப்பப்பட்டேன். அங்கு அவர்கள் பலவிதங்களிலும் என்னைக் கர்த்தரிடமிருந்து பிரித்துவிட முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்குத் தோல்வியே கிடைத்தது.

     நான் கைது செய்யப்பட்டபோது, எங்கள் செல்வ மகளுக்கு மூன்றே வயது ஆகியிருந்தது. என் மனைவியையும் மகளையும் விட்டுப்பிரிந்து இருந்தது. எனக்கு மிகுந்த வேதனையாயிருந்தது. நான் தேசத்துரோகி என்று காரணம் சொல்லப்பட்டு, குற்றவாளியாக்கப்பட்டிருந்தேன். சீன நாட்டின் சட்டப்படி, அப்படிப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்பவர்களும் தேசத்துரோகிகள் என்று கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவார்களாதலால், யாரும் என் மனைவிக்கும், குழந்தைக்கும் உதவிசெய்ய முன்வரவில்லை.

     நாங்கள் ஒரு சிறு வயலில் வாழ்ந்து வந்தோம். அதில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தோம். ஆனால் நான் திடீரென்று கைது செய்யப்பட்டு விட்டதாலும், என் மனைவிக்கு வயல்வேலைகள் தெரியாததினாலும், கூலிக்கு ஆட்களை அமர்த்தக் கூடிய அளவுக்குப் பணவசதி இல்லாததினாலும், வயல் பராமரிக்க முடியாதபடிக்குக் கிடந்தது. சீக்கிரத்தில் பயிரை அறுக்கும் காலம் வந்தபோது, என் மனைவியே வயலை அறுவடை செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே என் சிறு மகள் மாத்திரம் வீட்டிலே தனியாக இருந்து, தன் தாயாருக்குச் சமைத்து வைக்க வேண்டியதாயிருந்தது. அவள் மூன்று வயதிலேயே, நெருப்பு மூட்டுவது எப்படி என்றும், நூடில்ஸ் செய்வதற்குத் தண்ணீர் கொதிக்க வைப்பது எப்படி என்றும் கற்றுக் கொண்டிருந்தாள்.

    சில மாதங்கள் சென்றபின்பு, நான் எங்கள் மாநிலத்திலேயே உள்ள இன்னொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டேன். எனவே என் மனைவியும், குழந்தையும், என் முகத்தையாவது நடுநடுவே பார்த்துக் கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும்படிக்கு, அந்த வயலை அப்படியே விட்டுவிட்டுப் புதிய சிறைச்சாலை இருந்த ஊருக்குக் குடி பெயர்ந்தனர். அவர்கள் குப்பைகளில் கிடக்கும் ஆகாரங்களைப் புசித்தும், அதில் கிடக்கும் விற்கப்படக் கூடியவைகளைப் பொறுக்கி எடுத்து விற்றும், மற்ற நேரங்களில் யாசகம் எடுத்தும் ஜீவனம் செய்து வந்தனர்.

    இதை வாசிக்கும் அன்பானவர்களே, நீங்கள் ஒருபோதும் சீனாவில் சிறையிலே போடப்படும் பாஸ்டர்களுக்காக மட்டும் ஜெபிக்காதீர்கள். அவர்கள் குடும்பத்தினர், அந்தப் பாஸ்டர்களைவிடப் பரிதாபமான சூழ்நிலையில் வாழும்படியாகத் தள்ளப்பட்டுவிடுகிறபடியால், தயவுசெய்து அவர்களுடைய குடும்பங்களுக்காகவும் சேர்த்து ஜெபியுங்கள்.

    சிறைச்சாலையில் என் மனைவியும் என் மகளும் என்னைச் சந்தித்த வேளைகள் அனைத்தும் எனக்கு இனிப்பும் கசப்பும் கலந்த வேளைகளாகவே இருந்தன. அவர்கள் முகத்தைப் பார்ப்பது எனக்குள்ளாக மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், அவர்களுடைய எலும்புக்கூடு போன்ற சரீரங்களைப் பார்ப்பது என்னை மனம் வெதும்ப வைக்கும் நேரங்களாயிருந்தன. அவர்கள் எதைக்குறித்தும் என்னிடத்தில் வந்து முறுமுறுத்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வாழ்ந்து வந்த நிலையைப் பற்றிய சிந்தனைகள் என் சிறைச்சாலையில் அதிகாரிகள் எனக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை விட, இன்னும் அதிகமான மன வேதனைகளைத் தந்தன.

     பதின்மூன்று ஆண்டுகள் கழித்து நான் 1994 இல் விடுதலை செய்யப்பட்ட போது, எனக்கு இன்னொரு பிரச்சனை காத்திருந்தது. என் மனைவியும், மகளும் தாங்கள் 13 ஆண்டுகளாக அனுபவித்து வந்த வேதனைகளையும், உணர்ச்சிகளையும் தங்களை அறியாமலேயே வெளியே காண்பிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே மனமொடிந்துபோய் வந்திருந்த எனக்கு, அவர்கள் அப்படி நடந்துகொண்டது, இன்னும் அதிக மனதுக்கத்தையே தந்தது. நான் அவர்களைப் புரிந்துகொள்ளுவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது.

   சிறைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு மிஷனெரியும் சந்திக்கும், இந்தப் பிரச்சினைக்காகவும், தயவுசெய்து தவறாமல் ஜெபியுங்கள். அவர்கள் குடும்பத்தினரிடம் எதிர்பார்க்கும் காரியங்களுக்கும், குடும்பத்தினர் தாங்கள் கடந்த பல ஆண்டுகளாக அனுபவித்து, வந்த வேதனைகளினிமித்தம், அவர்களில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் காரணமாக அவர்கள் நடந்து கொள்ளும் விதங்களுக்கும், ஒரு பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. ஆனாலும், ஆறுதலின் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் உதவியால், நாங்கள் சீக்கிரமாகவே ஒருவரையொருவர் திரும்பவும் புரிந்து கொண்டு நேசிக்க ஆரம்பித்தோம்.

     என் மகளும் வளர்ந்து, ஒரு அழகிய இளம்பெண்ணாக மாறினாள். 1995 இல், என்னுடைய 45 வது வயதில், கர்த்தர் எங்களுக்கு இன்னொரு அழகிய பெண்குழந்தையைக் கொடுத்தார். “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்: 127:3) என்ற வசனத்தின்படி, நாங்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்.

    1997 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதியிலிருந்து, நான்கு நாட்களுக்கு, சகோதரர் யூன் அவர்கள், நான் இருந்த இடத்திலிருந்த சுமார் 20 மைல்கள் தூரத்திலிருந்த இன்னொரு ஊரில், வீட்டுசபைத் தலைவர்களுக்குள்ளாக, ஒரு ஒற்றுமையைக் கொண்டு வரும், அந்த மிக முக்கியமான கூட்டங்களுக்காக ஆவலோடு காத்திருந்தோம்.

     அந்த சமயத்தில், நானும் என் மனைவியும் பிள்ளைகளும் பாதி கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கட்டிடத்தின் நான்காவது மாடியில் குடியிருந்தோம். எந்தச் தடுப்புச் சுவர்களும் கட்டப்படாதிருந்த வேளை அது.

     நாங்கள் எங்கள் பெயர்களை உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவு செய்திருந்தோமானால், எல்லாரையும்போல, சாதாரண வீடுகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ள முடியும். ஆனால், நாங்கள் பதிவு செய்தால், அதிகாரிகள் உடனடியாக எங்களைக் கைதுசெய்து விடுவார்கள். எனவே நாங்கள் சாதாரண வீடுகளில் வாழ முடியாதவர்களாய், அப்படிப்பட்ட நான்காவது மாடியில், அதிகாரிகளுக்குத் தெரியாமல், வாழ்ந்து கொண்டிருந்தோம்.

     நாங்கள் மிக ஆவலோடு எதிர்நோக்கியிருந்த அந்த 1997 ஆம் ஆண்டின் ஜனவரி முதலாம் தேதியும் வந்தது. நான் அந்த ஒற்றுமைப்படுத்தும் கூட்டத்துக்குச்செல்ல என்னை அந்த நாளின் காலை வேளையில் ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு அலறல் சத்தம் கேட்டது. எங்கள் 15 மாத அன்பு மகள், தன் அக்காவின் கைகளிலிருந்து வழுக்கி, அந்த 4 வது மாடியிலிருந்து, கீழே தரையிலே தவறி விழுந்து விட்டாள். என் மனைவி அந்தக் குழந்தையை அணைத்துக் கொண்டே, சீக்கிரம் வாருங்கள், பிள்ளையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று அழுது கொண்டிருந்தாள். பிள்ளையிடம் சுவாசம் இல்லை. அவளுடைய தலையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவளுடைய மூளையின் ஒரு பகுதி வெள்ளையாக வெளியே தெரிந்து கொண்டிருந்தது.

   நான் ஒரு தர்மசங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். பல சிந்தனைகள்: உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் மனைவி ஒரு புறம். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்றால் பிள்ளை பிழைத்துக்கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றாலும், நாங்கள் பதிவு செய்துகொள்ளாதவர்கள் ஆதலால், உடனடியாக நான் கைது செய்யப்பட்டு, நானே என் குழந்தையை கொலை செய்துவிட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டு, பல ஆண்டுகளுக்குச் சிறைக்குள் தள்ளப்பட்டு விடுவேனே என்ற சிந்தனை மறுபுறம். ஒற்றுமைப் படுத்தும் அந்த மிக முக்கியமான கூட்டத்துக்குச் செல்லமுடியாமல் போய்விடுமே என்ற வேதனை இன்னொருபுறம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் பதிவு செய்யாதவர்கள் என்பதை அறிந்திருந்தும், எங்களைத் தன் கட்டிடத்தில் தங்க அனுமதிகொடுத்திருந்த, அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு, அரசாங்கத்தால் கொடுக்கப்படும், உபத்திரவங்களைப் பற்றிய சிந்தனைகள் நான்காவது புறம். எனவே என்ன முடிவு எடுப்பது என்று நான் திகைத்துக்கொண்டிருந்தேன்.

    நான் முழங்காற்படியிட்டு ஜெபித்தேன். அதிர்ச்சி, தாங்கொண்ணாத துக்கம், கோபம் ஆகிய மூன்றும் நிறைந்தவனாக, பித்துப்பிடித்தவன் போல, இப்படியாக ஜெபம் பண்ணினேன். பின்பு தான், இது எவ்வளவு மதியீனமான ஜெபம் என்பதை உணர்ந்தேன். “ஆண்டவரே, சீனாவில் உள்ள வீட்டுசபைகள் மத்தியிலே ஒரு ஒற்றுமை உணர்வு உண்டாக வேண்டுமென்பது உமது சித்தமானால், என் மகளுக்குத் திரும்ப உயிரைத்தாரும். இன்றே அவளுக்கு நீர் சுவாசத்தைத் தந்து, நாளை அவளைப் பேசும்படி செய்து, நாளைய மறுதினம் அவளை நடக்கும்படி செய்யும். என் மகள் பிழைத்துக் கொண்டு, மூன்று நான்கு தினங்களுக்குள் தானாகவே எப்போதும் போல தத்தித் தத்தி நடக்கவில்லை என்றால், இந்தக் கூட்டங்களை நாங்கள் மனுஷீகமாக நடத்துகிறோம் என்றும், சீன வீட்டுசபைகள், பலவித உபதேச வேறுபாடுகளோடுமே தொடர்ந்து செயல்படுவதுதான் உம்முடைய சித்தம் என்றும் நாங்கள் எடுத்துக் கொள்ளுவோம், என்று வெறிபிடித்தவன்போல் ஜெபித்து முடித்தேன்.”

    என் மனைவி தொடர்ந்து பிள்ளையைக் கைகளில் வைத்து ஆட்டிக் கொண்டே இருந்தாள். என் பெரிய மகளோ, உள்ளம் உடைந்தவளாக, தன்னால்தானே, இத்தனையும் ஏற்பட்டது என்று சொல்லி, அடக்க முடியாமல் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.

     நான் என் பெரிய மகளிடமும் மனைவியிடமும் சொன்னேன். நாம் இனி அழுதுகொண்டு இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. உங்கள் கண்களைத் துடைத்துக்கொள்ளுங்கள். நாம் பதிவு செய்து கொள்ளாதவர்கள் என்பதால், பிள்ளையை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடியாது. இது சாத்தான் என்னை இந்த ஒருமைப் படுத்தும் கூட்டங்களில் கலந்து கொள்ள விடாதபடிக்குத் தடைசெய்து, நம்மூலம் வழிநடத்தப்படுகிற ஆயிரக் கணக்கான வீட்டுசபைகளை, மற்ற வீட்டு சபைகளோடு இணைந்து செயல்படுவதைத் தடைசெய்யும்படிக்கு, அவனால் கொண்டு வரப்பட்ட ஒரு சூழ்ச்சியே, எனவே, நாம் அவனுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். பிள்ளையை ஆண்டவர் உயிர்ப்பிப்பார். தைரியமாயிருங்கள் என்றேன். சற்று நேரத்தில் என் மனைவியும், பெரிய மகளும் அழுகையை நிறுத்தி, நான் சொன்னதை ஒப்புக்கொண்டு சமாதானமடைய ஆரம்பித்தனர்.

    நான் அன்று பிற்பகலில், என் சகஊழியக்காரர்களோடு புறப்பட்டு, கூட்டம் நாடந்த இடத்துக்குச் சென்றடைந்தோம். சகோதரர் யூன் பேசிக்கொண்டிருந்தார். மாலையில் உணவு வேளையில், நானும் என் சக ஊழியக்காரர்களும் உபவாசம் இருந்து தொடர்ந்து பிள்ளைக்காக ஜெபித்துக் கொண்டிருந்தோம். கூட்டத்துக்கு வந்திருந்த மற்ற எந்தத் தலைவர்களோடும், என் துக்கத்தை நான் பகிர்ந்து கொள்ளவில்லை.

   முதல் நாள் கூட்டம் முடிந்த பின்பு, அனைவரும் அங்கேயே இராத்தங்கினர். நானோ, என் சக ஊழியர்களிடத்தில், என் குழந்தையைப் பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் மட்டும் தனியாக வீடு திரும்பினேன். என் மனைவியையும், பெரிய மகளையும் உற்சாகப்படுத்த வேண்டிய பொறுப்பும் எனக்கு இருந்ததால், நான் அங்கேயே இராத்தங்காமல் வீட்டிற்கு வந்தேன். என் மனைவி, மகளுடைய கண்கள் சிவந்து போயிருந்தன. என் மனைவி குழந்தையை மடியில் வைத்துக் கொண்டிருந்தாள். நான் குனிந்து, குழந்தையின் தலையில் கை வைத்து ஜெபித்தேன். என்ன ஆச்சரியம்! பிள்ளையின் தொண்டையிலிருந்து ஒரு சிறுசத்தம் வந்து, பிள்ளை மறுபடியும் மூச்சுவிட ஆரம்பித்தது. அல்லேலூயா! நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கர்த்தர் ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டிருந்தார்.

   மறுநாள் காலை ஐந்து மணிக்கு நான் எழுந்து, இரண்டாம் நாள் கூட்டத்துக்குச் சென்று இரவு 10 மணிக்குக் கூட்டம் முடிந்த பின்பு வீடு திரும்பினேன். நான் வீட்டுக்குள் சென்றபோது, என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. என் குழந்தை, தன் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தாள். ஆனாலும், வேறு எந்த அசைவுகளும் பிள்ளையினிடத்தில் காணப்படவில்லை. நான் மெல்லக் குழந்தையின் அருகில் சென்று “ஷெங் லிங்” என்று அவளுடைய பெயரைச் சொல்லிக்கூப்பிட்டேன். உடனே அவள் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மெல்லிய குரலில் எதையோ சொன்னாள். நாங்கள் துள்ளிக் குதித்து, நம் தேவாதி தேவனைத் துதித்து, அவருக்கு நன்றிகளைச் செலுத்தினோம்.

   அடுத்த நாளிலும், நான் காலையிலேயே எழுந்து, மூன்றாம் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டேன் (யோவான்:17:22,23) வசனங்களில் காணப்படுகிறபடி, “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல, அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும் படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல, அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும் நான் அவர்களிலும், நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.” இயேசுவானவரின் விருப்பம் சபைகள் இணைந்து, ஒன்றாயிருந்து செயல்படுவதேயாகும் என்று மீண்டும் மீண்டும் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது.

    நான் அன்று இரவில் வீடு திரும்பியபோது, குழந்தை கண்களைத் திறந்து பால் குடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளுக்கு நேராகக் கைகளை விரித்துக் கொண்டு, மகளே அப்பாகிட்டே வாம்மா என்று அழைத்தேன். உடனே அவள் தாயிடமிருந்து இறங்கி, என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். என் மனைவி உடனே அவளைத் தூக்கிக்கொண்டாள்.

    நான் மிகுந்த உற்சாகத்தோடு, நான்காவது நாள் கூட்டத்துக்குச் சென்றேன். அந்தக் கடைசி நாள் கூட்டத்தில், சகோதரர் யூன் தன் கடைசிச் செய்தியைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது எங்கள் பெரிய மகள், மிகுந்த சந்தோஷத்தோடு, கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து, என் காதுகளில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னாள். “ஷெங் லிங்” இப்பொழுது, முன்போலவே நன்றாக மழலை பேசுகிறாள், நடக்கிறாள் என்றாள். என் மகிழ்ச்சியை என்னால் அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. அங்கு கூடியிருந்த நூறு தலைவர்களுக்கும் அதிகமானவர்கள் மத்தியிலே, நான் ஒரு சில நிமிஷங்கள் பேச அனுமதிகேட்டேன். அவர்கள் உடனே சரி என்றனர். நான் ஷெங் லிங் கைப்பற்றி சாட்சி கொடுத்தேன். எப்படி அவள் விழுந்தாள் என்பதையும், நாங்கள் பிசாசுக்கு எதிர்த்து நிற்க முடிவு எடுத்திருந்ததையும், தேவன் எப்படி அற்புதமாகப் படிப்படியாக, நாங்கள் ஜெபித்தபடியே அவளுக்குச் சுகம் தந்தார் என்பதையும் விவரித்து, நான் என் ஜெபத்திலே எப்படி ஷெங் லிங்கின் குணமாக்குதலின் மூலம் கர்த்தர் சீன சபைகளை ஒருமனப்படுத்துவதை வெளிப்படுத்தும்படிக்குக் கேட்டிருந்தேன் என்பதையும் நான் பகிர்ந்துகொண்டபோது, இவ்வளவு தெளிவாக வழிநடத்திய தேவாதி தேவனை எல்லாரும் மனமாற ஸ்தோத்தரித்தனர்.

   நான் மதியீனமாக, முதல் நாளில் ஷெங் லிங்குக்கு, சுவாசத்தைத் தரவேண்டும்; மறுநாளில் அவளைப் பேச வைக்கவேண்டும்; மூன்றாம் நாளில் அவளை நடக்க வைக்கவேண்டும் என்று கர்த்தருக்குக் கட்டளையிட்டிருந்தாலும், கர்த்தர் சீன சனசபையை ஐக்கியப்படுத்தும், தம் சித்தத்தை வெளிப்படுத்தும்படிக்கு, அந்த என் ஜெபத்துக்கு அப்படியே அந்த மூன்று நாட்களிலும் பதில் கொடுத்தார் என்பதை அறிந்தபோது, தேவனுடைய கிருபைகளையும், அவருடைய இரக்கத்தையும் உணர்ந்து, எல்லா சபைகளும் இணைந்து எருசலேம் திரும்புவோம் தரிசனத்தைப் பரிபூரணமாக நிறைவேற்றுவோம் என்று தீர்மானம் எடுத்தோம்.

   இப்பொழுது (2004) அவளுக்கு எட்டு வயதாகிறது. ஒரே ஒரு சிறு தளும்பு மாத்திரமே அவளுடைய தலையில் காணப்படுகிறது. பள்ளிக்குச் சென்று நன்றாகப் படித்து வருகிறாள். வேறு எந்தப் பின் விளைவுகளும் இல்லை.

 

Posted in Missionary Biography on December 22 at 08:21 AM

Comments (0)

No login
gif