Today Bible Verse

Carl Baker History in Tamil

கார்ல் பேக்கர்

     குடும்ப பொறுப்பைச் சுமக்க வேண்டிய ஒருவருக்கு மிஷனெரி பணிக்கு அழைப்பு உண்டா? அவரும் தேவனுக்கு உயர்ந்ததொரு பணி செய்ய முடியுமா? இக்கேள்விகளுக்கு பதிலாக அமைவதுதான் கார்ல் பேக்கர் அவர்களின் வாழ்க்கை.

     பள்ளிப் படிப்பை முடித்துப் பல வருடங்கள் ஆன பின்னும், தனது மேற்படிப்பினை தொடர முடியாத நிலையிலுள்ள ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் கார்ல் பேக்கர். தனது விதவை தாயையும், திருமணமாகாத சகோதரியையும் காப்பாற்ற வேண்டிய நிர்பந்தமான நிலையில் இருந்தார் அவர். அந்த ஊதியத்தில் சிறுகச் சிறுக சேர்த்து நூறு டாலர்- ஐ தனது மருத்துவப் படிப்பிற்காக முன் பணமாகக் கொண்டு கல்லூரியில் சேர்ந்தார். அப்போது “நீர் எனக்கு நல்ல படிப்பை தந்தால், என் வாழ்வை உமக்கு அர்ப்பணித்து உமக்கு ஊழியம் செய்வேன்” என தேவனுடன் உடன்படிக்கை செய்தார்.

     1916-ம் ஆண்டு 22-வது வயதில் பிலதெல்பியா மருத்துவ கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை படித்துக் கொண்டிருந்தார். அப்போது முதலாம் உலகப் போர் ஆரம்பித்ததால், போரில் காயப்பட்டவர்களுக்கு இலவசமாக தங்கும் அறையும், உணவும் ஊக்கத்தொகையும் வழங்கினார்கள். இதனால் எளிதாக தனது மருத்துவப் படிப்பை படித்து முடித்தார் பேக்கர். 1922-ல் மரியா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். திருமணத்தின்போது மரியாவிடம் தான் தேவனிடம் செய்த உடன்படிக்கையையும் தனது வாழ்வில் முதன்மையானவர் கிறிஸ்து மட்டுமே என்பதையும் தெளிவுபடுத்தினார். அதற்கு மரியாவும் சம்மதித்திருந்தார். திருமணத்திற்குப்பின் அமெரிக்காவில் பயர் பட்டணத்தில் மருத்துவராகப் பணிபுரிந்து வந்தார். அவரது திறமையான சிகிச்சையால் அவருக்கு பெயரும் புகழும் கிடைத்தது.

    தேவனுடன் அவர் செய்திருந்த உடன்படிக்கையை சார்லஸ் ஹார்ல்பேர்ட் என்ற மிஷனெரியிடமிருந்து வந்த ஒரு கடிதம் அவருக்கு மீண்டும் நினைவு படுத்தியது. ஆப்பிரிக்காவிலுள்ள காஸ்கோ என்ற பகுதியில் ஊழியம் செய்த தனது மருமகள் எலிசபெத் மோர்ஸ் ஹார்ல்பேர்ட் என்ற மருத்துவ மிஷனெரி திடீரென்று இறந்து போனதால் அந்த பகுதியில் பணிபுரிய ஒரு மருத்துவர் தேவை என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.  தேவனுக்கு செய்த அர்ப்பணிப்பு பேக்கரை அதிகம் உந்தி தள்ளியது. என்றாலும் கடைசிநாட்களில் தனது தாயைக் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு அவரை அழைப்புக்குக் கீழ்ப்படிய இயலாமல் தடுத்தது. எனவே, தன்னால் ஆப்பிரிக்காவிற்கு வர இயலாது என கடிதம் எழுதினார் பேக்கர். ஆனால் சார்லஸ் சோர்ந்து போகாமல் தொடர்ந்து கடிதம் எழுதி, அவரை ஊக்குவிக்கவே 1928-ம் ஆண்டு தனது நல்ல வருமானம், புகழ் தந்த வேலையை விட்டுவிட்டு ஆப்பிரிக்கா காடுகளில் பணி செய்ய பயணமானார்.

     ஆப்பிரிக்காவில் காஸ்கோ காடுகளிலுள்ள, காட்வா என்ற இடத்தில் முதலில் தங்கி பணிசெய்ய ஆரம்பித்தார். அங்கு மண் குடிசையில் வாழவேண்டியிருந்தது. அவரது மனைவி மேரியோ அதை அலங்கரித்து மாளிகையாக மாற்றினார். ஆறு வருடம் அங்கு பணி செய்தபின் 1934-ம் ஆண்டு ஓசா என்ற இடத்தில் ஒரு சிறிய மருத்துவமனை நிறுவி இட்டுரி காட்டு மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஆரம்பித்தனர். அனுதினமும் 200 க்கு மேற்பட்ட மக்கள் தூரமான இடத்திலிருந்து இவரது மருத்துவமனைக்கு வந்து உடல் ஆரோக்கியம் பெற்றனர். சரீர சுகம் தேடிவரும் மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்காமல் இவர் அனுப்பியதே இல்லை. இவரது மருத்துவ பணியின் மூலம் தீய ஆவிகள் மற்றும் மந்திரவாதிகளின் கட்டுபாட்டிலிருந்த கிராம மக்களையும் எளிதாக சுவிசேஷத்திற்கு செவிசாய்க்க வைக்க முடிந்தது.

    மருத்துவப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டாலும் ஒவ்வொரு வார இறுதியிலும் சனி, ஞாயிறு முழுவதும் சுவிசேஷ பணிக்காக மட்டுமே ஒதுக்கி வைத்து பணிபுரிந்தார். சுவிசேஷத்தை சரியாக புரிந்துகொள்ள கூடிய வடிவில், வேத கதைகளை ஆப்பிரிக்கா சூழ்நிலைக்கு ஏற்ப விளக்கக் கூடிய படங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை அவரே உருவாக்கினார். அதை உபயோகித்து, எவரும் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை எளிதாக பிரசங்கிக்க முடியும். இதனை ஆப்பிரிக்க விசுவாசிகளுக்கு இவர் கற்றுக்கொடுத்து, சுவிசேஷத்தை அறிவிக்க அவர்களை ஊக்கப்படுத்தினார். ஆப்பிரிக்க காட்டு மனிதர்கள் அந்த புத்தகத்தை உபயோகித்து, மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவித்துக் கொண்டிருப்பதை பார்த்து ஆண்டவரை துதித்தார். தினமும் 100க்கு மேற்பட்டவர்களுக்கு சுவிசேஷம் சொல்லுவது மட்டுமல்லாமல், தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளை முறையாக ஆவிக்குரிய வாழ்வில் வளர்க்கவும், அவர்களை குணமடைந்தபின், தாங்கள் வாழும் இடத்தில் திருச்சபையில் இணைந்து ஆண்டவரை ஆராதிக்க செய்ய வேண்டிய பொறுப்பு உண்டு என்பதை அறிந்து செயல்பட்டார்.

     மனநோயாளிகளை, பிசாசு பிடித்தவர்கள் என்று ஆப்பிரிக்கர்கள் நம்பியதால், குடும்பத்தாராலும், சமுதாயத்தாலும் ஒதுக்கப்பட்டனர். இப்படிபட்டவர்களுக்கு தனி பகுதி ஒன்றை ஆரம்பித்து மனநோயாளிகளுக்கு சிகிச்சை செய்தார். ஆப்பிரிக்காவில் இவரது மருத்துவமனையே மனநோயாளிகளுக்காக திறக்கப்பட்ட முதல் மருத்துவமனையாகும்.

    1100 ஏக்கரில் தொழுநோயாளிகளுக்கென கிராமம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் 4000 தொழுநோயாளிகளை தங்க வைத்து, மருத்துவ உதவி செய்து வந்தார். தொழுநோய் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவோரும் அமெரிக்க தேசத்திலிருந்து கூட வந்து, இங்கு இந்த மக்களுடன் தங்கி, பல உயரிய கண்டுபிடிப்புகளை செய்தனர். கார்ல் பேக்கர் ஒவ்வொரு ஆண்டும் 4000 அறுவை சிகிச்சைகளையும், 500 பிரசவங்களை தனது ஒச்சா மருத்துவமனையில் செய்தார் என்றால் அவர் எவ்வளவு கடினமாக ஒவ்வொரு நாளும் உழைத்திருப்பார் என்று தெரிந்து கொள்ளலாம்.

     1960-ஆம் ஆண்டு தேச விடுதலைக்காக ஏற்பட்ட புரட்சியின்போது சிம்பாஸ் கொரில்லாக்கள் இவரது மிஷன் வீடு, மருத்துவமனை ஆகியவற்றை நாசபடுத்தினர். பாதுகாப்பிற்காக சில காலம் கிழக்கு ஆப்பிரிக்கா நோக்கி இடம்பெயர்ந்த இவர் 70 வயது ஆனதால் ஓய்வெடுக்கச் சொல்லி இயக்கம் வற்புறுத்திய போதும் அதற்கு மறுத்து, ஆப்பிரிக்கா எனது தாய்வீடு என்றும், அமெரிக்கா தேசத்திற்கு திரும்பிப்போக தான் விரும்பவில்லை என்றும் தெளிவாக சொல்லி, புரட்சி ஓய்ந்து சற்று அமைதி திரும்பியதும் ஒச்சா திரும்பினார். தனது வீடு மற்றும் மருத்துவமனையை மீண்டும் புதுப்பித்தார். அதற்கு ஒரு வருடம் பிடித்தபோதும் சோர்ந்துபோகாமல் புதிய உற்சாகத்துடன் விளங்கினார். 1966-ஆம் ஆண்டு மூன்று முறை பேக்கர் மாரடைப்பால் தாக்கப்பட்டாலும், ஓய்ந்திருக்க மறுத்து சுறுசுறுப்புடன் பணிபுரிந்தார். ‘இன்று என் வாழ்வின் கடைசி நாளாக இருக்குமானால் அதனை படுக்கையில் நான் செலவழிக்க விரும்பவில்லை’ என்று அடிக்கடி கூறுவார் அவர்.

     தனது 83 வயது வரை காஸ்கோ பகுதியிலே பணிபுரிந்த அவர், பின்பு அமெரிக்கா திரும்பி, மருத்துவ சுவிசேஷ மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆப்பிரிக்க நாட்டிற்கு ஊழியத்திற்கு செல்லும் மருத்துவர்களை பயிற்றுவிக்கும் பணியை நிறைவேற்றினார். 60 வருடம் மருத்துவ மிஷனெரியாக ஆப்பிரிக்காவில் பணிபுரிந்த இவரை குறித்து ஒரு காஸ்கோ மனிதன் இவ்வாறு கூறினான், ‘பல மிஷனெரிகள் இயேசு கிறிஸ்துவை குறித்து எங்களுக்கு பிரசங்கித்தனர், போதித்தனர். ஆனால் கார்ல் பேக்கரோ இயேசு கிறிஸ்துவை போலவே எங்களுக்கு வாழ்ந்து காட்டினார்’ என்றான்.

    நாமும் தேவையுள்ள இந்த தேசத்தில் உங்கள் கல்வியை தாலந்தை தேவபணிக்கு மூலதனமாக்கி, தேவனுக்கு அநேகரை சிநேகிதராக்கும் தேவபணியை நிறைவேற்ற முன்வருவோம், அநேகரை தேவ இராஜ்யம் சேர்ப்போம்.

பிறப்பு: கி.பி. 1894, (அமெரிக்கா)

இறப்பு: கி.பி. 1990, (ஆப்பிரிக்கா)

 

Posted in Missionary Biography on December 22 at 08:39 AM

Comments (0)

No login
gif