Today Bible Verse

Peter Sho Yangtze History in Tamil

பீட்டர் ஷூ யாங்ஷே

      “சீனாவின் முழு வீச்சு சபை” என்று அழைக்கப்பட்ட மறுபடியும் பிறந்தவர்களுடைய வீட்டுசபைகளின் ஐக்கியத்தின் ஸ்தாபகராவார் பீட்டர் ஷூ யாங்ஷே. இந்த நாட்களில் இதில் சுமார் 2 கோடிப்பேர் அங்கத்தினர்களாய் இருக்கின்றனர். சீன அரசாங்கம் ஷூவைத் தன்னுடைய முதல் எதிரியாகக் கருதி வருகிறது. பலமுறை தொடர்ச்சியாக, பல ஆண்டுகளுக்கு அவருக்கு அது சிறைத்தண்டணை வழங்கியதோடல்லாமல், அவரைச் சித்திரவதை செய்தும், அவரை அவதூறுபடுத்தியும் வருகிறது. ஆனாலும் அவர், இன்றும் ஒரு உண்மையும், தாழ்மையுமான தேவ மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.

     1949 இல், சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தபோது, அநேக ஆலய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டதால், விசுவாசிகள் ஆங்காங்கே அவர்களாகக் கூடி வீடுகளிலேயே ஆராதனைகளை நடத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவைகளே வீட்டு சபைகள் என்று அழைக்கப்பட்டன.

     இந்த சபைகளில் சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று பேரே இருப்பார்கள். பெரும்பாலும் அதிகாலை 3 மணிக்குப் போல், மற்றவர்கள் எல்லாரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவர்கள் ஆராதனை செய்வார்கள். பல வருடங்களாக, அவர்களுக்குப் பாஸ்டர்கள் கிடையாது, வேதப் புத்தகங்கள் கிடையாது. பாடல் புத்தகங்களும் கிடையாது. சில சமயங்களில் அவர்களுடைய ஆராதனைகளில் ஜெபமும், ஐக்கிய வேளைகளும், கர்த்தருடைய பந்தியின் நேரங்களும் மட்டுமே இருந்தன.

     இப்படி எளிமையாக, ஆனால் வேகமாக வளர்ந்து வந்த வீட்டுச்சபைகளுக்குள்ளும் சாத்தான் தன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தான். 1990 ஆம் ஆண்டுகளில் இந்த வீட்டுசபைத் தலைவர்களில், ஒரு சிலர் மற்றத்தலைவர்களைப் பற்றிக் குறைகூற ஆரம்பித்தனர். தங்கள் சபையில் தான் பூரண சத்தியம் உண்டு என்றும், மற்றச் சபைகளில் பிழைகள் இருக்கின்றன என்றும், அவர்கள் வழிவிலகிச் சென்று விட்டவர்கள் என்றும் குற்றம் சாட்டினார். மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல் சீனாவிலும் சபைப் பாகுபாடுகள் உண்டாகிவிடுமோ என்ற அச்சம் வந்தது. அந்தச் சமயத்தில் தேவன் அவர்களை ஒன்று படுத்தி ஒரே கொள்கையுள்ளவர்களாய் இணைக்கும்படி, உபயோகித்த ஒரு வல்லமையுள்ள பாத்திரம்தான், சகோதரர் யூன்.

     1996 ஆம் ஆண்டில், முதல் முதலாக இந்த வீட்டுசபை ஐக்கியங்களின் தலைவர்களுக்கென்று ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. அப்பொழுது அதில் செய்தி பகிர்ந்து கொண்டவர்கள், சீனாவைப்பற்றிய தேவனுடைய ஒட்டு மொத்தத்தரிசனங்களையும், வழி நடத்துதல்களையும் விவரித்தபோது, பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு வீட்டுசபைத் தலைவரோடும் இடைப்பட்டார். அப்பொழுது தான், தாங்கள் எவ்வளவு மதியீனமாய் சிறிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து கொண்டதோடு எருசலேம் திரும்புவோம் தரிசனம் தான் பிரதானமானது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர்.

     ஒவ்வொரு வீட்டுசபைக்குழுவும் மற்றக் குழுக்களை, தேவன் எப்படி எப்படியெல்லாம் நடத்தி வந்திருக்கிறார் என்பதை அறிந்த போது, எந்த ஒரு குழுவும், மற்றதைவிட உயர்ந்ததல்ல என்பதை உணர்ந்து கொண்டனர்.

     ஒட்டு மொத்த சீன சபையும் என்னென்ன காரியங்களைச் செய்ய தேவன் விரும்புகிறார் என்பது மீண்டும் மீண்டும் தெளிவாக எடுத்துச்சொல்லப் பட்டதால், அவைகளை மக்களுக்கு விவரித்து, அவைகளைச் செயல்படுத்த மக்களைத் தூண்டிவிடுவதையே முதலிடமாகத் தேவன் தங்களிடம் எதிர்பார்க்கிறார் என்ற செய்தி, ஒவ்வொரு வீட்டுசபைக்குழுத் தலைவருக்குள்ளும் ஆழமாகக் கடந்து சென்றது. ஒவ்வொரு தலைவரும் மற்ற தலைவர்களையும், தங்கள் சபைகளில் பேச அனுமதிப்பது என்று முடிவு செய்தனர். அப்படிச் செய்யும்போது, அங்கு சொல்லப்பட்ட அந்த ஒட்டு மொத்தத் தரிசனங்களையே அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன் மூலம் வீட்டுசபைகள் மத்தியிலே வளர ஆரம்பித்த பிரிவினை சிந்தனைகள் படிபடியாக மறையத்துவங்கின.

     மேலும் சமீப காலங்களில், வெளிதேசங்களிலிருந்து, சீனாவுக்குள்ளாக அனுப்பப் பட்டுவரும், வேதாகமங்களையும், பண உதவிகளையும், அந்தந்த வீட்டுசபைகளில் உள்ள அங்கத்தினர்களின் எண்ணிக்கைகளைப் பொறுத்து, தங்களுக்குள்ளாகப் பகிர்ந்து கொள்ளுவது என்றும், அந்தத் தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். எனவே சாத்தான் அங்கு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறான்.

     இரண்டாவது நாள் கூட்டத்தில், எல்லாத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து, கர்த்தருடைய பந்தியில் பங்கு கொண்டபோது, அவர்களுக்குள்ளே ஐக்கியம் இன்னும் அதிகமாக வலுப்பட்டது. ஒரே தரிசனத்தைப் பெற்றுக் கொண்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்பு, அன்று தான் முதல்முதலாக, அவர்கள் திரும்பவும் பொதுவாக ஒரே இடத்தில் அதைப் புசித்ததால், அவர்களின் ஒற்றுமை உணர்வு இன்னும் பெலனடைந்தது.

     “இதோ சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது. (சங்கீதம்:133:1-3)”

     நாம் நம்முடைய பார்வையைப் பொதுவான தரிசனத்தின் மேல் இராதபடிக்கு, பக்கவாட்டில் திருப்பிவிடுவோமானால், மற்றவர்களின் பிழைகளையும், பெலவீனங்களையுமே பார்க்கிறவர்களாகி விடுவோம். அப்பொழுது நாம் தேவனுடைய இராஜ்யத்துக்காகப் போர் செய்கிறதை விட்டுவிட்டு, ஒருவரோடொருவர் போர் செய்ய ஆரம்பித்து விடுவோம். சீன சபை பக்கவாட்டில் பார்க்க ஆரம்பித்ததை நிறுத்தி 1996 இல் நடந்த இந்தக் கூட்டம், அவர்களை நேர்த்திசையில் திரும்பவும் பார்க்க வைக்கும் ஒரு பிரதான கருவியாக அமைந்தது. எருசலேம் திரும்புவோம் தரிசனத்துக்கு முதலிடம் கொடுத்து, சீனசபை திரும்பவும். சீனாவுக்கு உள்ளூம் வெளியிலும் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணியில் முழுமூச்சோடு இறங்கியது.

     ஒரு பலமுள்ள சபைக்கும், பலவீனமான சபைக்கும் உண்டான வித்தியாசங்கள் அந்தக் கூட்டத்தில் எடுத்துச் சொல்லப்பட்டன. எந்த ஒரு சபை, ஆவிக்குரிய குழந்தைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டேயிருக்கிறதோ அதுவே பலமுள்ள சபை என்றும், ஆத்துமாக்கள் 24 மணிநேரமும் அங்கு ஆதாயம் செய்யப்பட்டுக் கொண்டேயிருக்கும்போது அங்குள்ள விசுவாசிகளுக்கு உட்கார்ந்து ஒருவரோடொருவர் தர்க்கித்துக் கொண்டிருப்பதற்கு நேரமே இருக்காது என்றும் விளக்கப்பட்டது. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அருகாமையிலேயே இருந்து, அவர்கள் அசுத்தம் பண்ணுகிறவைகளை உடனுக்குடனே சுத்தம் செய்வதிலும் அவர்களுக்குத் தொடர்ந்து பால்புட்டிகளை ஆயத்தம் செய்து, ஆகாரம் கொடுத்து வருவதிலும், சபை ஈடுபடும்போது, அநாவசியமான சர்ச்சைகளுக்கு இடமே இருக்காது என்பதையும் அந்தத் தலைவர்கள் நன்றாக விளங்கிக்கொண்டனர்.

     தேவன் தாம் இரட்சித்துக்கொள்ளும் ஒவ்வொரு நபரையும், ஏன் உடனடியாகத் தம்மிடம் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளுவதில்லையென்றால், அவர்கள் பூமியிலேயே இருந்து மற்றவர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே; எனவே, நாம் இதற்குத்தான் நம்முடைய முழு இதயத்தையும் பெலனையும், நேரத்தையும் செலவிட வேண்டும்; நாம் உயிரோடு வைக்கப்பட்டிருக்கும் காரணமே, சீன மக்களுக்கும் வெளி தேச மக்களுக்கும், சத்தியத்தை அறிவிப்பதற்குத் தான்; எனவே பிரிவினைகளுக்கு இடங்கொடாதிருங்கள்; என்று தலைவர்கள் முழங்கியது, வீட்டுசபைத் தலைவர்களை உலுக்கி விட்டது. அவர்கள் தெளிந்தவர்களானார்கள். இப்படியாக சீனச் சபைக்கு வந்த சோதனையை அவர்கள் ஜெயித்தனர்.

     சமீபத்தில் தேவன் என் குடும்பத்தையும் என்னையும், சீனாவை விட்டு வெளியே அழைத்து வந்து, இந்த எருசலேம் திரும்புவோம் தரிசனத்தை நிறைவேற்றத் தேவையான திட்டங்களைத் தீட்டுவதிலும், அதற்கேற்ற பயிற்சிகளைக் கொடுப்பதிலும், எங்களைப் பயன்படுத்தி வருகிறார்.

     பீட்டர் ஷூ யாங்ஷே – “சீனாவின் பில்லி கிரஹாம்” என்று அழைக்கப்படுகிறார்.

Posted in Missionary Biography on December 22 at 09:15 AM

Comments (0)

No login
gif