சா பரமானந்தம் ஐயர்
“காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே. ஞானத்தில் பரனுனை நாட்டின் நோக்கத்தை சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்.” இப்பாடல் வரிகளை நீங்கள் பாடியிருக்கக்கூடும். உண்மையாகவே இப்பாடல் வரிகளும் உங்கள் உள்ளத்தில் ஊடுருவி பாய்ந்திருக்கக் கூடும். அவ்வளவு வல்லமையாய் இப்பாடலை எழுதினார் ஒரு போதகர்.
போதகர்கள் பலர் திருச்சபைகளில் பணியாற்றி மறைந்துள்ளார்கள். அவர்களில் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களில் வாழ்க்கையாலும், வார்த்தையாலும் சான்றாக விளங்கி இசைப் பாடல்களால் நீங்கா இடம் பெற்ற சிறந்த ஜெபவீரர் பரமானந்தம் ஐயர் ஆவார். இவர் தாமஸ் உவாக்கர் மிஷனெரியோடு இணைந்து பணியாற்றியவர். மேலும் சாது சுந்தர் சிங் அவர்களோடு ஐந்தாம் ஆவிக்குரிய கூட்டத்தில் பேசினார்.
1906ஆம் ஆண்டு சென்னையில் இறை பணி ஆற்றினார். தமது 36வது வயதில் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இவர். பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, இறைவனின் அருட்பணியை வல்லமையாக செயல்படுத்தினார். இவர் ஒரு ஆன்மஎழுப்புதல் பிரசங்கி. இறையியல் கொள்கைகளை வலியுறுத்தி விசுவாசக் கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டுமென்று தீவிரமாக உழைத்தவர். அதற்காக ஜெபித்தவர். உரைநடை பொழிவதில் இவர் ஒரு அருவி. ஓயாது பாடும் குருவி. திருமறையை விளக்கும் கருவி.
இவர் 13 நூல்களை எழுதியுள்ளார். இவை யாவும் இறை உணர்வை வளர்ப்பதாகவும், மறையுணர்வைப் பெருக்குவதாகவும், நல்லொழுக்க நெறியில் வளர்ப்பதாகவும் அமைகின்றது. இவர் எழுதிய 11 கீர்த்தனைகள், ஆண்டவரின் அருளைப் பெறவேண்டி ஜெபிக்கும் ஜெபங்களாக அமைந்துள்ளது. “எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே நீ எந்நாளுமே துதிப்பாய்” என்ற பாடலும், இவர் எழுதியதே. தமது போதனைகளாலும், சாதனைகளாலும் தமிழ்நாட்டு மக்களின் அறிவுக் கண்களையும், ஆன்மீகக் கண்களையும் அகலத் திறந்த இவர், 1960, மே 17 இல் இறைவன் புகழ்பாடச் சென்றார்.
பிறப்பு: கி.பி:1873, (மதுரை, இந்தியா)
இறப்பு: கி.பி:1960, மே 17,
Comments (0)