Today Bible Verse

George S. Vedanayagam History in Tamil

ஜார்ஜ் எஸ் வேதநாயகம்

 

     கிறிஸ்துவின் நற்செய்தி ஆழம் பொருந்தியது. ஆற்றல் மிக்கது. அனைவருக்கும் உரியது. அன்பைத் தெரிவிப்பது. அறைகூவல் தருவது. இதை உணர்ந்தவர் அருள்திரு. ஜார்ஜ்.எஸ்.வேதநாயகம். கிறிஸ்தவ சிற்றிலக்கியம் தந்த அருட் கவிஞர் இவர். தன்னுணர்வு பாடல்களால் தமிழகத்திற்கு அறிமுகமானவர். இசையுடன் பாடல்கள் இயற்றும் ஈடில்லா வரம் கொண்டவர். எளிய, இனிய சொற்களால் இறை உணர்வை தூண்டியவர்,

     கிறிஸ்துவுக்குள் வாழ்ந்துவிட வேண்டும் என்ற துடிப்பும், கிறிஸ்துவோடு இணைந்துவிட வேண்டும் என்ற ஆசையும், கிறிஸ்துவை அறிவித்துவிட வேண்டும் என்ற ஏக்கம் கொண்டவர். “பாவ சுமையால் நொந்து சோர்ந்து உழல்வோரே, பாதை தெரியாது பதறி விழுந்து அலறுவோரே, உங்கள் தீவினை தீர்த்திடும் திருத்தலப் பேராற்றில் குளித்திட வாருங்கள் என்று கிறிஸ்துவிடம் மக்களை அறைகூவி அழைத்தார். “ஜீவனோ, மரணமோ, செல்வமோ, வறுமையோ, வசையோ, இசையோ, பகையோ, நேசமோ, ஐயா உமது சித்தமே என் வாழ்வில் ஆகிட வேண்டும்” என்று தன்னை அர்ப்பணித்தார்.

     உந்தன் திருப்பணியை உறுதியுடன் புரிய உதவாத பாவி நான் என்று தன்னை நொந்துகொண்ட இவர், கிறிஸ்து காட்டிய ஆன்மீக நெறிகளையும், அருள்நெறி பண்பாடுகளையும், திருமறை கருவூலங்களையும், பாடல்களாக மக்கள் மனதில் பதியச் செய்து தற்பரிசோதனை செய்ய அவர்களைத் தூண்டினார். “கிறிஸ்தவரே ஒளியும், இருளும் மாறி மாறி வருவது போல உங்கள் இயல்புகளும் மாறுகின்றனவே! முரண்பட்ட இரு தலைவர்களுக்கு பணியாற்றுகிறவர்கள் போல் உள்ளீரே! உங்கள் குற்றத்தை துரும்பாகவும், பிறர் குற்றத்தை இமயமாகவும் எண்ணுகிறீரே! பொய் பக்தி உடையவராய் மனசாட்சிக்கு கீழ்படியாது வாழ்ந்து வருகிறீரே!” என்று மாய்மாலத்தில் உழலும் மனிதரை நினைத்து வருந்தினார்.

     எவரும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய உவமைகளால் போதித்து இவர், கிறிஸ்துவின் சித்தத்தை அனுதினமும் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி பிறரையும் அவ்விதமே வாழச் செய்த மாபெரும் இறைத் தொண்டர் ஆவார்.

பிறப்பு: கி.பி:1868, (இந்தியா)

இறப்பு: கி.பி:1933, (இந்தியா)

Posted in Missionary Short Story on February 15 at 07:59 AM

Comments (0)

No login
gif