அழிக்கப்படாத ஆகாக்குகள்!!!

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை!! ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம், ஆத்துமாவிற்கும் அறிவிற்கும். என்னை மிகவும் அசைத்த ஒரு விஷயம், நாம் கடவுளுக்கு கீழ்படியாமல் விடுகிற சின்ன காரியங்களும் பின்நாட்களில் நம்மை பாதிக்காமல் விட்டாலும் நம் சந்ததியை அது நிச்சயம் பாதிக்கும் என்கிற காரியத்தை சகோதரி சமந்தா விளக்கிக்கூறும் போது மிகவும் பிரயோஜனமாயிருந்தது. இதே செய்தியை, நான் வளர்ந்த சபையில் பிலிப் அண்ணன் ஒரு சமயம் கொடுத்ததும் என் நினைவிலிருந்து அகலவில்லை. அது என்னவென்றால்,
 
1 சாமுவேல் 15:20 - எஸ்தர் 3:1,10, 8:3,5 ஆகிய வசனங்களை இணைத்து அவைகளின் பின்புலத்தை விளக்கின போது எளிய ஆனால் மிகவும் தேவையான சத்தியத்தை விளங்கிக்கொள்ள முடிந்தது. கீழ்படியாமையால் வரும் விளைவும் அதை மாற்ற தேவை, ஒரு கீழ்படிதலே என்பதும். சவுல் ராஜாவிற்கு ஆண்டவர் கொடுத்த ஒரு முக்கியமான வேலை 1 சாமுவேல் 15 ல், யாத்திராகமத்தில் விடாய்த்துப்போன இஸ்ரவேலரை பின்தொடர்ந்து வந்து வெட்டின அமலேக்கியரை வேரறுக்கும்படியான இலக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் அவன், ஆகான் என்னும் அமலேக்கியருடைய ராஜாவை உயிரோடே பிடித்துவந்தான், இதினிமித்தம் கர்த்தர் சவுலின் ராஜ்யபாரத்தை நீக்கி அதை அவன் தோழனுக்கு கொடுத்தார் என்று சொல்லும் சாமுவேல், ‘பலிகளைக் காட்டிலும் கீழ்படிதலே உத்தமம்’ என்று கூறி கடந்து போய் ஆகாகை வெட்டிப்போடுகிறார்.
 
எஸ்தர் புத்தகத்தில் ஆகாகியனான ஆமான், அதாவது ஆகாகின்வழி வந்தவன் தான் இந்த ஆமான், அங்கே ஆண்டவர் வேரறுக்கும்படி சொன்ன அமலேக்கியரை, சவுல் சரியாய் கீழ்படிந்து வேரறுத்திருந்தால், யூத ஜாதியை காரணமே இல்லாமல் பயப்படப்பண்ணின ஆமான் இருந்திருக்க மாட்டான். யோசித்துப்பார்க்கும் போது சவுல் செய்தது சிறிய தவராய்த் தோன்றுகிறது, ஆனால் அதின் விளைவு, தேவ ஜனமே அழியக்கூடிய சூழ்நிலை உருவானது. இந்த விளைவை ஆண்டவர் மீண்டும் சரிசெய்ய, ஒரு எஸ்தரின் உண்மையான கீழ்படிதலே உதவினது.
 
இந்த சம்பவத்தை நான் தொடர்ந்து தியானிக்கும் போது 4 காரியங்களை அறிந்து, உணர முடிந்தது,
1) ஆண்டவர் மிகவும் எதிர்பார்ப்பது - சொன்னதை சொன்னதைபோல் செய்த்து முடிக்கும் உண்மையான கீழ்படிதல்
2) அது இல்லாத போது நாம் வெளிப்படுத்தும் சிறிய கீழ்படியாமையும் - நம்மிடம் காணப்படும் சிறிய பாவமும் ( இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனியம் செய்வதற்கு சமம், முரட்டாட்டம் விக்கிரக ஆராதனை - பில்லிசூனியத்தையும், இரண்டகம் பண்ணுதலையும் நேரடியாய் நாம் செய்ய மாட்டோம் ஆனால் - சிந்திக்க) பெரிய பாதிப்பை நம்மிடம் வெளிப்படுத்தவில்லையென்றாலும், அவை வழி வழியாய்த்தொடர்ந்து நம் சந்ததியை பாதிக்கும்
3) கீழ்படியாமையினால் வந்த பாதிப்பிற்கு தீர்வு அதேவிஷயத்தில் சரியான கீழ்படிதலை நாம் வெளிப்படுத்துவதே ( எஸ்தர் மூலமாய் ஆமான் மட்டுமல்ல அவன் சந்ததியே தூக்கிடப்பட்டது - இதைத்தான் சவுல் செய்யாமல் விட்டார்)
4) தேவன் நித்தியமானவர், அவர் சர்வ ஞானி, அதாவது அவருக்கு 1000 வருடங்களுக்கு பின் நடப்பதுகூட தெரியும் ( He could not be time bind or He don't have time limits) அவர் என்னை பார்க்கும்போதே என் எதிர்கால வாழ்கையும் அவருக்குத் தெரியும், அதனால் தான் சவுலிடம், அமலேக்கியரை வேரறு இல்லையென்றால் அவன் சந்ததி உன் சந்ததியையே அழிக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார் ஆண்டவர் - இன்றும் அந்த சவுலைபோலவே நாமும் ஆண்டவர் அழிக்கச் சொல்கிற பாவத்தை வைத்திருந்தால் அது ஒருநாள் இல்லை ஒருநாள் நம்மை மாத்திரம் அல்ல நம் சந்ததியையே அழிக்கும்.
 
அழிக்கப்படாத ஆகாக்குகளை நம் வாழ்க்கையைவிட்டு வேரறுப்போம், உண்மையான கீழ்படிதலை வெளிப்படுத்துவோம்!
 
 
2 கொரிந்தியர் 10 : 3 -5
  1. நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல.
  2. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
  3. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச்  சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்.

 
Posted in Background on September 03 at 02:35 AM

Comments (0)

No login
gif