prakash

இறுதிக் காலத்தின் எச்சரிக்கை

“கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” – மத்தேயு 7 : 15

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பக்தி, பரிசுத்த ஜீவியம் மட்டும் போதாது. எச்சரிக்கை, விழிப்புணர்வு போன்றவையும் அவசியம். இந்த இறுதிக் காலத்தில் எவனை விழுங்கலாமெனச் சுற்றித்திரிகிற நம் எதிராளியாகிய பிசாசுக்கும் அவனுடைய ஏவலாட்களின் கைளுக்கும் நாம் தப்பிப் பிழைக்க வேண்டுமாயின் எச்சரிக்கை நமக்கு மிகவும் இன்றியமையாததாகும்.

கிருபை புரிந்தெனை ஆள் எனத் தொடங்கும் கிறிஸ்தவ கீர்த்தனையை எழுதிய நெல்லை மதுரநாயகம் உபதேசியார் பிசாசைத் `தந்திரவான் கடி’ எனக் குறிப்பிடுகிறார் (கடி-பிசாசு). அவனது தூக்கலான குணமே `தந்திரம்’ தான். ஏமாந்தவர்களைத் தான் அவன் நெருங்கி வருவான். விழிப்புள்ளவர்களிடம் அவனது தந்திரம் பலிக்காது. இறைவார்த்தையில் நிலைத்திருந்தால் மட்டுமே அவனை தைரியமாக எதிர் கொள்ள முடியும்.

இன்று சாத்தான் தனது தந்திரத்தைப் பயன்படுத்திச் சபைகளுக்குள்ளே தந்திரமும் புரட்டுமான போதனைகளை அள்ளி வீசி வருகிறான். அவன் கையாட்களாகிய மக்கள் உலகமெங்கும் எழும்பியிருக்கிறார்கள். அவர்கள் பாவத்தைக் கண்டித்து, மக்களை எச்சரித்து மனந்திரும்புதலுக்கு ஏவி, வரும் தேவ கோபத்துக்குத் தப்பிக்கொள்ள அவர்களுக்கு வழி காட்டுகிறது இல்லை. மாறாக, `ஜெயமுண்டு, பயமில்லை’ என்கிற பாணியில் நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள், செழித்திருப்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார், பெருகப் பண்ணுவார் என்றெல்லாம் குளிப்பாட்டி அப்பாவி விசுவாசிகளின் பணத்தைக் கொண்டே இயேசுவின் நற்செய்தியை வியாபாரமாக்கும் ஊழியத்தைச் செய்து வருகிறார்கள். துணிகரமான பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறவர்களுக்கும் மேற்கண்ட வாழ்த்துச் செய்தியை வழங்குகிறார்கள்.

எச்சரிக்கை கொள்வோம். அத்தகைய ஊழியமும் வேண்டாம், அப்படிப்பட்ட ஊழியர்களோடு நமக்கு உறவும் வேண்டாம். இனிக் காலமில்லை, கர்த்தருடைய நாள் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அன்றாட உலக நிகழ்ச்சிகளே இவ்வுண்மைக்குச் சான்றுகள்.

எந்த செய்தியை தொலைகாட்சியில் கேட்டாலும், பத்திரிகைகளில் படித்தாலும் வேதம் என்ன சொல்லுகிறது வசனம் என்ன கற்பிக்கிறது என்று ஆய்வு செய்வது அவசியம். பெரேயா சபையினரைப் போல ‘காரியம் இப்படி இருக்கிறா’ என்று ஆராய்ந்து பார்க்க கடவுள் அழைக்கிறார்.

நம்முடைய கிரியையினால் அல்ல கிருபையினாலே இயேசுவின் மேல் வைக்கிற விசுவாசத்தால் இரட்சிக்கப்படுகிறோம். காணிக்கை கொடுத்து ஜீவ புத்தகத்தில் புகைப்படத்தை இடம் பெற செய்ய முடியாது. உடமைகளை உயில் எழுதி வைத்து உயிர் ஜீவனில் பிரவேசிக்க முடியாது என்பதை உணருவோம்.
விழித்திருப்போம், பரம மணவாளனாம் இயேசுவைச் சந்திக்கப் புறப்படும் பரிசுத்த மணவாட்டியாக நம்மை ஆவியின் கிரியைகளால் அலங்கரித்துக் கொள்ளுவோம். அவரைச் சந்திக்க நம்மைச் சூழ்ந்துள்ள மக்களையும் ஆயத்தப்படுத்துவோம். நாமும் ஆயத்தமாவோம். இதோ வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அல்லேலூயா!

Posted in Devotion on July 23 at 03:08 AM

Comments (0)

No login
gif