நமது வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்தோமானால், நம்மை நேசிப்பவர்களைக் காட்டிலும், நமக்கு நன்மை நடக்கும்போது நம்மோடுகூட சந்தோஷப் படுபவர்களைப்பார்க்கிலும், நம்மை விரோதிப்பவர்களும், நமக்கு ஏதாகிலும் தீங்கு நடக்காதா? என்று எதிர்பார்ப்பவர்களும்தான் அதிகம்.தாவீதுடைய வாழ்க்கையும் இதற்கு விதிவிலக்கல்ல; “கர்த்தாவே! என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்” (சங்கீதம் 3:1). அவன் எவ்வளவுதான் தேவன்மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், விசுவாசத்தைக் குலைக்கும்படியாக ‘தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை’ என்று சொன்னார்கள்.
நாமும் இச்சூழ்நிலைகளில் சத்துருக்களின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல், தாவீதைப்போல தேவன்மீது விசுவாசம்வைத்து “ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்” (வ.3) என்றும் “இரட்சிப்பு கர்த்தருடையது” (வ.8) என்றும் சொல்லி விசுவாச அறிக்கையிடும்போது தேவன் நமது வாழ்க்கையை உயர்த்த போதுமானவராயிருக்கிறார்.
Comments (0)