Bishop Caldwell History in Tamil

     தென்னிந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய மிஷனெரிகளில் மிகவும் கீர்த்தி பெற்றவர் கால்டுவெல். இவர் தமிழ் மொழியை நன்றாகக் கற்றதோடு அதின் சிறப்பை உலகம் அறியச் செய்தவர். அத்துடன் கிறிஸ்துவின் மெய்யடியானாக கிறிஸ்தவச் சமயம் தமிழ்நாட்டில் பரவுவதற்காக அயராது உழைத்தவருமாவர்.

     கால்டுவெல் 1814 ஆம் ஆண்டில் மே மாதம் 14 ஆம் தேதி வட அயர்லாந்து நாட்டில் அண்டிரியும் என்ற ஊரின் அருகில் ஒரு சிற்றூரில் பிறந்தார். அவருடைய தாய் தந்தையின் பூர்வீக நாடு ஸ்காட்லாந்து, வாழ்நாளின் பெரும் பாகத்தை நம் நாட்டிலேயே செலவிட்டு, அதன்பால் அதிகப் பற்றுதல் உண்டானதால், தான் இந்திய நாட்டைச் சேர்ந்தவரென்று இவர் கூறப் பிரியப்பட்டார்.

     இவருடைய இளம் வயதில் பெற்றோர் கிளாஸ்கோ நகரம் சென்றனர். தமது பதினாறாம் வயது வரை அந்நகரத்தில் வாழ்க்கை நடத்தி, ஆங்கில நூல்களை மிக்க ஆர்வத்துடன் கற்றார். பதினாறு வயதில் இவர் ஓவியத்தில் திறமைக் காட்டியதாக எண்ணி இவருடைய மூத்த சகோதரன் டப்ளினிலுள்ள ஓவியக் கலைக் கல்லூரியில் இவரைச் சேர்த்தார். அந்நகரத்திலிருந்த பிரசித்தி பெற்ற டாக்டர் உர்விச் பிரசங்கியாரின் தொடர்பும், அங்கிருந்த சில பக்தியுள்ள கிறிஸ்தவர்களின் நட்பும் கிடைத்தது. கிறிஸ்துவுக்காக உழைக்கவேண்டுமென்ற எண்ணம் அடிக்கடி அவர் மனதில் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்திற்கு மனதில் இடம் கொடுக்கப் பிரியமில்லாமல், ஓவியக் கலையில் மூழ்கி நாட்களைச் செலவிட்டார்.

     கிறிஸ்தவச்சமயப் பணியில் ஈடுபடுவதால் பல கஷ்டங்களுக்குட்பட வேண்டுமெனப் பயந்தார். எனினும் ஒரு நாள் கடவுள் அவரிடம் நீ இவ்வாறு நாட்களைக் கழிப்பது சரியா? கூடாதென்று சொல்லியது போலிருந்தது. தனது வாழ்க்கையில் ஒரு திருப்புதல் உண்டான நாள் அந்நாள் என்றும், அந்நாள் மட்டுமல்ல, தான் முடிவு செய்து மிஷனெரியாக இந்தியாவுக்குப் புறப்பட்ட நாளையும் ஒரு புனித நாளாக அவர் கருதியதாக கால்டுவெல் எழுதியுள்ளார்.

    1833 ஆம் ஆண்டு கிளாஸ்கோ நகரத்திற்குத் திரும்பிவந்து, பக்திமானான பாதிரியார் கிரிவைல் ஈவிங்குடன் ஆலயங்களில் பணியாற்றினார். 1834 ஆம் வருடம் இவருடைய பயிற்சி ஆரம்பமாயிற்று, லத்தீன் கிரேக்கு மொழிகளை ஆர்வத்துடன் கற்றார். 1837 ஆம் வருடம் பட்டம் பெற்றார். சர் ராபர்ட்பீல் வெகுமதி அவருக்கு அளிக்கப்பட்டது. அவ்வருடம் ஆகஸ்டு மாதம் 30 ஆம் தேதி இந்தியாவிற்கெனக் கப்பல் ஏறினார். இவர் பயணப்படும்போது தாயார் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். படுக்கையினருகே முழங்கால்படியிட்டிருந்த தம் மகனை அவர் முத்தமிட்டு “நான் முழுமனதுடன் யாதொரு முறுமுறுப்பில்லாமல் கடவுளின் ஊழியத்திற்கென்று உன்னைக் கொடுக்கிறேன்” என்று சொல்லி, தம் மைந்தரை மனமார வாழ்த்தியனுப்பினார். இதன் பின் பெற்றோரை கால்டுவெல் இவ்வுலகில் பார்க்கவில்லை.

     கால்டுவெல் 1838 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி சென்னையை அடைந்தார். லண்டன் மிஷனெரி சங்கத்தைச் சேர்ந்த டிரு என்பவருடன் சிலகாலம் தங்கினார், இவர் சிறந்த பக்திமான். தமிழ் மொழியில் ஆர்வம் கொண்டவர். சிறந்த தமிழ் அகராதியை எழுதிய டாக்டர் வின்லோவும் இவருடைய நண்பரானார். சென்னையில் சுமார் மூன்றரை வருடங்கள் செலவிட்ட பின்னர் 1841 ஆம் வருடம் ஆங்கில திருச்சபையில் பணியாற்றுவதற்கென்று தாம் தெரிந்து கொண்ட திருநெல்வேலி மாவட்டத்திற்குப் புறப்பட்டார்.

     சென்னையிலிருந்து புறப்பட்ட கால்டுவெல் பாண்டிச்சேரி, தரங்கம்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி முதலான இடங்களில் தங்கி, நீலகிரியை அடைந்தார். கால்நடையாகவும், குதிரையில் சவாரி செய்தும் அவ்விடங்களைப் பார்த்து வரும்பொழுது குதிரை கால் தவறி விழுந்து காயப்பட்டது. பின்னர் கூலியாள் தன் படுக்கையையும், பெட்டியையும் எடுத்துச் செல்ல, இவர் சில சமயங்களில் காலில் பாதரட்சையுமின்றி நடந்து செல்லலானார். தெற்கே பாளையங்கோட்டையையும், சந்தோஷமாக செலவிட்டு, இடையன்குடி வந்து சேர்ந்தார்.

     இடையன்குடியில் ஆண்பிள்ளைகளுக்கென்று ஒரு பாடசாலையைக் கட்டினார். வாரத்தில் அநேக நாட்கள் கிராமங்களில் சுற்றித்திரிந்து அயராது உழைத்தார். இடையன்குடிக்கு அவர் வந்த இரண்டு வருடங்களில் சுமார் 700 மக்கள் சத்திய வசனங்களை கற்று வந்தார்கள். அவர்களில் நாற்பது பேரை வேத அறிவில் தேர்ச்சி பெறச்செய்து இருபத்தொரு மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

     1844 ஆம் ஆண்டு கால்டுவெல், நாகர்கோயிலில் ஊழியம் செய்த கனம் மால்ட் என்பவரின் மகள் எலிசாவை திருமணம் செய்தார். இவர் செய்த ஒவ்வொரு வேலையிலும், முக்கியமாக பெண்களின் கல்வியைக் கவனிப்பதில் மிகவும் உதவி புரிந்தார் எலிசா அம்மையார். இவர்களுக்கு ஒரு மைந்தரும் இரு மகளிரும் பிறந்தனர்.

     ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம் ஏற்படுத்தி தாம் செல்லும்போது கிராமத்தவர் அப்பள்ளிக் கட்டிடத்தில் தம்மைச் சந்திக்குமாறு ஏற்பாடு செய்தார். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கிராமங்களில் இவர் செலவிட்டார். இதர சமய மக்களை அடிக்கடி சந்திக்க அவகாசமும் கிடைத்தது. தாமும் தம் உபதேசியாருமட்டுமல்லாமல், புதிதாய் கிறிஸ்தவர்களான மக்களையும் சுவிசேஷ ஊழியத்தில் பங்கெடுக்கச் செய்தார். சுவிசேஷ ஊழியக் குழுக்களை ஆங்காங்கே ஏற்படுத்தினார். பெண்களும் இக் குழுக்களில் சேர்ந்து சுவிசேஷப் பணியை செய்யலாயினர்.

    இடையன்குடியில் ஓர் அழகிய ஆலயம் கட்ட வேண்டுமென்று கால்டுவெல் ஆசைப்பட்டார். எனவே, 1847 ஆம் வருடம் அதற்கு ஆயத்தங்கள் செய்வதில் முனைந்தார். லண்டன் நகரத்தில் கட்டிடவேலை செய்பவர் கழகத்திலிருந்து அழகியக் கோயிலின் மாதிரி படம் ஒன்றை வரவழைத்தார். ஜான் தாமஸ் ஐயர் கட்டிடங்கள் கட்டுவதில் நிபுணர். ஆகவே, அவரிடம் கலந்து ஆலோசனை செய்து கட்டிட வேலையை ஆரம்பித்தார். கோயில் கோபுரத்திலுள்ள நான்கு பெரிய மணிகள் கால்டுவெல் குடும்பத்தாரால் நன்கொடையாக அளிக்கப்பட்டன. 1880 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆறாம் தேதி தேவாலய பிரதிஷ்டையன்று ஐயாயிரம் மக்கள் அங்கு கூடினார்கள்.

     1877 ஆம் வருடம் மார்ச் மாதம் பதினாறாம் தேதி கல்கத்தா அத்தியட்சாதீன ஆலயத்தில் கனம் கால்டுவெல், கனம் சார்ஜென்ட் ஆகிய இருவரும் சென்னை உதவி அத்தியட்சகர்களாக அபிஷேகம் பண்ணப்பட்டனர். திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள எஸ்.பி.ஜி. மிஷன்களின் வேலையை மேற்பார்வையிடும் பொறுப்பு பிஷப் கால்டுவெல்லுக்குக் கொடுக்கப்பட்டது.

      1868 ஆம் ஆண்டில் சென்னை கவர்னர் இடையன்குடி வந்து அங்கு ஒரு வாரம் செலவிட்டார். 1870 ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக பிரதம அத்தியட்சகர் இடையன்குடி விஜயம் செய்தார். அவருடைய ஆலோசனையின்பேரில் சாயர்புரத்திலிருந்த எஸ்.பி.ஜி. கல்லூரி தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டது. அதை அங்கு மாற்ற வேண்டிய எண்ணம் கால்டுவெல் மனதில் சிலகாலம் இருந்த போதிலும், அதைக் குறித்த முடிவு ஒன்றும் செய்யவில்லை. நாற்பது வருட காலமாக தாம் பணியாற்றின ஊரை விட்டுப்போக கால்டுவெல்லுக்குக் கஷ்டமாக இருந்தது. ஆயினும், கடவுளின் சித்தப்படி தாம் தூத்துக்குடி சென்று முக்கியமான வேலை செய்யக் கூடுமென நம்பி அவ்வேலையை சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டார். அக்கல்லூரியைச் சிறந்த முறையில் நடத்தி விருத்தி செய்தார்.

   அதிக வெப்ப நிலையிலுள்ள நாட்டில் ஐம்பத்து மூன்று வருடங்கள் உழைத்தபின் இவரின் உடல் தளர்ந்தது. எனவே, நண்பர்கள், உறவினர் இவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி கொடைக்கானலில் வாழத் தொடங்கினார். அங்கு நோய்வாய்ப்பட்டு 1891 இல் மறுமைக்குட்பட்டார். அவர் விருப்பப்படி அவர் உடல் இடையன்குடிக்குக் கொண்டு போகப்பட்டு அங்குள்ள ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

     கால்டுவெல்லுடைய தமிழ் தொண்டைக் குறித்து எழுத பல பக்கங்கள் வேண்டும். இவர் மூன்று முக்கியமான நூல்களை எழுதி வெளியிட்டார். 1. திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கண நூல், 2. திருநெல்வேலி அரசியல் பொது சரித்திர வரலாறு. 3. திருநெல்வேலியில் எஸ்.பி.ஜி மிஷன் வரலாறு. இவைகளைத் தவிர, ஆங்கிலத்தில் பத்து சிறு நூல்களையும், நான்கு பிரசங்கங்களையும் அச்சிட்டு வெளியிட்டார். தமிழிலில் எட்டு சிறு நூல்களை எழுதினார். தமிழ் ஜெப புத்தகம் மொழி பெயர்ப்பு கழகத்தின் அங்கத்தினராக சிறந்த பணியாற்றினார். “சபையின் அஸ்திபாரம்” என்ற அருமையான தமிழ் ஞானப்பாட்டை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தார். சென்னையில் பல்கலைக்கழகத்தாருடைய அழைப்பிற்கிணங்கி, 1879 இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சொற்பொழிவாற்றினார்.

     தமிழ்நாட்டு மக்களுக்கே அம்மொழியின் மேன்மை புலப்படாதிருந்தபொழுது அதன் சிறப்பை எடுத்துக் காட்டியவர் கால்டுவெல். பிற மொழிகளினின்று தனியாகத் தியங்கும் வல்லமையுள்ளது தமிழ்மொழி என்று மெய்ப்பித்துக்காட்ட பல மொழிகளைக் கற்றார். பண்டைத் தமிழர் துறைமுகங்கள் எங்கெங்கே இருந்தனவென்று ஆராய்ந்தார். மிஷன் ஊழியத்திற்குப் பங்கம் ஏற்படாமல் தினசரி இரண்டுமணி நேரம் தமிழ்மொழியின் தன்மையையும் தமிழ்நாட்டு வரலாற்றையும் ஆராய்வதில் செலவிட்டதாக இவர் எழுதியுள்ளார்.

   தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துக் காட்டிய பெருமை கால்டுவெல்லுக்கே உரியதாகும். கிறிஸ்துவின் அடியானாக, சுவிசேஷ நற்பணிக்காக அவர் ஆற்றிய பேருழைப்பு, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பிறப்பு: கி.பி. 1814, மே 14, அயர்லாந்து

இறப்பு: கி.பி. 1891, இடையன்குடி, தமிழ்நாடு.

 

Posted in Missionary Biography on November 04 at 12:18 PM

Comments (0)

No login
gif