Today Bible Verse

J. P. Rottler History in Tamil

     ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து சுவிசேஷ ஊழியம் செய்த பக்தருள் ராட்லர் ஒருவராவர். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். நம் நாட்டில் சுமார் அறுபது வருடங்கள் மிஷனெரியாக உழைத்து தமது எண்பத்தேழாவது வயதில் மரித்தார். அவர் பணியாற்றிய சமயம் தமிழ் மக்கள் யுத்தங்களினால் அலசடிபட்டு பஞ்சத்தினால் வருந்தி வாடியிருந்தார்கள். அவர்களை நல்வழிப்படுத்துவதுடன், அவர்களைப் பராமரிப்பதும், போஷிப்பதிலும், இவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. நமது ஆண்டவருக்கு அன்பாயிருந்த சீஷனாகிய யோவான் தன் வயது முதிர்ந்த காலத்தில் மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பைக் குறித்து போதித்தது போல, ராட்லரும் தம் வயதான காலத்தில் தம்மைக் காணவந்த மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பைக் குறித்து உபதேசம் செய்தார். பரிசுத்த வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்த்த சிறப்பு அவரைச் சேர்ந்தது. பெப்ரீயஸ் ஞானப் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தது ராட்லர் ஆவர்.

     ஜான் பீட்டர் ராட்லர் 1749 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனி நாட்டிலுள்ள ஸ்டிராஸ்பர்க் நாட்டில் பிறந்தார். அவ்வூரிலுள்ள கல்லூரியிலேயே கல்வி கற்று 1775 ஆம் ஆண்டில் கோபஹேகனில் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார். அவர் சிறுவராயிருந்தபோதே வெளிநாடுகளில் சுவிசேஷ ஊழியம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்குண்டாயிற்று. 1776 ஆம் ஆண்டு கர்லாக் என்ற மிஷனெரியுடன் ஸ்டிராஸ்பர்க்கை விட்டுப் புறப்பட்டு, கப்பலேறி அதே வருடம் ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி தரங்கம்பாடி வந்து சேர்ந்தார். கர்லாக் 1778 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஊழியம் செய்வதற்கென்று தரங்கம்பாடியை விட்டுச் சென்றார். ராட்லர் தரங்கம்பாடியில் தங்கி, ஜான் என்ற மிஷனெரியுடன் சுவிசேஷ ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

     கி. சா. ஜான் தரங்கம்பாடியில் திறம்பட உழைத்து அனைவராலும் நன்மதிப்பு பெற்ற மிஷனெரிகளில் ஒருவராவர். இவர் 1771 ஆம் ஆண்டு முதல் தரங்கம்பாடியில் 42 வருடங்கள் பணி செய்தார். ராட்லர் தரங்கம்பாடிக்கு 1776 இல் வந்தபொழுது மிஷனெரி ஜான் தாம் அங்கு நிறுவிய சிறு பள்ளிக்கூடத்தில் கவனம் செலுத்தி வந்தார். ராட்லர் சிறு பிள்ளைகளின் மேல் பிரியமுள்ளவர். எனவே, அப்பள்ளி நன்முறையில் வளர்ச்சி பெறுமாறு பணி செய்தார். செடி கொடிகளை வளர்த்து, பள்ளிக்கூடத்தைச் சுற்றிலும் தோட்டங்களை உண்டாக்கி, விரைவில் அப்பள்ளியை ஒரு அழகிய இடமாகச் செய்து விட்டார். நூல் காலுறைகளைத் தயாரிக்கும் கூடம் ஒன்று கட்டி அவைகளைத் தயாரிக்கும் முறையை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். முதன் முதலாகத் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழில், தென்னாட்டிலிருக்கும் ஐரோப்பியருக்கும் செல்வந்தருக்கும் உபயோகமாயிருப்பதோடு, எளியவர்க்கு வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் விளங்கிற்று.

     1803 ஆம் ஆண்டு சென்னையில் வேப்பேரி மிஷனெரி கெரிக், திருநெல்வேலி மாவட்டம் சென்று திரும்பி வந்து, நோய்வாய்ப்பட்டு மரித்தார். அவருடைய இடத்தில் வேப்பேரி மிஷன் காரியங்களைக் கவனிக்க சென்னையில் எவருமில்லை. அந்த மிஷனைச் சேர்ந்த பிஜோல்டு என்ற மிஷனெரி கல்கத்தாவில் வில்லியம்ஸ் கோட்டை கல்லூரியில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றி வந்தார். எனவே, தரங்கம்பாடியில் மிஷனெரியாக ஊழியம் செய்து வந்த ராட்லரை சென்னைக்கு வரவழைத்து, வேப்பேரி மிஷன் ஊழியத்தைத் தொடர்ந்து நடத்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார்கள். ராட்லரும் அதற்கு இணங்கி, அவ்வேலையை ஏற்றுக்கொண்டு, சென்னையில் தங்கி ஊழியம் செய்யலானார். அவர் தம் வேலையை ஆரம்பித்த ஒரு வருடத்தில் கல்கத்தாவிலுள்ள வில்லியம்ஸ் கோட்டைக் கல்லூரி மூடப்பட்டமையால் புலவர் பிஜோல்டு வேப்பேரிக்குத் திரும்பி வர நேரிட்டது. ராட்லர் திரும்பி தரங்கம்பாடிக்குச் செல்ல நினைத்து, மிஷன் இல்லத்தைக் காலி செய்து சென்னையை விட்டுப் புறப்பட ஆயத்தம் செய்யலானார். அப்பொழுது அனாதை பெண் பிள்ளைகளின் பள்ளிக்கூடத்தில் குருவாக பணியாற்றும் அரசாங்கத்தார் அவரை அழைத்தனர். ஆகவே தரங்கம்பாடி பயணத்தை நிறுத்திவிட்டு சென்னையில் குரு பதவி ஏற்றார்.

     இவ்வாறிருக்கும்பொழுது அவருக்கு ஓர் தொல்லை ஏற்பட்டது. அவர் தரங்கம்பாடியிலிருந்து 1803 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்ததை கோபன்ஹேகன் மிஷனெரி கல்லூரி அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதைக் கேள்வியுற்ற  எஸ்.பி.சி.கே சங்கத்தார் அவருக்குச் செய்து வந்த பண உதவியை நிறுத்திவிட்டார்கள். எனவே, ராட்லர் பதினொரு வருட காலமாய் குருவாக அவருக்குக் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டியதாயிற்று. குருவாக பணியாற்றுவதைத் தவிர, சென்னையில் கருப்பு டவுனில் சுல்ட்ஸ் ஆரம்பித்து பிற்காலத்தில் பலரால் நடத்தப்பட்டு வந்த சுவிசேஷ ஊழியத்தையும் செய்தார்.

     1811 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியாரின் உடன்படிக்கையின்படி கல்கத்தாவில் ஒரு பேராயம் ஏற்படுத்தப்பட்டது. பம்பாயிலும், சென்னையிலும் ஆர்ச்டீக்கன்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். சென்னையில் கிறிஸ்தவ இலக்கிய அறிவு பரப்பும் குழு நிறுவப்பட்டது.

     1816 ஆம் ஆண்டு பிஷப் மிடில்டன் கல்கத்தாவிலிருந்து முதன் முதலாக சென்னைக்கு வந்து, சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் செய்யப்பட்டு வந்த ஊழியத்தைப் பார்வையிட்டார். வேப்பேரி மிஷன் முன்னேற்றம் அடைந்து வந்ததாக அவருக்குக் காணப்படவில்லை. மிஷன் அச்சுக்கூடம் மூடப்பட்டிருந்தது. ஆலயங்களில் ஆங்கிலத்தில் வழிபாடு நடைபெறாமலிருந்தது. பீஜோல்டு என்ற ஒரு மிஷனெரி நியமனம் செய்யும் வரை சபைகளைக் கவனித்து வரும்படி ஒரு குழு அமைக்கப்பட்டது.

     முதன் முதலாக அக்குழு மிஷனெரி ராட்லரை வேப்பேரி மிஷனுக்கடுத்தக் காரியங்களை மேற்பார்வையிடும் பணியை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டது. இரண்டாவது, மிஷன் சொத்துக்களைக் குறித்து காரியங்கள் குழப்பமாக இருந்தமையால், அவைகளை விசாரித்து, நல்ல முறையில் அவைகளைத் திருத்தி நடத்தும்படி ஒரு குழுவை அமைத்தார்கள்.

      வேப்பேரி மிஷன் நடத்திவந்த பாடசாலைகள் நல்ல நிலையில் இல்லை. ஆதலால், ராட்லர் அப்பாடசாலைக் காரியங்களைத் திருத்தி அமைத்தார். அவைகளிலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகமானதால் அப்பாடசாலைக் கட்டிடங்களை விசாலமாகக் கட்டினார்.  அப்பாடசாலைகள் பிற்காலத்தில் சிறந்து விளங்கின. வேப்பேரி மிஷன் அலுவல்கள் அதிகமாகவே, 1818 ஆம் ஆண்டு சென்னை மாவட்டக் குழு தாய்க் குழுவுக்கு விண்ணப்பம் செய்து சென்னைக்கு ஒரு மிஷனெரியை அனுப்பும்படிக் கேட்டுக்கொண்டது. அதன் பயனாக மிஷனெரி ஹேப்ரோ என்பவர் வேப்பேரி மிஷனில் ஊழியம் செய்வதற்கென்று சென்னையை வந்து சேர்ந்தார்.

     ராட்லருக்கு உதவி மிஷனெரியாக ஹேப்ரோ பணியாற்றினார். கிறிஸ்தவர்களான மக்களில் பல குலத்தவர் இருந்தனர். அவர்களில் சிலர் தங்களை உயர்ந்த குலத்தவர் என்று சொல்லிக்கொண்டு, தங்கள் பிள்ளைகளைத் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பிள்ளைகளுடன் மிஷன் பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிப்பதை விரும்பாமலிருந்தார்கள். கலியாணங்களில் ஊர்வலம் வந்து, இந்து மதச்சடங்காச்சாரங்களில் சிலவற்றை அனுசரித்து வந்தார்கள். கிறிஸ்தவச் சபையில் ஜாதி பிரிவினை நிலவுதலாகாதென்றும், கிறிஸ்தவ நெறிக்கு மாறாக எந்த சடங்காச்சாரங்களையும் செய்யக்கூடாது என்றும் ராட்லர் உரைத்தார். அந்த வருடம் பிஷப் மிடில்டன் சென்னைக்கு இரண்டாம் முறையாக வந்தார். அவருடைய உதவியைக்கொண்டு வேப்பேரி மிஷனிலுள்ள சிக்கல்களைத் தீர்த்தார். ஜெபப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க ராட்லருக்கு பிஷப் அனுமதி கொடுத்தார்.

    ராட்லருக்கும், ஹேப்ரோவுக்கும் அவரவர் செய்ய வேண்டிய வேலையை வரையறுத்துக் கொடுப்பது நலமாயிருக்குமென்று கருதி ஹேப்ரோவுக்குப் பள்ளிக்கூடங்களை மேற்பார்வையிடும் பொறுப்பையும், ராட்லருக்கு அச்சுக்கூடத்தை நிர்வகிக்கும் வேலையையும் கொடுத்தார்கள். பாப்டிஸ்ட் மிஷன் ஊழியரும், சர்ச் மிஷனெரி சொசைட்டி மிஷனெரிகளும் கருப்பு டவுனில் பணியாற்றி வர ஆரம்பித்தார்கள். ராட்லருக்கு அங்குள்ள வேலை குறைந்தது.

     ராட்லர் சுமார் அறுபது வருட காலமாய் திருச்சபைக்கு சிறந்த தொண்டாற்றி, தமது 87 ஆம் வயதில் மரித்தார். தம் வாழ்க்கை இறுதிவரை பணி செய்ய வேண்டுமென்று அவர் விரும்பினார். எனினும் முதுமைக் காலத்தில் ஆலயங்களில் அவரால் பிரசங்கம் செய்ய இயலாமல் போயிற்று. சபை ஊழியர்களுக்காகவும், கிறிஸ்தவ மக்களின் நல்வாழ்வுக்காகவும் ஊக்கமாக ஜெபித்து வந்தார். கிறிஸ்தவ மக்கள் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்குப் போதித்தார். 1836 ஆம் வருடம் ஜனவரி மாதம் ஒரு திங்கட்கிழமை கால்த்ராப் பாதிரியாரின் வீட்டிற்கு சென்று வழக்கம் போல உபதேசிமாருடன் அவர்களுடைய வேலையைக் குறித்து உரையாடினார். பின்பு தன் இல்லத்திற்கு வந்து தமிழகராதி எழுதுவதில் முனைந்திருக்கும் பொழுது திடீரென மறுமைக்குள் பிரவேசித்தார். அவர் நினைவாக சென்னை வேப்பேரியிலுள்ள ஒரு தெருவிற்கு ராட்லர் தெரு என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பிறப்பு: கி.பி. 1749, ஜூன், (ஜெர்மனி)

இறப்பு: கி.பி. 1836, சென்னை, தமிழ்நாடு

Posted in Missionary Biography on November 04 at 12:48 PM

Comments (0)

No login
gif