Today Bible Verse

Bishop Reginald Heeber History in Tamil

     டாக்டர் T.F. மிடில்டன் என்பவர் 1815 ஆம் ஆண்டு நம்முடைய நாட்டிற்கு ஆங்கிலத் திருச்சபையின் முதல் அத்தியட்சகராக வந்தார். அவருக்குப்பின் இரண்டாவது அத்தியட்சகராக இங்கு வந்தவர் பிஷப் ஹீபர் ஆவர். இவர் ஒரு கிறிஸ்தவப் பக்தன் ஒரு சிறந்த கவிஞர். இவர் எழுதிய பக்தி ததும்பும் ஞானப்பாட்டுகள் இதற்குச் சான்றாகும்.

    ரெஜினால்டு ஹீபர் 1783 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் இங்கிலாந்தில் யார்க்க்ஷையர் பகுதியில் மால்பாஸ் என்னுமிடத்தில் பிறந்தார். பள்ளிக்கூடப் படிப்பை முடித்து விட்டு ஆக்ஸ்ஃபோர்டு சர்வகலாசாலையில் சேர்ந்து, கிறிஸ்து ஆலயம் என்ற பெயருடன் விளங்கிய பிரசித்திப் பெற்ற கல்லூரியில் பயிற்சி பெற்றார். கவிதையில் அவருக்கு அளவற்ற ஆர்வமிருந்தது. இளம் வயதிலேயே அவர் கவிஞனானார்.

     மாணவனாக இருக்கும்பொழுது அவர் சிறந்த கவி இயற்றுபவர்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருந்த நியூடிகேட் பரிசைப் பெற்றார். ‘பலஸ்தீனா’ என்ற தலைப்பில் ஒரு கவிதையை அவர் எழுதிப் பேரறிஞர் சர் வால்டர் ஸ்காட் முன்னிலையில் அதைப் படித்தளித்தார். சர் வால்டர் ஸ்காட் அதைக் கேட்டு ‘எருசலேம் ஆலயம் கட்டப்படும்போது, சம்மட்டியின் சப்தம் கேட்கப்படவில்லையென்று எழுதப்பட்டிருக்கின்றதே. அதைக் குறித்து கவிதையில் ஒன்றும் எழுதவில்லை’ என்று மாணவனான ஹீபரை வினவினார். யாவரும் வியக்கத்தக்கவிதமாய் உடனடியாக ஹீபர் அதைக் குறித்து எழுதி, கவிதையைப் பூர்த்தி செய்து கொடுத்தார்.

     கல்லூரியை விட்ட பின்பு 1806, 1807 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்தார். தம்முடைய தாய்நாடு திரும்பியதும், பரி. அசாப் என்னுமிடத்தில் சபை குருவாகப் பணியாற்றி வந்த டாக்டர் ஷப்லியின் மகளை மணந்தார். மறுவருடம் அவர் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டு ஹாட்நட் என்னுமிடத்திற்குச் சபை குருவாக அனுப்பப்பட்டார். சபை குருவாக அங்குப் பணியாற்றும்பொழுது அவர் பல ஞானப்பாட்டுகளை இயற்றினார். அவைகளுள் ஒரு ஞானப்பாட்டுகளை இயற்றினார். அவைகளுள் ஒரு ஞானப்பாட்டை புனைந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.

     “தூய, தூய, தூயா! சர்வ வல்ல நாதா!” இப்பாடலையும், பாமாலையிலுள்ள “விடியற்காலத்து வெள்ளியே தோன்றி”, “விண்கீரிடம் பெறப் போருக்கு” போன்ற ஞானப்பாட்டுகளையும் மற்றும் பல பாடல்களையும் எழுதியவர் பிஷப் ஹீபர் ஆவர். இவர் எழுதிய பாடல்களில் பதினொரு பாடல்கள் ஆங்கிலத் திருச்சபையின் பாடல் புத்தகத்தில் உள்ளன. அவைகளில் “உறைந்த மழை பெய்யும் குளிர்ந்த தேசங்கள்” என்று ஆரம்பிக்கும் பாடல் சிறந்த மிஷனெரிப் பாடல்களில் ஒன்று என்று கருதப்படுகிறது.

     கிறிஸ்தவ நற்செய்திப் பணி சங்கத்திற்குப் பொருள்திரட்டும் நோக்கத்துடன் 1819 ஆம் ஆண்டு பரிசுத்த ஆவியின் திருநாளன்று ஹீபருடைய மாமனராகிய டாக்டர் ஷப்லி தம்முடைய ஆலயத்தில் ஒரு விசேஷித்த ஆராதனை ஒழுங்கு செய்திருந்தார். அவ்வாராதனையில் பங்கெடுத்து, அதைத் தொடர்ந்து நடத்தப்படும் ஆராதனைகளில் பிரசங்கங்கள் செய்யும்படிக்கு அவர் ஹீபரை அழைத்தார். அதற்கிணங்கி ஹீபர் பரி. அசாபிற்கு வந்திருந்தார். திருநாளுக்கு முந்தின இரவு டாக்டர் ஹிப்லி தம்முடைய மருமகனிடம் சென்று, மறுநாள் ஆராதனையில் சபை மக்களுக்குச் சுவிசேஷ ஊழியத்தில் உற்சாகம் கொடுக்கக்கூடிய பாடலொன்று இயற்றிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

      அவருடைய விருப்பப்படி உடனடியாக ஹீபர் மேசையின் முன் நாற்காலியில் அமர்ந்து ‘உறைந்த மழை பெய்யும், குளிர்ந்த தேசங்கள்’ என்று ஆரம்பிக்கும் பாட்டை எழுதி டாக்டர் ஷப்லியினிடம் கொடுத்தார். சுவிசேஷப் பணிக்கு மக்களைத் தட்டி எழுப்பும்படியான ஒரு சிறந்த பாடலாக அது அமைந்திருப்பதை டாக்டர் ஷிப்லி கண்டு மகிழ்வுற்று, தமது நன்றியை ஹீபருக்கு தெரிவித்தார். மறுநாள் காலையில் அவ்வாலய ஆராதனையில் அது முதன் முதலாகப் பாடப்பட்டது.

     கல்கத்தாவின் அத்தியட்சகர் ஸ்தானத்திற்கு இவர் நியமிக்கப்பட்டு 1823 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதி லாம்பத் அரண்மனையில் அபிஷேகம் செய்யப்பட்டார். அவ்வருடம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி கல்கத்தாவிற்குச் சென்று தம்முடைய ஊழியத்தின் பொறுப்பை ஏற்று, அதில் ஊக்கம் காட்டி உழைத்தார். சுமார் ஒன்பது மாதங்களுக்குப்பின் நாட்டின் பல பாகங்களிலும் தம்முடைய பணியை ஆற்றுவதற்கென்று  புறப்பட்டார். வட இந்தியாவில் பற்பல இடங்களுக்கும் சென்று பின்பு பம்பாய் நகருக்கும் இலங்கைக்கும் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு வந்து கல்கத்தாவிலிருந்து புறப்பட்ட பதினான்கு மாதங்கள் கழித்து மீண்டும் அந்நகருக்குத் திரும்பினார்.

     மறுவருடம் (1826) ஜனவரி மாதம் 30 ஆம் தேதி சென்னை மாகாணத்தில் சுற்றுப்பிரயாணம் செய்யும்படி கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார். சென்னையிலும், பூந்தமல்லி, கடலூர், தஞ்சாவூர் முதலான இடங்களிலும் திடப்படுத்தல் ஆராதனை நடத்தி மற்றும் தாம் செய்ய வேண்டிய கிறிஸ்தவப் பணிகளையும் செய்து திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார். அங்கு இரண்டு நாட்கள் தமது பணியைச் செய்தார். ஆலயங்களில் திடப்படுத்தல் ஆராதனை நடத்திப் பிரசங்கங்கள் செய்தார். மூன்றாம் நாள் கோட்டையிலுள்ள ஆலயத்தில் திடப்படுத்தல் ஆராதனையில் பங்கெடுத்து, நோய்வாய்ப்பட்டுப் படுக்கையிலிருந்த பாதிரியார் ஒருவரைச் சந்தித்துத் தம் இருப்பிடத்திற்குத் திரும்பினார்.

    அதற்கு முந்தின இரண்டு நாட்களிலும் நீராடின தொட்டியில் ஸ்நானம் செய்தார். களைப்பு நேரிட்ட நிலைமையில் தண்ணீரிலிறங்கின காரணத்தினாலேயோ அல்லது வேறு காரணத்தினாலேயோ, அதிலிருந்து கரையேறாமல் தண்ணீரில் மூழ்கி இறந்தார். 1826 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த எதிர்பாராத நிகழ்ச்சி கிறிஸ்தவ மக்களைத் துக்கத்தில் ஆழ்த்திற்று.

    திருச்சிராப்பள்ளியிலுள்ள ஒரு முதல் தரக் கல்லூரிக்கும், மற்றும் இரண்டு உயர்நிலைப்பள்ளிக் கூடங்களுக்கும் பிஷப் ஹீபருடைய ஞாபகார்த்தமாக அவர் பெயர் இடப்பட்டிருக்கின்றது. சென்னை தாம்பரத்திலுள்ள கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவர் விடுதியொன்றும் இவருடைய பெயரால் உள்ளது.

     இவர் ஒரு சிறந்த கிறிஸ்தவப் பக்தன். சுவிசேஷ வாஞ்சை படைத்தவர். ஒரு சிறந்த கவிஞர். சார்லஸ் வெஸ்லிக்குப்பின் சிறந்த ஞானப்பாட்டுகளை ஆங்கிலத்தில் எழுதியவர் பிஷப் ஹீபர் என்று பிஷப் ஸ்டீபன் நீல் இவரைக் குறித்து எழுதியுள்ளார்.  இவருடைய புகழ் இவர் எழுதிய ஞானப் பாட்டுகளால் இவ்வுலகுள்ளவரைக்கும் நிலைக்கும்.

பிறப்பு: கி.பி. 1783, ஏப்ரல் 21, (மால்பஸ், இங்கிலாந்து)

இறப்பு: கி.பி. 1826, ஏப்ரல் 3, (திருச்சி, இந்தியா)

Posted in Missionary Biography on November 29 at 01:49 PM

Comments (0)

No login
gif