Today Bible Verse

J. D. Jenike History in Tamil

 

கனம் சுவார்ட்ஸூம், ஜெனிக்கேயும்

     திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவச் சபை கனம் சுவார்ட்ஸ் அவர்களால் நாட்டப்பட்டது என்றும், கனம் ஜெனிக்கே அவர்கள் அதற்கு நீர் பாய்ச்சினார் எனவும் கனம் டபிள்யூ. டேயிலர் எழுதியுள்ளார். இவ்விருவருடைய வாழ்க்கை வரலாறுகளையும், அவர்கள் ஆற்றிய கிறிஸ்தவப் பணியையும் நாம் அறியும்போது, இந்த உண்மை நமக்கு ஓரளவு புலனாகின்றது. நாம் அறியும்போது, இந்த உண்மை நமக்கு ஓரளவு புலனாகின்றது. 1750 ஆம் ஆண்டில் ஒருமுறை பாளையங்கோட்டையிலிருந்த ஐரோப்பியர் ஒருவர், தம்முடையத் திருமணத்தை நடத்துவதற்காகவும், அங்கிருந்த ஐரோப்பிய குழந்தைகளில் சிலருக்கு ஞானஸ்நானம் கொடுப்பதற்காகவும் பாளையங்கோட்டைக்கு வரும்படி கனம் சுவார்ட்ஸ் போதகரை அழைத்தார். அவ்வழைப்பிற்கிணங்கி கனம் சுவார்ட்ஸ் அவர்கள் அழைத்தார்.

    அந்தத் திருமணத்தை நடத்தி குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு, அங்கிருந்த ரோமன் சபை மக்களுடனும், இந்துக்களுடனும் உரையாடி, கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துரைத்தார். பின்னர் தஞ்சைக்குத் திரும்பியதும் திருநெல்வேலி மாவட்டத்தில் சுவிசேஷ பணி செய்தால் பயனளிக்குமென்றும், கிறிஸ்துவின் வசனம் விதைப்பதற்குத் தகுதியான இடம் அது என்றும், அப்பணி பயன் தரும் என்றும் தம்முடைய உடன் ஊழியரொருவருக்கு எழுதினார். அதற்கானவைகளைச் செய்யவும் முற்பட்டார்.

     1785 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக கனம் சுவார்ட்ஸ் பாளையங்கோட்டைக்கு வந்தார். அங்கு அப்பொழுது குளோரிந்தா அம்மையார் தஞ்சாவூரிலிருந்து குடிவந்து, தம்மையண்டி வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தியை அறிவித்து, ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் கட்டியிருந்தார்கள். அவ்வாலயத்தை அதே ஆண்டு ஆகஸ்டு திங்கள் 24 ஆம் தேதி சுவார்ட்ஸ் அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்குப் பின் ஐந்து ஆண்டுகள் சுவிசேஷ ஊழியம் செய்யும்படி திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒருவரும் வரவில்லை. ஆனால் அம்மாவட்டத்திலுள்ள மக்கள் நடுவில் கிறிஸ்தவ நற்செய்தியைப் பரவச் செய்ய வேண்டுமென்று கொண்டிருந்த எண்ணத்தை கனம் சுவார்ட்ஸ் விட்டுவிடவில்லை. 1790 ஆம் ஆண்டு சுவிசேஷ ஊழியத்தைச் செய்வதற்கென சத்தியநாதன் உபதேசியாரை அங்கு அனுப்பினார்.

     இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திருநெல்வேலியில் ஒரு மிஷனெரி நிரந்தரமாகத் தங்கி உழைப்பது நலம் என்று கருதி மிஷனெரி ஜெனிக்கேயை அவர் பாளையங்கோட்டைக்கு அனுப்பினார். திருநெல்வேலி மாவட்டத்திலே சுவிசேஷம் தீவிரமாக அறிவிக்கப்படவும், அநேக இந்துக்கள் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவவும் காரணமாயிருந்த பக்தன் ஜெனிக்கேயாவார். இவர் மிஷனெரியாக வந்த நாள் முதல் இந்திய மக்களின் பேரில் நல்லெண்ணமும், அன்பும் கொண்டவராக விளங்கினார் என்று அவர் எழுதி வந்த தினசரி குறிப்புகள் மூலம் அறியமுடிந்தது. தம் உடன் ஊழியர்களிடமும், தம் முயற்சியால் கிறிஸ்தவர்களாக ஆனவர் யாவர்பாலும் அவர் காட்டிய அன்பு அவைகளின் மூலமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

     இவர் 1759 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லினில் பிறந்தார். ஊரல் கல்லூரியில் இறையியல் கற்று 1787 ஆம் ஆன்டு வெர்நிகார்தே என்னுமிடத்தில் குருவாக அபிஷேகம் செய்யப்பட்டார். இளம் பருவத்திலிருந்தே கிறிஸ்தவச் சமயம் பரவச் செய்யும் திருத்தொண்டராகத் திகழ வேண்டுமென்பது அவருடைய வாஞ்சை. எனவே, தென்னிந்தியாவில் மிஷனெரியாக ஊழியம் செய்வதற்கு அவருக்கு அழைப்பு வந்தபொழுது, அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். 1788 ஆம் ஆண்டு அவர் தம் நாட்டைவிட்டுப் புறப்பட்டு, இங்கிலாந்திற்குச் சென்று, கிழக்கிந்திய கப்பலொன்றிலேறி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி தரங்கம்பாடி சேர்ந்தார். அங்கே டேனிஷ் மிஷனெரிகளுடன் சுமார் ஒரு மாதம் செலவிட்ட பின்னர் தஞ்சாவூருக்குச் சென்றார். அங்கு கனம் சுவார்ட்ஸ் போதகரின் உதவியால் ஆங்கிலத்தையும், தமிழ் மொழியையும் கற்றார். இம் மொழிகளில் திருமறையையும், அதன் விளக்க உரைகளையும் படித்து 1790 ஆம் வருடம் தமிழில் பிழையின்றி நன்முறையில் அருளுரை ஆற்றினார்.

சத்தியநாதனும், ஜெனிக்கேயும்

     சத்தியநாதன் உத்தமபாளயத்தில் வாழ்ந்து வந்த ஒரு விவசாயியின் மகன். இவர் இந்து சமயத்தைச் சேர்ந்தவர். பெற்றோரால் அவருக்கு இடப்பட்ட பெயர் கற்பகம் என்பதாகும். இளைஞனாக இருக்கும்பொழுது ஒரு நாள் திருவிழாவிற்கென்று திருச்சிராப்பள்ளிக்குச் சென்றார். அங்கு தெருப்பிரசங்கத்தில் கிறிஸ்தவ நற்செய்தி எடுத்துரைக்கக் கேட்டார். அதைக்குறித்து மேலும் அறிய விரும்பி தஞ்சாவூருக்குச் சென்றார். அங்கு கனம் சுவார்ட்ஸ் போதகரைச் சந்தித்து, அவரிடமிருந்து கிறிஸ்துவின் மீட்பின் வல்லமையையும், அவருடைய அன்பையும் மேலும் அறிந்தார். பின் சில காலம் மிஷனெரி ஜே.சி. கோலாப் போதகரால் போதிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்று சத்தியநாதன் என்ற பெயருடன் திருச்சபையில் சேர்ந்தார்.

     அவருடைய வேத அறிவையும், பக்தியையும், சுவிசேஷ வாஞ்சையையும் கவனித்த கனம் சுவார்ட்ஸ் முதலில் தஞ்சாவூரிலிருந்து ஏழு மைல் தூரத்திலிருந்த வல்லம் என்ற கிராமத்திற்கும் பின்னர் தரங்கம்பாடிக்கும் உபதேசியாராகப் பணியாற்றும்படிக்கு அவரை அனுப்பினார். 1785 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் சுவிசேஷ பணி செய்வதற்கென்று ஊழியரை அனுப்பும்படி குளோரிந்தா அம்மையார் கனம் சுவார்ட்ஸ் போதகரைக் கேட்டுக்கொண்டபொழுது அங்கு வெற்றிகரமாக கிறிஸ்தவப் பணியாற்றக் கூடியவர் சத்தியநாதனென்று அவர் கருதி அவரைப் பாளையங்கோட்டைக்கு அனுப்பினார்.

     திருநெல்வேலி மாவட்டத்தில் கிறிஸ்தவ பணியாற்ற மேனாட்டு மிஷனெரி எவரும் அக்காலகட்டத்தில் இல்லை. கிறிஸ்தவ நற்செய்தியை அங்கு அறிவிக்க ஜெனிக்கேயை அனுப்புவதென்று கனம் சுவார்ட்ஸ் முடிவு செய்தார். தாம் முதலில் தீர்மானித்திருந்தபடி சத்தியநாதனுடன் அவரை அனுப்ப இயலாமற்போயிற்று. அப்பொழுது தென் இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் நிலைவரப்படவில்லை. ஹைதர் அலி உயிரோடிருக்கும் நாட்கள் வரைக்கும் ஆங்கிலேயரை எதிர்த்து போர் செய்து வந்தான். 1782 ஆம் ஆண்டு அவன் இறந்தபின் அவனுடைய மகனான திப்பு சுல்தான் அவர்களின்பேரில் பகை கொண்டு, அவர்கள் நிலைகொள்ளாதபடி அவர்களுக்கு இடையூறுகள் பல செய்து வந்தான். இராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள ஜமீந்தார்களும், பொலிதார்களென்பவர்களும் ஆங்கிலேயரை எதிர்த்து கலகம் செய்து வந்த காலம் அது. தென் நாட்டிலிருந்த அமைதி குறைவின் காரணத்தால் பாளையங்கோட்டைக்கு செல்லும்படியாகத் திட்டமிட்டிருந்த ஜெனிக்கேயின் பயணம் காலதாமதமாயிற்று.

     எப்பொழுது அங்கு சென்று தம்முடைய சுவிசேஷ ஊழியத்தை ஆரம்பிக்கலாமென்று பேராவலுடன் காத்திருந்த ஜெனிக்கேயிக்கு இது மனவருத்தத்தைக் கொடுத்தது. இதைக் குறித்து 1780 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் எழுதியதாவது. “கிறிஸ்தவ இராஜ்யம் பரவுவதலுக்காக உழைக்க பாளையங்கோட்டையில் பல வழிகளிருக்கின்றனவென்று தெரிகின்றது. இவை நான் அங்கு செய்ய எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஊழியத்தில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கின்றது. யுத்தங்களில்லாமலிருந்தால் இதற்குள் நான் மகிழ்வுடன் அங்கு சென்றிருப்பேன்” என்பதே.

     சத்தியநாதன் கிறிஸ்தவப் பணியாற்றின எல்லா இடங்களிலும் தம்முடைய நன்நடக்கையினாலும், சுவிசேஷ வாஞ்சையினாலும் மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார். அவருடைய வேத அறிவையும், பணிகளையும் மிஷனெரிகள் போற்றினார்கள். வல்லத்திலும், தரங்கம்பாடியிலும் அவர் செய்த வேலையையும், பாளையங்கோட்டையில் அவர் ஆரம்பித்து நடத்தி வந்த ஊழியத்தையும் கனம் சுவார்ட்ஸ் பாராட்டி, தன்னுடன் உழைத்து வந்த மிஷனெரிகளுடன் கலந்து ஆலோசித்து, அவரை வரவழைத்து, 1790 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி குருவாக அபிஷேகம் செய்தார். சுமார் ஒரு மாதத்திற்குப்பின் 1791 ஆம் வருடம் ஜனவரி மாதம் சத்தியநாதன் பாளையங்கோட்டைக்குத் திரும்பினார். அவருக்குத் துணையாக கிறிஸ்தியான் என்ற பெயருடைய உபதேசியாரும் பாளையங்கோட்டைக்குச் சென்றார்.

Posted in Missionary Biography on November 30 at 05:36 AM

Comments (0)

No login
gif