நல்வார்த்தைகள் மட்டுமே பேசுக.

ஒரு வயதான செல்வந்தர் இருந்தார். அவருக்குக் காது கேட்காது. அநேக ஆண்டுகளுக்குப்பின் அவர் மருத்துவரைச் சந்தித்து மிக விலை உயர்ந்த காது கேட்கும் கருவி ஒன்றை வாங்கினார். இரண்டு வாரங்களுக்குப் பின் அவர் மருத்துவரைக் காணச்சென்றபோது மருத்துவர் கருவி சரியாக வேலை செய்கிறதா என்று கேட்டார். பெரியவர் நன்றாகவே காது கேட்கிறது என்றார். மருத்துவர் அவரைப் பார்த்து. "உங்கள் குடும்பத்தினர் யாவரும் மிகவும் சந்தோஷமாக இருப்பார்களே'' என்று வினவினார். பெரியவர் மருத்துவரைப் பார்த்து எனக்குக் காது கேட்கும் விஷயத்தை நான் வீட்டிலுள்ள யாருக்குமே சொல்லவில்லை. ஆகவே எனக்குக் காது கேட்கவில்லை என்று நினைத்து அவர்கள் பேசிகின்ற வார்த்தைகளை நான் கேட்கமுடிகிறது. காது கேட்கவில்லை என்பதற்காக என்னை இவ்வளவு இழிவாகப் பேசுகிறார்களே என்று ஆச்சரியமாக இருக்கிறது. நான் எழுதி வைத்திருந்த உயிலை மாற்றிவிட்டேன்'' என்று கூறினார்.
 
பிறர் கேட்கும்போது ஒரு விதமாகவும் கேட்காமலிருக்கும்போது அவர்களைக் குறித்து வேறுவிதமாகவும் பேசுவது அநேகருக்கு பழக்கமான ஒன்று. முகமுகமாகப் பார்க்கும்போது தேனொழுகப் பேசுவார்கள். பிறரைக் குறித்து நிதானித்து, உண்மையான, நல்ல வார்த்தைகளை மட்டுமே பேசுவது அவசியம், இதுவே கிறிஸ்துவின் உண்மையான சீடர்களுக்கு அழகாகும். நாம் பிறரைக் குறித்து அவதூறான வார்த்தைகள் பேசினால் என்றாவது ஒருநாள் அவர்கள் அறிந்து கொள்வார்கள். அது வருத்தத்தைக் கொடுக்கும். ஆகவே உண்மையான, நல்வார்த்தைகள் மட்டுமே பேசுக.
 
"பத்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால்... அதையே பேசுங்கள்''. எபேசியர் 4:29
Posted in Devotion on February 15 at 02:18 AM

Comments (0)

No login
gif