ஆழத்தில் தள்ளினால் மீன்கள் நிச்சயம் !!!

 

தேர்ந்த மீனவன் சீமோனை, மனிதர்களைப்பிடிக்கிறவனாய் நம் ஆண்டவர் இயேசு மாற்றினபோது நடந்த காரியம் திடீரென்று சிந்தையில் உயிர் பெற்று, கண்களுக்கு முன் காட்சியாய் விரிந்தது. இரவு முழுக்க உழைப்பு, வலையில் ஒன்றும் சிக்காத வெறுமையான நிலை, தன் பிரயாசமும், பெலமும், ஞானமும் ஒன்றும் பலனளிக்காத வேளை, மனதும் கையும் வெறுமையாய் நிற்கிறார் பேதுரு. என்ன செய்ய வலையை அலசும்போது, நாளையாவது ஏதாவது சிக்குமா, இல்லை நாளை இடத்தை மாற்றலாமா, மற்ற திறமையானவர்களை சேர்த்துக்கொண்டு நாளை எப்படியும் அதிகம் மீன்களைப் பிடித்துவிட வேண்டும் (நானாக இருந்தால் இப்படித்தான் யோசித்திருப்பேன், அதையே எழுதுகிறேன்!!) பலவித எண்ண ஓட்டங்களோடு முன்னேறிப்போக முடியாமல் நிற்கிற அவரை நோக்கி வருகிறது ஒரு குரல் “ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய் உங்கள் வலைகளைப் போடுங்கள்”.

 

அதே வலை, அதே நபர்கள், அதே படகு, அதே கெனசரேத்து கடல் ஆனால் இந்த முறை இவர் செய்தது, இவருக்கே முட்டாள்தனமாய் தோன்றியிருக்கும். மனதில் மீண்டும் எண்ண ஓட்டங்கள், ஆழத்திலே மீன் இருக்காது, ஏற்கனவே போட்ட ஒரு வலையும் நிரம்பவில்லை இதில் இவர் ’வலைகளை’போடுங்கள் என்கிறார், சுற்றி இருக்கிறவர்கள் எல்லாம் என்னை முட்டாள் என்றே நினைப்பார்கள், போதும் போதும் ஒரு வலையைப் போடுவோம், அவர் என்ன சொல்வது என்று நினைக்கும் பேதுரு (இதுவும் நான் அங்கு இருந்திருந்தால் இப்படித்தான் யோசித்திருப்பேன் என்ற கற்பனையே) இயேசுவிடமாகத்திரும்பி, பாரும் ஐயரே! இரவெல்லாம் கண்விழித்து பட்ட பிரயாசம் எல்லாம் வீண் தான், இப்பகூட பாரும் நீர் சொல்லுகிறீரென்று தான் வலையைப் போடுகிறேன்’ என்று சத்தமாய் கூறினவனாய் ,‘மற்றவர்களும் கேட்கட்டும் அப்போதாவது இது என் யோசனை அல்ல இவ்வளவு நேரம் பிரசங்கம் பண்ணின இவரின் வேலைதான் என்று மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும்&rsquo இதுவும் என் கற்பனை மட்டுமே!!) என்று வலையை வீசியிருப்பான். பின் நடந்தது யாவரும் அறிந்ததே. வலை கிழியத்தக்க மீன்கள்!!! இப்பொழுது ஆண்டவர் சொல்கிறார் ’வா உன்னை மனிதர்களை பிடிக்கிறவனாக்குவேன்’. 

 

சற்றே சிந்தித்துப்பாருங்கள், இந்த காட்சிக்கு முன், இயலாமையில், தோல்வியோடு, கேள்வியோடு பேதுரு நிற்கும்போது, இதேவார்த்தையை ஆண்டவர் கூறியிருந்தால் பேதுரு நினைத்திருக்கலாம் ’என் சுய திறமையை நம்பி மீன் கூட பிடிக்க முடியவில்லை எங்கே மனிதர்களைப் பிடிப்பது?!?!’ என்று. ஆனால் இப்பொழுதோ அவன் நம்பிக்கையை வைக்கத்தக்க இடம் ஒன்று கிடைத்துவிட்டது. ஆம் ஆண்டவரை நம்பி  போகலாம், நிச்சயம் மனிதரையும் பிடிப்போம் என்று நினைத்தவனாய் ‘எல்லாவற்றையும் விட்டு’ இயேசுவின் பின்னால் சென்றான். இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த வரையில் அவன் மனிதர்களைப் பிடித்தானா??? நீங்களே ஆராய்ந்துகொள்ளுங்கள். விசயத்திற்கு வருவோம்.

 

இதில் இன்று ஆண்டவர் எனக்கு உணர்த்தியது சபையின் நிலை பற்றியது. நாம் என்னதான் முயன்று நின்றாலும் மனிதர்களை ஆண்டவருக்கென்று ஆதாயப்படுத்துவது திறமை அடிப்படையானது இல்லவே இல்லை. நான் நினைக்கிறேன்

1)ஆழத்திற்கு படகை செலுத்த வேண்டிய நிலை சபைக்கு ஏற்பட்டிருக்கிறது (கரையோர ஆவிக்குரிய வாழ்க்கை நம் பிரயாசங்களை பலனற்றதாய் ஆக்கும், ஆழமோ ஆச்சரியத்தைக் கொடுக்கும்).

2)அவர் சொல்லுகிறபடி கேட்டே ஆகவேண்டியதும் நம் கடமையே (சத்தியத்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கையே தவிர கற்பனைகட்டுக்கதைகளும், மனித அனுபவங்களும் தேவையற்றதே , நன்கு கவனித்தால் பவுல் தான் மூன்றாம் வானம் போன அனுபவத்தை வெறும் 5 வரிகளில் சொல்லிவிடுகிறார், நாமாக இருந்திருந்தால்!! கதையே வேறு)

3)கேட்டலோடு நிற்காமல் அதை செயல்படுத்தியே ஆகவேண்டும் (சத்தியத்தை கேட்கிறவர்களாய் மாத்திரம் அதின்படி செய்கிறவர்களாய் லூக்கா 8:15) இவை முதல் நிலை( 1 phase of a Christian Ministry)அப்படி செய்யும் போது, மனிதர்களே இல்லாத இடத்தில் நாம் இருந்தாலும் வலை(சபை) நிறைவது நிச்சயமே!!!

 

இவையெல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த நிலை( 2nd Phase of a Christian Ministry), சபையின் பெருக்கத்தை நாம் பார்க்க, அவர் பின் சென்று கற்றுக்கொள்ளுகிற அனுபவமும், அதை பரிசுத்தஆவியானவரோடு இணைந்து செயல்படுத்துதலும் வேண்டும்.

 

சபை வளர்ந்து விருத்தி அடைவதற்கு ஒவ்வொரு சபைகளிலும் தேவை தேவ சத்தம், தேவ சத்தியம், தேவ சமாதானம்.

 

தேவ சத்தம் :

கர்த்தரின் ஆலோசனைகளை பாருங்கள்,

ஆழத்திற்கு தள்ளிக்கொண்டு போ - அதுவரையில் கரையில் நின்ற பேதுருவின் பார்வையை சற்றே மாற்றுகிறார், தன்னை, தன் சொந்த அறிவை, தன் சொந்த பெலத்தை, தன் சொந்த அனுபவத்தை மாத்திரம் பார்த்து அதனால் கிடைத்த தோல்விகளை கண்டு சோர்ந்து போயிருந்த பேதுருவின் வாழ்க்கையையே மாற்றியது ‘ஆழத்தைப் பார் மகனே’ என்கிற தேவ சத்தம் கேள் சபையே, உன் பார்வையை மாற்று, ஏறெடு உன் கண்களை, ஆண்டவர் பார்க்கிற விதமாய்ப் பார் அந்த ஆழத்தை, அதை பார்க்க விடாமல் தடுக்கும் உன் சுயத்தை அந்த தேவ சத்தம் தகர்தெறிய அனுமதி. 

 

தேவ சத்தியம் :

வலைகளைப் போடு - ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி என்றுமே தேவ வார்த்தையாம்  ‘பரிசுத்த வேதத்திற்கு’ உண்டு. இதே பேதுரு அதை சாட்சியிடுவதை யோவான் 6:68ல் ’எங்கே போவோம் நித்திய ஜீவ வாத்தைகள் உம்மிடத்தில் உண்டே’. மனித முயற்சியினால் ஆயிரம் வார்த்தைகள் பேசுவதிலும் தேவ ஆவியால் ஏவப்பட்டு வேத வசனத்தை சபைகளில் கொண்டுவருவோரால் மாத்திரமே எழுப்புதல் சபைகளில் பற்றியெரிந்தது  என்பது வரலாறு கூறும் உண்மை, இதனை மறந்தும், மறுத்தும் வாழ்கிற கூட்டம் தான் எத்தனை. அனுபவங்கள் ஒருவேளை இரட்சிப்பிற்கு நேராய் நடத்தலாம், தேவ வார்த்தைகள் மாத்திரமே ஒரு நல்ல சீஷனை உருவாக்கும் ஆண்டவரின் உளி. சத்தியத்தைக் கேட்டு அறிவில் ஏற்றிக்கொள்ளாமல், ஆவியில் நொறுங்குற ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நோக்கிப்பார்த்து, தன்னை தேவ வசனத்தினால் புடமிட ஒப்புக்கொடுத்த பாத்திரத்தை பயன்படுத்துவது அவருக்கு எளிமையான காரியம்.

 

தேவசமதானம்:

 

பயப்படாதே! உன்னை மனுஷரை பிடிக்கிறவனாக்குவேன் -  பேதுருவின் சமாதானமற்ற நிலைக்கு காரணம் அவன் கண்ட அந்த அற்புதம். இதிலிருந்து அவனை இன்னும் மேலான காரியங்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் ஆண்டவர், பயப்படாதே! ’அவர்’ சொல்லும் இந்த ஒரு வார்த்தையில் தான் நம்முள் எத்தனை மாற்றம் வருகிறது. பயப்படாதே என்கிற அந்த ஒரு வார்த்தை, இயேசுவிடத்திலிருந்து வரும்போது அதைக்காட்டிலும் ஒரு பெலன் மனிதனுக்குத் தேவையோ??  இதைக் காட்டிலும் மேலான காரியத்தை உன்னைக்கொண்டு செய்யப்போகிறேன் என்று கூறுகிறார் ஆண்டவர் இயேசு..

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம் இருதயங்களை ஆளுகை செய்யும், எப்பொழுது???  எல்லாவற்றையும் குறித்து அவருக்குத் தெரியப்படுத்துங்கள், அப்பொழுது!!! முழுமையாய் ஒப்புக்கொடுக்கும்போது!!!!

 

இங்கே பேதுரு, தேவ மகிமையை அற்புதத்தில் காண்கிறான், அவனுக்குள் நடந்தவைகள்…..

  • உணர்வடைகிறான் - இவருக்கு அருகில் இருப்பது சரியல்ல - ஐயரே என்று அழைத்த பேதுரு இப்பொழுது அவர் யார் என்று உணர்கிறான் - ஆண்டவரே என்று அழைக்கிறான்
  • ஒப்புக்கொள்கிறான் - ‘ஆண்டவரே’ நான் பாவியான மனுஷன்;என்னைவிட்டு போய்விடும்
  • ஒப்புக்கொடுக்கிறான் - எல்லாவற்றையும் விட்டு பின்செல்கிறான்

உலகமே எதிர்த்து நிற்பதாய் இருந்தாலும் அவரைச் சார்ந்திருக்க, அவரிடம் முழுமையாய் ஒப்புக்கொடுக்க, அவரையே பின்பற்ற மட்டும் சபை கற்றுக்கொண்டால் நிச்சயம் மனிதர்களைப் பிடிப்பதில் தடையேதும் உண்டோ....

 

சபையே உன்னைக்கொண்டு இந்த உலகத்தையே அசைக்க விரும்பி, ஏங்கி நிற்கும் ஆண்டவரின்

சத்தத்திற்கு செவிகொடு - உன்னத திட்டத்தை

நிறைவேற்ற ஒப்புக்கொடு.

 

 

 

Posted in Devotion on September 06 at 07:44 AM

Comments (2)

No login
gif