"உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல், வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்?" (மீகா 6:8)
மனிதன் தேவனிடம் தேவைகளைக் கேட்கிறான். உலகம், வசதிகளை, ஆரோக்கியத்தை, செல்வங்களைக் கேட்கிறது. ஆனால் கர்த்தர் ஒருவனிடம் என்ன கேட்பார் தெரியுமா? மனத்தாழ்மையைத்தான்!
மேற்சொன்ன வசனத்திற்கு விளக்கம் தரும் ஒரு ஆங்கில வேதாகமம், "தேவனோடுகூட, நடக்கும்படியாக உன்னைத் தாழ்த்து" என்று குறிப்பிட்டிருக்கிறது. மனத்தாழ்மையுள்ளவர்களோடு தேவன் சரி சமானமாய் நடக்கிறார்; சஞ்சரிக்கிறார். ஏனெனில் அவர் மனத்தாழ்மையை தரித்துக்கொண்டவர். தம்மைத்தாமே வெறுமையாக்கி.. சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலி 2:6,8).
இன்று கிறிஸ்தவ வட்டாரத்தில், தலைவிரித்தாடும் மாயை ஒன்று உண்டானால், அது ஆவிக்குரிய பெருமைதான். எனக்கு ஈடு இணை உண்டோ என்று பெருமைப்படுவது மட்டுமல்லாமல், மற்ற சகோதார்களை தாக்கும்படி, தண்டாயுதங்களை எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் வரங்களை பெற்றுவிட்டாலோ, கேட்கவே வேண்டாம்!
வேதம், "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்" என்று சொல்லுகிறது (மத் 5:3). தேவபிள்ளைகளே திட்டமாய் அறிந்து கொள்ளுங்கள். பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்; "மனமேட்டிமையுள்ளவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை" (நீதி 16:5,18) கிறிஸ்துவின் தாழ்மையைத் தரித்துக் கொள்ளுங்கள்.
"நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11:29)
Comments (0)