இயேசு கைவிடப்பட்டார் - நாம் கைவிடப்படாதிருக்க!!!
- மத்தேயு 27:46 - நம்பிக்கையூட்டும் அநேக வசனங்கள் வேதத்தில் உள்ளன அவைகளில் சில மனிதன் தேவனோடு பேசினது, சில மனிதன் மனிதனோடு பேசினது, இந்த வசனம் மனிதனாயிருந்த தேவன் - தேவனோடு பேசினது.
- ஆண்டவர் இயேசுவிற்கு பிதாவுடனான தொடர்பு, இந்த பரந்து விரிந்த அண்டம் தோன்றும் முன்னரே, நித்தியம் தொடங்கி சிலுவைக்கு வரும் முன்னர் வரையானது , கணநேரம் எனப்படும் மனித அளவீட்டின் படி கூட பிரியாத உறவு.
- யோவான் 8:29 - தனியே விடுகிறதில்லை
- யோவான் 17:5 - உலகம் உண்டாவதற்கு முன்னே
- யோவான் 17:8 - உம்மிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன்
- யோவான் 17:11 - நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு
- யோவான் 17:18 - நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல
- யோவான் 17:22 - நாம் ஒன்றாயிருக்கிறதுபோல
இன்னும் அநேக வசனங்கள், யோவான் 14 : 8-11, யோவான் 5: 18-19.
அப்படி இருந்த உறவில் ஒரு பிரிவு, எபி 12 2 சொல்கின்றபடி, ”அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு”, என்ன அந்த சந்தோஷம்? அதைப் பார்ப்பதற்கு முன் இந்த வசனத்தைக் கொஞ்சம் ஆராய்வோம்.
நான்காம் வார்த்தை கற்றுக்கொடுக்கும் நான்கு பாடங்கள்!
- அவர் தன் ஜெப நேரங்களை தவறவிடவில்லை!
மாற்கு எழுதுகிறார் 15:25ல், அவர் மூன்றாம் மணி வேளையில் சிலுவையில் அறையப்பட்டார், 15:33, ஆறாம் மணி முதல் ஒன்பதாம் மணி நேரம் வரையில் அந்தகாரம் உண்டாயிற்று, 15:34ல் ஒன்பதாம் மணி நேரத்திலே, அதுவரை மவுனமாயிருந்த இயேசு (மூன்றாம் மணி முதல் ஆறாம் மணி வரை மூன்று வார்த்தைகளைப் பேசுகிறார், ஆறாம் மணி தொடங்கி ஒன்பதாம் மணி வரை இருள்) ஏன் ஒன்பதாம் மணி நேரத்தில்? அபோஸ் 3:1 சொல்லுகின்றது அது ஜெபவேளையாகிய 9 மணி. தன் ஜெபநேரங்களை நம் ஆண்டவர் சிலுவையில், மரணத்தருவாயிலும், கடும் வேதனையின் மத்தியிலும் தவரவிடவில்லை.
- எந்த நிலையிலும் தேவன் மேல் உள்ள நம்பிக்கை!
நாம் கேட்கலாம், ஆண்டவர் அவரை கைவிட்டதைத்தானே இங்கு இயேசு கூறுகிறார், இதில் எங்கே நம்பிக்கை இருக்கிறது என்று. கவனிப்போமானால் ஆண்டவர் இயேசு இதுவரையில் ஜெபித்தபோதெல்லாம் பிதாவை எப்படி அழைத்தார் என்பதை கவனியுங்கள்.
யோவான் 11:41,17:2, மாற்கு 14:36 மற்றும் அநேக இடங்கள், ”பிதாவே” என்றழைக்கிறார், இங்கு என் தேவனே என் தேவனே ! அவருடைய உறவு, இவர் மேல் விழுந்த பாவத்தினிமித்தம், முறிந்துபோனதாக, பிதாவின் முகம் மறைக்கப்பட்டதாக ஆனாலும், தான் எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருந்த பிதாவின் முகம் அவரைவிட்டு விளக்கப்பட்டிருந்தாலும், இதுவரை தான் இருந்த அந்த தேவ பிரசன்னம் தன்னைவிட்டு விலகியிருந்தாலும், தான் அவர் மேல் கொண்டிருந்த நம்பிக்கையும் அவர் மேல் கொண்ட அன்பும் துளியும் மாறாமல் இயேசு இந்த இடத்தில் காணப்படுவது, நம் அன்றாட வாழ்க்கையில் நமக்கு நேரும் துன்பங்களின் நிமித்தம் ஆவிக்குறிய வாழ்வில் பின்னடைவை சந்திக்கும்போது, இந்த நான்காம் வார்த்தை நமக்குமுன் வைக்கும் சவால், எந்த நிலையிலும் தேவன் மேல் நமக்கு இருக்கவேண்டிய நம்பிக்கையை விடக்கூடாது என்பதே அந்த இரண்டாம் பாடம்.
தன்னை சுற்றிலும் அநேக காரியங்கள் நடந்து கொண்டிருந்தாலும் அவருடைய நினைவுகளும், ஏக்கங்களும் தான் இழந்த அந்த மேன்மையான தேவ உறவின் பக்கமே இருந்தது, ஆம் அந்த நேரத்திலும் அவர் மேன்மையாக எண்ணியது தேவனோடுள்ள ஐக்கிய உறவைத்தான். நாம் எதை மேன்மையாக எண்ணுகிறோம்?
- ஏன் என்னை கைவிட்டீர் - சங் 22
இயேசு கைவிடப்பட்டதை போன்று உணரவில்லை, அவர் மெய்யாகவே கைவிடப்பட்டிருந்தார். சத்தமிட்டு இந்த வார்த்தையை அவர் சொல்லுவதாக இருக்கிறது, இந்த வார்த்தைகள் சங்கீதம் 22, இயேசுவைப்பற்றின தீர்க்கதரிசன சங்கீதமாகும் இதில் அவர் சொல்ல வரும் கருத்துக்கள் என்ன? எண்களிட்டு சங்கீதங்களை வரிசைப்படுத்தும் முன், ஒரு சங்கீதத்தைக் குறிக்க அந்த சங்கீதத்தின் முதல் வரியை உபயோகிப்பது வழக்கம். அதுபோன்றே ஆண்டவர் இயேசுவும் அந்த சங்கீதத்தை நினைவு படுத்தவே இந்த வார்த்தையை பேசினார். அந்த சங்கீதம் கைவிடப்படுதலோடு தொடங்கி, மகிமையான ஆட்சியில் முடிகிறது, தேவனால் இயேசு ஆண்டவர் உயர்த்தப்படப்போவதை இந்த சங்கீதம் நமக்கு முன்னறிவிக்கிறது. ஆம் நாமும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கைவிடப்பட்டதைப் போன்றே அநேக நேரங்களில் உணர்வோம், அப்பொழுதெல்லாம் நாம் நினைக்கவேண்டிய காரியம், பாடுகளுக்குப் பின் ஒரு மகிமை நமக்கு உண்டு, கைவிடப்பட்டதுபோல் உணரும்போதெல்லாம் நினைத்துக்கொள்வோம், நாம் கைவிடப்படாமலிருக்கவே இயேசு கைவிடப்பட்டார்.
- பாவத்தின் அகோரத்தைப் பார்! - இனி பாவம் செய்யாதே!!
தேவன் மனிதனாகத் தோன்றினதின் நோக்கம் நிறைவேறிக்கொண்டிந்த நேரம் அது, சற்றே இயேசு கிறிஸ்துவை கவனித்துப் பாத்தால் பாவம் பாராத சுத்தக்கண்ணர், பாவமே அறியாத அவர், பாவமே செய்யாத அவர், பாவமாகவே மாறியிருந்தார், அந்த பாவத்தின் ஆழத்தைப் நாம் பார்த்தோமானால், நாம் உணர்வடைவோம், தெளிவடைவோம். ஆம், பாவத்தின் சம்பளம் மரணம், நரகத்தை நம் கண்முன்னால் கொண்டுவந்தது சிலுவை, பாவம் செய்கிற ஆத்துமா சாகும் என்கிற வார்த்தையின் அர்த்தம் சிலுவையில் தொங்குகிறது.
அந்த காட்சியைப் பார்க்கும் யாவரும் ”அவர் பாவத்தை சுமந்து கொண்டார்” என்று சாதாரணமாக சொல்லவே முடியாது. நீங்களும் நானும் மீட்படைய அவர் கைவிடப்பட்டார், உங்கள் & என்னுடைய பாவங்களின் பலன் அன்று கிறிஸ்துவின் சிலுவையில் அவரோடு அறையப்பட்டது, ஆம் ஒரு ஆத்துமாவும் கைவிடப்படாமலிருக்க அவர் செய்த தியாகம், கைவிடப்பட்டவராய் தொங்குவது, அவர் அடைந்த வேதனை, கொண்ட காயங்கள், அனுபவித்த அத்தனையும் பாவத்தின் விளைவேயன்றி வேறென்ன?
பாவம் கொடியது அது இன்னும் நம் வாழ்க்கையிலிருக்குமானால் அந்த விளைவை சிந்தித்து விழிப்படைவோம்.
ஆம், எபி 12 2 ல் சொல்லப்பட்ட சந்தோசம், அவர் அடைந்த ஆக்கினையின் பலனாக, நாம் அவரிடத்தில் சேருவோம் என்பதே அவரை இத்தனை பாடுகளையும் சந்தோசமாக ஏற்கச்செய்தது. நாம் கைவிடப்படக்கூடாது என்கிற தேவ திட்டம் நிறைவேறினதின் உறுதிப்பாடே இந்த நான்காம் வார்த்தை.
Comments (0)