Today Bible Verse

St. John of the Cross History in Tamil

   

       திருச்சபைச் சரித்திரத்தில் யோவான் என்ற பெயரைத் தரித்த பக்தர்கள் பலர் இருந்தார்கள். பரி. யோவான் ஸ்நானகன் நமது ஆண்டவருக்கு முன் தூதனாக வந்தவராவர். இயேசுவானவருக்கு அன்பாயிருந்த யோவான் அப்போஸ்தலனைக் குறித்து நாமனைவரும் அறிவோம். இவர்களைத் தவிர சிலுவையின் யோவான் என்றும், கடவுளின் யோவான் என்றும், மௌன யோவான் என்றும், எகிப்தின் யோவான் என்றும், குள்ள யோவான் என்றும் சொல்லப்பட்ட பக்தர்களைக் குறித்து திருச்சபைச் சரித்திர வாயிலாக அறிகிறோம். இவர்களுள் சிலுவையின் யோவான் என்று சொல்லப்பட்டவர், கிறிஸ்துவிற்காக எவ்வித சிலுவையையும் (துன்பத்தையும்) மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு, சிலுவை என்ற மாத்திரத்திலேயே பக்தி பரவக்கூடிய அளவிற்கு பரிசுத்த வாழ்க்கை நடத்திய காரணத்தால் சிலுவையின் பரி. யோவான் என்று அழைக்கப்பட்டார்.

     பரி. யோவான் கி.பி.1542 ஆம் ஆண்டு அவில்லாவிற்குச் சமீபத்திலுள்ள பான்றிபெரி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய இளம் பிராயத்திலேயே, மூன்று பிள்ளைகளையும், மனைவியையும் விட்டுவிட்டு இவருடைய தந்தை பரம பதவியடைந்தார். இவர் அன்னையின் ஆசிபெற்று அங்குள்ள கல்லூரியில் சேர்ந்தார். வறுமையினால் பிடிக்கப்பட்ட இவருடைய தாய் மெடினா என்ற இடத்திற்கு சென்று அங்கு தம் மக்களிடம் தங்கினாள். பரி. யோவான் அங்குள்ள கல்லூரியில் சேர்ந்தார். கல்வியறிவுடன், திருமறையையும், அதன் இலக்கியங்களையும் கற்றார். கடவுளிடம் இணையில்லாத அன்புகொண்டு வளர்ந்து வரலானார். இயல்பாகவே இரக்க நெஞ்சுடையவராதலால், அங்குள்ள மருத்துவ நிலையத்தில் பணி செய்ய விரும்பி, பக்தி நெறியோடும், இரக்க சிந்தையோடும் அவர் பணி செய்தார்.

     மருத்துவ நிலையத்தில் தாம் செய்துவந்த பணி, தாம் கடவுளுக்கு தம்மை முழுவதும் ஒப்புக்கொடுத்து, இருபத்து நான்கு மணி நேரத்தையும் செலவிடுவதற்கு இடையூறாக இருப்பதாகக் கருதினார். எனவே, 1563 ஆம் ஆண்டு தமது இருபத்தோராம் வயதில், உலகப் பற்றுக்களை அறவே ஒழித்து விட்டு, மெடினாவில் உள்ள கார்மலைட் என்ற வகுப்பைச் சேர்ந்த துறவிகள் மடத்தில் சேர்ந்தார். புதிதாக மடங்களில் சேர்ந்த பக்தர்கள் சாதாரணமாய் கடவுளின் பேரில் செலுத்தும் அன்பையும், பக்தி உணர்ச்சியையும் காட்டிலும் அவர் பன்மடங்கு ஆர்வம் காண்பித்து நற்பணியாற்றினார்.

     மெடினாவில் பயிற்சி காலத்தை முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக பரி. யோவான் சலமான்காவிற்குச் சென்றார். அங்கு மிகப் பணிவோடும், தாழ்மையோடும் உபவாசித்து, கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிப்பதில் பகலிலும் இரவிலும் வெகு நேரம் வரைக்கும் செலவிட்டு வந்தார். தனிமையான ஒரு சிறு அறையை தமக்கென்று தெரிந்துக்கொண்டு, திருமறையை அடிக்கடி வாசித்து, அதன் இனிமையை ருசித்துக் களித்தார். அதன் இலக்கியத்தையும், திருச்சபை பிதாக்கள் எழுதிய உரைகளையும் படித்துப் புலமை பெற்றார். எனினும் அவர் குருப்பட்டம் பெற விரும்பவில்லை. அவரை நன்கறிந்த நண்பர்களும், குருத்துவப் பணியில் அடிக்கடி வற்புறுத்தி வரவே, தமது இருபத்தைந்தாம் வயதில் அதற்கிணங்கினார். தம்மை வழி நடத்தும்படியாக கடவுளிடம் ஊக்கமாய் ஜெபித்து, தாம் குருப்பட்டம் பெறுவது ஆண்டவருடைய சித்தமென்று கருதி 1567 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார்.

     அக்காலத்தில் கர்மேல் கன்னிமார்களின் வகுப்பு சிறப்பு இழந்து வந்தது. பரி. தெரசா அதை சீர்படுத்த முற்பட்டு, அதற்காக ஊக்கமாய் ஜெபித்து உழைத்து வந்தார்கள். அப்பரிசுத்தவாட்டி பரி. யோவானுடைய தூய வாழ்க்கையையும் புலமையையும் குறித்து கேள்விப்பட்டு அவரை அணுகி, தம்முடன் அப்பணியில் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். ஆண்களுக்கென்று ஒரு வகுப்பு நிறுவி, அதற்கு பரி. யோவான் தலைமை வகிக்க வேண்டுமென்றும் வேண்டினார்கள். பரி. யோவான் அதற்குச் சம்மதித்து டூர்வில் என்ற கிராமத்தில் ஆண்களுக்கென்று மடமொன்று நிறுவினார். 1568 ஆம் ஆண்டு அட்வெந்து ஞாயிறுவில் வெறுங்கால கார்மிலட் துறவிகள் மடத்தை பரி. யோவான் ஆரம்பித்தார். நமதாண்டவரின் பேரிலுள்ள அன்பினால் ஏவப்பட்ட ஆரம்பித்த அம்மடம், வெகு சீக்கிரத்தில் முன்னேற்றமடைந்தது. அநேகர் அம்மடத்தில் நமதாண்டவரின் அருட்பணியைச் செய்ய முன்வந்தார்கள்.

     இம்மடம் சிறந்த முறையில் நடத்தப்படுகின்றது என்பது நாடெங்கும் பரவலாயிற்று. அதை நடத்தி வந்த பரி. யோவானுடைய போதனைகளைக் கேட்க மற்ற மடங்களிலிருந்து மக்கள் வர ஆரம்பித்தார்கள். அவருடைய தூய வாழ்க்கையும் அவர் ஆண்டவருக்குச் செய்து வந்த நற்பணியும், மடத்தைவிட்டு விலகிக்கொண்ட மக்களுக்குப் பொறாமையை உண்டு பண்ணிற்று. அவர்கள் பிலேன்சியா என்னுமிடத்தில் அவருக்கு எதிராகக் கூட்டம்கூடி அவர் கிறிஸ்தவ சமயத்தின் விரோதி என்றும், அவரை உடனே கைது செய்ய வேண்டுமென்றும் அரசியலாருக்கு மனு செய்தார்கள். எவ்விதமான விசாரணையுமின்றி பரி. யோவான் போர்ச்சேவகர்களால் பிடிக்கப்பட்டு, அவில்லா என்னுமிடத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்டார். அவ்விடத்திலுள்ள மக்கள் அவரின் பேரில் பற்றுதலுள்ளவர்கள் என்று அறிந்து, அங்கிருந்து அவரை மாற்றி டெல்டோ என்னுமிடத்திலுள்ள சிறைச்சாலையில் அடைத்தார்கள். சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பின், பரி. தெரசாவின் வேண்டுதலினால் அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

     விடுதலை பெற்றதும், பெயிஜா என்னுமிடத்திலுள்ள கல்வாரியின் மடம் என்று சொல்லப்பட்ட மடத்திற்கு அதன் செயலாளராக அனுப்பப்பட்டார். பின்பு கிரனாடா, அன்ட்லூசியா, செகிவா என்னும் இடங்களில் பணியாற்றினார். எங்குச் சென்றாலும் தூய வாழ்க்கை நடத்தி, ஜெபத்திலும், தியானத்திலும் செலவிட்டார். நமதாண்டவருடைய பாடுகளையும், மரணத்தையும் நினைவுகூர்ந்து தானும் அவருக்காகப் பாடுகளை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவார். சிலுவையைக் கையிலேந்தி, வெகு நேரம் முழங்காலில் நின்று, ஆண்டவரைப் போல சிலுவையிலறையுண்டு பாடுகளை அனுபவிக்க விரும்பினார்.

     இவ்வாறிருக்கையில் பரி. யோவானுக்கு விரோதமாக சிலர் எழும்பினார்கள். குருத்துவ ஊழியம் செய்து வந்த இருவர் அவரின் பேரில் பொறாமைப்பட்டு அவரைக் குற்றம் சாட்டினார்கள். அவர்களில் டியிகோ என்பவர் பற்பல இடங்களுக்குச் சென்று அவருக்கு எதிராக சாட்சிகளைக் கொண்டு வந்தார். பரி. யோவான் உலகத்தவரால் கைவிடப்பட்டவராகக் காணப்பட்டார். ஆனால் சில காலத்தில் இப்பூசல் நின்றது. நாட்டு மக்கள் அவரை நன்குணர்ந்து அவரைப் புகழ ஆரம்பித்தார்கள். பரி. யோவான் யாருடைய புகழையும் விரும்பவில்லை. அமைதியையும், பொறுமையையும், துன்பத்தையும் மகிழ்வுடன் சகிக்கும் தன்மையுள்ளவராக அவர் விளங்கினார்.

     உடல் நலத்தைக் கவனிக்காமல், சிறிதளவே உணவு அருந்தி சரியான உறக்கமின்றி, உபவாசத்திலும், தியானத்திலும் செலவிட்ட காரணத்தால் உடல் நலம் குன்றி, அவர் நோய்வாய்ப்பட்டார். அவர் முன் நாட்களில் பணியாற்றி வந்த உபிடா என்னும் இடத்திற்கு சென்று அங்கு தம் இறுதி நாட்களைக் கழிக்க விரும்பினார். அவருடைய கால்களை வீங்கி வெடித்தமையால் மிகவும் வேதனைப்பட்டார். ஆனாலும் சின்ன சிலுவையொன்றை தம் மார்போடு அணைத்துக் கொண்டு ஆண்டவரைப் போற்றிப் பாடினார். ஆண்டவரின் பேரிலுள்ள அவருடைய அன்பு அணைபோட்டும் நீங்காமல் புரண்டோடும் ஆறுபோல் பெருகிப் பொங்கி சமுத்திரத்தில் கலக்கப்போகும் வெள்ளம் போல் காணப்பட்டது. மறுமையின் மகிமையைப் பார்த்து பிரமித்துக் கொண்டிருப்பவராக காணப்பட்டார்.

     சிலந்தியின் நூல் போன்ற நூலே அவரை மறுமையின் மகிமையை அனுபவிப்போமென்று அவர் காத்துக் கொண்டிருந்தார். மரிப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன் 1591 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி, தம்மைச் சூழ்ந்திருந்த மக்களுடன் சங்கீதங்களைப் பாடினார். அவர் குறிப்பிட்டுச் சொல்லிய வேத வசனங்களை வாசிக்கக் கேட்டு பரவசம் அடைந்தார். அவர் முகத்தில் தெய்வீக ஒளி பிரகாசித்தது. தம் கையிலிருந்த சிலுவையை மார்போடு அணைத்துகொண்டு ‘ஆண்டவரே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக் கொடுக்கிறேன்’ என்று சொல்லி, ஆண்டவரின் திருப்பாதம் சேர்ந்தார்.

பிறப்பு: கி.பி.1542

இறப்பு: கி.பி.1591, டிசம்பர் 14

Posted in Missionary Biography on October 14 at 07:11 AM

Comments (0)

No login
gif