Today Bible Verse

St. Ignatius of Antioch History in Tamil

       பரி. இக்னேஷியஸ், சுவிசேஷகனான பரி. யோவானின் சீடன் பரி. பேதுருவால் அந்தியோகியாவின் அத்தியட்சகராக அனுப்பப்பட்டவரென்று பாரம்பரிய வரலாறு கூறுகிறது. தம் கடமைகளைச் செவ்வனே இயற்றி அனைவரும் தன்னை நன்கு மதித்துப் பாராட்டும் வண்ணம் நாற்பதுவருடம் அங்கு பணிசெய்தார் என்று இவரைக் குறித்து பரி. கிரிசொஸ்தம் எழுதியுள்ளார்.

     இவருடைய இளமைப் பருவத்தைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. டாமிஷியன் கிறிஸ்தவ மக்களை துன்புறுத்திய காலத்தில் அந்தியோகியாவிலுள்ள சபை மக்களின் தந்தைபோல் விளங்கினார். உபவாசத்தோடு ஜெபம் செய்து தம்முடைய அரிய வேத அறிவுரைகளால் சபைகளின் மக்களுக்கு உற்சாகமூட்டி வந்தார்.

        டாமிஷியன் காலத்திற்குப் பின் சக்கரவர்த்தி நிர்வா காலத்தில் அமைதி நிலவியது. ஆனால் இந்த நிலைமை வெகுகாலம் நீடிக்கவில்லை. நிர்வா அரசாண்ட காலம் பதினைந்தே மாதங்கள். அவருக்குப்பின் வந்த டிராஜன் கிறிஸ்தவர்களை வெறுத்து அவர்களைத் துன்புறுத்தக் கட்டளையிட்டான். ஏதேனும் சிறிய குற்றச்சாட்டுதல் அவர்கள் மேல் வருமாயின் விசாரணையின்றி அவர்களுக்கு மரண தண்டனையிட வேண்டுமென்று தன் அரசாட்சிக்குட்பட்ட நாடுகளின் அதிகாரிகளுக்கு உத்தரவு அனுப்பினான்.

       இதன் பயனாக மக்கள் படும் துயரத்தைக் கண்டு நெஞ்சம் துடித்தாலும், நமதாண்டவர் இவ்வுலக மக்களால் பட்ட கஷ்டங்களை நினைத்து “எல்லாம் எனையாளும் ஈசன் செயல்” என்றே இவர் தியானித்து, கிறிஸ்தவ மக்கள் தூய வாழ்க்கை நடத்தவும், எச்சமயத்திலும் கிறிஸ்துவிற்காக தங்கள் உயிரைக் கொடுக்கவும் சித்தமாயிருக்க வேண்டுமென்று உபதேசம் செய்துவந்தார். இவ்வாறாக சகலவிதமான இடுக்கண்கள் நடுவிலேயே நம் பக்தனின் வாழ்க்கை நடந்து வந்தது.

     கி.பி. 106இல் பார்த்தியர் மீது படையெடுத்து சக்கரவர்த்தி டிராஜன் தன் பரிவாரங்களோடு கீழ்நாடுகளை நோக்கிப் புறப்பட்டான். கி.பி. 107 ஜனவரி மாதம் 7ஆம் தேதி அந்தியாகுவில் பிரவேசித்தான். அங்கு சேர்ந்ததும் முதன் முதலாக அங்குள்ள சமயத்தவர், அவர்கள் யாரை வழிபட்டு வருகிறார்கள் என்று விசாரணைசெய்து, பரி. இக்னேஷியசை வரவழைத்தான். நம் பக்தன் தன் சபையிலுள்ள எவரும் சக்கரவர்த்தியால் துன்புறக்கூடாது என்று எண்ணி தடுக்கவேண்டுமென்று முடிவுசெய்திருந்தார்.

      டிராஜன் நம் பக்தனை காணவும் “என் கட்டளை மீறி மக்களை ஒரு சமயத்திற்கு இழுக்கிற நீ யார்?” என்று கோபமாய்க் கேட்டான். அதற்கு நம் பக்தன் “நான் கிறிஸ்துவை என் இருதயத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிற அவருடைய அடியான்” என்றார். டிராஜன் அதற்கு, எந்த கிறிஸ்துவைக் குறித்துப் பேசுகிறாய்? பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றியா பேசுகிறாய்? என்றான். அதற்கு பரி. இக்னேஷியஸ் “ஆம், அவரே தான் இரட்சகர். அவர் தான் மரணத்தின் மூலமாய் பாவத்தைச் சிலுவையில் அறைந்து என்னை மீட்டுக்கொண்டார்.

      நான் அவரை என் இருதயத்தில் வைத்திருக்கிறேன்” என்றார். டிராஜன் உடனே  “சிலுவையில் அறையப்பட்டவரைத் தன்னுள் வைத்து திரிந்துக்கொண்டிருப்பதாகச் சொல்லும் இக்னேஷியஸ் கட்டுண்டு ரோமாபுரிக்குக் கொண்டு போகப்பட வேண்டும். அவ்விடம் மக்கள் பார்த்து மகிழும்படி காட்டுமிருகங்களால் கொல்லப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டான்.

   பரி. இக்னேஷியஸ் “என் ஆண்டவரே, நீர் எனக்கு அருளும் இந்த பாக்கியத்திற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உமக்காக நான் பரி. பவுலைப் போல இரும்புச் சங்கிலிகளால் கட்டப்படும்படியான பாக்கியம் எனக்குக் கிட்டியதே” என்று முகமலர்ந்து கூறினார். இவ்வாறு தனக்கு இட்ட பயங்கரமான தண்டனையை விருப்பமோடு ஏற்றுக்கொண்டு, தான் விட்டுப்போகும் சபைக்காகக் கடவுளிடம் மன்றாடினார். அப்பொழுது கொடூரமான ரோமப் போர்ச் சேவகர்கள் அவரை அங்கிருந்து இழுத்துச் சென்றனர்.

     அந்தியோகுவிலிருந்து புறப்பட்ட ரோமப் போர்ச் சேவகர்கள் பரி. இக்னேஷியசுடன் துறைமுகப் பட்டிணமாகிய செலுசியாவை அடைந்து, சின்ன ஆசியாவின் கரையிலோடி ரோமாபுரி செல்லும் கப்பலில் அவரை ஏற்றினார்கள். ஏன் இவ்விதமாக சுற்றிச் செல்லும் கப்பல் மூலமாய் நம் பக்தன் ரோமாபுரிக்குக் கொண்டுபோகப்பட்டாரென்று தெரியவில்லை. பல துறைமுகப்பட்டிணங்களின் வழியாக அவர் கட்டுண்டு கொண்டுபோகப்பட்டால் அவ்வூர்களிலுள்ள கிறிஸ்தவ மக்கள் அக்காட்சியைக் கண்டு கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவ அஞ்சுவார்களென்று எண்ணத்துடன் ரோம அதிகாரிகள் அவ்வாறு செய்திருப்பார்களென்று கருதப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக அவர் சென்ற கப்பல் சேர்ந்த துறைமுகங்களின் சுற்றுப் புறமுள்ள மக்கள் அவரைப் பார்க்கும் நற்பேற்றை பெரிதாக எண்ணி அவரை அணுகி தங்களாலியன்ற உதவி செய்ய முன் வந்தனர்.

    கிறிஸ்தவ மக்களின் விசுவாசம் வேரூன்றியது கண்டு இவர் அகமகிழ்ந்தார். கப்பல் பிரயாணமும், அவரைக் காவலில் வைத்துக் கொண்டுபோன பத்து போர்ச்சேவகரின் கொடூர நடத்துதலும் அவருக்கு மிகவும் கஷ்டம் கொடுக்கக் கூடியனவாயிருந்த போதிலும். தம் இரட்சகருக்காக உயிரைத் தியாகம் செய்யப் போகிறோமென்று எண்ணம் அவருக்குக் குதூகலம் கொடுத்தது.

     கப்பல் சிமிர்னாவை அடைந்ததும் அதிகாரிகளின் அனுமதியோடு அவர்கள் மேற்பார்வையில், நம் பக்தன் கப்பலைவிட்டு கரை சேர்ந்தார். சுவிசேஷகனாகிய யோவானின் கீழ் தம்மோடு உடன் சீடகராயிருந்த பரி. போலிகார்ப்பைச் சந்தித்து பேசுவதற்க்கு இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருகிலுள்ள சபைகளின் ஊழியரும் அவரைச் சந்தித்து மகிழ்ச்சியடைந்தனர். பரி. இக்னேஷியஸ் சுமர்னாவிலிருந்து நான்கு நிருபங்களை எழுதினார். எபேசுவிலுள்ள சபையாருக்கும், மக்னீஷயாவின் சபையாருக்கும், டிரல்லியன் சபையாருக்கும், ரோமாபுரியிலுள்ள கிறிஸ்தவ அடியாருக்கும் அந்நிருபங்களை எழுதினார்.

     ரோமாபுரியில் நடக்கும் காட்சிகள் முடிவடையும் காலம் நெருங்கியதால் நம் பக்தன் கொண்டுபோகப்பட்ட கப்பல்  சிமிர்னாவை விட்டு உடனே புறப்பட்டு டுரோவாஸ் துறைமுகம் வந்து சேர்ந்தது. இவ்விடத்தில் பரி. இக்னேஷியஸ் பிலதெல்பியா சபைக்கு ஒரு நிருபமும், பரி. போலிகார்ப்புக்கு ஒரு நிருபமுமாக மூன்று நிருபங்கள் எழுதினார். இந்நிருபங்களைப் படிப்பவர்கள் தம் கருத்தை உயர்ந்த நோக்கங்களில் செலுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளன. பிறர்பால் அன்பு செலுத்தவும், எவ்விதமான மார்க்கப் பேதங்களையும் அறவே ஒழிக்க வேண்டுமெனவும், கிறிஸ்தவ சபைகளில் நல்வாழ்வுக்காக ஊக்கமாய் ஜெபிக்க வேண்டுமெனவும் இவைகளின் சபையோரை வேண்டியுள்ளார்.

   ரோமப் போர்ச்சேவகரையும் நம் பக்தனையும் ஏற்றிஸ் சென்ற கப்பல் துரோவா பட்டிணத்தை விட்டபின் நியோப்பாலிஸ் வழியாக பிலிப்பு பட்டணம் சேர்ந்தது. இவர்கள் அங்கிருந்து மாசிடோனியா, இபைரஸ் நாடுகளைக் கால்நடையாக நடந்து எபிடாமனம் துறைமுகத்தில் மறுபடியும் கப்பலேறி ரோமாபுரி சேர்ந்தார்கள். அந்தியாகுவிலுள்ள அநேக கிறிஸ்தவ அடியார்கள் குறுக்குவழியாக ரோமாபுரிக்கு வந்து நம் பக்தன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தார்கள். இவர்களும் ரோமாபுரியிலுள்ள விசுவாசக்கூட்டத்தாரும் நம் பக்தனைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் அவர் கொடூர மரணத்தால் உலக வாழ்வை நீத்து தங்களை விட்டுப் போய்விடுவார் என்ற எண்ணத்தால் அவர்கள் மனம் தவித்தது.

    கி.பி. 107இல் டிசம்பர் மாதம் இருபதாம் தேதி பரி. இக்னேஷியஸ் ரோமாபுரிக்கு கொண்டுவரப்பட்டார். அன்றுதான் அந்நகரின் பொதுமக்களுக்கென ஏற்படுத்தின காட்சிகளின் இறுதிநாள். சக்கரவர்த்தியின் உத்தரவுப்படி நம் பக்தன் விளையாட்டுச் சாலைக்குக் கொண்டுவரப்பட்டார். அவரைக் கொல்லும்படியாகக் கூண்டில் வைத்திருந்த சிங்கங்களின் உறுமலைக் கேட்டு “நான் என் ஆண்டவரின் கோதுமை; நான் அவருக்குத் தூய்மையான அப்பமாக்கப்படும்படி இம்மிருகங்களின் பற்களால் நான் நொறுக்கப்படட்டும்” என்று சொன்னார். இரண்டு பெரிய சிங்கங்களை அவர் மீது திறந்துவிட்டார்கள். அவைகள் உடனே நம் பக்தனை கொன்று சில பெரிய எழும்புகளைத் தவிர அவர் உடலனைத்தையும் விழுங்கிவிட்டன. “ஆடைகளைக் களைந்து போடுவதுபோல் உயிரைக் களைந்து போடக் கூடியவர்” என்று பரி. இக்னேஷியசின் வாழ்க்கை முடிவைப் பார்க்கும்பொழுது இவ்வார்த்தைகளின் உண்மை நன்கு புலப்படுகிறது. இவர் யாதொரு பயமுமின்றி உடலைச் சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்து இரத்தச்சாட்சியாக உயிர் நீத்தார்.

பிறப்பு: கி.பி. 35

இறப்பு: கி.பி. 108 (உரோமை)

Posted in Missionary Biography on October 14 at 07:39 AM

Comments (0)

No login
gif