பரி. மார்ட்டின் ஹங்கேரி தேசத்திலுள்ள சபாரியா நாட்டைச் சேர்ந்தவர். அவர் கி.பி. 316 ஆம் வருடம் பிறந்தார். அவர் தந்தை ஓர் ராணுவ வீரர். பெற்றோர் விக்கிரகாராதனைக்காரராயிருந்த போதிலும் பரி. மார்ட்டின் இளமையிலிருந்தே உண்மையான கடவுளைப் பின்பற்ற வாஞ்சைகொண்டார். அவர் தம் 10 ஆம் வயதில் தேவாலயத்திற்குச் சென்று தன் பெற்றோருடைய உத்தரவை மீறி கிறிஸ்தவச் சபையில் ஓர் அங்கத்தினராகப் பதிவு செய்து கொண்டார். அது முதல் கிறிஸ்துவின் மீது அதிகப்பற்றுதல் கொண்டு தம் 15 ஆம் வயதில் யாவற்றையும் துறந்து பாலைவனத்திற்குத் துறவியாகச் செல்ல தயாரானார்.
அச்சிறு வயதில் அவ்வாறு செய்யலாகாது என்று சபைப்பெரியோர் தடை செய்தார்கள். அவருடைய தந்தை பரி. மார்ட்டினுக்கு தன் வேலையைப் பின்பற்ற வேண்டுமென்று வற்புறுத்தி அவருடைய 15 ஆம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார். பரி. மார்ட்டின் தன் சம்பளத்தில் தன் உணவுக்கு மட்டும் செலவு செய்து, மீதிப் பணத்தை ஏழைகளுக்கும் கஷ்ட நிலையிலுள்ளவர்களுக்கும் உதவி செய்து செலவிட்டார்.
பரி. மார்ட்டின் இளகிய மனதுடையவர். பிறர் கஷ்டப்படுவதை காணச்சகியார். குளிர்காலத்தில் எங்கும் பனிக்கட்டிகள் காணப்பட்ட ஒரு நாள், தான் சேவைசெய்த காலாட்படையுடன் பரி. மார்ட்டின் சென்றுகொண்டிருக்கும் போது ஓர் ஏழை மனிதன் உடுக்க போதிய உடையின்றி, குளிரினால் நடுங்கி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். ஒருவரும் அவனைக் கவனியாமல் செல்வதைக் கண்ட பரி. மார்ட்டின் தம் வாளைக்கொண்டு தன் உடையை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவனுக்குக் கொடுத்தார். பாதி உடையுடன் இருப்பதைக் கண்ட சிலர் பரி. மார்ட்டினைப் பரிகாசம் செய்தபோதிலும், மற்றும் சிலர் தாங்கள் அவ்வித உதவியற்ற ஏழைக்கு ஒன்றும் செய்யாததிற்காக வெட்கமடைந்தார்கள்.
அன்றிரவு பரி. மார்ட்டின் கொடுத்த பாதி உடையை அணிந்த பிச்சைக்காரன் “மார்ட்டின், நீ சிறுவன்; ஆகிலும் குளிரினால் கஷ்டப்பட்ட என்னை உன் உடையால் உடுத்த முன் வந்தாயே” என்று சொல்லக்கேட்டார். இந்தக் காட்சியைக் கண்ட பின்னர் முன்பைவிட பன்மடங்கு அதிகமாய் தன் உடலை ஒடுக்கிப் பிறர்க்காக உழைக்க ஆரம்பித்தார். காலாட்படையை உடனே விட்டு விட அவர் முயற்சித்தார். ஆகிலும் அதிலுள்ள தலைவருடன் உள்ள நட்பினால் அவர் சொல்லுக்கு இணங்கி தன்னுடைய 18 ஆம் வயது வரை அப்படையில் பணிபுரிய ஒப்புக்கொண்டார்.
கிபி. 353 ஆம் ஆண்டு, பரி. ஹில்லேரி, பாயிற்றியர்ஸ் என்னும் இடத்தில் பிஷப்பாக இருந்தார். அவர் நம் இளம்பிராய பக்தனைக் குறித்துக் கேள்விப்பட்டு தன் கீழ் சபை டீக்கனாக ஏற்படுத்த ஆவல் கொண்டார். பரி. மார்ட்டின் முதலில் தான் சில காலம் பிரிந்திருந்த பெற்றோரை கண்டு திரும்பும்படி பரி. ஹில்லேரியிடம் விடைபெற்று பிரயாணப்பட்டார். ஆல்ப்ஸ் மலைகளை அவர் கடந்து செல்லும் பொழுது கொள்ளைக்காரர் கூட்டம் அவரைக் கொல்ல தன் கத்தியை ஓங்கிக் குத்தும் சமயம், மற்றொருவன் அவன் கையை பிடித்துக் கொண்டான். பரி. மார்ட்டின் இந்தச் சந்தர்ப்பத்தில் காட்டிய பொறுமையையும், தைரியத்தையும், முகமலர்ச்சியையும் கண்ட கொள்ளைக்காரர் “உன் மேல் கத்தி இறங்கும்போது உனக்கு பயமில்லையா?” என்று கேட்டார்கள், அதற்கு அவர் “உயிருடன் இருக்கும்போதும், மரணத்தருவாயிலும் ஆண்டவரின் பாதுகாப்பு கிறிஸ்தவனுக்கு உண்டு. ஒன்றுக்கும் ஒரு கிறிஸ்தவனும் ஐயபடவேண்டியதில்லை” என்றார்.
அவர் சொற்கள் கொள்ளைக்காரர் மனதைக் கவர்ந்தது. அவரைக் கொல்ல எத்தனித்தவன் அவருடன் சென்று பின்னர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து பக்தனாக விளங்கினான். இச்சம்பவம் அவனால் பின்பு சொல்லப்பட்டது, பரி. மார்ட்டின் தன் பிரயாணத்தைத் சில காலம் மனம்மாறி கிறிஸ்தவர்களானார்கள். அவருடைய தந்தையோ குணப்படாமல் விக்கிரகாராதனைக்காரராகவே வாழ்நாளைக் கழித்ததாகச் சொல்லப்படுகிறது.
இத்தாலியா நாட்டில் கால் சபையில் வேதத்தைச் விரோதிப்பவர்கள் பலங்கொண்டு பரி. ஹில்லேரியைத் துரத்தி விட்டதாகக் கேள்விப்பட்டு பரி. மார்ட்டின் அந்த சபைக்காக ஜெபத்தில் அதிக நாட்களை செலவிட்டார். மிலானுக்கு அருகிலுள்ள மடத்திற்குச் சென்று இப்பரிசுத்தவான் உபவாசித்து தன் உடலை ஒடுக்கி அநேக நாள் கடவுளோடு தனித்திருந்தார். அந்தச் சபைக்காக ஜெபித்தார். அங்கிருந்து மனிதர் நடமாட்டமில்லாத கல்லரினா என்ற தீவில் இன்னொரு பரிசுத்தவானோடு தங்கி அங்குள்ள பூண்டுகளையும் கிழங்குகளையும் தின்று ஜெப ஜீவியம் செய்தார்கள். அதற்குள் பரி. ஹில்லேரி கி.பி. 390 ஆம் வருடம் மறுபடியும் பிஷப்பாக நியமிக்கப்பட்டு பரி. மார்ட்டினுடன் பாயிற்றியர்ஸ் நகரத்திற்குத் திரும்பி வந்தார். அவ்விடமிருந்து சுமார் 20 மைல்களுக்கு அப்பால் குலோக்கோகியம் என்ற இடத்தில் பரி. மார்ட்டின் ஒரு மடம் கட்டி திக்கற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வியாதியஸ்தரைச் சுகப்படுத்தி சிறந்த பக்தனாக விளங்கினார்.
பரி. மார்ட்டின் குணமாக்கும் வரத்தைப் பெற்றிருந்தார். அவர் மரிதோரையும் உயிரோடு எழுப்பினாரென்று தெரிகிறது. குலோக்கோகியம் மடத்திலிருந்து பணியின் நிமித்தம் பரி. மார்ட்டின் வெளியே போயிருந்த காலத்தில், ஞானஸ்நானம் பெற ஆயத்தமாயிருந்த ஒரு நண்பர் திடீரென்று வியாதிப்பட்டு இறந்ததாயும் திரும்பி வந்ததும் மடத்திலுள்ள அனைவருடைய துயரத்தையும் கண்டு எலிசாவைப் போல் ஊக்கமாய் ஜெபித்து மரித்தவரை உயிருடன் எழுப்பினார். இந்த அற்புதச் செயல்கள் அவருடைய பெயரை நாடெங்கும் பரவச்செய்தது. கி.பி. 371 ஆம் வருடம் ஜூலை மாதம் 3 ஆம் தேதி டூர்ஸ் பிஷப்பாக நியமிக்கப்பட்டார். அவர் தம் தூய வாழ்க்கையாலும், தாழ்மை, அன்பு, சந்தோஷம் முதலிய சிறந்த குணங்களாலும் மக்கள் மனதைக் கவர்ந்தார். சுமார் 2 மைல் தூரத்திலுள்ள காட்டில் தனக்கென்று மரத்தால் ஒரு அறையை கட்டி தான் கடவுளுடன் தனித்திருக்கும்படி வசதி செய்து கொண்டார்.
பிஷப்பாக தம் அலுவல்களை முடித்து அடிக்கடி அங்கு சென்று தங்கி வந்தார். பல பக்தர்கள் அவருடன் அந்த இடத்தில் வாழ ஆசைப்பட்டு தங்களுக்கென்று பாறைகளில் சிறு குகைகள் வெட்டியும், மரத்தால் அறைகள் கட்டியும் நாளடைவில் சுமார் 30 பேர் அங்கு தங்கினர். சிறந்த படிப்பாளிகளும் செல்வந்தரின் மக்களும் யாவற்றையும் துறந்து அங்கு தங்க ஆரம்பித்தனர். பரி. மார்ட்டினுடைய சிறந்த முன்மாதிரியால் பரிசுத்த வாழ்க்கைக்கு வழிநடத்தப்பட்ட மக்கள் அநேகர் அந்நாட்களில் இருந்தார்கள். அவரால் செய்யப்பட்ட அற்புதங்களும் அநேகம்.
பரி. மார்ட்டின் தமது 80 ஆம் ஆண்டில் தன் வாழ்க்கையை முடித்தார். ஐரோப்பியரனைவரும் பரி. மார்ட்டின் பேரில் மிக பற்றுதலுள்ளவர்கள், தன்னலமற்ற குணமும் தாழ்மையும் அணிந்து ஜெப ஜீவியம் செய்து கிறிஸ்து நாதரிடம் பூரணமாகத் தங்களை ஒப்புக் கொடுத்த பக்தர்களுள் பரி. மார்ட்டினும் ஒருவர்.
பிறப்பு: கி.பி. 316, சபாரியா
இறப்பு: கி.பி. 397, நவம்பர் 8, (காந்த், கால்)
Comments (0)