(கி.பி. 177)
கிறிஸ்துவிற்குப் பின் முதலாம் இரண்டாம் நூற்றாண்டுகளில், கிறிஸ்தவ மக்களில் பலர் தங்கள் விசுவாச உறுதிக்காக துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்து மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள். சரித்திர ஆராய்ச்சியாளர் அக்காலங்களை முதலாம் நூற்றாண்டு துன்புறுத்தலின் காலமென்றும், இரண்டாம் நூற்றாண்டு துன்புறுத்தலின் காலமென்றும் வகுத்து கணக்கிட்டு வந்தார்கள். ஏனெனில், கிறிஸ்தவ மக்கள் பலவிதமான கஷ்டங்களுக்குள்ளும், துன்பங்களுக்குள்ளும் உட்பட்டு, நிம்மதியான வாழ்க்கையைச் சில காலம் நடத்திய பின்பு, திடீரென்று எதிர்பாராத விதமாய் துன்ப காலத்தில் பிரவேசித்தார்கள். ஐரோப்பாவின் ஒரு பாகத்தில் கிறிஸ்தவ மக்கள் சமாதானமான வாழ்க்கை வாழ்ந்து வந்தபொழுது மற்றொரு பகுதியில் அவர்கள் துன்பம் அனுபவித்து வந்தார்கள்.
தற்போது பிரான்ஸ் என்று சொல்லப்படும் கால் நாட்டில் லையன்ஸ் என்னுமிடத்தில் கி.பி. 177 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்குத் துன்ப காலம் ஆரம்பித்தது. அப்பொழுது பரி. ஐரேயுனு குருவாகத் தொண்டாற்றி வந்தார். ஆசியாவிலிருந்து இவர் பரி. போலிகார்ப்பினால் அங்கு அனுப்பப்பட்டு கிறிஸ்தவ மக்கள் நடுவில் பணியாற்றி வந்தார். வயது சென்ற பரி. போதின்யு அத்தியட்சகராக வாழ்ந்து வந்தார். தங்கள் நடுவில் இப்பக்தர்கள் வாழ்ந்து பணி செய்தது அங்குள்ள கிறிஸ்தவ மக்களுக்குப் பேரின்பம் அளித்தது. அப்பெரியார்களின் முன் மாதிரியைப் பின்பற்றி, புதிய மக்களாக விளங்கினார்கள். கிறிஸ்தவ மக்களின் தொகை பெருகி வந்தது.
இந் நன் நாட்கள் லையன்ஸில் நீடித்திருக்கவில்லை, கிறிஸ்தவ சபை பெருகி வந்ததைக்கண்ட விக்கிரக ஆராதனைக்காரர், கிறிஸ்தவ மக்க்ள் மீது பொறாமைக் கொண்டார்கள். மற்றொரு துன்புறுத்தலின் காலம் ஆரம்பமாயிற்று.
அக்காலத்தில் எழுதப்பட்ட மடலொன்று அப்பொழுது நடந்த நிகழ்ச்சிகளை உலகறியச் செய்திருக்கின்றது. இக்கடிதம் பரி. ஐரேயுனுவினால் எழுதப்பட்டதென்று கருதப்படுகிறது. அதன்படி அரசியலாரின் தூண்டுதலின் பேரில் புறசமயத்து மக்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுள் புகுந்து, அவைகளைக் கொள்ளையிட்டு, அவைகளில் குடியிருந்தவர்களை வீதிகளில் இழுத்துச் சென்று, அடித்து இம்சை செய்தார்கள். கொள்ளைக் கூட்டத்தார் நகர மக்களைக் கொள்ளையிடுவதுபோல கிறிஸ்தவ மக்களைக் கொள்ளையிட்டு, அடித்து, துன்புறுத்துவது வழக்கமாயிற்று.
இதன் பின்பு, அதிகாரிகளைக்கொண்டு கிறிஸ்தவ மக்களைக் கொலை செய்வதில் முனைந்தார்கள். கிறிஸ்தவர்களைக் கண்டால் கிறிஸ்துவை மறுதலிக்க அவர்களுக்கு அவகாசம் கொடுத்தார்கள். அவர்களின் விசுவாசத்தைக் குலைக்கும்படி பல்வேறு வகைகளில் அவர்களைத் துன்புறுத்தினார்கள், சித்ரவதை செய்தார்கள். விசுவாசத்தில் நிலைத்து, கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்தவர்களைச் சிலுவைகளில் அறைந்தும், காட்டு மிருகங்களுக்கு இரையாக்கியும் நெருப்பினால் சுட்டெரித்தும் கொன்றார்கள். சித்திரவதைப்பட்டும், கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்து இரத்தச் சாட்சிகளாய் மரிக்கத் துணிந்த பக்தர்கள் அநேகரிருந்தார்கள். பரி. போதின்யு ஒருவராவார்.
இரத்தச் சாட்சியாக மரிக்கும்பொழுது, பரி. போதின்யுவின் வயது தொண்ணூறு. வயது முதிர்ந்து தள்ளாடும் நிலையிலிருந்த அவர், நீதி மன்றத்திற்கு வர இயலாதவராயிருந்தார். அவரைப் போர்ச்சேவகர் அடித்து விளையாட்டு அரங்கத்திற்கு இழுத்துச் சென்றார்கள். திரள் கூட்டமான புறசமயத்து மக்கள் அவருக்கு விரோதமாக கூக்குரலிட்டார்கள். “நீர் கிறிஸ்துவை வணங்கினவரா” என்று ரோம கவர்னர் அவரைக் கேட்டார். அதற்கு அவர் “ஆம், ஒன்றான கடவுளையும் உலக மக்களை இரட்சிக்க கடவுள் அனுப்பிய அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் வணங்கும் அடியான்” என்று பதிலளித்தார். அவர் பக்கத்தில் இருந்தவர்கள் இதைக் கேட்டவுடனே அவரை அடித்து, கீழே தள்ளினார்கள். கூட்டத்திலுருந்த அனேகர் தங்கள் கைகளில் கிடைத்த பொருட்களைக்கொண்டு, அவரை அடித்தார்கள். அவருடைய வயோதிகத்தையும் கவனியாமல் அவர்கள் அவரைக் காலால் உதைத்து, கைகளினால் குத்தினார்கள். அங்கிருந்து பலமாகக் காயம்பட்டவராய், குற்றுயிருடன் சிறைச்சாலைக்குக்கொண்டு போகப்பட்டு, இரண்டாம் நாள் தம் உலக வாழ்வை நீத்தார்.
டீக்கன் சாங்டஸ் என்ற பக்தனும் இவ்வாறே துன்புறுத்தப்பட்டு மரித்தார். இவர் எவ்வளவுக்கெவ்வளவு சித்திரவதை செய்யப்பட்டாரோ அவ்வளவிற்கு உறுதியாக தாம் ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கையிட்டு, சகலவித உபத்திரவத்தையும் பொறுமையாய் சகித்தார். துன்புறுத்திய மக்கள் அவரை அடித்து, தரையில் இழுத்துச் சென்று கவர்னர் முன் நிறுத்தினார்கள். “நீர் யார்” என்று கவர்னர் அவரைக் கேட்டதற்கு, அவர் “நான் ஒரு கிறிஸ்துவின் அடியான்” என்று பதிலளித்தார். எவ்விதமான கொடூர நடவடிக்கைக்கும் அவர் பயப்படாததைக் கண்டு, பழுக்கக் காய்ச்சின வெங்கலத் தட்டுகளை உடம்பின் மென்மையான பாகங்களில் புகுத்தி வதைத்தார்கள், உலக மக்களுக்காக வதைக்கப்பட்டு மரித்த கிறிஸ்து இக்கொடுமையான உபத்திரவங்களைத் தாங்கும்படியான பலனை அவருக்குக் கொடுத்தார்.
உடல் முழுவதும் இரத்தத்தினாலும், காயங்களினாலும் மூடப்பட்டு, அங்கவீனராயும், சோர்வுடையவராயும் சிறைச்சாலைக்குக் கொண்டுபோகப்பட்டார். சில நாட்களுக்குப் பின் அங்கிருந்து நீதிமன்றத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். உடம்பு தொட்டமாத்திரத்தில் வேதனையடையக் கூடிய நிலைமையிலிருந்து அவரை மறுபடியும் சித்திரவதை செய்யப்போவதாக பயமுறுத்தியப் பொழுதும் கிறிஸ்துவை மறுதலிக்க இணங்காமல், கிறிஸ்துவைத் தவிர வேறெந்தக் கடவுளையும் வணங்க தம்மால் முடியாதென்று உறுதிகூறினார். இறுதிவரை அவர் துன்பத்தை சகித்து இரத்த சாட்சியாக மரித்தார்.
அதே விளையாட்டு அரங்கத்தில் பெலண்டினா என்ற அடிமைப் பெண் சித்ரவதை செய்து கொல்லப்பட்டான். அவள் பெலவீனமான உடலுள்ளவள். ஆனால் அஞ்சா நெஞ்சம் படைத்தவள். அவளைப் பிடித்து, வணங்கும்படி அவனை வற்புறுத்தினார்கள். அவளோ கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தை அறிக்கையிட சிறிதேனும் தயங்கவில்லை. கிறிஸ்துவின் பேரிலுள்ள விசுவாசத்தில் வேரூன்றிய அப்பெண்மனி, “நாங்கள் கிறிஸ்துவின் அடியார்கள். எங்களுக்குள் தீயதான செயல்களொன்றும் உங்களால் காண முடியாது” என்று கூறினாள்.
பெலண்டினாவின் விசுவாசத்தை கண்ட எதிரிகள் அவளைச் சித்திரவதை செய்வதில் முனைந்தார்கள். காட்டு மிருகங்களால் அவள் பீருண்டு கொல்லப்படும்படி, அவளை ஒரு மரத்தூணில் கட்டி அம்மிருகங்களை கூண்டிலிருந்து திறந்து விட்டார்கள். விளையாட்டு அரங்கத்தில் அப்பொழுது தூணில் கட்டுண்டவனாய், முழங்காலில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தாள். மிருகங்கள் அவளை முகர்ந்து விட்டு, யாதொரு தீங்கும் அவளுக்கு செய்யாததால், அவைகள் மீண்டும் அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டு பெலண்டினாவையோ சிறைச்சாலைக்குக் கொண்டு போனார்கள்.
விளையாட்டு பண்டிகையின் கடைசி நாளிலே, பாண்டிகஸ் எண்ற பதினைந்து வயதுள்ள கிறிஸ்தவ இளைஞனுடன் பெலண்டினாவை விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டுவந்து, கிறிஸ்துவை மறுதலித்து விக்கிரகங்களை வணங்க சம்மதிக்கும்படிக்கு இருவரையும் வற்புறுத்தினார்கள். அதற்கு அவ்விருவரும் இடங்கொடுக்காததைக் கண்டு, வெறிகொண்டு, அவர்களைப் பலவிதமாய் சித்திரவதை செய்தார்கள்.
இளைஞனான பாண்டிகஸ் மிருகங்களால் கொல்லப்பட்டு மகிமையோடு பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். பெலண்டினாவை மிலாறுகளினால் அடித்து, பழுக்கக் காய்ச்சின இரும்பு நாற்கலியில் அமரச் செய்தார்கள். பின்பு நூலினால் செய்த வலையில் அவளைப் போட்டுக் கட்டி, காளைகள் தங்கள் கொம்புகளால் குத்தி தூக்கி அங்குமிங்கும் எறியச் செய்தார்கள். இறுதியில் அவள் வாளால் கொல்லப்பட்டு, நமதாண்டவரின் திருப்பாதம் சேர்ந்தாள்.
அப்பொழுது அட்டலஸ் என்ற பிரபல கிறிஸ்தவ பக்திமான் சிறையிலிருந்தான். அவனையும் அவ்விளையாட்டு நாட்களொன்றில் விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டு வந்தார்கள். “இவர் அட்டலஸ் என்ற கிறிஸ்தவன்” என்று எழுதப்பட்ட பலகையொன்றை பவனியில் அவருக்கு முன் கொண்டு சென்றார்கள். பின்பு அவரை வார்களினால் அடித்து துன்புறுத்தினார்கள். எல்லா உபத்திரவங்களையும் பொறுமையாக சகித்தார். இதைக் கண்ட அவருடைய எதிரிகள் நெருப்பினால் காய்ச்சப்பட்ட இரும்பு நாற்காலி ஒன்றில் அமரச் செய்து, சங்கிலிகளினால் அவரைக் கட்டினார்கள். உடல் வெந்து, துர்நாற்றம் எடுத்தது. அப்பொழுது தெய்வீக ஒளியோடு “நீங்கள் இவ்வாறு செய்வது மனிதத்தன்மைக்கு மாறாக இருக்கிறது. இது உங்களுக்கு ஒரு குற்றமாகும். ஆனால் எங்கள் மீது சுமத்தும் குற்றங்களுக்கு நாங்கள் குற்றவாளிகளல்ல” என்று கூறினார். இதை அவர் சொல்லி முடித்தபொழுது அவரை வாளால் வெட்டிக் கொன்றார்கள்.
அல்சிபியாடெஸ் என்ற கிறிஸ்தவ பக்தன் விரதம் பூண்டு, ரொட்டியும், தண்ணீரும் தமக்கு உணவாகக்கொண்டு தூய வாழ்க்கை நடத்தி வந்தார். நமதாண்டவரிடத்தில் மட்டிலா அன்பு கொண்டவர். தம்முடைய கிறிஸ்தவ விசுவாசத்திற்காக, இவரும் விளையாட்டு அரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
விளையாட்டு நாட்களின் இரண்டாம் நாளில் அலெக்சாண்டர் என்ற பெயருடைய மருத்துவர், விளையாட்டு அரங்கத்தில் கிறிஸ்தவ மக்கள் சித்தரவதைப்படும்பொழுது பரிந்து பேசியும், அவர்களுடைய விசுவாசம் குன்றிப் போகாதபடிக்கு அவர்களை உற்சாக மூட்டியும் வருவதைக் கிறிஸ்தவர்களின் எதிரிகள் கண்டு அவரின் மீது வெறி கொண்டார்கள். அவர் கால் நாட்டில் சுவிசேஷம் பரவுவதற்காக உற்சாகத்துடன் உழைத்த பக்தன். அவரை இழுத்து வந்து; கவர்னர் முன்னிலையில் நிறுத்தினார்கள். கவர்னர் அவரை நீர் யார் என்று வினவினார், அதற்கு அவர் “நான் ஒரு கிறிஸ்தவன்” என்று பதிலளித்தார். உடனே கவர்னர் யாதொரு விசாரனையும் செய்யாமல் அவரைக் கொலை செய்யும்படி உத்தரவிட்டான். அட்டலஸ் பக்தனுடன் அலெக்சாண்டரும் சித்தரவதைப் பட்டார். அவர் கிறிஸ்துவை மறுதலிக்க இணங்காமையால் வாளுக்கிரையானார்.
கி.பி. 177 ஆம் ஆண்டில் லையன்ஸ் விளையாட்டு அரங்கத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக தங்கள் உயிரைக் கொடுத்த மக்கள் நாற்பத்தெட்டு பேரென்று சொல்லப்பட்டிருக்கிறது. இவர்கள் பற்பல இடங்களிலிருந்து அங்கு கொண்டுவரப்பட்டு, இரத்தச் சாட்சிகளாக அங்கு மரித்த காரணம்பற்றி, லையன்சைச் சேர்ந்த இரத்த சாட்சிகள் என்று அழைக்கப்பட்டார்கள். நாம் போற்றி நினைகூற வேண்டிய கிறிஸ்தவ பக்தர்களின் பெயர்களுடன் இவர்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விதாமான துன்பங்களையும் மகிழ்வுடன் சகித்து, கிறிஸ்துவிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் துணிந்த இப்பக்தர்கள் திருச்சபையின் வித்துக்களாகத் திகழ்ந்தார்கள் என்று உறுதியாய்க் கூறலாம்.
Comments (0)