எகிப்தின் யோவான் தச்சு வேலை செய்து வாழ்க்கை நடத்தி வந்த ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டுவரை கிறிஸ்தவ மக்களில் அநேகர் துறவறம்பூண்டு, காடுகளிலும், வனாந்தரங்களிலும் தனியாக வசித்து வந்தார்கள். இவ்வாறு வாழ்வது பரிசுத்தத்தில் முன்னேறுவதற்கு அவசியமென்று அவர்கள் கருதினார்கள். எகிப்தின் யோவான் என்பவர் அவர்களில் ஒருவராவர். குள்ள யோவான் என்ற பக்தனைப்போல, இவரும் வயதில் முதிர்ந்த ஒரு துறவியின் அடியானாகக் காட்டிற்குச் சென்றார். அப்பொழுது பரி. யோவானுடைய வயது இருபத்தியாறு. அவருடன் பன்னிரெண்டு வருடங்கள் துறவியாக ஜீவித்து, அவருக்குப் பணிவிடை செய்தார். அதன்பின் சுமார் ஐம்பது வருடங்கள் கடவுளோடு ஐக்கியப்பட்டவராக வாழ்ந்து, தமது தொண்ணூறாவது வயதில் இவ்வுலக வாழ்க்கையை நீத்தார்.
பன்னிரெண்டு வருடங்கள் வயோதிபத் துறவியினிடம், நீங்காத நிழலைப்போல் பணிவிடை செய்து வந்தபின், நான்கு மடங்களில் தங்கி, திருமறை நூல்களைக் கற்றார். பின்பு நாற்பதாம் வயதில், எகிப்து நாட்டிலுள்ள லைக்கபோரிஸ் என்ற இடத்திற்கருகிலுள்ள செங்குத்தான மலையின் உச்சியில் ஒரு சிறு அறையை தமக்கென்று கட்டிகொண்டு, அதில் வாசம் செய்ய ஆரம்பித்தார். அந்த அறைக்கு ஒரு சிறிய சன்னல் மட்டுமேயிருந்தது. அவரைப் பார்க்க வருபவர்கள் கொண்டுவரும் காய், கனி போன்றவைகளே அவருக்கு உணவாக இருந்தன. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒருவரும் அவரைப் பார்க்க முடியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். பெண்கள் தம்மைக்காண அனுமதியளிக்க மாட்டார். சூரியன் அஸ்தமித்த பின்பே அவர் உணவு அருந்துவார்.
பரி. யோவானுடைய சீடர்கள் அவருடைய அறைக்கு அருகில் குடிசைகள் கட்டி, உபவாசித்து, ஜெபம் செய்து வந்தார்கள். பரி. யோவான் ஆசீர்வதித்து அனுப்பும் எண்ணெயைப் பிணியாளிகளின் மீது பூசி அவர்களுக்காக ஜெபித்து வந்தார்கள். அதன்பயனாக அநேக நோய்ப்பட்ட மக்கள் குணமடைந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பரி. யோவான் தீர்க்கதரிசன வரத்தையும் பெற்றிருந்தார். தம்மண்டை வந்த மக்களிலிருந்த கெட்ட எண்ணங்களையும் அந்தரங்க பாவங்களையும், அவர் அறிந்திருந்தார். அவைகளை அவர் வெளிப்படுத்தி, அவர்களில் மனஸ்தாபத்தையும், மனமாறுதலையும் உண்டுபண்ணினார். வருங்காரியங்களையும் அவர் அவர்களுக்குச்சொல்லி, அவர்களை எச்சரிப்பார். அக்காலத்தில் எகிப்து நாடும், ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடலைச் சுற்றியிருந்த நாடுகளும் செழித்து, சிறப்புற்று விளங்கின. மூத்த தியோடிசியஸ் எனப்பட்டவன் நான்காம் நூற்றாண்டில் ஒரு பிரசித்திபெற்ற சக்கரவர்த்தியாக விளங்கினான்.
கி.பி. 383 ஆம் ஆண்டில் மக்சிமஸ் எனப்பட்ட ஒரு கொடூரன் தியோடிசியஸ் சக்கரவர்த்தியை எதிர்த்து, தோற்கடித்து கீழ்ப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன், பலத்த சேனையொன்றைத் திரட்டிக் கொண்டிருந்தான். அவனுடன் போர் நிகழ்த்த நேரிட்டால், தான் தோல்வியடைவது நிச்சயமென்று தியோடிசியஸ் அஞ்சி, பரி. யோவானிடம் ஆட்களை அனுப்பி, இக்கட்டான அந்நிலையில் தான் என்ன செய்ய வேண்டுமென்று அறிவிக்க வேண்டுமென்று கேட்டான். அப் பக்தன் தியோடிசியஸூக்குத் தைரியம் கூறி, மக்சிமஸூக்கு அஞ்சவேண்டாமென்றும், அவனுடைய சேனைக்கு எவ்விதமான சேதமுமின்றி மக்சிமசை மேற்கொள்வானென்றும் முன்னறிவித்தார். பரி. யோவான் சொல்லியது போலவே யாவும் நடந்தன. மக்சிமஸ் கொல்லப்பட்டான். நாட்டில் அமைதி நிலவிற்று.
இச்சம்பவம் நிகழ்ந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின், மேற்கு திசையிலுள்ள நாட்டில் கலகம் ஏற்பட்டதால், தியோடிசியஸ் அங்கு செல்ல வேண்டியதாயிற்று. அதைக் குறித்து அறியவேண்டுமென்று பரி. யோவானுக்கு ஆட்கள் அனுப்பப்பட்டார்கள். தியோடிசியஸ் அதில் வெற்றி பெறுவானென்றும், அதில் உயிர்ச்சேதம் அதிகமாயிருக்குமென்றும், வெற்றியோடு திரும்பி வந்த சில காலத்தில் அவன் மரித்துப் போவானென்றும் பரி. யோவான் சொல்லியனுப்பினார். அவர் சொல்லியவாறே யாவும் நிறைவேறலாயின.
நோய்களைக் குணமாக்கும் வரமும் பரி. யோவான் பெற்றிருந்தார். அநேக பிணியாளிகள் அவரிடம் நேரிடையாக வந்து குணமடைந்தார்கள். லைக்கபோரிசுக்கு அவரிடம் வர இயலாதவர்கள். அவர் ஆசீர்வதித்து அனுப்பும் எண்ணெயைப் பூசி, அதனால் குணமடைந்தார்கள். அரசியலில் பணியாற்றி வந்த ஒருவருடைய மனைவி தன் கண் பார்வையிழந்தாள். பரி. யோவான் ஆசீர்வதித்து அனுப்பிய எண்ணெயைப் பூசி, தன்னுடைய கண்ணின் பார்வையை மறுபடியும் பெற்றாள். இப்பெண்மணி பரி. யோவானைக் காண விரும்பி, தன் புருஷனுடன் லைக்கபோரிசுக்கு வந்து சேர்ந்தாள். பெண்களைப் பார்க்காமல் துறவியாக வாழ்ந்த பக்தன் அந்த அரசு பணியாளரின் மனைவியைப் பார்க்க முடியாதென்று தெரிவித்தார். பல இன்னல்களுக்குட்பட்டு, வெகுதூரம் பிரயாணம் செய்த அப்பெண்மணிக்கு இச்செய்தி மிக மனவருத்தத்தைக் கொடுத்தது. அவ்வதிகாரி இரண்டாம் முறையாகப் பரி. யோவானிடம் சென்று, எவ்வாறாயினும் தன்னுடைய மனைவி அவரைக் காண அனுமதியளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டான்.
பரி. யோவான் அவ்விருவருடைய விருப்பத்தை உணர்ந்து, “உன் மனைவியிடம் சென்று இன்று இரவு அவள் என்னைக் காண்பாளென்று சொல்லும், அவள் என்னிடம் வரவேண்டியதில்லை. அவள் இருக்குமிடத்திலிருந்து நகரவேண்டியதில்லை” என்றார். அவ்வதிகாரி பரி. யோவான் அறிவித்ததைத் தம் மனைவியிடம் தெரிவித்தார். அந்த இரவு கடவுளின் பக்தன் அவளுக்குக் காணப்பட்டு, உன்னுடைய விசுவாசம் என்னை உனக்குக் காணச்செய்தது. உன் சரீரப் பிணிகள் நீங்கும்படி நான் கடவுளிடம் வேண்டிகொண்டேன், எப்பொழுதும் கடவுளிடம் பயத்தோடும், பக்தியோடும் நடந்துகொள். உனக்கு அவர் செய்த உபகாரங்களை மறவாதே என்று சொல்லி மறைந்து போனார். மறுநாள் தான் கண்டதைச் சொல்லி, அவருடைய பார்வையையும், உருவத்தையும் அவள் விவரித்து கூறியபொழுது அவளுக்குக் காணப்பட்டவர் பரி. யோவான்தானென்று அவளைக் கேட்ட அனைவரும் அறிந்து கொண்டார்கள்.
மற்றொரு நிகழ்ச்சியைக்குறித்து பலடியஸ் (பிற்காலத்தில் ஹெல்லனொபோலிஸ் அத்தியட்சகராக பதவி வகுத்தவர்) எழுதியிருக்கிறாரென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நைல் நதி பிரவாகித்து ஓடிக்கொண்டிருந்த காலம் அது. பல அபாயங்களையும் மேற்கொண்டு பலடியஸ் என்பவர் பரி. யோவானைக் காணும்படி லைக்கபோரிசுக்கு வந்திருந்தார். பரி. யோவான் அவரைப் பார்த்து அளவளாவினார். அப்பொழுது அந்நாட்டு கவர்னர் அலிபியஸ் வரவே, பரி. யோவான் பலடியசுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, அலிபியசுடன் பேச ஆரம்பித்தார். அவர்களுடைய பேச்சுவார்த்தை நீண்டது. இதைக் கண்ட பலாடியஸ் தம் பொறுமையை இழந்து, இப்பக்தன் அந்தஸ்திற்கு மதிப்பு கொடுக்கிறாரே என்று மனதில் சொல்லிக் கொண்டார்.
இதை அறிந்த பரி. யோவான், தமக்கு பணிவிடை செய்யும் தியோடாஸ் என்பவரை அனுப்பி, பலடியசை சற்று பொறுமையாயிருக்கச் சொல்லும் என்று சொல்லிவிட்டு, பின்பு அவரை அழைப்பித்து, தாம் பேசிக்கொண்டிருந்த கவர்னர் பல அலுவல்களின் காரணத்தால், சற்றும் அவகாசம் கிடைக்காதவர், தாமதமின்றி அவர் கவனிக்கவேண்டிய காரியங்கள் பல உள்ளது என்றும், அக்காரணங்களால்தான் அவருக்குத் தாம் முதலில் பேட்டி கொடுக்க முற்பட்டதாகவும் கூறி சமாதானப்படுத்தினார். பின்பு அவர் (பலடியஸ்) சொற்பகாலத்தில் அத்தியட்சகராவாரென்றும், அவர் பணியைச் செய்யும்போது பலவித இன்னல்கள் அவருக்கு ஏற்படுமென்றும் முன்னறிவித்தார்.
அதே வருடம், அவருடைய தூய்மையான வாழ்க்கையையும், பக்தியையும் கேள்விப்பட்ட பெற்ரேனியஸ் என்று சொல்லப்பட்ட பக்தன், மடகுருக்கள் ஆறு பேருடன் லைக்கபோரிசுக்கு பரி. யோவானைக் காணும் நோக்கத்துடன் வந்தார். அவர்களுள் ஒருவன் டீக்கன் பட்டம் பெற்றவர். தாம் டீக்கனாக அபிஷேகம் பெற்றவர் என்பதை அவர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமலிருந்தார். தம்மைக் காணவந்த மக்களுடன் அளவளாவும்பொழுது, டீக்கனாயிருந்தவரைச் சுட்டிக்காட்டி, ‘நீர் ஒரு டீக்கன் அல்லவா’ என்றார். அவர் மாறுத்தரமாக ‘நான் ஒரு டீக்கன் அல்ல’ என்றார். பரி. யோவான் புன்னகையுடன் ‘தாழ்மையாக இருக்க விரும்புவது நல்லதுதான்’ ஆனால் அத்துடன் உண்மை பேசுவதும் அவசியம் என்று கூறினார். அந்த டீக்கன் தாம் செய்த தவறை உணர்ந்து அதை அறிக்கையிட்டார். அவர்களுள் நோய்வாய்ப்பட்டவர்களைப் பரி. யோவான் குணப்படுத்தினார்.
பரி. யோவான் வயது முதிர்ந்த நிலைமையில் பெலவீனராயிருந்த போதிலும், உபவாசிப்பதிலும், தியானம் செய்வதிலும், தம்மைக் காணவந்த மக்களுக்குப் போதித்து, அவர்களில் சுகவீனமாய் இருப்பவர்களுக்குச் சுகம் கொடுப்பதிலும் இறுதி வரை கவலையுள்ளவராகவேயிருந்தார். அக்காலத்திலிருந்த பக்தருள் இவர் சிறந்தவர். இவ்வுலகத்தைவிட்டுப் போவதற்கு முன் மூன்று நாட்கள், ஒருவரையும் சந்திக்காமல் கடவுளோடு சஞ்சரித்து வந்தார். நான்காம் நாள் ஜெபத்திலிருந்தவாரே, முழங்காலில் நின்றபடி நமதாண்டவரின் திருப்பாதம் சேர்ந்தார்.
பிறப்பு: கி.பி. 305
இறப்பு: கி.பி. 394
Comments (0)