மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை எகிப்து நாட்டிலுள்ள பாலைவனங்களில் அநேகக் கிறிஸ்தவத் துறவிகள் வசித்து வந்தார்கள். புலன்களை அடக்கி, துறவு பூண்டு, ஜெபத்திலும், தியானத்திலும் தங்கள் வாழ்நாட்களைச் செலவிடுவது தூய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு ஒரு சாதனமாகும் என்பது அவர்களுடைய கருத்து. தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்குமுன்பு நமது ஆண்டவரும் நாற்பது நாள் வனாந்திரத்தில் தங்கி உபவாசம் செய்தாரன்றோ? துறவிகளாகப் பாலைவனத்தில் வாழ்க்கை நடத்தின பக்தருள் சின்ன அல்லது குள்ள யோவான் என்று அழைக்கப்பட்டார். ஒரு வயது முதிர்ந்த துறவியின் அடியானாக எகிப்து நாட்டிலுள்ள ஒரு பாலைவனத்திற்குச் சென்றார்.
குருவாகப் பாராட்டி வந்த அவ்வயது முதிர்ந்த துறவியின் பேரில் பரி. யோவான் மிகவும் பற்றுள்ளவராய் இருந்தார். முதன் முதலாகப் பாலைவனத்திற்கு வந்தபொழுது, பரி. யோவான் தம் கையில் ஒரு மரக்கொம்பை கொண்டு வந்திருந்தார். அதைத் தரையில் நட்டு வளரச் செய்ய வேண்டுமென்று பரி. யோவானுடைய குரு விரும்பினார். ஒவ்வொரு நாளும் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து, அதற்கு ஊற்ற வேண்டுமென்று அவருடைய குரு அவரைப் பணித்தார். இவ்வேலை சற்றுக் கடினமாயிருந்தபோதிலும், தம் குருவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, தினந்தோறும் அப்பணியைச் செய்து வந்தார். அம்மரக்கொம்பு துளிர்த்து, காய்ந்து, பலன் தந்தது. அதன் பழங்களைப் பறித்து அவைகளை முதற் பலனாக ஸ்தோத்திரத்துடன் சமீபத்திலுள்ள ஆலயத்தில் படைத்தார். பின்பு அவைகளை அங்குள்ள மக்களுக்கு அளித்து ‘இவை கீழ்ப்படிதலின் பலன். சாப்பிட்டு திருப்தியாகுங்கள்” என்று சொன்னார். தம் குருவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, கீழ்ப்படிந்து அதின் பலனைக் கண்டதைக் குறித்து மகிழ்ச்சியுற்றார்.
பாலைவனத்திலும் ஏதேனும் வேலை செய்யாமல் வாழ்நாட்களைக் செலவிடக்கூடாதென்று பரி. யோவானும் கருதினார். தமக்கென்று ஒரு சிறு அறையைக் கட்டிக்கொண்டு கடவுளின் திருவருளை எண்ணி இன்புற்றிருப்பார், மற்ற சமயங்களில் பாய்களை முடைவார். ஒரு நாள் ஒட்டகங்களின் மேல் வியாபாரிகள் அவ்வழியாகச் சென்றார்கள். பாய் முடையும் வேலையில் ஈடுபட்டிருந்த பரி. யோவானை அவர்களில் சிலர் காரணமின்றி பரிகாசம் செய்தார்கள். அவர்களுக்கு அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை, பின்பு அவர்கள் கடுஞ்சொற்களை உபயோகித்தார்கள். அதையும் பொருட்படுத்தாமல் சாந்தமான முகத்துடனும் அமைதியுடனும் அவர்களைத் திரும்பிப் பார்க்காமல் தம் அறைக்குச் சென்றார். அவருடைய சாந்தமும் அமைதியுமான நடத்தை அவ்வியாபாரிகளுக்கு வியப்பாக இருந்தது.
மற்றொரு சமயம் தியானம் செய்வதற்காக ஒரு வயலைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. அப்பொழுது அவ்வயலில் இருவர் சண்டையிட்டு ஒருவரையொருவர் கோபமாய் பேசியதைக் கண்டார். அதைக் காணச் சகியாதவராய் தம் குடிசைக்கு விரைந்து சென்றார். அங்கிருந்து ஆலயத்திற்குச் சென்று முழங்காலில் நின்று அவ்விருவரின் சமாதானத்திற்காக வேண்டினார்.
அமைதியும் சாந்தமும் சமாதானமும் உள்ளவராக அவர் வாழ விரும்பினாலும், எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒரு நாள் அவர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் ஒரு கொடூரமான மனிதன் அவரை வழிமறித்து ‘நீர் விஷமான இருதயம் படைத்தவர்’ என்று அவர் மீது பழி சாற்றினான். அதற்கு அவர், ‘நீர் சொல்வது மிக உண்மை. ஆண்டவரின் முன் நான் ஒரு நீசபாவி. நீர் நினைப்பதைக் காட்டிலும் அதிகமாகவே இருதயத்தில் விஷமுள்ளவனாக இருக்கலாம்’ என்று சாந்தத்துடன் பதிலளித்தார்.
உலகப்பற்று சிறிதேனும் இல்லாதவராக அவர் வாழ்ந்தார். உலகக் காரியங்களைக் குறித்து அவருடன் எவரேனும் அளவளாவுவதை விரும்பமாட்டார்.. ஒரு நாள் பாலைவனத்தில் அவரைச் சந்தித்த மக்கள் இவரிடம், “நல்ல மழை பெய்திருக்கிறது. ஈச்ச மரங்கள் நன்றாகத் துளிர்விட்டிருக்கின்றன. பாய்களும், கூடைகளும் முடைய உங்களுக்கு ஓலை ஏராளமாக கிடைக்கும்” என்று கூறினார்கள். அதற்குப் பரி. யோவான் “அவ்விதமாகவே கடவுளின் ஆவி அவருடைய அடியார்களின்மேல் பொழியும்பொழுது, அவர்கள் தழைத்தோங்கி கடவுளிடத்திலுள்ள பயபக்தியிலும் அன்பிலும் வளருவார்கள்” என்று பதிலுரைத்தார்.
கிறிஸ்தவப் பக்தர்கள் எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். கடவுளைப்பற்றிய எண்ணம் அவர்கள் உள்ளத்தை விட்டு ஒரு நிமிடமும் பிரிந்திருக்கக் கூடாது என்று எப்பொழுதும் போதிப்பார்.
கடவுளைப் பற்றியக் காரியங்களைக் குறித்து மக்களுடன் பேசுவதில் பொழுது போவது தெரியாமல் எவ்வளவு நேரமும் பேசுவார். ஒரு சமயம் ஒரு பக்தன் பரி. யோவானைக் காண விரும்பி அவருடன் சிறிது நிமிடங்கள் பேச விரும்புவதாக ஒருவரை அனுப்பினார். பரி. யோவான் அவரைச் சந்தித்தபொழுது, தம் அறைக்கு முன் நின்று அப் பக்தனுடன் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து பேசினார். பின்பு தன் அறைக்கு அவரை அழைத்து அவருடன் பேச ஆரம்பித்து, இரவு முழுவதும் அளவளாவினார். வெளியே வந்தபொழுது விடியற்காலமாகி வெகு நேரமாயிற்றென்று உணர்ந்தார்கள். பின்பு இருவரும் உணவருந்தி பிரிந்தார்கள். ஆவிக்குரியதைக் குறித்து அளவளாவி மகிழும் வாய்ப்பு பெற்றதைக் குறித்து மகிழ்ச்சியுற்றார்.
அக்காலத்தில் கிறிஸ்தவச் சமயம் பரவுவதற்குத் துறவிகள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து துறவிகளின் கூட்டம் நடைபெற்றது. பரி. யோவான் அதில் கலந்துக் கொண்டார். அக்கூட்டத்திலிருந்து ஒரு துறவி ஒரு நாள் நகைச்சுவையுடன் பேசினார். பரி. யோவான் அதை விரும்பவில்லை. “நாம் நம் நாட்டின் நிலைமையைக் குறித்து அழுது, அது கிறிஸ்துவைப்பற்றி அறிகிற அறிவில் வளருவதற்கு ஆவன செய்வதற்கு கூடி வந்திருக்கையில், நகைப்பதற்கு என்ன இருக்கிறது” என்று கண்டித்தார்.
பக்தி நெறியில் வளர்க்கப்பட்டிருந்த பெய்சியா என்ற ஒரு பெண் எளிமையான நிலைமைக்குட்பட்டு, அதன் காரணமாக நெறி தவறி வாழ ஆரம்பித்தாள். அவளை சீரான நிலைமைக்கு கொண்டு வரும்படி அவளை அறிந்த அநேகர் முயற்சி எடுத்தும் பயனில்லாமல் போயிற்று. அந்நிலையில் சிலர், பரி. யோவானிடம் சென்று பெய்சியாவை அவர் சந்தித்து, அவளை சீரான நிலைமைக்குக் கொண்டு வர வேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். பரி. யோவான் அதைக் குறித்து கடவுளிடம் ஜெபத்தில் மன்றாடி பெய்சியாவின் வீட்டிற்குச் சென்றார்.
தன் வீட்டிற்குள் பரி. யோவான் வருவதைப் பெய்சியா முதலில் விரும்பாமல், தன் வீட்டின் கதவைத் திறக்க மறுத்தாள். பின்பு பிடிவாதமாகக் கதவைத் தட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு கதவை திறந்து, உள்ளே வரும்படி அவரை அழைத்தாள். வீட்டிற்குள் பிரவேசித்தவுடன் அவர் “இயேசு பெருமான் உனக்கு என்ன துரோகம் செய்தாரென்று அவரை விட்டு விலகிப் போனாய்” என்று சொல்லி மிகவும் அழுதார். அவர் அழுவதைக் கண்டு என்ன செய்வதென்று அறியாமல் அவள் திகைத்து, “என்னைக் கண்டு ஏன் இவ்வாறு அழுகிறீர்” என்று பணிவுடன் கேட்டாள். அதற்கு அவர் “சாத்தான் உன்னில் குடிகொண்டு உன்னை விட்டுப் போக மாட்டானென்று இருக்கும் நிலைமையைக் கண்டு நான் அழாமல் என்ன செய்வது” என்றார். அவருடைய தூய்மையான முகத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு இருதயத்தில் நொறுக்கப்பட்டாள்.
“என்னைப்போல பாவத்தில் உழன்று கிடக்கும் ஒரு பாவிக்கு பரலோக வாசல் திறக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன்” என்று அவள் சொன்னாள். அதற்கு அவர் “கடவுளின் கிருபைக்கும் அன்பிற்கும் எல்லையில்லை” என்று பதிலளித்தார். நீர் இப்பொழுதே அவரிடம் என்னை அழைத்துச் செல்லும் என்று அவள் சொல்லி, தன்னுடைய பணியாட்களையும், தன் வீடு, உடமை, ஒன்றையும் திரும்பிப் பாராமல், அவைகளை உதறித் தள்ளிவிட்டு அவருடன் புறப்பட்டான். பிற்காலத்தில் அவள் ஒரு சிறந்த அடியாளாக விளங்கினாள்.
பரி. யோவான் தன் வாழ்க்கை இறுதிவரை மக்களுக்கு சேவை செய்தார்; தமது கடைசி நாட்களில் அவர் தம் அடியார்களுக்குச் சொன்னதாவது; “என் மனவிருப்பத்தின்படி நான் ஒன்றும் செய்யவில்லை. கடவுளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பணி என்னவென்று என் அனுபவத்தில் அறிந்தவைகளை, நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பினேன். உங்களால் இயலாதவைகளை நீங்கள் செய்யும்படி நான் உங்களுக்குப் போதிக்கவில்லை. கடவுள் உங்களோடிருப்பாராக.” ஐந்தாம் நூற்றாண்டில் இப்பக்தன் ஆண்டவரின் அழைப்புபெற்று, அவருடைய திருப்பாதம் சேர்ந்தார்.
பிறப்பு: கி.பி. 339, எகிப்து
இறப்பு: கி.பி. 405, எகிப்து
Comments (0)