Today Bible Verse

St. Francis of Sales History in Tamil

     சேல்ஸ்சை சேர்ந்த பரி. பிரான்சிஸ், பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுகளின் பக்தருள் ஒருவர். இவர் திருச்சபை புலவராவர். இவர் திருமறையில் புலமை பெற்றதுடன், தாழ்மையும் பரிசுத்தமுமான வாழ்க்கை நடத்தி வந்தவர். இவர் எழுதிய பக்தி வாழ்க்கைக்கு முகவுரை என்ற புத்தகம் கிறிஸ்தவச் சமயத்தின் ஒரு சிறந்த பக்தி நூலாகும்.

     பரி. பிரான்சிஸ் கி.பி. 1567 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டிலுள்ள சேல்ஸ் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பிரபுக்கள் குலத்தைச் சேர்ந்தவர். தாயின் கர்ப்பத்திலிருந்து ஏழாம் மாதமே பிறந்து, மருத்துவரால் கைவிடப்பட்டு, பலவீனமாகக் காணப்பட்ட பிரான்சிஸ், கடவுளின் அருளால் வெகு சீக்கிரத்தில் பலமும் திடனுமுள்ள குழந்தையாக வளர்ந்தார். அவருடைய வசீகரத் தோற்றமும், அமைதி நிலவிய பார்வையும் அவரைக் குழந்தையாகப் பார்த்தவர்களின் மனதைக் கவர்ந்தன. அநேக பரிசுத்தவான்களின் தாய்மாரைப் போல, அவரின் தாயாரும் தம் குழந்தையை நமது ஆண்டவரின்பேரில் பற்றுதலுள்ளவராக வளர்க்க முற்பட்டார்கள். திருச்சபையின் பேரில் நன்மதிப்பையும் பரிசுத்தமான வாழ்க்கை நடத்தும் அவசியத்தையும் எப்பொழுதும் அவர்முன் வைத்து அவருக்குப் போதித்து வந்தார்கள் பரிசுத்தவான்களின் வாழ்க்கை சரித்திரங்களை வாசித்துக் காண்பித்து, அவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றும்படிக்கு தூண்டினார்கள்.

     தாம் ஏழை மக்களைப் பார்க்கும்படிச் செல்கையில், தம்முடன் அவரையும் அழைத்துச் சென்று அவர்களின் குறையைப் போக்கும் நற்பணியில் ஈடுபடும்படி செய்து வந்தார்கள். கல்வி கற்பதற்காக அவர் தம் வீட்டை விட்டு வெளியூர் செல்வதை அவருடைய தாய் விரும்பவில்லை. தம் மகன் உலகத்தாரால் கறைபட்டுப் போவானென்று அஞ்சினார்கள். அவருடைய தந்தை, தம் மகன் முன்னேற்றமடைய கல்வி அவசியமெனக் கருதி, கடவுள் அவரை பாவத்தில் விழாதபடி அவருக்குப் பலன் தந்துக் காப்பாரென்று நம்பி, அவருடைய ஆறாம் வயதில் ராச்வில் என்னுமிடத்திலுள்ள பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினார்.

     இளமையிலேயே பல நூல்களைப் படிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. கடவுளுக்குத் தொண்டு செய்து தம் வாழ்நாட்களை அவருக்கென்று செலவிடுவதென்று அவர் தீர்மானம் செய்தார். அவர் அவ்வாறு முடிவு செய்தது அவருடைய தந்தைக்கு முதலில் விருப்பமில்லாதிருந்தபோதிலும், பின்பு தன் மகனை கடவுள் அவர் ஊழியத்திற்கென்று அழைத்திருப்பதை உணர்ந்து, அவருடைய பயிற்சிக்கென்று ஆவன செய்தார். திருமறையையும், கிறிஸ்தவச் சமய நூல்களையும் நன்றாய் ஆராயவேண்டுமெனில், கிரேக்க மொழியையும், எபிரெய மொழியையும் படித்தல் அவசியமென்று பரி. பிரான்சிஸ் அறிந்து அம்மொழிகளைக் கற்றார்.

     பதினெட்டாம் வயதில் அவருடைய தந்தை அவரை பாரிஸ் நகர கல்லூரியிலிருந்து பாடுவா என்ற இடத்திற்கு அனுப்பினார். அவ்வூரில், கல்விமானும் தூய வாழ்க்கையும் நடத்திவந்த அந்தோனி போஸ்வின் என்ற குருவிடம் தம் ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து உறவாடி பெரிதும் பயன்பெற்றார்.

     பாடுவாவிலிருக்கும்பொழுது, நோய்வாய்ப்பட்டு மரணத்தருவாயில் இருந்தார். அவரண்டையிலிருந்தவர்கள் அவர் மரித்துப் போவாரென்று எண்ணி, அவருடைய சரீரத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதில் முனைந்தார்கள். அப்பொழுது அவர் தன் சரீரத்தை அடக்கம் செய்வதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மருத்துவக் கல்லூரியில் உடல்களை அறுத்து பரீட்சை செய்துவரும் மாணவர்களுக்குப் பயன்படும்படி தன் உடலைக் கொடுத்து விடுங்களென்றார். ஆண்டவரின் அருளால் அவர் சீக்கிரத்தில் சுகமடைந்தார். அவருடைய தந்தையின் விருப்பப்படி சட்ட நூல்களைப் படித்தார்.

     பின்பு இத்தாலிய நாட்டிற்குச் சென்று, ரோமாபுரியையும் மற்ற புண்ணிய ஸ்தலங்களையும் கண்டுகளித்தார். இரத்தசாட்சிகளுடைய கல்லறைகளைக் காணும்போது பக்தி பரவசப்பட்டு கண்ணீர் வடித்தார். அங்கிருந்து திரும்பி வந்தபொழுது, அவருடைய தந்தை அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று துயிலி என்ற இடத்திலுள்ள தம் அரண்மனையில் நூல்நிலையமொன்று அமைத்து, அங்கு தங்கியிருக்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார். பரி. பிரான்சிஸ் அதற்கு இணங்கி அங்கு தங்கியிருந்து திருமறை நூல் விளக்கங்களையும், பக்தி நூல்களையும் கற்று, தம்முடைய இருபதாம் வயதில் அறிவுச் செல்வராய்த் திகழ்ந்தார்.

     கல்விப் புலமையுடன் சொற்பொழிவாற்றும் திறனும் உள்ளவராக பரி. பிரான்சிஸ் விள்ங்கினார். கேம்ப்ரி என்னும் நாட்டின் பாராளுமன்றத்தில் அங்கத்தினராகப் பதவி வகிக்கவேண்டுமென்று அழைத்தார். பரி. பிரான்சிஸ் அவர்களுடைய வேண்டுகோளுக்கிணங்கவில்லை. பின்பு, தம்முடைய தந்தையிடம் அனுமதிபெற்று, ஜெனீவா பேராயத்தில் ஒரு சபைக்குக் குருவாக அவர் அமர்ந்தார். ஆலயத்தில் அவர் செய்த முதல் பிரசங்கம் கூடியிருந்த சபையோரை அசைத்து அவர்கள் இருதயத்தில் அனல் மூட்டியது. சபை குருவாக அவர் ஆற்றிய பணி மிகவும் பொறுப்பும், சிறப்பும் வாய்ந்ததென்று அவர் கருதினார்.

     குருவாக பணியாற்றிய முதல் வருட முடிவில் ‘தூய சிலுவையின் குழு’ என்று ஒரு சங்கம் ஏற்படுத்தினார். பரி. பிரான்சிஸ் சிலுவையின் நோக்கத்தையும், மேன்மையையும் எப்பொழுதும் மக்களுக்கு எடுத்துக்காட்டி வந்தார். கிறிஸ்தவ மக்களுள் காணப்பட்ட அறியாமையைப் போக்குவதும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் சிறையிலிருப்போருக்கும் ஆதரவளித்து, கிறிஸ்தவ மக்கள் நியாயஸ்தலங்களுக்குப் போகாமல் அவர்களைத் தடுத்து வருவதே தூய சிலுவைக் குழுவின் நோக்கமாயிருந்தது.

     1593 ஆம் ஆண்டில் செவாய் பிரபுவின் ஸ்தானத்திற்கு இரு குழுக்கள் போட்டியிட்டார்கள். அதனால் மக்களின் நல்வாழ்வுக்கும் அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டது. அந்த சிக்கலைத் தீர்ப்பதற்காக ஜெனிவா அத்தியட்சகர் பரி. பிரான்சிசின் உதவியை நாடினார். சார்லஸ் இம்மானுவேல் என்பவர் செவாயின் பிரபுவாகத் தெரிந்தெடுக்கப்பட்டார். அக்காலத்தில் கால்வின் கட்சியினரின் போதனையால் அநேக மக்கள் திருச்சபையை விட்டுப் பிரிந்து போனார்கள். இவ்வியக்கம் பரி. பிரான்சிசுக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. பிரிந்துபோன கிறிஸ்தவ மக்களை ஒன்றுபடுத்தும் பணியில் பரி. பிரான்சிசுக்கு உதவி செய்யும்படி செவாய் பிரபு முன் வந்தார். தம்முடைய திருமறை அறிவைக்கொண்டும், சொற்திறனைக் கொண்டும் ஆயிரக்கணக்கான மக்களைப் பரி. பிரான்சிஸ் திருச்சபையில் திரும்பச் சேர்த்தார். அவரைக் கொலை செய்ய எத்தனித்த இருவர் பிடிபட்டார்கள். பின்பு அவ்விருவரும் தங்கள் தீய செயலுக்காக மனம்வருந்தி, பரி. பிரான்சிசிடம் மன்னிப்புக்கோரி கிறிஸ்துவின் மெய்யடியாராக மாறினார்கள்.

     பிரான்ஸ் நாட்டின் அரசனான நான்காம் ஹென்றி, பரி. பிரான்சிசின் தூய வாழ்க்கையையும், அவருடைய திருமறை அறிவையும் புலமையையும் குறித்துக் கேள்விப்பட்டு, அவரை அடிக்கடி சந்தித்து உறவாடி வந்தார். தம் நாட்டில் முதலாவது காலியாகும் அத்தியட்சாதீனத்திற்கு வந்து அங்கு அத்தியட்சகராகப் பணியாற்றும்படி அழைத்தார். ஜெனிவாவின் அத்தியட்சகராக அவருக்குக் கிடைத்த சன்மானத்தைக் காட்டிலும், நான்கு மடங்கு சன்மானம் அவருக்குக் கொடுப்பதாக தெரிவித்தார். உலக வாழ்க்கையைத் துறந்த நம் பக்தன் உலக சம்பத்தைக் குறித்துக் கவலைப்படவில்லை. ஜெனிவாவிலேயே பணி செய்வதென்று தாம் தீர்மானம் செய்திருப்பதாக பதிலளித்தார். வெள்ளி, சனிக்கிழமைகளில் உபவாசம் செய்தார். ஜெபத்திலும், தியானத்திலும் அதிக நேரம் செலவிட்டார். தம்முடைய பிரசங்கத்தின் மூலமாய் சபையின் மக்கள் ஆத்மீக வளர்ச்சியில் முன்னேற்றமடைய வேண்டுமென்ற நோக்கம் ஒரு சபை குருவுக்கு இருக்குமானால், அவர் ஜெப ஜீவியம் செய்யும் கடவுளின் மகனாக இருத்தல் அவசியம் என்பது அவருடைய எண்ணம்.

     பரி. பிரான்சிஸ் சிறிது சிறிதாகப் பல சிறந்த பக்தி நூல்களை எழுதினார். ஒரு சீமாட்டிக்கு மடல்களாக முதலில் அவர் எழுதியவை. தொகுக்கப்பட்டு, ‘பக்தி வாழ்க்கைக்கு முன்னுரை’ என்ற தலைப்பில் புத்தக வடிவமாக வெளியிடப்பட்டது. வியன்னாவின் பிரதம அத்தியட்சகர் அதைப் படித்துவிட்டு, “உம்முடைய புத்தகம் என்னை பரவசப்படுத்துகிறது. அதனை ஒவ்வொரு தடவை திறந்து படிக்கும் போதும் என் இருதயம் கொழுந்துவிட்டு எரிகிறது” என்று அவருக்கு எழுதினார். இங்கிலாந்தில் முதலாவது ஜேம்ஸ் என்னும் அரசனும் அதை வெகுவாய்ப் பாராட்டி எழுதினார். இதைத் தவிர, அவருடைய பிரசங்கங்களிலும் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கும் ஒப்பற்ற கருத்துக்கள் படிப்பவரது உள்ளங்களைக் கவர்ந்தன.

     ஐம்பது வயதிற்குமேல் பரி. பிரான்சிஸ் தம்முடைய பெலன் குன்றி வருவதை உணர்ந்து, தமக்கு உதவி அத்தியட்சகர் தேவை என்று தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்டபடி பிரதம அத்தியட்சகர் நம் பக்தனின் சகோதரனான ஜான் பிரான்சிஸ் என்பவரை உதவி அத்தியட்சகராக அபிஷேகம் செய்தார். 1619 ஆம் ஆண்டு தம் உதவி அத்தியட்சகருடன் பரி. பிரான்சிஸ் பாரிஸ் மாநகரத்திற்குச் சென்றார். அங்குள்ள கூட்டங்களில் பங்கு பெற்று, தம்முடைய புலமையினாலும். தாழ்மையும் சாந்தமுமான நடத்தையினாலும், சொற்பொழிவினாலும் கூடியிருக்கும் மக்களின் மனதைக் கவர்ந்தார். அவருடைய பிரசங்கங்களைக் கேட்க பல அத்தியட்சகர்களும், பிரபுக்களும் பரி. அந்திரேயா ஆலயத்திற்குத் திரளாய் கூடி வந்திருந்தார்கள். பிரசங்கப் பீடத்திலிருந்து, “நாவு மட்டுமல்ல, உம்முடைய தூயக் கண்களும் எங்களுடன் பேசின உம்முடைய பொன் மொழிகளைக்கொண்டு பரலோகத்தை நாங்கள் காணும்படி செய்தீர்” என்று பெல்லே அத்தியட்சகர் அவரிடம் கூறினார்.

     அரசிளங்குமாரி கிறிஸ்தியானா, தாம் அவரிடம் அவரின் அடியாளாக வாழ அனுமதி கொடுக்கவும், அவர் பாரிசிலேயே தங்கியிருக்கவும் வேண்டுமென்று வேண்டினாள். அவர் தாம் ஆண்டவருக்கு ஊழியம் செய்யும்படியாக தம் அத்தியாதீனத்திற்குத் திரும்ப வேண்டுமென்று சொல்லி பாரிசைவிட்டு புறப்பட்டார். அவள் அவருக்கு ஒரு விலை உயர்ந்த வைரக்கல்லை அன்பளிப்பாகக் கொடுத்தாள். அது தம்மிடம் நிலைக்காதென்று அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தும் அவள் அதை அவரிடம் விட்டுச் சென்றாள். வெகு விரைவில் அவர் அதை விற்று வந்த பணத்தை ஏழைகளுக்கு வழங்கினார். இதை கேள்வியுற்ற அரசிளங்குமாரி அவரை டூரின் என்னுமிடத்தில் சந்தித்தபொழுது அதைவிட விலை உயர்ந்த வைரக்கல்லைக் கொடுத்தாள். அதையும் அடமானம்வைத்து அதற்குக் கிடைத்த பணமும் ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டது. அவருடைய பொருள்கள் அனைத்தும் ஏழைகளுக்குச் சென்றது. மேலணியும் அவருடைய சட்டையும் முதலாய் ஒரு ஏழைக்கு உதவும் என்று அவர் கண்டால் தாமதமின்றி அதைக் கொடுப்பார்.

     இடைவிடாமல் அவர் உழைத்தமையால் அவர் உடல்நலம் கெட்டுப் போயிற்று. நோய்வாய்ப்பட்டுக் கிடக்கும்பொழுதும் ஆலயத்தின் வழிபாடுகளை தவறாமல் நடத்தி வந்தார். மரணத்தருவாயில் மருத்துவர் அவருக்குச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும்பொழுது “ஆண்டவரே என்னைக் கழுவியருளும்”  என்றும் “இன்னும் நான் உம்மைப் பிரிந்திருக்க வேண்டுமா?  என்னை அழைத்தருளும்” என்றும் சொல்லி 1622 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குற்றமில்லா பாலகர் திருநாளில் நமதாண்டவரிடம் சென்றார் பரி. பிரான்சிஸ்.

பிறப்பு: கி.பி. 1567, (சேல்ஸ், பிரான்ஸ்)

இறப்பு: கி.பி.1622, டிசம்பர்

Posted in Missionary Biography on November 04 at 11:13 AM

Comments (0)

No login
gif